Friday, October 31, 2014

பீமனைப்பற்றி

 
 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் பதிலுக்கு நன்றி. 

இப்போது எனக்கு ஒரு சந்தேகம். அர்ஜுனன் மடைப்பள்ளிக்கு  செல்லும் போது அங்கு இருக்கும் வயது முதிர்ந்த அதன் தலைவரை பற்றி பீமன் பெருமையாகச் சொல்லும் போது " அவர் சூதன் தானே " என அர்ஜுனன் கேட்டவுடன் " உன் மனம் நோய்வாய்பட்டு இருக்கிறது எனக் கூறும் அதே பீமன் " துரோணரின்" குருகுலத்தில் அர்ஜுனனோடு விற்போர் புரியும் கர்ணனை மட்டும் " சூதன் எனச் சொல்லி இழிவு செய்வது எதன் அடிப்படையில்?
 
பரந்த மனப்பான்மை என்பது ஆளுக்கு ஆள் வேறுபாடும் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா இதை.  அன்று சூதரா எனக் கேட்ட அதே அர்ஜுனன் கூட கர்ணன் இருக்கட்டும் எனச் சொல்லியும் பீமன் ஏற்றுக் கொள்ளாதது என்ன வகையான மனப்பாங்கு? 

நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்....

அன்புடன்

பிரசன்னா 

 
 
அன்புள்ள பிரசன்னா
 
நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடவே கடும் வேலைப்பளு. பயணங்கள்
 
இத்தனைக்கும் நடுவே நான் கடிதங்களுக்கு விளக்கமான பதில்களும் எழுதுவது நமக்கு இன்று வாசிப்பில் உள்ள பொதுவான இடர்கள் எனக்குத்தெரியும், உதவுவது என் கடமை என்பதனால்
 
ஆனால் கேள்விகேட்பவர்கள்  குறைந்தபட்சம் அதற்கு முன் நான் அளித்த பதில்களை என் இணையதளத்தில், இந்த தளத்தில், கூகிளில் தேடியபின் கேட்பது என் உழைப்புக்கான கௌரவமாக அமையும்
 
இந்த வினாவிற்கு நான்குமுறை பதில் சொல்லிவிட்டேன்
 
ஜெ

போரின் முடிவில் -பிரயாகைஜெ

போர்முடிந்ததும் நான் அடைந்த வெறுமையை என்னவென்று சொல்வேன்[ பிரயாகை] இதுதான் மகாபாரதத்தில் வரும் முதல்போர் இல்லையா? அந்தக் கடைசிப்போரையே நேரில் பார்த்ததுபோல் இருந்தது. இருபக்கமும் மாவீரர்கள். இரு பக்கமும் மாறிமாறி வெற்றிதோல்விகள். இருபக்கமும் நியாயங்கள்

ஆனால் கூடவே எல்லா அறமும் பறந்து போய்விட்டது. ஆரம்பத்திலேயே. போர் என்றால் அவ்வளவுதான் என்று சொல்கிறீர்களா என்ன? இல்லை மகாபாரதமே அப்படித்தான் சொல்கிறதா? பெரியதீமையை சிறிய தீமை அழிக்கிறது என்பதுதான் போரா

எனக்குப்பட்டது இந்தச் சின்னப்போரில் கௌரவர்களும் பாண்டவர்களும் தோற்றிருந்தால் எல்லாம் சரியாக முடிந்திருக்குமே என்று. அவர்களுக்கு ஆணவம் வந்திருக்காது. பெரும் போர் வந்திருக்காது

முட்டாள்தனம்தான். ஆனால் அப்படித் தோன்றியது. போர் முடிந்ததும் என்னதான் மிச்சம் என்று தோன்றுமே அந்த இடம் முதலிலேயே இந்தப்போரிலேயே வந்துவிட்டது

சிவம்

வன்மங்களின் சங்கிலி


[துரோணர்- காகிதவெட்டு ஓவியம்]


இதற்கு தான் காத்திருந்தேன். ஒரு அரசனின் பழைய கணக்கு எவ்விதம் தீர போகிறதென்று ..

கர்ணன் அங்க நாட்டின் அரசன் ஆகும் வரை [ களத்தில் கொண்ட அவமதிப்பு உட்பட ] ஏற்ற அனைத்து அவமானங்களும் அரசன் ஆனதால் அவை நீரினுள் சென்று விட்ட கல் என தோன்றுகிறது. கல் தெரியாது ஆனாலும் மறையாது. 

துரோணரின் அவமானம் வேறு விதம்.எதையோ நம்பி மதிப்புடன் வாழ்ந்து பின் பசு வாங்க முடியாதவனாய் போனதின் வலி. பசு என்பது வெறும் ஒரு குறியீடு ... கலை கொண்டவனின் பொருள் இல்லா காலங்களின் வதை மனம் அது. ஏற்றி சென்ற எதிர்பார்ப்பு தவறா? இல்லை நட்பு கொடுத்த உரிமை தவறா ? எதுவும் செய்யாமல் வந்து விழுந்தது சூட்டு தழும்பு. கால் கடுத்து நின்று கை நிறைய வாங்கி சென்ற இவரின் அவமானம் எரிமலையின் கொதி நிலை. எரித்தபடி நின்று இன்று வெடித்தது.
ஆனால் துருபதனின் அவமதிப்பு உச்சம் என எனக்கு பட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் வர்ணனைகளும் கூசி வலிக்க வைத்தது. ஏன்? ஆணவம் கொண்ட ஆண் மனம் என்பதாலா? இல்லை இவ்விதமாய் ஒன்று ஏன்றேனும் நிகழும் என சற்றும் நினையாத ஒருவனுக்கு ஒரு நாளில்  தோற்று பின் நடத்தபடுவதின் கொடுமை தரும் அதிர்வா?

கொண்டவன் வீழும் போது வரும் வலியும் அற்றவன் வீழ் வலியும் ஒன்று தான். ஆனால் தன் உடல், பதவி, மரியாதை, வாழும் வாழ்வு  பற்றிய அனைத்து பிம்பங்களும் அணைந்து , ஆணவம் முற்றிலும் எரிந்து போய் அவமானப்பட்டு ஆனாலும் உயிர் போகாமல் செல்வது ஷத்ரிய அவமானத்தின் உச்சம்.... போரில் தோற்பதின் ஒரு பகுதி தான் இதுவும். ஆனால் நண்பன் என்பவனிடத்தில் வருவது தான் ஒரு பாதை மாற்றம். 

அர்ஜுனன் சொன்னது போல் துரோணரின் நாடகம் முடிந்து இனி துருபதனின் வன்மம் ஒரு நூல் என அத்தீயை எடுத்து செல்லும் விதியின் புதிய பாதையை. முதல் போருக்குப்பின் தெரிந்து இருக்கும் யார் களங்களில் வென்றவன் என. நிஜ முதல் தேர்வில் அடையாளம் இல்லாமல் செல்லும் கௌரவர்களும் அவர்களின் பயமும் வெல்ல வேண்டிய கட்டாயமும் இனி அத்தீயை வளர்க்கும். சரிவில் மெல்ல இறங்கி வரும் வண்டி வேகம் பிடிப்பதன் காலங்கள் இனி.

தன்னை பற்றி தான் கொண்ட பிம்பங்கள் உடைந்து சிதறும் போது ஏற்படும் உணர்வு தான் அவமதிப்பு என்று ஏதோ ஒரு கட்டுரையில் நீங்கள் சொன்னதாக நினைவு. எவ்வளவு எளிய ஆனால் ஏற்று கொண்டு வாழவே முடியாத உண்மை. 

துருபதன் வென்று இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசிக்கிறேன் 

அன்புடன் 
லிங்கராஜ் 


http://zayplay.blogspot.in/2012/06/artwork-collections-from-mahabharata.html

பிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்
அன்பு ஜெயமோகன்,
          துருபதனுக்கும், கர்ணனுக்கும் இடையே நிகழும் போர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் காட்சியை அர்ச்சுனன் காண்கிறான். அக்காட்சி எனக்கு நடராச வடிவத்தை நினைவூட்டியது போலிருந்தது. முதலில் சிவனும், நடனமும் தனித்தனியாகத் தெரிகின்றன. உச்சகட்ட நடனத்தில் நடனத்தையும், சிவனையும் பிரிந்துப்பார்க்க இயல்வதில்லை.  சிவன் நடனமாக மாறினானா.. இல்லை, நடனம் சிவனாக உருவெடுத்து விட்டதா? அறிவால் விளங்கிக் கொள்ள முடியாத அழகான மனநிலையது. சிவனைப் பார்க்கிறவர்கள் அவனோடு நடனத்தையும் சேர்த்தே பார்க்கின்றனர்; நடனத்தைப் பார்க்கிறவர்கள் அதனுடன் சிவனையும் இணைத்தே காண்கின்றனர். உணர்வால் நடராச வடிவத்தை அணுகும் ஒருவனுக்குஇருமைகளுக்குள் திணறியபடி இருக்கும் ஒருமையின் நேர்த்தரிசனம் கிட்டுகிறது. போர்க்காட்சியின் ஊடாக அர்ச்சுனன் அத்தரிசனத்தையே பெறுவதாக நினைக்கிறேன். பார்முதல் பூதங்களால் மறைக்கப்பட்டிருக்கும் பரத்தை எளிதில் மாமத யானையால் நமக்குக் காட்டிவிடும் திருமூலரின் மந்திரத்தால் அர்ச்சுனன் மனநிலை எளிதில் விளங்கிவிடுகிறது. தர்மனின் சொற்கள் ஆழ்மனதில் அவனையறியாமல் இடம்பெற்றுவிட்டதன் விளைவாகவும் அவனுக்கு போர்க்காட்சி ஒற்றை நிகழ்வாய்த் தோற்றம் தந்திருக்கலாம்.
          முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
கோபிசெட்டிபாளையம்.

பிரயாகை 8
கற்றலில் கேட்டல் நன்று என்று சொல்வார்கள். கற்கும்போது நமது அறிவு அறியும் உண்மையை ஒரு எல்லைக்குள் ஒருவழிபாதையில் நின்றுவிட வாய்ப்பு உள்ளது. அதையே கேட்கும்போது நமது அறிவும், சொல்பவர் அறிவும் சேர்ந்து நம்மை பலதிசையில் சிந்திக்க வைக்கும் அதனால்தான் கற்றலில் கேட்டல் நன்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

பிரயாகை-8ல் திரு.ஜெ துருபதனுக்கும் துரியோதனுக்கும் போரை படிக்க வைப்பதோடு அந்த போரைப்பற்றி கேட்கவும் வைக்கின்றார். கற்றல் கேட்டல் என்ற இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் ஒரு கதைக்களம்.

கடக வியூகம் அமைத்து போருக்கு செல்லும் துரியோதனும், கருடவியூகம் அமைத்து போருக்கு செல்லும் சத்தியஜித்தும் போர் புரிந்தார்கள் என்பதை படித்து தெரிந்துக்கொள்கின்றோம். நன்றாக உள்ளது. நேரடியாக ஒரு யுத்த கலத்தில் நாமே நின்று போரைப்பார்பதுபோன்றது போல் உள்ளது.

பாண்டவர்கள் படையை மறைவில் நிறுத்தி அவர்கள் மூலம் அந்த போரை கேட்கவைக்கம்போது நமது கண்ணும் காதும் ஒரே நேரத்தில் சிந்திக்க தொடங்கிவிடுகின்றது.

கற்கும்போது ஏற்படும் நேரடி அனுபத்தைவிட கேட்கும்போது ஏற்படும் அனுபவம் விஸ்தாரமாக உள்ளது. பாண்டவர்களின் வாய்வார்த்தைகள் மூலமாகவே போரின் நுணுக்கத்தையும், மாந்தர்களின் இயல்பையும் அதிகமாக அறிய முடிகின்றது.

சத்தியஜித் பின்வாங்கி மீண்டும் துருபதனுடன் வந்தான் என்று படித்தால் நமது அனுபவம் என்னவாக இருக்கும். அதையே பாண்டவர்களின் வாய்ர்த்தையாக கேட்கும்போது அதன் துள்ளியம் பெரிதாகி விளங்குகின்றது.

//பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாதுவியூகத்தில் அந்த உயிரினத்தின்அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன்//


வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளும், அனைவரும் எல்லைக்கடந்த தொலைவில் இருந்துப் பார்க்கும்போது ஒன்றாகவே இருக்கின்றது. அதனதன் எல்லையில் நின்றுப்பார்க்கையில் அது அதுவும் தனித்தனி முழுமையாகத்தான் இருக்கிறது என்பதை பெரும் யுத்தின் நடுவில் நின்று சிந்திக்கும் அர்ஜுனன் எந்த எல்லையில் நின்றாலும் எந்த எல்லையிலும் சிக்காத ஒன்றுடன் தனது அகத்தை இணைத்துக்கொண்டே இருக்கின்றான். எப்படி அவன் கீதைக்கு காரணமாகின்றான் என்பது விளங்குகின்றது.

வாழ்க்கை எவ்வளவு சிறியதாக சிக்கலாக இருந்தாலும் அதற்கும் அப்பால் அது ஞானத்தின் பெருவெளியோடு தொடர்பில் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

காட்டுத்தீ எழாவிட்டால் காடு நோயுற்று அழியும் என்று சொல்லும் அர்ஜுனன்தான், குருதிவழியும் அந்த யுத்தத்தை கண்டுகொண்டு நிற்கையில் அகன் சட்டென மாறும் கணத்தை பார்க்கும்போதுதான் வாழ்வுக்கும் ஞானத்திற்கும் உள்ள முரணும் இணைப்பும் தெரிகின்றது.  
//போரை தொலைவில் நின்று பார்க்கும்போது அது ஓர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் அற்புதத்தைஅர்ஜுனன் எண்ணிக்கொண்டான்ஆயிரக்கணக்கானவர்கள் தனித்தனியாக செய்யும் போர்அவர்கள்ஒவ்வொருவரும் அப்போது முழுமையான தனிமையில் தங்கள் எதிரிகளுடனும் ஆயுதங்களுடனும்இருந்துகொண்டிருப்பார்கள்ஆனால் அவை இணைந்து ஒற்றை நிகழ்வாகிவிடுகின்றனஇப்புடவியின்அத்தனைகோடி நிகழ்ச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றைநிகழ்வாகத் தெரியுமோ?//
திரு.ஜெவின் பிழை சிறுகதையில் வரும் இந்த வாழ்க்கைப்பற்றிய வரியை சிந்திக்கவேண்டி நேரம் இது. //சகோதராசின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும்பெரியவிஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்து கொண்டிருஅதுதான் வாழ்க்கை.//
வாழ்க்கைக்காகத்தான் யுத்தம், யுத்தத்தின் நடுவிலும் வாழ்க்கையின் பெரிய  விஷயத்தைப்பற்றி பேசும் அர்ஜுன் வாழ்க!
அசோகர் சென்ற இடமெல்லாம் மரம் நட்டார் என்று வரலாற்றில் படிக்கின்றோம். ஜெ கதையில் செல்லும் இடமெல்லாம் விதியை விதைக்கின்றார் அப்போதுதான் அது காடாகும் என்பதால்.
//புகையும் அழுகையும் கலந்து நிறைந்த கிராமங்கள் வழியாக அவர்களின் படை சென்றபோதுஇருபக்கமும் பெண்கள் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி பழித்துக் கூவினர்//
இந்தக்கூட்டத்தின் விதைதான் பாஞ்சாலி!


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Thursday, October 30, 2014

வலிமையின் உளவியல்அன்புள்ள ஜெ,

பிரயாகை மட்டுமல்ல, வண்ணக்கடலில் இருந்தே என்னை மிகவும் வியப்பிலாழ்த்திய கதாபாத்திரம்  பீமனுடையது தான். நானறிந்த பீமன் உடல் பலம் மட்டுமே கொண்டவன். சமைக்கத் தெரிந்தவன். யோசிக்கத் தெரியாதவன். தன் உடன்பிறந்தாருக்காக எதையும் செய்யத் துணிந்தவன். குலாந்தகன்.

ஆனால் வெண்முரசு காட்டும் பீமன் மேற்கூறிய குணாதிசியங்கள் உள்ளவன் தான். ஆனால் நன்றாக யோசிக்கத் தெரிந்தவன். அரச நெறிகள் அறிந்தவன். உண்மையில் சுற்றியுள்ள அனைத்து ராச்சியங்களின் முக்கியமானவர்களைப் பற்றி தருமனை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கிறான். அவன் சத்யஜித் பற்றி அர்ஜுனனிடம் பேசும் போது அசந்து போனேன். உண்மையில் ஓர் அரசனுக்குரிய தகவல் அறிவும், முடிவெடுக்கும் தெளிவும் அவனிடம் உள்ளது. அது மட்டுமன்று, அவனிடம் தொலைநோக்கு உள்ளது. துருபதனுடான யுத்தத்தின் முடிவை அவன் துவக்கத்திலேயே அறிந்து விட்டான். அர்ஜுனன் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும், பீமன் தங்கள் படையை மெதுவாக பின்னால் தான் கொண்டு சென்றிருப்பான். ஏனென்றால் படையையும், தளவாடங்களையும் இறக்கும் பொறுப்பை அவனே முன்னின்று செய்கிறான். 'என்ன அவசரம்' என்று துரியனுக்கே நக்கலாக செய்தி அனுப்புகிறான். உண்மையில் பாண்டவர் படை மெதுவாக இறங்கியதால் தான் அர்ஜுனன் கூட அப்படி ஓர் முடிவினை எடுத்தானோ என்னவோ?

இவை மட்டுமல்ல. அவன் தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் மிகச் சரியாக எடை போட்டு வைத்திருக்கிறான். ஒவ்வொருவரின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருக்கிறான். உண்மையில் அரசு சூழ்பவர்களுக்கான இன்றியமையா குணம் அது. ஆனால்பீமனிடம் அது இருப்பது மிகவும் வியப்பளித்த ஒன்று. வண்ணக்கடலிலும் சரி, பிரயாகையிலும் சரி பீமன் அனைவரும் தேடும் பொழுதெல்லாம் தென்படுவதில்லை. ஆனால் மிகச் சரியாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் அவன் வந்து விடுகிறான். பல இடங்களைச் சுட்டலாம். யுயுத்சுவுடன் அர்ஜுனன் அஸ்வத்தாமா யானையின் முன் மாட்டிக் கொள்ளும் இடம், யாருக்கும் அடங்காமல் ஓடி வரும் யானையின் முன் தன்னம்பிக்கை மட்டுமே கொண்டு நிற்பான் பீமன். களம் புகுதல் நிகழ்வின் போதும் சரியான நேரத்திலே வருகிறான் அவன். அனைத்துக்கும் மேலே, மழைப்பாடலில் பாண்டுவையும் மாத்ரியையும் தேடுவதற்கும் சரியான நேரத்தில் வந்து உதவுகிறான் அவன். இன்றும் அர்ஜுனன் தன் தாயைத் தேடித் போகும் போது பீமன் பிரச்சனையின் துவக்கத்தைத் தேடிப் போகிறான். "“நான் காட்டுக்குச் செல்கிறேன். உள்காட்டில் சில மலைப்பாம்புகளை பார்த்து வைத்திருக்கிறேன்.”அவன் மலைப்பாம்புகள் என யாரைச் சொல்கிறான்? அதுவும் உள்காட்டில். அதாவது அரண்மனையின் உள்ளடுக்குகளில். சகுனியையா? நிச்சயமாக துரியனுக்குத் தான் உரிமை என்று சொல்பவர்கள் தான் அவர்கள். அவன் அடுத்த வரி அதைத் தான் உணர்த்துகிறது, "நீ சொன்னவை வலுவான வாதங்கள் பார்த்தா. எனக்கு அவற்றில் ஆர்வமில்லை. அந்த வாதங்களை வாதத்தால் எதிர்கொள்வதை விட அவ்வாதங்கள் நிறைந்திருக்கும் தலைகளையும் நெஞ்சுகளையும் கதையால் அடித்து உடைப்பதே எனக்கு எளிது". மீண்டும் மீண்டும் தேவையான இடங்களில் மட்டுமே அவனைப் பார்க்க முடிகிறது.

கர்ணனுக்கும் அவனுக்குமான சந்திப்புகளில் அவன் கர்ணனை அவமதிப்பதை மட்டுமே செய்கிறான். ஆனால் நன்றாக பார்த்தால் இதுவரை பீமன் கர்ணனைத் தனியாக சந்திக்கவே இல்லை. முதலில் அவன் கர்ணனை குந்தியின் முன்னிலையில் சந்திக்கிறான். அப்போதே அவனுக்கு கர்ணன் யாரென்று தெரிந்து விடுகிறது. இரண்டாம் முறை கர்ணன் நகுலனோடு வாள் பயிற்சி செய்கையில். பிறகு அர்ஜுனன் கர்ணனை துவந்த யுத்தத்துக்கு அழைத்த அந்த பின் மதிய வேளையில். கடைசியாக களமாடுகையில். உண்மையில் பீமன் கர்ணனை மிகவும் மதிக்கிறான். அவனைப் பற்றி இருமுறை தருமனிடம் அவன் சொல்வதை பார்க்கலாம்.

1. களமாடுகையில், தருமன் கர்ணனுக்கு யார் குரு என்று கேட்கிறான். அதற்கு பீமன், 'அவனைப் போன்றவர்களுக்கெல்லாம் குரு தேவையில்லை, வேண்டுமென்றால் அந்த தெய்வங்களே வந்து கற்று கொடுக்கும்' என்கிறான்.

2. துருபதனின் கழுகு வியூகத்தின் வலப்பகுதியில் தனியே மாட்டிக்கொள்ளும் அவனைப் பார்த்து தருமனிடம், 'அது சிலந்தி வலையில் மாட்டிய வண்டு. அவர்களே வலையை அறுத்து விட்டு விடுவார்கள்' என்கிறான்.

அப்படிப்பட்டவன் கர்ணனை அவமதிப்பது கர்ணன் ஏதாவது ஒரு சகோதரனோடு அயுதமெடுக்கையில் தான். அது ஏன்? கர்ணன் அவர்களைக் கொன்று விடலாகாது என்பதற்கா? அல்லது மூத்தவர் முன் இளையவர்கள் அயுதமெடுக்கக் கூடாது என்பதற்காகவா? மனம் இரண்டாவதைத் தான் தேற்கிறது. மேலும் ஒன்று, அவன் கர்ணனை எந்த அளவுக்கு மதிக்கிறானோ, அதே அளவுக்கு வெறுக்கவும் செய்கிறான். துரியனிடம் தன்னுடைய இடத்தை அவன் பெற்றிருப்பதால். 

இவற்றோடு பீமனிடம் ஓர் ஆழ்ந்த கசப்புணர்வும், அவநம்பிக்கையும் உள்ளன. அந்த இரு உணர்வுகள் தான் அவன் தன் வாழ்நாளில் அடைந்திருக்க வேண்டிய அனைத்து உச்சங்களில் இருந்தும் அவனை இரண்டாமிடத்திலேயே வைத்திருக்கின்றன. 

அந்த கசப்பினை அவன் பெற்றது எப்படி என்று அவன் அர்ஜுனனிடம் பேசுமிடம் மிக நுட்பமானது. அவன் கௌரவர்களை வெறுக்கவில்லை. அவர்களை கண்மூடித்தனமாக நம்பியதற்காகத் தன்னைத் தானே வெறுக்கிறான். "அன்று அவர்கள் என்னை அழைக்கும்போது, எனக்கு உணவு பரிமாறும்போது நான் ஒரு துளியும் ஐயப்படவில்லை என்பதுதான் இன்றும் என்னை வாட்டுகிறது." தன் மீதான கசப்பையே அவன் அனைத்திலும் காண்கிறான். அவனின் மானிடர் மீதான அவநம்பிக்கை என்பது தன் மீதான அவநம்பிக்கை தான். சுயவெறுப்பு என்பது தன்னைத் தான் அழிக்கும் ஓர் நெருப்பு. அணைப்பது எளிதல்ல.


ஆனாலும் இங்கே பீமன் அந்த சுயவெறுப்பை பகடி மூலமாகக் கடந்து வருகிறான். சிந்தனையாளன் என்பதற்கு இன்று அவன் தரும் விளக்கத்தை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டிருக்கிறேன். "சஞ்சலங்களை சரியான சொற்களில் சொல்லிவிட்டாலே நம் அகம் நிறைவடைந்துவிடுகிறது. அந்தப்பெருமிதத்தில் அதற்குக் காரணமான இக்கட்டை மறந்துவிடுவோம். அந்த சொற்றொடரை முடிந்தவரை சொல்லிச்சொல்லி பரப்பி நிறைவடைவோம். இக்கட்டுகளின் நிகர விளைவு என்பது சிந்தனையாளர்களை உண்டுபண்ணுவதுதான்", என்று சொல்லி தானும் ஓர் சிந்தனையாளன் என்று சொல்லுமிடத்தில் ஜெ யின் மனித மனதின் அவதானிப்பை எண்ணி வியக்காமலிருக்க முடிவதில்லை. ஏனென்றால் நானும் ஓர் சிந்தனையாளன் தான்!!!!! 

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

பிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே

அன்பு ஜெயமோகன்,

          புறத்தே நிகழும் சம்பவங்கள் அக்கணத்திலேயே கரைந்துவிடுகின்றன. ஆனால், அவை அகத்தில் உண்டாக்கும் நினைவுகளே திகிலூட்டுகின்றன. போர்க்காட்சியை பீமன் எளிதில் எதிர்கொள்கிறான். தருமானாலோ அவ்வாறு அக்காட்சியைக் கடந்துவிட முடிவதில்லை. கண்முன்னே நிகழ்வுகள் இல்லாமல் ஆனபின்னும் அந்நிகழ்வுகளின் பிம்பங்களால் தருமன் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவனின் இயல்பே அதுதான். அதனால்தான் பீமனிடம் அறத்தைப் பற்றிச் சொல்கிறான். பீமனோ களத்தில் நெறியென்று எதுவுமில்லை என எளிதில் தருமரை எதிர்கொண்டுவிடுகிறான். கூடவே நாம் வெறும் விலங்குகளே என்றும் சொல்கிறான். அதுகாறும் மானுடப்பரப்பாக மையம் கொண்டிருந்த உரையாடல் பிரபஞ்சப்பரப்புக்கு விரியும் நேர்த்தியான தருணம் அது. நம்மை மானுடர் என்றும், பிற உயிர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவர் என்றும் நம்பிக்கொண்டிருந்த அகங்காரத்தின் மீது தொடுக்கப்பட்ட சொற்கணை அது. மானுட உலகில் மனிதன் மனிதனாக இருக்கலாம். பிரபஞ்சத்திலோ அவன் பிற உயிர்களைப்போன்ற விலங்கே. களத்தில் நெறியை முன்வைக்கும் மானுடம் அதைப் பின்பற்ற முடியாமல் பின்வாங்குதல் முரணன்று. அதுவே பிரபஞ்ச இயல்பு. நாம் ஒழுங்கற்றிருக்கும் அமைப்பை ஒழுங்குபடுத்தப் பார்க்கிறோம்.  அலைபாயும் மனது அமைதியை விரும்புவது இயல்பு என்றாலும், மனதின் இயல்பு அலைபாய்வதே. எளிமையாகச் சொல்வதாயின் அலைபாய்வதும், அமைதியை நாடுவதும் என்றிருப்பதே மனதின் முழுமை. நாம் தருமனாக இருக்க விரும்பினாலும் அப்படியே இருந்து விட முடியாது. தருமனின் கெஞ்சலே அதற்கு சான்று. நமக்குள் தருமன், பீமன், அர்ச்சுனன், துரோணர் என எல்லோரும் இருக்கின்றனர். அவர்கள் நமக்கு ஒழுங்கற்றிருக்கும் நம்மை அடையாளம் காட்டியபடியே இருக்கின்றனர். கூடவே, நாம் கற்பனை செய்திருக்கும்படியான மானுடவாழ்வைக் கேள்விக்குள்ளாக்கியபடியும் இருக்கின்றனர். முழுமையை ஒழுங்கு என நம்புகிறோம். அங்குதான் தவறு நேர்ந்துவிடுகிறது. ஒழுங்கும், ஒழுங்கின்மையும் இணைந்த்தே முழுமை.

பாரதத்தை வாசிப்பது

 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய காலை வணக்கம். நலம் தானே. வெண்முரசு துவங்கிய தினத்தில் இருந்தே படித்துக் கொண்டு தான் இருந்தேன். எதிர்பாராத விதமாக தொடர இயலாமல் போய் விட்டது, நீங்கள் "முதற்க்கனல்" முடித்து "மழைப்பாடல்" , "வண்ணக்கடல்" "நீலம்"  "பிரயாகை" என வேகமாக சென்று கொண்டு இருக்கிறீர்கள். நான் இப்போது தான் வண்ணக் கடலில் 50வது அத்தியாயமே முடித்து இருக்கிறேன்.

இதுவரை படித்ததை பற்றி ஒரு கடிதமேனும் எழுத நினைத்து நினைத்து மனதிற்குள்ளேயே அழித்ததே மிச்சம். ஆனால் மற்றவர்கள் எழுதும் அனைத்துக் கடிதங்களையும் தவறாமல்  படிக்கிறேன். ஒரே எழுத்து விஜயனின் அம்பு போல எத்துனை ஆழமாக ஒவ்வொரு மனதையும் தைக்கிறது என்று புரிகையில் எனக்கு என்ன புரிந்தது என்று யோசிக்கிறேன். மீண்டும் முதலில் இருந்து வாசிக்கலாமா என்று யோசித்தால் முதல் வாசிப்பில் உங்களை முழுமையாக அடைவதற்கே இன்னும் நீண்டும் தூரம் செல்ல வேண்டி இருக்கையில் மீள் வாசிப்பை சற்று காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு  தொடர்ந்து வாசிக்கிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்த பின் அதன் சாரமாக மனதிற்குள் வெறும் கதை மட்டுமே எஞ்சி இருப்பதை நினைக்கையில் அதன் நுட்பங்களை நினைவில் கொள்ள முடியவில்லையே என்று நினைக்கையில்  இன்னும் அதிக உழைப்பு என்னிடம் தேவைப் படுகிறது என்பது புரிகிறது. வேகமாய் படித்து முடிப்பதை விட இன்னும் நுட்பமாக வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்து இன்னும் நிதானமாக்கி இருக்கிறேன் என்னுடைய வாசிப்பின் வேகத்தினை .

இருந்தாலும் இதுவரை படித்ததை மொத்தமாக எண்ணிப் பார்த்தால் இது வரை நான் கற்றவைகளின் உச்சமாக  "வெண்முரசினை" என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். உள்ளத்தில் எப்போதோ எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைப்பது போலத் தோன்றுகிறது. எனக்கு புரிந்ததாய் நினைத்தவை எல்லாம் கேள்வியே தவறு  என்று நினைக்க வைத்து உள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு அத்தியாயமும் எனக்குள் எதையோ விரித்துக் கொண்டே செல்கிறது. ஆழமான எதை ஒன்றையோ நோக்கி செல்கிறேன் என்பது புரிகிறது. ஆனால் எங்கே இருக்கிறேன் என்பதே புரியாத போது எங்கே போகிறேன் என்பது மட்டும் புரிந்து விடப் போகிறதா என்ன? எத்துனை அகச் சிக்கல்களை இந்த வாசிப்பு ஏற்படுத்தினாலும் விட்டு விடலாம் என்று தோணாமல் இருப்பதை நானே ஆச்சர்யமாகத் தான்  பார்க்கிறேன்.

கதை, கதாபாத்திரங்கள், சிக்கல்கள் எல்லாம் தாண்டி நான் வாழாத இன்னும் சொல்லப் போனால் முழுமையாக கேள்வியே படாத ஒரு உலகம் என்னை எப்போதும் கைநீட்டி அழைத்துக் கொள்கிறது இதற்குள் நுழையும் போதெல்லாம். 

இளநாகன் போல தென்திசையில் இருந்து தான் கிளம்பி இருக்கிறேன். எப்போது சேர்வேன் என்றும் தெரியாது. சேர்வேனா என்றும் தெரியாது. இருந்தாலும் நானும் ஒரு பயணி என்ற சொல்லே என்னை பெரிதும் உவகைக்கு உள்ளாக்குகிறது.

இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு என்னுடைய நன்றிகள். நான் சொல்லவந்ததை முழுமையாக சொல்லி முடித்தது போலவே தோன்றவில்லை இந்த வரி வரை. இருந்தாலும் உங்களின் நேரத்தை வீணடித்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இத்தோடு முடித்துக் கொள்கிறேன். 
 

அன்புடன் 
பிரசன்னா 

அன்புள்ள பிரசன்னா

வெண்முரசுபோன்ற நூலை முதல் வாசிப்பிலேயே எளிதாக பிடித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நமக்கு நுட்பங்களை தொட்ட்செடுத்து ஆழமாக வாசிப்பது எங்குமே கற்பிக்கப்படவில்லை. நாமாகவே கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

ஆகவே உங்கள் வாசிப்பின் இடர்கள் மிக இயல்பானவை. அனேகமாக அனைவரிடமும் காணக்கிடைப்பவை. தொடர் வாசிப்பு, வாசித்தவற்றை விவாதிப்பது, கடிதங்கள் விமர்சனங்கள் போன்றவற்றில் நம் வாசிப்பை ஒப்பிட்டுக்கொள்வது ஆகியவை அவசியம்

அத்துடன் வாசிப்பவற்றுக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பை கூர்ந்து அவதானிக்க முயல்வதும் முக்கியம். வாசிப்பது மனமமிழ்ச்சிக்காக அல்லது பொழுதுபோக்குக்காக என்ற எண்ணம் விலகி அது ஒரு வாழ்க்கை என எண்ண ஆரம்பித்தோமென்றால் மிக விரைவிலேயே இலக்கியத்தின் நுட்பங்கள் பிடிகிடைத்துவிடும்

ஜெ

வண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்கவேல்
நன்றி

குருசேத்திரத்திற்கு செல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது.அந்த காரணமே அவர்களை அங்கு இழுத்துபோய் ஒவ்வொருவரையும் ஆணியடித்து அங்கே கட்டியும் வைக்கிறது.

குருசேத்திரத்திற்கு செல்லவேண்டிய நிற்பந்தமோ, ஆணியடித்து  அதில் தன்னை கட்டிக்கொள்ளவேண்டிய எந்ததேவையும் இல்லாத ஒரு பாத்திரம் துரோணர். அவர் காலுக்கு கீழே எல்லாத திசையிலும் பாதைகள் இருக்கின்றது.அவர் விழி செல்லும் பாதையின் எல்லா திசைகளின் கதவுகளும் திறந்தே இருக்கின்றது.ஆனாலும் அவர் தன்னை குருசேத்திரத்தை விட்டு வெளியேற்ற வில்லை. கட்டப்படாத காளை அவர் ஏன் தன்னைப்பலிக்கொடுத்தார் என்று துரோணரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் எண்ணம் எழுந்து கேள்வியாகவே நின்று முன்னோக்கிப்போகமுடியாமல் தடுத்துவிடும். திரு.ஜெ அந்த கேள்வியையே தனக்குள்கேட்டு அதற்கு சரியான பதிலை இங்கு வைத்து உள்ளார்.துரோணரை மிகநெருங்கி அறிவதற்கு அந்த பதில் திறப்பாக உள்ளது.

நான்போகங்களைவிழைபவன்அல்ல
இந்தகைப்பிடிதர்ப்பையுடன்எங்கும்எவ்வகையிலும்என்னால்வாழமுடியும்.ஆனால்நான்துறவியும்அல்ல. இம்மண்ணில்நான்விழைவதுஎனக்கானமதிப்பைமட்டுமே.இளைஞர்களே, என்வாழ்நாளில்நான்இருக்கவேண்டியஇடத்தில்இருக்கிறேன்எனஉணர்ந்ததுஇங்கேஅஸ்தினபுரியில்மட்டும்தான்.” பெருமூச்சுடன்அவர்தன்னைசமநிலைப்படுத்திக்கொண்டார். அஸ்தினபுரியின்படகுகள்சென்றுபிரமதத்தில்இறங்கியசெய்தியைக்கேட்டபோதுஎன்னையறியாமலேயேஎன்கண்கள்நீர்வடிப்பதைஉணர்ந்தேன்.பிராமணனாகியநான்என்தர்மத்துக்கன்றிவேறெதற்கும்கடன்பட்டவன்அல்ல

எந்தமண்ணுக்கும்அரசுக்கும்என்மேல்உரிமையும்இல்லை.ஆனால்இன்றுஇச்செயலுக்காகநான்பீஷ்மருக்குவாழ்நாள்கடன்பட்டிருக்கிறேன்.அவரதுநாடேஎனதுநாடு.அவரதுஅரசின்கடைக்குடிமகன்நான்.அவரதுநட்பும்பகையும்என்னுடையவை.அவருடன்இருந்துஅவருக்காகவும்அவரதுவழித்தோன்றல்களுக்காகவும்உயிர்கொடுத்தலேஎன்அறம்.அதற்கப்பால்என்றும்எச்சிந்தனையும்எனக்கில்லை.இதோஎன்மைந்தனுக்கும்அக்கடமையைவிதிக்கிறேன்.”

ஒரு மனிதன் விழையும்மதிப்புஎன்பது அவன் உயிரைவிட, குலவளச்சியைவிட, வாழ்க்கையைவிட பெரிதாகி விடுகின்றது.

தமுக்குப்போடுவது என்பது ஒரு சமூகத்தை ஞாபகம் படுத்தவதாக மட்டும் உள்ளது என்பதால் தமுக்குப்போட யாரும் செல்லக்கூடாது என்பது ஒரு நிலையாகி விட்ட இந்த நாளில் சிதம்பரம் வட்டம் மஞ்சக்குழி கிராமத்தில் அருளருளும்அருளரசி ஸ்ரீஅகழகுநாச்சித்தாயார்முன் தமுக்கடித்துக்கொண்டுவரும் பெரியவர் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சி நெஞ்சில் நிறைந்தது.

எப்படி இந்த மகிழ்ச்சி? எதை இதன் மூலம் கண்டுக்கொண்டார்”  அன்னையின் ஊர்வலம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

துணைக்கிராமங்களில் அன்னை வரவேற்கப்படும்போதெல்லாம் அன்னைக்கு அளிக்கும் வரவேற்பு காணிக்கையில் அன்னைக்கு மாலைசாத்தப்பட்டப்பின்பு அன்னை ஆசிக்கூடிய மாலை ஒன்று அவருக்கும் சூட்டப்படும் அப்போது அன்னையைப்பார்த்தேன், அன்னைக்கு முன்னால் அவர் அவருக்குப்பின்னால் ஊர்.

அவர் தப்பு அடிக்கின்றார் என்ற ஊர் தப்பாக நினைத்தது அன்று புரிந்தது.அன்னை, ஊர் இடையில் தான் என்று தனது இடத்தை அவர் அறிந்துக்கொண்டு இருக்கின்றார்.

மதிப்பிற்கும் பின்னால் உலகமும் உயிரும் எவ்வளவு சிறியதாக ஆகிவிடுகின்றது.
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் ”ஆலயம் ஆயிரம்” தஞ்சைப்பெரியக்கோவில் கட்டுரையில் இப்படிச்சொல்கின்றார் “இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூடமன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின்பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கிஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது”


மாபெரும் சோழபேரரசை நிலை நிறுத்திய ராஜராஜசோழன் நின்ற இடமும் அவன் மக்களை நிறுத்திய இடமும் அவன் அரசை அசைக்கமுடியாத இடத்தில் வைத்தது.


நாட்டைப்பிடிப்பவன் சத்ரபதி இல்லை உள்ளங்களைப்பிடிப்பவன் சத்ரபதி என்று திரு.ஜெகாட்டும் அழகே அழகு, மாபெரும் தனுர்வேத வித்தையின் விருட்சமாக வளரும் துரோணரின் சித்திரத்தை செதுக்கிப்போகும்போதே அதில் ஒரு பூவாக பீஷ்மன் பூக்கும் தருணத்தை காட்டி மெய்சிலிர்க்க வைக்கின்றார். இளைஞர்களே, தன்குடிகளில்எளியவனின்உள்ளத்தைக்கூடஅறிந்துகொள்பவனையேசத்ரபதிஎன்கின்றனர்சான்றோர்என்றார்துரோணர்.


சத்ரபதிகளும் மனிதர்கள்தான் ஆனால் அவர்கள் மனிதர்களுக்கான இதயம் கொண்ட மனிதர்கள்.சத்ரபதிகளை நினைக்கும்போதே சர்வாதிகாரிகள் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.யார் சர்வாதிகாரிகள்?சத்ரபதிகளை மட்டும் தான் திரு.ஜெ இங்கு சொல்லி உள்ளார்.நன்றி