Wednesday, November 30, 2016

மும்முகன்ஜெ

த்ரிசிரஸின் கதையை மூன்று கோணங்களில் சொல்லியிருக்கிறீர்கள். முன்னர் ஒருகதை வந்தது. இப்போது இரண்டுகதைகள். முதல்கதை ஆன்மிகமான உருவகம்.இப்போது இருவகை பார்வைகளின் அடையாளம்

திரிசிரசுக்கும் நம்மூரில் சிவனை திரிசிரஸாக வழிபடுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? நான்முகப்பிரம்மனுக்கு முந்தைய மும்முக பிரஜாபதி அவர் என சண்டன் ஒருவரி சொல்கிறார். முக்கியமான திறப்பு அது

ஜெயராமன்
 
 

திரிசிரஸ்ஜெ

கிராதம் நாவலில் இப்பகுதியில் வரும் திரிசிரஸ் என்னும் கதாபாத்திரத்தை என்னால் முழுமையாக உள்வாங்கவே முடியவில்லை. ஆனால் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். விக்கியில் போய்ப்பார்த்தால் அது மிகமிகத் தொன்மையான உருவகம் என்று தெரிகிறது. சொல்லப்போனால் விஷ்ணு சிவன் எல்லாருக்கும் முந்தையது

அப்படி ஒரு உருவகம் எப்படி நம் மக்களுக்குத் தோன்றியது. இரு பறவைகளில் ஒன்று பழம் தின்கின்றது ஒன்று பார்த்திருக்கிறது என்பதைவிட நுட்பமானது இது. ஒன்று கள் குடிக்கிறது. ஒன்று வேத்மோதுகிறது. ஒன்று இரண்டையும் பார்த்துக்கொண்டிருக்கிறது

பலவகையிலும் தத்துவார்த்தமான உருவகம். இதை ஏன் இதுவரை இங்கே எவருமே பேசியதில்ல என ஆச்சரியமாக இருக்கிறது

சுந்தர்ராஜன்

இந்திரன்வெண்முரசில் இதுவரைக்கும் இந்திரன் பெரிதாக வரவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன். இந்திரப்பிரஸ்தமே வந்துவிட்டது. இப்போது முழுவீச்சில் இந்திரன் வந்துகொண்டிருக்கிறான். இந்திரன் உருவானவிதம் அவனுடையபோர்கள் எல்லாமே வந்துகொண்டிருக்கின்றன

இந்திரன் இந்து மரபிலே மையமான ஐக்கான்களில் ஒன்று. அந்த அடையாளம் எப்படி உருவாகி நிலைநிறுத்தப்பட்டது என்று சொல்லும்பகுதிகள் ஆழமானவை. அவை எவ்வலவு சிக்கலாகக் கிடக்கின்றன என்பதையும் காணமுடிகிறது

சாரங்கன்

பிருஹஸ்பதிஅன்புள்ள ஜெ.

//இங்கு அவையமர்ந்திருக்கும் பிரஹஸ்பதி அசுரர்களுக்கும் குரு அல்லவா?” என்றார் நாரதர். இந்திரனால் மேலும் சொல்லெடுக்க முடியவில்லை//

பிரஹஸ்பதி தேவகுரு அல்லவா? சுக்ராச்சாரியார் அசுரக்குரு. 

பிரஹஸ்பதி அசுரர்களுக்கும் குருவல்லவா? என்று நாரதர் கேட்பது அவருக்கே உரிய புள்ளியில் அடிக்கும் நாவன்மையாகவும் தெரிகிறது எது சரி? 

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல். 
அன்புள்ள ராமராஜன்
தேவர்கள்களுக்கும் அசுரர்களுக்குமான ஒரு போட்டியில் தேவர்கள் பிருஹஸ்பதியை தங்கள் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தனர், அசுரர்கள் சுக்ரரைத்தேர்வுசெய்தன - இப்படி ஒருகதை புராணங்களில் உள்ளது. அதைவைத்து இந்த கூற்று சொல்லப்படுகிறது
புராணங்கள் ஒற்றைக்கதை அல்ல. அவை ஒரு வகை கருவிகள்.படிமங்கள். ஆகவே அவை பலவகையில் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. பிருஹஸ்பதியின் கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவை முரண்பாடுகள் கொண்டவையாக, தொடர்பற்றவையாக இருப்பதைக் காணலாம்
புராணங்களில் ஆரம்பகாலத்தில் பிருஹஸ்பதி அனைவருக்கும் குருவாகவே இருக்கிறார். சுக்ரர் அவரது மாணவர். நாத்திகதரிசனம் பிருஹஸ்பதியில் இருந்து உருவாகி அவரது மாணவர்களிடம் சென்றது என்பது வரலாறு - நானே இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். 
இந்தக்கதையில்பிருஹஸ்பதி அனைவருக்கும் ஆசிரியர்  என்றே சொல்லப்படுகிறார். ஆனால் அவர் அசுரர்களிடம் செல்லவில்லை
ஜெ

பொன் எனும் பொறி
அன்புடன் ஜெ அவர்களுக்கு,

உங்கள் கதையில் , வியாசர் கங்கையை திரையாக்கி , வீரசொர்க்கத்தை காண்பிப்பது போல, எனது மடிக்கணினி திரையின் வழி, நான் ஏழுலக வாசியாகிவிட்டேன். சமயங்களில் விராடபுருஷனாக உணர்கிறேன். கொட்டு முடிந்து, சன்னதம் முடித்து, இந்த தரையுலகில் கால் வைக்கவே கூசுகிறது.
எல்லா அனுபவங்களுக்காகவும் தாள்பணிகிறேன்.

குபேரபுரியில், சுயம் இழந்து, சிற்ப செதுக்குகளாக கட்டுண்டு மயங்கி இருப்பவர்களை பற்றி வந்ததும் இதை எழுத தோன்றியது. "salt of the earth" என்றொரு ஆவண படம். கர்மயோகியான போட்டோகிராபர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியது. அதில், பிரேசில் தங்க சுரங்கங்களை படமெடுத்திருப்பார். பின் குரல் இப்படி சொல்லி செல்கிறது "இங்கே வேலை செய்பவர்கள் யாரும் அடிமைகள் இல்லை. பலரும் பட்டதாரிகள். டாக்டர் மற்றும் என்ஜினியர்களும் உண்டு. இங்கே , இந்த சூழலில் , இப்படி அடிமைகள் போல வேலை செய்ய ஒரே காரணம் , தங்கம். இவர்கள் மண் சுமக்கும் சதுரங்களில் , தங்க இழை ஓட்டம் , கண்டுபிடிக்கப்பட்டால் , அப்பகுதியில் வேலை செய்த எல்லோருக்கும் , ஒரு கிலோ தங்கம்.    வாழ்க்கையையே புரட்டி போடக்கூடிய செல்வம். அதன் பின் , அவர்கள் மீண்டும் வேலை செய்ய தேவை இல்லை. அதற்காகத்தான் இங்கே வேலை செய்கிறார்கள்.
ஆனால் ஒருமுறை தங்க இழையை பார்த்தவர் , இங்கிருந்து மீள்வதே இல்லை" என சொல்லி முடியும். 

எவ்வளவோ பகிர நினைத்து, நினைத்ததுடன் மட்டுமே நிறுத்திக்கொள்கிறேன்.


அன்புடன்,
ஜோதி ராஜேந்திரன்

Tuesday, November 29, 2016

உச்சம் ஜெ

கீழ்க்கண்ட வரியை நினைத்துக்கொண்டே இருந்தேன்

தெய்வங்கள் அழகிலும் சிறப்பிலும் முழுமையை அடைந்ததுமே நிறைவின்மைகொள்கின்றன. ஏனென்றால் முழுமைக்கு அப்பால் நின்றிருப்பவை அவை

வெண்முரசு முழுக்க தெய்வங்கள் வந்தபடியே இருக்கின்றன. இந்தத்தெய்வங்களை எப்படிப்புரிந்துகொள்வது? இவை phenomenons அல்லது concepts . இவற்றுக்கு ஒரு ஒருமை உள்ளது. ஒரு ை phenomenons அல்லது concepts தானாகவே இயங்குவது, அதற்கு என்று ஒரு நோக்கம் உள்ளது என்கிறீர்கள். அதைத்தான் தெய்வம் என்கிறீர்கள். idealism படி எல்லா கருத்தும் அதன் உச்சம் நோக்கிச் செல்கிறது. இங்கே ஒருபடிமேலாகச் சென்று உச்சத்தையும் அவை மேலே மெலே கடந்துசெல்கின்றன என்கிறீர்கள்

மகாதேவன்

ஊற்று


ஜெ,

சொல்வளர்காட்டின் prequel என்று கிராதம் நாவலைச் சொல்லலாம். சொல்வளர்காடு வேதம் எப்படி புரிந்துகொள்ளப்பட்டது, அதன் school கள் எப்படி வெவ்வேறு காடுகளிலாகச் செயல்பட்டன என்பதைப்பற்றிப் பேசுகிறது. இந்நாவல் வெவ்வேறு source களிலிருந்து எப்படி வேதம் ஊற்று எடுத்துவந்தது என்பதைக்காட்டுகிறது.

வேதங்கள் அசுரர்களிடமிருந்து வந்தன என்பதே பெரிய செய்தி எனக்கு. பல்வேறு வேதங்களின் கலவையாக உருவாகி வந்த வேதங்கள் எப்படி ஒரு நால்வேத அமைப்புக்குள் வந்து அமைந்தன என்பதும் அதற்குள் நடந்த conflict களும் அதன் சண்டைகளும் சமரசங்களும் இந்நாவலில் உள்ளன.

 குறிப்பாக இப்போது வந்துகொண்டிருக்கும் விருதிராசுர வதம் பகுதிதான் வேதங்கள் உருவான வரலாற்றின்  மிகச்சிறந்த சித்திரம். ஆனால் ஒரு காமிக் போலவும் ஒரு folklore போலவும் சொல்லப்பட்டிருக்கிறது

கணேஷ்

மூதாதை


ஜெ

விருத்திராசுரனை இந்திரன் கொன்றகதைதான் தேவாசுரமோதல்களிலேயே மிகவும் பழைமையானது என்பது வேத ஆய்வாளர்களின் கருத்து. ரிக்வேதத்திலேயே உள்ள கதை இது. இந்தக்க்கதையின் mode லேதான் அத்தனைகதைகளும் பின்னாளில் அமைக்கப்பட்டன. ஆனால் விருத்திரன் கதையில் நிறைய நுட்பங்கள் உள்ளன. [தோத்தாதிரி அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறர்கள்]

 விருத்திரன் தூய்மையானவன் என்றும் நல்லவன் என்றும் வேதம் சொல்கிறது. அவனைக்கொன்றதனால் இந்திரனுக்கு பழிவந்தது. அந்தப்பழியை வேதம் வழியாக அவன் தீர்த்தான். விருத்திரனைக்கொல்ல வருணன் உதவிசெய்தான். அதனால் அவன் தேவன் ஆனான். அப்படியென்றால் விருத்திரன் யார்? அசுரனாக இருந்தாலும் அவன் ஒரு மூதாதை. ஆனால் பின்னாளில் விருத்திரன் கதையுடன் ததீசியின் கதை இணைக்கப்பட்டது. அசுரர்கள் இன்னொருவகை மக்கள் என்னும் அடையாளம் மறைந்து அவர்கள் தீய சக்திகளாக ஆனார்கள். பின்னர் அவர்கள் உருவகங்களாக ஆனார்கள்.

நீங்கள் இங்கிருந்து மீண்டு அங்கே செல்கிறீர்கள். எல்லாவகை கதைகளையும் ஒன்றுடன் ஒன்று பின்னி இந்தக்கட்டமைப்பை உருவாக்குகிறீர்கள். இந்துமதம் உருவான விதமே இந்தக்கதையிலே உள்ளது என நினைக்கிறேன்

செந்தில்ராஜன்

தேவாசுரமோதல்கள்அன்புள்ள ஜெ

வெண்முரசின் கிராதம் மிகச்சிக்கலான ஒரு கதைப்பகுதியில் இருக்கிறது. இந்தச்சிக்கல் எப்படி ஒரு ஊடுபாவுகொண்ட அமைப்பு உருவாகிவந்தது என்பதைக் காட்டுகிறது. இரண்டு வெவ்வேறுபன்பாடுகள் முரண்பட்டுக்கொண்டே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாக இணையவும் செய்தன என்பதைக்காட்டுகிறது. தேவாசுரமோதல்கள் வழியாக எப்படி வேதங்கள் உருவாகிவந்தன, எப்படி அசுரன் தேவன் ஆகமாறினான் என்பதைக் காணமுடிகிறது. 

இதில் வெவ்வேறு கதைகள். எல்லாக்க்கதைகளும் ஒன்றுடனொன்று கலந்து கிடக்கின்றன. இந்தக்கதைகளை நூலிழை பிரிக்க முயன்றாலே வேதம் எப்படி உருவானது, எவருடையவேதம் என்பதைக்கண்டுகொள்ளமுடியும் என்று தோன்றுகிறது. இங்கே அசுரவேதம் எப்படி உருவானது என்பதைப்புரிந்துகொண்டால் பின்னாளில் கிருஷ்ணன் எப்படி வந்தான் என்பதைப்புரிந்துகொள்ளலாம்

ஜெயராமன்

நெறிஅன்புள்ள ஜெ எம்

அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.”
"
எவ்வளவு சத்தியமான கூற்று.  உலகத்தின் அத்தனை மக்களும் தலைவர்களும் இதனை நெறியாகக் கொண்டால் வையமே அமைதி கொள்ளும்.
சிவா சக்திவேல்

Monday, November 28, 2016

மூன்று கட்டுரைகள்ஜெ

மூன்று கட்டுரைகளை ஒரே நாளில் அமர்ந்துவாசித்தேன். மகாராஜன் அருணாச்சலம், கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன். மூன்றும் மூன்றுவகை. சுனீல்கிருஷ்ணன் வெண்முரசில் உள்ள  அப்ஜெக்டிவான அரசியலைப்பற்றிப் பேசியிருக்கிறார். அருணாச்சலம் வெண்முரசுக்கு இருக்கும் இதிகாச விரிவைப்பற்றிச் சொல்கிறார். கடலூர் சீனு அதிலுள்ள மானுடகுனவிசித்திரங்களைப்பற்றிப் பேசுகிறார். 

மூன்றுகட்டுரைகளுமே அற்புதமானவை. வெண்முரசிலே இதுவரை நான் பார்க்காத பலபடிகளை தெளிவாக்கி தந்தவை. இத்தகைய கூர்ந்த வாசிப்பு வெண்முரசுக்கு இருப்பது மிகநல்ல விஷயம். வாழ்த்துக்கள்

எஸ். ராகவன்  

 http://venmurasudiscussions.blogspot.in/2016/11/blog-post_993.html

நாகங்கள்ஜெ

சண்டனின் இச்சொற்களை நான் வெண்முரசில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். வெண்முரசின் டெக்ஸ்ச்சரைப் புரிந்துகொள்ள இது மிகமுக்கியமான க்ளூ

கதைகள் வாள்களையும் கதைகளையும் போல. மின்னும் இடியும் எழ அவை மோதிக்கொண்டே இருக்கின்றன இப்பாரதவர்ஷத்தில்

சிலசமயம் கதைகள் நாகங்கள் போல பின்னிக்கூட்டமாக தெரிவதுபோலவும் தோன்றுகிறது. நாகங்கள் ஒன்றை ஒன்று விழுங்குவதும் தெரிகிறது. நாகங்கள் முட்டைபோட்டு ஒன்று ஆயிரமாகப்பெருகுவதையும் காணமுடிகிறது

சாரங்கன்

நிலநடுக்கம்
ஜெ

துவஷ்டாவின் நகரத்தில் எப்படி பூகம்பம் வருகிறது? ஒருகோணத்தில் நிலநடுக்கம். இன்னொரு கோணத்தில் அது அந்நகரை தாங்கும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்களின் கிளர்ச்சி. அந்தக்கிளர்ச்சியை இந்திரன் உருவாக்கும் வித்மே ஆமைகளின் பூசல்களாகச் சொல்லப்பட்டுள்ளது

ஒரு உள் எதிரி ஒன்று மிகமேலே இருப்பான். அல்லது மிகக்கீழே இருப்பான். நடுவே இருக்கமாட்டான் என்பது ஆழமான உண்மை. ஒரு தொழில்செய்பவன் என்றமுறையில் இதை நுட்பமாக உணர்கிறேன்

சபரிகிரிநாதன்

பழுத்த உண்மை
ஜெ

அந்தணனாக வந்து இந்திரன் சொல்லும் இந்த வரிகளை நான் மிகவும் கவனித்தேன். இது ஒரு லௌகீக ஞானமாக நம் இல்லங்களில் மூத்தவர்கள் அடிக்கடிச் சொல்லும் விஷயமாக இருக்கிறது

அணிகொள்கையில் ஒரு குறை வை.  
அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. 
செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளி பிறருக்கு அளி. 
அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. 
அகல்களில் ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும்

எதுவும் மிதமிஞ்சி முழுமையாக அடையப்படக்கூடாது என்பது ஒருவகையான பழுத்த உண்மை என்ரே எனக்கும் தோன்றுகிறது

சுந்தரராமன்

அசுரர்களின் ஊர்

அன்புள்ள ஜெ,

வெண்முரசு விரிந்துவிரிந்துசெல்கிறது. எந்த அளவுக்கு விரியும் என்பதே பெரிய வியப்பாக இருக்கிறது. இப்போது மொத்தப்புராண உலகமும் எப்படி அசுரர் தேவர் என்னும் பைனரியால் பின்னி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அந்தபைனரி ஒன்றோடொன்று எதிரியும் அல்ல. பல அசுரர்க்ள் தெய்வங்கள் ஆனார்கள். பல தெய்வங்கள் அசுரர்களாகவும் இருந்தவர்கள்

இந்தக்கதையுடன் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய பகுதிகள் வண்ணக்கடலில் வ்ருகின்றன. அங்கே இளநாகன் அசுரர்களின் ஊர்களுக்குச் சென்று அவர்களின் களியாட்டங்களில் பங்கெடுக்கிறான். அவை உண்மையான சித்திரத்தை யதார்த்தவாதக்கதை போல சொல்கின்றன. அதனுடன் அதில் வரும் பலவகையான நிஷாதர்களின் ஊர்களும் இணைந்துகொள்கின்றன

இந்தியாவின் வரலாறு ஒருபக்கமும் அதை ஒட்டி உருவான பௌராணிக அமைப்பு இன்னொருபக்கமுமாகத் தெளிவடைந்துகொண்டே வருகின்றன

சாமிநாதன்