Monday, August 3, 2020

வெண்முரசு நூல்கள்ஜே அவர்களுக்கு,

நான் கண்ணதாசன், ஜெயகாந்தன், புதுமை பித்தன், பிரபஞ்சன் புத்தகங்களை படித்துஇருக்கிறேன். ஆனால் தங்கள் வெண்முரசு நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. ஒவ்வொரு நாளும் படித்து படித்து மகிழ்ந்து கொண்டுஇருக்கிறேன். தாங்கள் இது போன்ற பல நல்ல படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். நான் என்னுடைய வாழ் நாளில் இது போன்ற ஒரு மொழி நடையை படித்தது இல்லை. தாங்கள் தமிழ் மொழியை அழகு செய்த விதம் என்னை மிக மிக ஆச்சர்யப்பட வைத்துள்ளது....

ஒரு சிறிய வேண்டுகோள் தங்களுடைய மற்ற நாவல்களையும் கிழக்கு பதிப்பகம் பிரசுரிக்க ( நாவல் 19இலிருந்து ) ஏற்பாடு செய்ய வேண்டியது. நான் அவற்றை வாங்க காத்துஇருக்கிறேன்.

மீண்டும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி 

பழனியப்பன் 

அன்புள்ள பழனியப்பன்

நூல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. விரைவில் வெளியாகும்

ஜெ

மலர்கள்


அன்புள்ள ஜெ

பிரயாகையில் திரௌபதியின் திருமணத்தில் இந்த இடம் வருகிறது

பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களைச்சேர்ந்த மூத்தார் ஐவரும் அவர்களின் குலங்களுக்குரிய ஐந்து மரங்களின் மலர்க் கிளைகளைஇடக்கையில் ஏந்தி மணமுற்றத்துக்கு வந்தனர். துர்வாசகுலத்திற்கு வேங்கையும், சிருஞ்சயருக்குமருதமும், கிருவிகளுக்கு கொன்றையும், சோமகர்களுக்கு செண்பகமும், கேசினிகளுக்கு பாலையும்.மருத மரக்கிளையை அர்ஜுனனும், வேங்கையை பீமனும், கொன்றையை நகுலனும், செண்பகத்தை சகதேவனும்பெற்றுக்கொண்டனர். தருமன் பாலைக்கிளையை வாங்கிக்கொண்டான்.

இப்பகுதியை ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தேன். இந்த இடத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாவலின் கடைசிவரை வாசித்து இதன் அர்த்தமென்ன என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

அர்ஜுனனுக்கு மருதம். அது காமத்தின் மரம். பீமனுக்கு வேங்கை. அது குறிஞ்சித்திணைக்கு உரியது. காதல். கொன்றை நகுலனுக்கு. செண்பகம் சகாதேவனுக்கு. யுதிஷ்டிரனுக்கு ஏன் பிரிவு, துயர் ஆகியவற்றின் அடையாளமான பாலை?

செந்தமிழ்க்கிழார்


நாற்களம்


அன்புள்ள ஜெ

கல்பொருசிறுநுரையில் வரும் இந்த வரியை இன்றைய வரியாக என் கம்ப்யூட்டரில் பொறித்துக்கொண்டேன். 

தன்னை தானே வகுத்துக்கொள்பவனே பிறரை ஆள்கிறான், பிறரால் வகுக்கப்படுபவன் எப்போதுமே நாற்களத்தின் காய் மட்டுமே.

என் நண்பர்கள் இது என்ன என்று கேட்டபோது சும்மா கூகிள் டிரான்ஸ்லேட்டில் கொடுத்துப்பார்த்தேன். ஏறத்தாழ சரியாக வந்தது. 

He who defines himself rules others, and he who is defined by others is always the piece of the chessboard. 

நண்பர்கள் பலர் அதை வாட்ஸப்பில் மேற்கோளாக கொடுத்தார்கள். ஒருவரி ஒருநாள் முழுக்க கூடவே இருப்பது வெண்முரசு வந்துகொண்டிருந்தபோது தொடர்ந்து நிகழ்ந்தது. இனிமேலும் அப்படித்தான்

ஜெயராஜ்


சுஃப்ரை


அன்புள்ள ஜெ

வெண்முரசில் வந்துசென்ற நூற்றுக்கணக்கான சின்ன கதாபாத்திரங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வியாசர் சொன்னதுபோல காவியத்தின் அடித்தட்டுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் ஒரு வாசகன் அவர்களை அங்கே கண்டுபிடித்துக்கொண்டேதான் இருப்பான்.

வெண்முரசில் எனக்குபிடித்த கதாபாத்திரம் திருஷ்டதுய்ம்னனின் மனைவியாக கணையாழியைப் பெற்ற பரத்தையான சுஃப்ரை. அவளுடைய பெயருக்கு தூய்மையானவள் என்றும் வெண்மையானவள் என்றும் அர்த்தம். அவள் பரத்தைதான். ஆனால் திருஷ்டத்துய்ம்னனிடம் உண்மையான காதல்கொண்டுவிட்டாள். ஆகவே அவனிடம் அவளுடைய ஆணவம் எழுகிறது. சாக தயாராகிறாள். ஆனால் ஆணவத்தை கைவிடவே இல்லை. அதுதான் காதல். அந்தக்காதலை அவன் கைவிடவில்லை. அவளுக்கு அவன் கணையாழியை அளிப்பது அதனால்தான்

விசித்திரமான கதாபாத்திரம். ஒரு நவீன நாவலில் வரக்கூடிய கதாபாத்திரம். ஆனால் வெண்முரசின் விரிவான களம் எல்லா கதைகளையும் உள்ளே அடக்கிக்கொள்கிறது

ஆர்.ராஜ்குமார்


அவரவர் விண்ணுலகம்


அன்புள்ள ஜெ,

பாண்டவர்கள் அடையும் விண்ணுலகம் பற்றிய கடிதங்களைப் படித்தேன். சுவாரசியமான கடிதங்கள் அவை. பலகோணங்களில் வெண்முரசுக்கான வாசிப்பு வந்தபடியே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாண்டவர்கள் அந்த மகாப்பிரஸ்தானம் செல்லும்போது, கிளம்புவதற்கு முன், வசிட்டரிடம் சில அடிப்படை வினாக்களைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகள் அத்தனைதூரம் வாழ்ந்து அத்தனைதூரம் சிந்தனைசெய்தபின் அவர்களிடம் எஞ்சியிருப்பவை. அதற்கு வசிட்டர் பதில் சொல்லவில்லை. நீங்கள் கண்டுகொள்வீர்கள் என்று சொல்கிறார். அர்ஜுனன் அந்த குகைக்குள் கிருஷ்ணனின் முடிவின்மையை கண்டடைகிறான். அது அவனுக்கான பதில். அந்த பதிலில் இருந்தே மேலே அவன் அடையும் சொர்க்கமும் அமைகிறது. அதேபோல ஐந்துபேரும் ஐந்து விடைகளை கண்டடைந்து ஐந்து சொர்க்கங்களை அடைந்தார்கள் என்று கொள்வது ஒரு நல்ல வாசிப்பாக இருக்குமென நினைக்கிறேன்

சாரங்கன்


Sunday, August 2, 2020

காந்தாரிஅன்புள்ள ஜெ,

வெண்முரசின் பழைய அத்தியாயங்களை ரேண்டமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இடம் இன்று என்னை உலுக்கியது. திரௌபதி அவையில் அவமானப்படுத்தப்பட்ட பின்பு திருதராஷ்டிரர் பழைய வாரணவத நிகழ்ச்சியை எல்லாம் அறிகிறார்

அவன் எப்படி அதை செய்யத் துணிந்தான்? அவனை என் மகன் என்று எண்ணித் தருக்கினேனேஅவன் என் மகனே அல்ல. அவன்

என்று குமுறுகிறார் அதற்கு காந்தாரி என்று பதில் சொல்கிறார்

அவன் உங்கள் மைந்தன். ஆகவேதான் அவ்வாறு செய்தான். இன்று அவளை அவிழ்ந்த ஆடையுடன் என் மருகியர் அழைத்துவந்தனர். அவள் விம்மும் ஒலியைக் கேட்டபோது அது சம்படையின் குரல் என எண்ணினேன்”

அதைக்கேட்டு திருதராஷ்டிரர் திகைத்து பதறி அமர்ந்துவிடுகிறார். நாவலில் அடியோட்டமாக வந்துகொண்டே இருக்கும் பெண்களின் கதை, அவர்களின் வஞ்சம் மற்றும் கண்ணீரின் கதை அங்கே கூர்மையாக எழுந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்கிறது. அந்த இடத்தில் காந்தாரி பேசுவதெல்லாமே உக்கிரமாக உள்ளது

எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன? வென்றது எந்த அரசியலும் அல்ல. வென்றது ஆண் எனும் கீழ்மை. பெற்று முலையூட்டி வளர்த்து மண்ணில் விட்ட அத்தனை அன்னையருக்கும் ஆயிரமாண்டுகாலமாக ஆண்கள் இழைக்கும் கீழ்மறம்

இந்த ஒற்றைச் சந்தர்ப்பமே ஒரு ஆவேசமான சிறுகதை. மொத்த மகாபாரதத்தையே தலைகீழாக ஆக்கும் இடம் இது. இந்த வரிகளிலிருந்துதான் காந்தாரியை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர் அவள் மொத்த கௌரவரின் அழிவையும் எப்படி இயல்பானது என்று எடுத்துக்கொண்டாள் என்பதற்கான அடித்தளம் இங்கே உள்ளது.

பாஸ்கர்


விண்ணுலகம்-2


அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் பாண்டவர்கள் விண்ணுலகம் போவதைப் பற்றி எழுதியிருந்தார். அது நல்ல கடிதம். உண்மையில் பாண்டவர்களின் விண்ணுலகப் பயணம் இந்நாவலில் மிக அழகாக புதியமுறையில் சொல்லப்பட்டிருந்தது. இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விண்ணுலகத்தையே அடைகிறார்கள்.

யுதிஷ்டிரர் ஒரு விண்ணுலகை அடைகிறார். அங்கே ஐந்து தம்பிகளும் சொந்தங்களும் வேண்டும் என நினைக்கிறார். ஆகவே அங்கே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சொர்க்கம் அப்படி இருக்கவேண்டும், அதில் யுதிஷ்டிரர் இருக்கவேண்டும் என்றில்லை. பீமன் ‘மாமலரி’ல் ஞானத்துக்குப் பதிலாக காதலை தேடி அடைந்தவன். அவன் அதைத்தான் பெற்றுக்கொள்கிறான். அதிகாரத்தை உதறியதும் திரௌபதியும் காதலே முக்தி என நினைக்கிறாள். அப்படி ஐந்து சொர்க்கங்களை அவர்கள் அடைகிறார்கள்.

அவரவர் சொர்க்கம் அவரவருக்கு. சொர்க்கம் என்பது அவர்கள் அடையும் உன்னத நிலையே ஒழிய ஓர் இடம் அல்ல. ஒரு யோக உச்சம் என்கிறார். இருக்கலாம் ஆனால் அது அவர்களின் பெர்சனாலிட்டியின் ஒரு zenith. அவர்கள் சென்றடையும் ஒரு sublime. அதுதான் வெண்முரசு தரும் முடிவு

கே.எஸ்.ஜெயபாலன்


உரையாடல்அன்புள்ள ஜெ
    

வெண்முரசில் நான்  வாசித்த பகுதி குறைவுதான் என்றாலும் :

அறிவியல் சார்ந்து பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு முன் புராணம் சார்ந்து அது அறிமுகமான தலைமுறையை சார்த்தவன்தான் நான் அறிவியல் கற்றபின்பும் பாலியத்தில் புராண உளவியலுடன் உலவிய தருணங்கள் இன்றும் நினைவில் உள்ளது .என் தலைமுறைக்கு இப்படியிருக்கையில் உங்களுக்கு அதன் ஆழமான  நினைவுகள் இருக்கும் , மேற்கின் சமூக உளவியல்   சிந்தனை துணையுடன் அது பிரவாகமாக வடிந்திருப்பதாகவே தோன்றுகிறது .

ஹோமரின் சிந்தனை தடம் பதிந்த நிலத்தில் இருந்து  திருதுராஸ்டிரன் குறித்து நீங்கள் சிந்தித்திருப்பீர்கள் வெண்முரசில் சில   அத்தியாயங்கள் எழுதியிருப்பீர்கள் இந்த நினைவு வருகையில் , ஹெக்டரின் தந்தையுடன் திருதுராஷ்டிரனை ஒப்பிட்டு வாசித்த நினைவும் வருகையில் ஒரு தனித்துவமான உணர்வு  எழுகிறது  .
நவீன இலக்கியத்தை வாசிக்காத பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள், ஜூம் விவாதத்தில் பாரதத்தை விஞ்ஞான வடிவில் எழுத முடியும் என்று சொன்னிர்கள் அப்படி எழுதினால் இந்த வாசகர்கள் எப்படி அணுகுவார்கள் என்று நினைக்கிறீர்கள் .

பாலைவனத்தில் புள் முளைத்த தருணத்தை சொன்ன வாசகர் தன் வாழ்வின் வெண்முரசு அனுபவ தருணத்தை பற்றி சொன்னார் அப்பொழுது இப்படி தோன்றியது , அந்த வடிவத்தில் புனைவு உருவாக்கும் சத்தியம் உள்ளதா (சாத்தியமாகியுள்ளது )

வெண்முரசு நாவலின் வாசகர் ஒருவர் நாவலின் ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு சென்று தான் விரும்பும் கதாபாத்திரத்துடன் ஒரு உரையாடலை நிகழ்த்துவது அல்லது வாசகரின் வாழ்வின் தருணங்க்ளின் ஒரு கதாபாத்திரம் தொடர் உரையாடலில் இருப்பது என்ற வடிவத்தில் ஒரு எழுத்தாளரின் வாசகர்கள் அல்லது ஒரு நாவலின் வாசகர்கள் என்று மைய கதாபாத்திரங்களை நிறுவி இயங்கும் ஒரு நாவல் முயற்சி நடந்துள்ளதா

உங்கள் அறிமுகத்தால் கோவை ஞானி அவர்களை சிறிது வாசித்திருக்கிறேன் . அவர் உரையாட விரும்பும் ஆர்வமும் அதன் பொருட்டு அவசியம் அற்றவை என்று சிலவற்றை தவித்துவிட்டு  அவர் எழுத்தில் வெளிப்படும் நிதானமும் ஆச்சரியப்பட தக்கது. .அனால் அவருக்கு எல்லாமே மார்க்சிசமாக  படுகிறது என்று நினைக்கிறேன் .  மார்க்ஸின்  ''மாற்றியமைத்தல் ''என்ற சிந்தனை முதலாளித்துவ
காலத்திற்குத்தான் பொருந்தும் . தொழில் புரட்சி சார்த்த உற்பத்தியிலில்தான் மனிதனுக்கு உற்பத்தித்தி மீது ''முழு'' கட்டுப்பாடு உள்ளதாக கருதுகிறேன்

அன்னாருக்கு அஞ்சலி .

தட்சிணாமூர்த்தி


அன்புள்ள தட்சிணாமூர்த்தி

ஒரு நாவல் எழுதப்படும்போதே தொடர் உரையாடலும் இருப்பதென்பது இந்த மின்னூடக காலகட்டத்திலேயே இயல்வது. முன்பு இது நடந்ததில்லை என நினைக்கிறேன்
ஜெ

வெண்முரசு பற்றிDear Jeyamohan 

Unbelievable, amazing marathon writing. I travelled with the Sudhars, Kurus,Pandavas, geographic regions and seen the war. Thanks 🙏  Also the continuity, the great guru parampara tradition, and the nuances of human life.  This great literary effort is unsurpassable and deserves the best accolades.

Today, I read Kannan Pillai Tamizh and could not find words to express the wonder. The little Neelamanivannan danced, played the flute, just to remind us that life goes on and Mahabharata is life and it's journey. 
I am also reminded of Sri. Periyalwar's pasurams on "Neelachudar Manikannan". Definitely he would be smiling and sending all the blessings to you. Sending thanks to Mr. Shanmugavel for giving life to the Kannan Pillai Tamizh. 

Next time when I come to India, will get the remaining books to complete my collection, a treasure indeed.
My regards to your family. Finally, congratulations for producing a literary magnum opus.
Thank you as always 🙏 

Best Regards 
Sobana Iyengar

முடிவுஅன்புள்ள எழுத்தாளார் ஜெயமோகன் அவர்களுக்கு

 வணக்கம்

தங்களின் வெண்முரசு நாவலை தொடர்ந்து படித்து கொண்டு வருகிறேன் .அதில் வாசகர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்தையும் ,அமைதியையும் யாவராலும் புரிந்து கொள்ள முடியாது .மஹாபாரதத்தை இவ்வளவு விரிவாக எழுதியதற்கு கோடானு கோடி நன்றி.ஆனாலும் தங்களின் ஒரு வாசகனாக பணிவான வேண்டுகோள் .நான் ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என்ற ராமாயணம் ,மற்றும் சில மஹாபாரத கதைகளை படித்திருக்கிறேன்.அதனால் தான் இந்த விண்ணப்பம்.பிழையிருந்தால் என் கருத்துக்களை ஒதுக்கி விடுங்கள் .

பல மஹாபாரத கதை முடிவில் பாண்டவர்கள் அனைவரும் இறக்க தருமர் மட்டும் உயிருடன் இந்திரனின் தேரில் முதலில் நரகம் செல்வது போலவும் ,அங்கு பாண்டவர்கள் ,கர்ணன் ,துரியோதனன் ஆகியோர் குரல்களை கேட்ப்பதாகவும் வரும் .பின்பு காட்சிகள் மாறி சுவர்க்கத்தில் துரியோதனன் ,கர்ணன் ,சகுனி ,பீஷ்மர் ,துரோணர் ,குந்தி ,விதுரர் மற்றும் துரியோதனன் தம்பியர் அனைவருடன் சந்தோசமாக பேசுவதாகவும் காட்சிகள் விரியும் .பின்பு யமன் மூலமாக இறந்தவர்கள் அனைவரும் விருப்பு வெறுப்புகள் இன்றி வாழும் இந்த நிலை தான் உண்மை என்ற நியதியை சொல்லி மஹாபாரதம் நிறைவு அடையும் .

நான் உங்களை வற்புறுத்த முடியாது .நான் இவைகளையும் தாங்கள் நாரதர் சொன்னது போல விவரிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் .அதன் மூலம் அடுத்த மாதம் கோகுலாஷ்டமி அன்று வெண்முரசு முடிவடையும் என நினைத்தேன்.இதனை உங்களுக்கு சொல்ல விரும்பியதால் இதனை எழுதுகிறேன் .  1988   வருடத்திலே மஹாபாரத கதையை எட்டு மணி நேரம் பலருக்கும் சொல்லியிருக்கிறேன் .அதனால் தான் இந்த விண்ணப்பம் .

இப்படிக்கு
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்


அன்புள்ள செந்தில்

ஒவ்வொரு மகாபாரதத்திற்கும் அதன் சாராம்சம் சார்ந்த சிறிய மாறுபாடுகள் உள்ளன. வெண்முரசு மகாபாரதத்தில் இருந்து ஒரு வேதாந்த வடிவை உருவாக்குகிறது. அதற்கேற்பவே கதை சொல்லப்பட்டுள்ளது

ஜெ

Saturday, August 1, 2020

விண்ணுலகம்


அன்புள்ள ஜெ

வெண்முரசின் இறுதியில் ஐவருமே சொர்க்ககங்களை அடைகிறார்கள். நான் யுதிஷ்டிரன் மட்டுமே சொற்கத்துக்குச் சென்றான் என்ற கதைவடிவையே வாசித்திருக்கிறேன். அவன் சொர்க்கம் போனபிறகு அவன் சொல்லி மற்றவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள் என்று வாசித்தேன்.

இன்னொரு வடிவம் அவன் வானம் போன பிறகுகூட முதலில் நரகத்துக்குச் சென்றான் என்றும் ஆனால் துரியோதனாதியர் சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டு மனம்குமுறி யமனிடம் கேட்டபோது அவர்கள் வீரசொர்க்கம் அடைந்தனர். ஆனால் நீ சாதாரணமாகச் செத்தாய், ஆகவே நீ கர்மபலன்களை அனுபவிக்கவேண்டும் என்றார் யமன்.

இந்தக்கதைகள் பிற்சேர்க்கை என்றுதான் சொல்லவேண்டும். இந்து ஞானத்தில் சொர்க்கம் நரகம் இல்லை. மறுபிறப்புதான் உண்டு. புவர் லோகம் முதலிய ஏழு நுண்ணுலகங்கள் உண்டு. சொர்க்கம் நரகம் என்பதே ஜரதுஷ்டிர கருத்து. அது இந்துமதத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.

அந்த கதைகளில் பின்னாளில் உருவான மதிப்பீடுகள் உள்ளன. அதாவது ஒருவன் போரில் செத்தால் நேரே சொர்க்கம், அவனுடைய தீமைகளுக்கெல்லாம் எந்த தண்டனையும் இல்லை என்பது. ஆனால் வெண்முரசு அதை மாற்றிவிட்டது. அதை இந்துமதத்தின் மையமான வேதாந்தக்கருத்துக்கு உட்பட்ட ஒரு தத்துவ உருவகமாக ஆக்கிவிட்டது.

அந்தக் கற்பனை மிகமுக்கியமான ஓர் உச்சம் என்று நான் நினைக்கிறேன். வெண்முரசில் யுதிஷ்டிரன் அடைவது ஒரு யோகவிடுதலை. அதையே மலையுச்சி கூர்மையில் நிற்பது என்று நாவல் சொல்கிறது. அங்கே அவன் தனக்கான சொர்க்கத்தை தானே உருவாக்கிக்கொள்கிறான்

ஆ.முத்துமாணிக்கம்


பாற்கடலில்


அன்புள்ள ஜெ

வெண்முரசின் முடிவில் பாற்கடலே வெண்முரசாக ஆகிறது. அதன் அலையோசைதான் அறம் என்ற உருவகம் பாணனின் சொல்லில் வந்து செல்கிறது. அந்த அலைகளின்மேல் பள்ளிகொள்பவன் வந்து நிகழ்த்திச் சென்ற ஒரு லீலையே மகாபாரதம். ஆனால் அது அலைகொண்ட கடல்தான். அமைதியானது அல்ல. அந்த அலையிலிருந்தே ஞானம் என்னும் அமுதம் திரளமுடியும். அறத்தின் அலைகள் எல்லாமே ஞானம் திரள்வதற்காகவே என்று நான் எடுத்துக்கொண்டேன்.

 ச.ரவிச்சந்திரன்


வெண்முரசு பயிற்சி


இனிய ஜெ,

வெண்முரசு நிறைவு எனக்கு ஏனோ நானே பெற்ற வெற்றி போன்று பெருமிதம் அளித்தது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ ! உங்களது நூல்களை  semantics, syntax  ஆய்வுக்கு உட்படுத்தினால் - காடு எழுதிய ஜெ , இன்றைய காந்தி எழுதிய ஜெ, வெண்முரசு எழுதிய ஜெ மூவரும் வெவ்வேறு நபர்கள் என்றே யூகிக்கிறோம் என்று முடிவு அறுதியாக வரும். என்னவொரு breadth அண்ட் டெப்த் !   மிகையாக கூறவில்லை உண்மையாகவே எனக்கு  வணிக நாவல்களும் பெரும் சலிப்பேயே தருகின்றன - உங்களது மொழிக்கும், கதைசொல்லும் முறைக்கும் பழகிய பிறகு.

முன்னதாகவே நமது நண்பர்கள் மத்தியில் "Game of Thrones" சம்பந்தமான விவாதங்கள் வந்தபொழுது, முழு தொகுப்பையும் வாங்கி படித்தேன் - நுட்பான கதைதான், சில பலமான கதைமாந்தர்களும் இருக்கிறார்கள். கதை விறுவிறுப்பாக நகர்ந்தது. ஆனால் கதை மேல்மனதிலியே அதாவது தர்க்க புத்தியில் மட்டும் நிகழ்ந்தது ஆழ்மனதை சென்று தொடவே இல்லை. வெண்முரசு அளித்த தரிசினங்களோ, விம்ம செய்து, வெடித்து அழுகச்செய்த தருணங்களோ "game of thrones" வாசிப்பில் எனக்கு கிட்டவேயில்லை. அளப்பெரிய நன்றி ஜெ, உங்களது எழுத்திற்கும், நீங்க திரட்டி அளிக்கும் wisdom எத்தனையோ நபர்களின் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்திகிறது, நானும் அவர்களில் ஒருவன்.

கோபி

கண்ணன் கதை


அன்புள்ள ஜெ

வெண்முரசை கண்ணன் காவியம் என்றே சொல்லிவிடலாம். இந்நாவலில் கண்ணனின் பல முகங்கள் அடுக்குஅடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன. எத்தனை கண்ணன்கள். நீலம்,இந்திரநீலம்,பன்னிரு படைக்களம், குருதிச்சாரல்,இமைக்கணம்,கல்பொருசிறுநுரை ஆகிய ஆறுநாவல்களில் அவர்தான் கதைநாயகன். நீலத்தில் குழந்தை, இந்திரநீலத்தில் காதலன், பன்னிரு படைக்களத்தில் காக்கும்நாயகன், குருதிச்சாரலில் பார்த்த சாரதி, இமைக்கணத்தில் கீதாச்சாரியன், கல்பொருசிறுநுரையில் யோகி என எல்லா முகங்களும் வந்துகொண்டே இருக்கின்றன.

கிருஷ்ணனின் குலக்கதையில் தொடங்குகிறது.யாதவ வம்சம், லவணகுலத்து மரீஷையின் வம்சம் முதல் கடைசியில் கிருஷ்ணனின் ரத்தம் அழிந்து அவருடைய சாராம்சம் எஞ்சுவதுவரை ஒரு நீண்ட ஹரிவம்சகதையாகவே வெண்முரசு உள்ளது

எல்.நரசிம்மன்


கலியின்முன்


அவன் தீயாட்டும் சுடராட்டும் மலராட்டும் காட்டினான். கலிதேவனின் மூடிய விழிகளுக்குக் கீழே என்றும் அவன் காணும் புன்னகையை உணர்ந்தான். சுடர்கொண்டு காட்டும்போது திரௌபதியை நோக்கினான். பந்த வெளிச்சம் மேனிமென்மையில் மிளிர அவள் விழிமூடி கைகூப்பி நின்றிருந்தாள்- 

என்று முடியும் களிற்றியானை நிரை எனக்கு இப்போதும் ஆச்சரியமான முடிவு. கலிதேவனின் முன் திரௌபதி கைகூப்பி நிற்கிறாள். ஏன்? கலிதேவனின் யுகம் வருகிறது, திரௌபதியின் யுகம் முடிவுக்கு வருகிறது. அதை உணர்ந்து கைகூப்பி நிற்கிறாளா?

அப்படியென்றால் கலியின் மைந்தனாகிய துரியோதனன் அவளுக்குச் செய்த அவமதிப்பை எல்லாம் கலியுகத்தின் அவமதிப்பு என்று அவள் எடுத்துக்கொள்கிறாளா? எல்லாவற்றையும் கடந்துவிட்டாளா? அவள் ஏன் அப்போது கைகூப்புகிறாள்? மைந்தரை இழந்து நாட்டையும் ஒருவகையில் இழந்து வாழ்க்கையையே இழந்து நின்றிருப்பவள் ஏன் துரியோதனனின் தெய்வத்தின் முன் சரண் அடைகிறாள்

ஒட்டுமொத்த வெண்முரசே அந்த கலிதேவனின் கோயில்முன் கைகூப்பி நிற்பதுபோலத் தோன்றியது எனக்கு. ஏற்கமுடியாத முடிவு. ஒவ்வாமையை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறது அந்த முடிவு

செந்தில்குமார்


Friday, July 31, 2020

அஸ்தினபுரியும் துவாரகையும்


அன்புள்ள ஜெ 

நலம்தானே? நானும் நலமே. வெண்முரசு சார்ந்து நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் வாசிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். வாசிக்கிறீர்கள் என்பது அளிக்கும் நிறைவே போதும் என நினைக்கிறேன். 

களிற்றியானைநிரை நாவலில் அஸ்தினபுரி மீண்டெழுவதைப்பற்றி மீண்டும் சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆச்சரியமான விஷயம், களிற்றியானை நிரையில் அஸ்தினபுரி மீண்டு வருகிறது. கல்பொருசிறுநுரையில் துவாரகை அழிகிறது. எழுந்த நகரங்களுக்கு வீழ்ச்சியடையும் விருப்பமும் வீழ்ச்சியடைந்தவற்றுக்கு எழுந்துவரும் விருப்பமும் உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்

 

அ.சரவணன்


சொற்கள்


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் வெண்முரசு பயில ஆரம்பித்துள்ளேன். சில வார்த்தைகள் மிகக் கடினமாய் உள்னன. அத்தகைய சொற்களில் பலவற்றிற்கு Tamil Virtual  Academy இன் மின்நிகண்டிலும் பதம் கிடைப்பதில்லை. சில சொற்களை Google இல் இட்டுத் தேடினால், ஏதாவதொரு பழம்பாடலுக்கோ அல்லது உங்கள் தளத்திற்கோ தான் செல்கிறது. தமிழின் ஒரு மகத்தான படைப்பை எழுதியுள்ள ஒரு எழுத்தாளனிடம், அவற்றை எளிதில் பதம் பார்த்து படிப்பதற்கு ஒருவழியும் கேட்பது அபத்தம் எனப் புரிகிறது. இருந்தும் வேறு வழி தெரியாததால் கேட்கிறேன். பொறுத்தருள்க!

நன்றியுடன்,

அன்பன். 
சுந்தர மகாலிங்கம் 

அன்புள்ள சுந்தரமகாலிங்கம்

வெண்முரசின் சொற்கள் அந்த நூலின் கதைப்போக்கில் இயல்பாகப்புரிந்துகொள்ளப்படலாம். அச்சுநூல்களில் பின்னிணைப்பாக அகராதி உள்ளது. இணைய அகராதி ஒன்றை உருவாக்க எண்ணமுண்டு

ஜெகண்ணன்


அன்புள்ள ஜெ

இளைய யாதவரின் முடிவு இந்நாவலில் ஒரு இயல்பான நிகழ்ச்சியாக வந்துசெல்கிறது. நீங்கள் பேசும்போது உத்தம மரணங்கள் மூன்று என்றீர்கள்.யோகியரின் மரணம். போரில் மரணம். பெருந்தந்தையாக மரணம். மூன்றுமே அவனுக்கு வாய்க்கவில்லை. அவன் வேடனால் கொல்லப்பட்டான். அனாதையாக இறந்தான். அவன் கண்னெதிரே அவன் நாடும் மைந்தரும் அழிந்தனர்

அவன் தெய்வம். ஆகவே தெய்வநெறிக்கு அவனும் கட்டுப்பட்டவன். நீர்ச்சுடரில் நீர்க்கடன் கழிக்க வரும் கௌரவமகளிருக்கு முன் கைகூப்பி நின்று அத்தனை சாபங்களையும் அவன் பெற்றுக்கொள்கிறான். அவனால் அந்த நியாயத்தைக் கடந்துசெல்லவே முடியவில்லை. இப்பிறவியிலேயே கடன் அடைத்து விண்ணுக்கு மீள்கிறான்.

வந்தகாரியம் முடிந்து மீண்டும் செல்லும்போது ஒரு மெல்லிய தித்திப்பாக எஞ்சியிருப்பது ராதையின் பிரேமம் மட்டுமாகவே இருக்கும் என நினைக்கிறேன்

மாதவ்


வண்ணக்கடல் என்னும் பாரதம்


அன்புள்ள ஜெ

நலம்தானே?

வெண்முரசை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இனி தொடர்ச்சியாக வாசிப்பேன் என நினைக்கிறேன். இப்போது இளநாகனின் பயணத்தை வாசிக்கிறேன். அப்போதே ஒர் உரையாடலில் சொன்னீர்கள், மகாபாரதப்போர் முடிந்தபின் விரிவான திக்விஜயங்களைப்பற்றி எழுத முடியாது. ஆனால் நாவலில் பாரதநிலம் வரவேண்டும், ஆகவேதான் முன்னாடியே எழுதுகிறேன் என்று.

இந்நாவல்தொடர் முடிந்தபின்பு இளநாகனின் பயணங்களை வாசிக்கும்போது மகாபாரதக்கதை அங்கெல்லாம் எப்படியெல்லாம் வந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்தபடியே வாசிக்கமுடிகிறது. தான்யகடகம், விஜயபுரி போன்ற ஊர்களைப்பற்றி ஒரு பெரிய கனவை வண்ணக்கடல் அளிக்கிறது. 

வெண்முரசு நாவல்களில் மகாபாரதம் என்னும் காட்சி இருப்பது வண்ணக்கடலில்தான். அதை அன்றைக்கு வாசிக்கும்போது பாண்டவர்களின் வளர்ச்சி முதலிய கதைகளைச் சொல்வதற்கு நடுவே தேவையில்லாமல் இளநாகன் வருவதாக நினைத்தேன். இன்றைக்கு அந்தப்பகுதிகளெல்லாம் அப்படி ஓர் அழகுடன் இருப்பதாகத் தோன்றுகிறது

சரவணன் எஸ்


இமைக்கணம் தொட்டு


வெண்முரசின் சாராம்சமான பகுதி என நீலம் நாவலை ஒருவர் எழுதியிருந்தார். என் வாசிப்பில் இமைக்கணமே வெண்முரசின் சாராம்சமான பகுதி. அது ஒரு தனிநூல். அதற்கும் வெண்முரசுக்கும் நேரடி உறவு இல்லை. அதோடு ஒரு சுவராசியமான விஷயம், வெண்முரசு முடிந்தபின் அது இப்படி முடியாமல் இருந்திருந்தால் எப்படி முடிந்திருக்கும் என்று ஊகிக்கக்கூடிய இடங்கள் கொண்டது இமைக்கணம்

மகாபாரதத்தின் சாராம்சமே கீதைதான். அதுதான் ஐந்தாம்வேதம். அதை முன்வைக்கும் பகுதி இமைக்கணம். அதில் இறந்தவர்களெல்லாம் எழுந்து வருவதைக் காணலாம். அந்த உயிர்த்தெழுதலில் என்ன நடக்கிறது என்பது ஒரு பெரிய வாசிப்பனுபவம். மொத்த வெண்முரசும் நினைவில் எழுவது இமைக்கணம் வாசிக்கும்போதுதான்

கடைசியாக ஒன்று சொல்லவேண்டும். மகாபாரதக்கதையை இமைக்கணக்காட்டில் வைத்துத்தான் சூததேவர் சொல்கிறார். ஆகவே மகாபாரதத்தின் முன்னால் ஒலித்த வேதம்தான் கீதை என இமைக்கணம் நாவலில் உள்ளது. இமைக்கணம் வெண்முரசில் கடைசிநாவலாக அமைந்திருந்தாலும் பொருத்தமாக அமைந்திருக்கும்

செல்வக்குமார்


Thursday, July 30, 2020

ஷண்முகவேல் ஓவியங்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசை வாசித்துமுடித்தபின் ஒட்டுமொத்தமாக நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து மனசுக்குள் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அத்தியாயங்கள் வந்துகொண்டிருந்தபோது சண்முகவேலின் ஓவியங்கள் முக்கியமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் இப்போது சண்முகவேலின் ஓவியங்களாகவே ஆரம்பநாவல்களை நினைவிலிருந்து எடுக்க முடிகிறது. அவர் இந்நாவலுக்கு அளித்த கொடை மிகப்பெரியது. அவருக்கு என் நன்றிகள்

ராஜேஷ்


வெண்முரசின் உடனடிபயன்

 

அன்புள்ள சார்,

வெண்முரசு முடியப்போகிறது என்ற பதட்டத்திலிருந்து, முடிந்தேவிட்டது என்னும் உண்மை புரிய சில நாட்கள் தேவைப்பட்டது. கப்பலின் நங்கூரம் தரையை தொடும்போது கடலின் ஆழம் தெரிவதுபோல, முடிந்தபின்னரே எவ்வளவு தூரம் உங்களுடன் ஓடி வந்திருக்கிறோம் என்பது மலைப்பாக இருக்கிறது. ஏழு வருடம் நீங்கள் முன்னால்  ஓட உங்களை ஒரு நாள் விடாமல் துரத்தி வந்த பெரும் வாசகர் படையும் இந்த  மாரத்தானில் சத்தம் இல்லாமல் பங்குபெற்று சாதனை புரிந்துள்ளது. 

சிவகாமியின் சபதம் தொடராக வந்த போது என் தந்தை அவற்றை பேப்பர் கட்டிங்காக எடுத்து வைத்ததையும் ஒரு இதழ் கூட தவறாமல் வாசித்ததையும் ஒருவித சாதனை புன்னகையோடு பகிர்த்துக்கொள்வார், ஆனால் அதை விட பல மடங்கு மகத்தான ஒரு படைப்பை ஏழு வருடம் பின்தொடர்ந்ததை, இப்போது உயிருடன் இருந்திருந்தால் அறிந்து மகிழ்ந்திருப்பார். போரும்  அமைதியும் வெளிவந்த காலத்திலேயே அதை வாசித்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பெரும் முயற்சிகளையும், சாதனைகளையும்  சமகாலத்திலேயே அறிந்து அவற்றை பின்தொடர்தல்  என்பதும் ஒரு வரம் தான், ஏனென்றால் அவை தலைமுறைதோறும் நிகழ்வதில்லை,  என் தந்தைக்கு சிவகாமியின் சபதம் மட்டுமே இருந்தது (இது வெண்முரசுவுடனான ஒப்பீடல்ல, என் தந்தையின் அதிகபட்ச சாதனை) அந்த நான்கு  புத்தகங்களையும் பள்ளி படிக்கும்போதே ஒரே வாரத்தில் படித்து முடித்தேன் ஆனால் என் மகளிடம் சொல்வதற்கு மிக பிரமாண்டமான ஓன்று உள்ளது அவள் தலைமுறையில் நிகழ வாய்ப்பற்ற ஓன்று. இனி அதை புத்தகங்களாக வாங்கி அவளுக்காக சேர்க்கவேண்டும்.

வெண்முரசு எனக்கு என்ன அளித்தது என்று என்னால் இன்னும் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை அது உள்ளேயே இருந்து முளைக்கும்போது தான் தெரியும் போலும். உடனடியாக தெரிவது இரண்டு விஷயங்கள். ஒன்றை மேலே கூறிவிட்டேன். பைபிளில் வரும் இயேசுவின் மகத்தான போதனைகளில் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஓன்று உண்டு "தீர்ப்பிடாதீர்கள்". 
திட்டவட்டமாக எழுதப்பட்ட பத்து கட்டளைகளை கொண்ட ஒரு சமூகத்தில் அதை மீண்டும் முன்வைக்கும் இயேசு, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை "நானும் தீர்ப்பிடேன்" என்று அனுப்பிவைக்கிறார். தீர்க்கமான அந்த பத்து கட்டளைகைளில்  ஒன்றை மீறியபோதுகூட. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் அவர்கள் கீழிறங்கும் இடமும், சறுக்கும் தருணங்களும் உண்டு என்பதை உணர்ந்து, உடனே கல்லெடுத்து எறியவரும் கும்பலிடம் "நீங்கள் பாவமற்றவர்கள் எனில் முதல் கல் எறியலாம்" என்று கூற நிச்சயமாக எளிய மனிதர்களால் முடியாது. 

மாபெரும் மனிதர்களை கொண்டே கட்டமைக்கபட்ட மகாபாரதத்தில், அவர்களின் மேன்மைக்கு நிகராகவே சரிவுகளும் உள்ளன, குற்றவுணர்வு ஒன்றே மானுடர்கள் செய்ய இயலும் பிழையீடு. கல்லெடுத்து எறியவரும் கும்பலில் ஒருவனாய் இருந்த எளியவனுக்கு கிடைத்த தரிசனமாகவே வெண்முரசை பார்க்கிறேன். காலம் செல்ல செல்ல இன்னும் பல தரிசனங்கள் எழுந்துவரலாம், முதல் தரிசனம் எப்போதுமே கிளர்ச்சி ஊட்டக்கூடியது. ஆசிரியருக்கு நன்றி.

அன்புடன்,
ஆல்வின் அமல்ராஜ்

மானசா தேவி முதல்...அன்புள்ள ஜெ,

வெண்முரசு தொடரைப் பன்னிரு படைக்கலத்தில் இருந்து வாசிக்க ஆரம்பித்துக் கடந்த நான்காண்டுகளாகத் தொடர்ந்து வந்தேன். இவை எனக்கு  என்றும் நினைவில் நிற்கும் ஒளிமிக்க ஆண்டுகள். தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும். நிறைவின் வெறுமை தாக்கினாலும், எனக்கு இன்னும் வாசிப்பதற்கு முதற்கனல் முதல் வெய்யோன் வரை ஒன்பது நாவல்கள் உள்ளன என்பது ஆறுதலாக உள்ளது.

வெண்முரசின் நிறைவில் சீர்ஷன் மானசாதேவி ஆலயத்தில் நாக வழிபாட்டைக் காண்கிறார். மேலும் சென்று மானசாதேவியின் வழி வந்த பார்ஸ்வநாதரைத் தரிசிக்கிறார். இறுதியில்  நாகபடத்தின் மேல் நடனமிட்ட கண்ணனின் குழவிச்சிற்றடிகளைத் தலைசூடிச் சரணடைந்து திளைக்கிறார்.
இங்கிருந்து திரும்பி முதற்கனலுக்குச் சென்றால், மானசாதேவி ஆஸ்திகனுக்குச் சொல்லும் நாகர்களின் கதையோடு வெண்முரசு தொடங்கி அந்தாதி போல ஒரு முடிவிலா வாசிப்புச்சாத்தியத்தை அளிக்கிறது.

வேரென இம்மாநிலத்தை உண்டு விதையெனப் பெருக்கிய மரம், வேரை அணைத்து நிலை நிறுத்தும் மண், வாழ்வின் கொடையெனப் பூத்த மலர்கள், கிளைதொறும் நெருக்கிக் கனியுண்ணும் கிளிகள் என இப்பெருங்காவியம் படைத்த உங்களையும், உறுதுணையான குடும்பத்தையும், உடன் வரும் வாசக நண்பர்களையும்  வணங்குகிறேன். 

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை

எவருக்கானது?


அன்புள்ள ஜெ நலம்தானே,


முதலில் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

எவரும் எண்ண துணியாத வெண்முரசை எடுத்து முடித்துக் காட்டி இருக்கிறீர்கள். பெருமகிழ்ச்சி.

சென்ற மாதம் எழுதி முடித்த வெண்முரசை நிறைவின்மையும் கொந்தளிப்பும் அடைந்து பிள்ளைத்தமிழ் உடன் நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்வில் பிள்ளைகளால் தான் மகிழ்ச்சியையும் நிறைவையும் பெற முடிகிறது போல.

கொற்றவையை படித்து முடித்தபின் இரு மாதங்களுக்கு வேறு எந்த புத்தகத்தையும் எடுக்கவில்லை. மற்றதில் வேறென்ன இருக்கமுடியும் என்ற வெறுமை.

காலம் சென்றது! முதற்கனல் கையிலும் கிடைத்தது. ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு எழுத்திலும் தன்னறத்தை காண்கிறேன். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னுள் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கின என்று சொன்னால் அது ஏதோ கடனுக்கு சொல்வது போலத்தான் இருக்கும். ஆனால் என்னால் மிக நிச்சயமாக உணர முடிகிறது. இப்பொழுது இருக்கும் நான், சில வருடங்களுக்கு முன்பு இருந்தவன் அல்ல. உங்களுக்கு நன்றி.

இப்பொழுது கேள்விக்கு வருவோம்,

வெண்முரசை படிக்க என் நண்பனை அழைத்தபோது, வெண்முரசை படிக்க ஆரம்பித்தால் அதிலுள்ள நாட்டத்தால் வேறு எதிலும் கவனம் செல்லாது, வேறு எந்த புத்தகத்தையும் படிக்க முடியாது. இந்த வேளையில், இந்த இளம் வயதில்(28) நான் படிக்க வேண்டிய, இலக்கியத்தை தாண்டிய பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை இன்று விட்டால் பிற்காலத்தில் படித்து பயன் இல்லை. பொருளாதார சிந்தனை மேம்பட, நிகழ்கால அறிவை செறிவாக்க இக்காலகட்டத்தில் அது தேவைப்படுகிறது என்கிறான். "நானும் இதில் உடன்படுகிறேன், ஆனால் இலக்கியங்களை முற்றாக மறுப்பது ஜன்னலோர காட்சிகள் அற்ற தொடர்வண்டிப் பயணத்தை போல ஆகிவிடும்" என்று சொன்னேன். [குறிப்பு: இலக்கியம் என்பதை நான் வெறும் காட்சிகள் என்று கூறவில்லை. ஒரு பதிலுக்காக அப்படி சொன்னேன்.]

ஆக ஒரு இலக்கிய புத்தகத்தையும், "Das Kapital" போன்ற புத்தகத்தையும் எடுத்துக்கொண்டால், எங்களை போன்றவர்களுக்கு முதல் தேர்வாக தாங்கள் கொடுப்பது எதுவாக இருக்கும்.

தங்கள் தேர்வை எதிர்பார்க்கிறேன். நன்றி.

-
மோகன்ராஜ் பொன்னம்பலம்
இராசிபுரம்

அன்புள்ள மோகன்

வெண்முரசு எவருக்கானது? வெறுமே பொழுதுபோக வாசிப்பவர்களுக்கானது அல்ல. போட்டித்தேர்வுகள் போன்றவற்றுக்கு தயார் செய்துகொள்பவர்களுக்கானது அல்ல. அரசியல் சார்ந்தே வாசிப்பவர்களுக்கானது அல்ல. சிக்கலான வடிவச்சோதனைகளை வாசிக்கும் கற்பனைகுறைவான வாசகர்களுக்குரியதும் அல்ல. 

அதை வாசிக்க மூன்று தகுதிகள் தேவை. ஒன்று, கற்பனையில் வாழ்க்கையை விரித்தெடுத்துக்கொள்ளும் திறமை இரண்டு, இந்திய வரலாறு மெய்யியல் தத்துவம் தொன்மவியல் சார்ந்த ஆர்வம். மூன்று ஆன்மிகமான ஒரு தேடல்.

மற்றவர்கள் வாசிக்காமலிருப்பதே நல்லது

ஜெ

மகத்தான படைப்புஅன்பு ஜெமோ,

நலந்தானே? 

வாழும் காலத்தில் நம் கண்முன்னே இப்படி ஒரு மகத்தான படைப்பு எழுந்து வருவதை பார்ப்பது சிலிர்ப்பூட்டும் அனுபவம். ஒட்டுமொத்த மானுட ஆற்றல் மேலேயே நம்பிக்கை கொள்ளச்செய்வது. இருப்பையே  ஒளிகொள்ளச்செய்வது. 
இதைப்போன்ற  சிகரம் ஒன்று ஒளிர்ந்தெழுவதை பார்க்கும் அனுபவம் இன்னும் பலதலைமுறைகளுக்கு கிடைக்காதென்றே நினைக்கிறேன்.  

ஒரு மாதவம்போல் நீங்கள் எழுதுவதை பார்த்திருக்கிறேன். நாள் முழுவதும் நடந்து, பல இடங்களை சுற்றிப்பார்த்து, நண்பர்களிடமும், இலக்கியக் கூட்டங்களிலும் பேசி இரவு 11 மணிக்கு அரைத்தூக்கத்தில் தள்ளாடி வீடுவந்து சேர்ந்த பிறகு, நீங்கள் புத்துயிர் கொண்டெழுந்து எழுதுவதை கண்டிருக்கிறேன். அதிகாலையில் துள்ளியெழுந்து உடனே உற்சாகத்துடன் எழுதத்தொடங்குவதை பார்த்திருக்கிறேன். இது மனித உடல்தானா, மனித மூளைதானா என்று திகைப்படைந்திருக்கிறேன். வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாகிறார்கள், எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார்கள் என்று நான் நேரில்  உணர்ந்துகொண்ட தருணம் அது. 

வாழ்நாள் முழுவதும் நினைத்த நேரமெல்லாம் மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கும் பெரும் பரிசை அளித்திருக்கிறீர்கள். எனக்குத்தெரிந்த வகையில் வெண்முரசுக்கும், உங்களுக்கும் இசையில் எப்படி நன்றி சொல்வது என்று நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.  விரைவில் தொடர்பு கொள்கிறேன்.  நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! 

அன்புடன் 
ராஜன் சோமசுந்தரம் 


Wednesday, July 29, 2020

வெண்முரசு அளிப்பதுஅன்புள்ள ஜெ

வெண்முரசு நிறைவுற்றபின் இப்போதுதான் நான் வந்து சேர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக வெண்முரசு சொல்வதென்ன என்று எனக்கு இப்போது ஒற்றைவரியில் சொல்லத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமகா இதுவரை வாழ்ந்ததில் கண்டடைந்தது என்ன என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? ஒன்றை சொல்லலாம், ஆனால் அது மட்டுமல்ல என்றும் தோன்றும் அல்லவா? எனக்கு வெண்முரசில் தோன்றியது அறம் என்ற ஒன்று வெளியே தேவலோகத்தில் இல்லை. அது தெய்வம் உருவாக்கி அளிக்கவில்லை. அதை மனிதர்கள் இங்கே கண்டடைகிறார்கள். இங்கே ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு செயலிலும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த உருவாக்கத்திலுள்ள சிக்கல்களைத்தான் நாம் மகாபாரதத்தில் காண்கிறோம். அது எளிய செயல் அல்ல. நிறைய ரத்தம் நிறைய இழப்பு. ஆனால் ஒட்டுமொத்தமாக மிஞ்சுவது ஒன்று உண்டு. தர்மம் மீதான நம்பிக்கைதான்

 

ஆர்.முருகபாண்டியன்


இடும்பனின் வம்சம்


அன்புள்ள ஜெ

வெண்முரசை ஒட்டுமொத்தமாக வாசிக்கவேண்டும். இன்று முழுக்கதையும் துளித்துளியாக தெரிந்துவிட்டபிறகு பின்னால் சென்று வாசிக்கையில் வேறுவேறு கதைநுட்பங்கள் தெரியவரும். இடும்பன் கொல்லப்பட்ட காட்சியை புரட்டி வாசித்தேன். பீமனால் இடும்பன் கொல்லப்பட்டான் என்பது ஒரு கதைவடிவமாக இருந்தாலும் இன்றைக்கு வாசிக்கையில் இடும்பன் ஒரு காலகட்டத்தின் காட்சி என்பதுதோன்றுகிறது. அவன் அழிவது அந்தக்காலகட்டத்தின் அழிவு. அதன்பின் அவன் குடி அரசாங்கமாகிறது. கிருஷ்ணனின் வேதம் அவர்களை ஷத்ரியர்களாக ஆக்குகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் பாரதவர்ஷத்தையே ஆட்சிசெய்கிறார்கள். இந்த பரிணாமம் நிகழ்வது இயல்பான ஒரு மாற்றத்தால்- இடும்பன் கொலையால். இடும்பன் இருந்திருந்தால் இது நிகழ்திருக்காது. ஆனால் கடோத்கஜனின் பார்பாரிகனின் இயல்பில் இடும்பன் இருந்துகொண்டும் இருக்கிறான்

மகாதேவன்