Monday, June 17, 2019

ராசிகள்அன்புள்ள ஜெ

12 ராசி சக்கரங்களைக்கொண்டு சொல்லப்பட்ட இருட்கனி அழகான ஒரு கட்டமைப்புடன் இருந்தது. மேஷம் என்றால் சித்திரையின் பின்பகுதி. ஏப்ரல் மாதம். சூரியன் உக்கிரமாக இருக்கும் மாதம். அங்கிருந்து தொடங்கி 12 ராசிகள் வழியாகக் கதை செல்கிறது. கடைசியாக சூரியன் மீண்டும் உக்கிரம் அடையத் தொடங்கும் மீனம் ராசியில் சித்திரை பிறப்பில் சென்று முடிகிறது. கேரளத்தில் மீனராசி சூரியனுக்கு உரியது என்பார்கள். சூரியனின் கதிர்கள் உச்சிநோக்கி வளரும் மாசம் அது. மீனபரணி அதை ஒட்டித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது

சூரியனின் கதை சூரியனின் 12 நிலைகளைக் காட்டும் ராசிகள் வழியாகச் செல்வது அழகான ஒரு கட்டமைப்பை அளித்தது. அதிலும் கடைசியாக மீனராசியில் கண் தெரியாதவர் கதை சொல்கிறார். அது பல அர்த்தங்கள் கொண்டதாக இருந்தது

சிவராஜ்

சூரியனின் கண்கள்
ஜெ

நேற்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கர்ணன் போரில் விழும் கடைசிக்காட்சியை சொல்பவர் கண் இல்லாத சூதர். அப்படி ஏன் வந்தது என்று கேட்டேன். சூரியனின் மகன். எல்லாவற்றையும் சூரியனுடன் இணைத்தே கற்பனைசெய்திருக்கிறது. சூரியனின் உக்கிரமான உச்சகட்டத்தை கண்ணால் பார்க்கமுடியாது. கண்ணால் பார்த்தால் குருடாகிவிடுவோம். கருத்தால்தான் உணரமுடியும். ஆகவே கண்ணில்லாதவர் சொல்கிறார் என்றேன். சூரியனின் மகிமையை உணர கண் ஒரு தொடக்கம்தான். ஆதித்யனை நாம் கருத்தால்தான் முழுசாக உணரமுடியும் என்று சொன்னேன். அதோடு அந்தச் சூதர் கற்பனையில் சொன்னதனால்தான் அந்தப்போர்களக் காட்சி அத்தனைப் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவ்வளவு மேஜிக்கலாக அமையமுடிகிறது

ராமச்சந்திரன்

நட்பு


அன்புள்ள ஜெ

கர்ணனின் எரியூட்டலின்போது துரியோதனன் கடைசிவரை உடனிருக்கிறான். அற்புதமான ஒரு இடம் அது. அதற்கு முன்னோடியான காட்சி என்பது துரியோதனன் உடல்நலம் குன்றி துயரில் தூங்கிக்கொண்டிருந்தபோது ராத்திரி முழுக்க உடனிருக்கும் கர்ணனின் காட்சி. அவர்கள் நடுவே இருக்கும் அந்த நட்பை நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது.


வெண்முரசு மகாபாரதத்தின் அடிப்படை உனர்ச்சிகளை பொய்யாக்கவில்லை. அதையெல்லாம் இன்றைய வாழ்க்கையில் வைத்து மறுகண்டுபிடிப்பு செய்கிறது. இது ஒருமுக்கியமான விஷயம் என நினைக்கிரேன். நவீன இலக்கியங்கள் எப்போதுமே மகாபாரதம்போன்ற கிளாஸிக்குகளை தலைகீழாகவே காட்டுகின்றன. வெண்முரசு அதிலிருந்து மேலே எழமுயல்கிறது. இது நவீனத்துவப்படைப்பு அல்ல அடுத்தகட்ட படைப்பு


எஸ்.சரவணன்

Sunday, June 16, 2019

சிதையருகே நின்றெரியும் தனியன்...
இனிய ஜெயம் 

இரவெல்லாம் துயில் மறந்து, மொட்டை மாடியில் மெல்லிய சாரல் மழையில் தனித்துக் கிடந்தது விழித்திருந்தேன். கதிரவனின் முதல் ஒளியைக் கண்ட பின்பே,  கர்ணனின் பிரிவு அளித்த கரிப்பே அற்ற துயர் தாள இயலா உணர்வில் இருந்தது வெளிவந்தேன்.

மொத்தப் போர்நிலமும் மற்றொரு காண்டவ வனமாக எரிந்துகொண்டிருக்க, இதே உணர்வில், நண்பனின் சிதையருகே நின்றெரியும் தனியனாக துரியன். மண்ணில் மானுடர் அடைய இயன்ற ஒரே பெரும் பேரான கர்ணனின் நட்பை அடைந்தவன். அதை இழந்த்தவன். மிச்சமே இன்றி அந்த நட்பின் இறுதித் துளி வரை அனுபவித்த முழுமையில் எழுந்த புன்னகை சூடி நிற்பவன். 

ஒன்றென வெந்து தணிந்து தனது சாம்பல் வழியே தனது மைந்தனை சத்ரியன் ஆக்கி விட்டனர் விடுவித்துவிட்டனர்  கர்ண தம்பதியர்.  தனது ஆசிரியர் பொருட்டு, எடுத்த அம்பினை தழைத்த கர்ணன், அது கொண்டு உயிர் விடும் எல்லை வரை செல்கிறான். இதோ பரசுராமர் அவனுக்கென ஒரு யாகம் நிகழ்த்துகிறார். எந்த மாணவனுக்கு இப்பேறு அமையும்.?

வியாசனுக்கு சொல்லுண்டு கர்ணனின் மாண்பை எழுதிக் காட்டிவிட்டான். துரியன் வசம் என்ன உண்டு? தனியே நின்று எரிந்துகொண்டிருக்கிறான். கர்ணன் இல்லாத இக் களத்தில் தனியே நிற்கும் இன்றைய துரியனின் சித்திரம், வெண்முரசு சித்தரித்த தனிமைகளியே தலையாயது.

கடலூர் சீனு

குருதிஜெ

கர்ணனின் இறப்பில் அவன் குருதிவடித்தபடியே செல்லும் காட்சி கொந்தளிக்கச் செய்துவிட்டது. கடைசிவரை அந்தப்புண் இருந்துகொண்டே இருந்தது. தம்சன் என்னும் அந்த வண்டு அவனுக்குள் இருந்தது. வெய்யோனில் அந்த வண்டின் புண் பற்றி வரும் காட்சிகளை நினைத்துக்கொண்டேன். அந்த வண்டு அவன்கொண்ட ரகசியக்காதலா? எங்குமே பாஞ்சாலி என்ன நினைத்தாள் என்றே வரவில்லை. அவள் அவனுக்குள் அப்படி ஒரு ஆறாத புண்ணாக இருந்தாளா? அந்த ரத்தம் வழிவதை மறக்கவே முடியவில்லை

ஸ்ரீதர் ராம்

கண்டடைதல்
அன்புள்ள ஜெ

விருஷாலி சிதையேறுமிடத்தில் சுப்ரதர் அடையும் மாற்றம் முக்கியமானது. ஆரம்பம் முதலே காட்டப்படுவது அதுதான். அவர் ஒரு அந்தணர். பெரிய கல்வி இல்லாதவர். ஆகவே சிதைவேலை செய்கிறார். ஆனால் அந்தணர் என்பதனாலேயே அவர் மெல்லமெல்ல தன் குடிக்குரிய சிறந்த இயல்பை அடைகிறார். அந்தணன் நீரையும் பின்னர் குருதியையும் இறுதியாகக் கண்ணீரையும் கொண்டு உண்மையை அறியவேண்டும் என்கிறார். ஆகவே அவர் விருஷாலியின் கண்ணீரை அறிந்துகொள்கிறார். சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றில் தொடங்குகிறார். ஆனால் மெல்லமெல்ல மானுட உண்மையை உணர்ந்து அதன் பக்கம் நிலைகொள்கிறார். அந்த மாறுதல் ஒரு வகையான உச்சமாக வெளிப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே அந்தக்கதாபாத்திரம் அப்படி வளர்ந்து வந்துகொண்டிருந்தது

பாஸ்கர்