Monday, February 29, 2016

பெருங்காற்றுகள்



பெருங்காற்றுகள் நுண்வடிவில் உறையும் விரிவானுக்குக்கீழே  எந்த நம்பிக்கையில் கூடுகட்டுகின்றன பறவைகள்? அறியேன்

3 நாட்களாக நடந்த நாடக கொண்டாட்டங்கள் எல்லாம் சட்டென முடிந்து போனது போல் மனம் பாரமானது இதை படித்த்தும்
மிக அருமையான நாடகமாக இதை நிஜமாகவே மேடையில் நடத்தலாம். எல்லாம் எல்லாம் ஜெ அவர்களே சொல்லி கொடுத்து விட்டார்கள். அரங்க அமைப்பு, அரங்கு சொல்லி கதாபாத்திரங்களுடன் பேசுவது போன்ற வித்தியாசமான, கூடவே நகைசுவையான ஒரு படைப்பு. அரங்கு சொல்லிக்கு இப்போது ரசிகர்கள் இருக்கிறர்கள். அத்தனை அருமையான ஆளுமை அந்த  கதாபாத்திரம்
எத்தனை எளிமையாக ஒரு மிகப் பெரும் விஷயத்தை நாடக வடிவில் சொல்லி இருக்கிறார்...
காண்டீபத்தின் இன்னொரு பெயர் தான் சந்திர தனுஷா? குரங்கு கொடி ஏன் பார்த்தன் வைத்து இருக்கிறான் என்றும் இன்று தான் புரிந்தது. இதர்கு முன்பே மணிபூரகத்திலோ அல்லது உலூபியிடமோ தான்பற்றற்றவன் எல்லாபிணைப்புகளயும் அருத்துக்கொ|ண்டேதான் போய்க்கொண்டு இருப்பேன் என்று அர்ஜுன் சொல்கையில் யாரோ அவனிடம் மரங்கள் வேருடன் தான் பிணைக்கபட்டிருக்கிண்றன . எளிதல்ல எல்லா பிணைப்புகளயும் அறுத்துச் செல்வது என்று சொல்வார்கள்.
இந்த்திரபிரஸ்தம் விழாவே வந்து விட்டதே ஏன் இன்னும் காண்டவ தகனம் சொல்லப்படவில்லை , எப்படி அதை சொல்லப்போகிறார் என்ரு காத்திருந்தோம். இப்படி நாடக வடிவில் சொல்லியது மிக மிக புதுமை மிக மிக அருமை
அன்புடன்
லோகமாதேவி

நாடகம்

https://youtu.be/yhqkRGISQr8?t=3221

இந்த இடத்தில் இருந்து ஒரு மூன்று நாங்கு நிமிடங்கள் பாருங்கள்

:)

கவிஞன் நாடகத்தின் முதலில் சொல்வது இந்த இடத்துக்கு வருவதர்க்கு தானே..

நன்றி
வெ. ராகவ்

கர்ணனின் விஷம்





அன்புள்ள ஜெ சார்

வெண்முரசு வெய்யோன் வளர்ந்துசெல்லு திசை இப்போது நன்றாகவே தெரிகிறது. கர்ணன் விஷம் மிகுந்தவனாக ஆகப்போகிறான். அவனுடைய வீழ்ச்சிதான் இந்த நாவல் இல்லையா? எதிர்பார்த்ததாக இருந்தாலும் இந்த வீழ்ச்சி மனம் கசப்படையச்செய்கிறது.

ஆனால் இதுவரை வந்த எந்த மகாபாரதக்கதையிலும் இல்லாத ஒரு வலுவான தரப்பை உருவாக்கிவிட்டீர்கள். ஏன் பாஞ்சாலியை அவமதிக்கையில் கர்ணன் பேசாமலிருந்தான்? அதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால் இப்போது இந்த காண்டவ அழிப்புக்கு அவள்தான் காரணம் என்னும்போது அதில் தப்பே இல்லை என்று தோன்றுகிறது.

இருதரப்பையும் வலுவானதாக ஆக்கிவிட்டீர்கள். மாட்ச் சுவாரசியமாக ஆகிறது

சரவணன்

திரௌபதியும் அங்கதமும்



முறைமைகளும், நுண்ணாடல்களும்,
intense மனவெளிப் பயணங்களுமாக நிறைந்திருந்த தருணத்தில் இந்நாடகம் நல்ல relief. இந்நாடகத்தில் உள்ளதை மீபுனைவு உத்தி என்பார்கள் அல்லவா?

அரங்குசொல்லியின் எல்லாவற்றிற்குமான irreverence  மிகவும் ரசிக்கும் படியுள்ளது .  திரௌபதியோ அர்ஜுன்னோ நெகிழ்ந்து ரசித்திருப்பார்களா?
 
கல்பனா ஜெயகாந்த்

Sunday, February 28, 2016

சாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.




    கிராமங்களில் ஊர் திருவிழாவில் முக்கிய நிகழ்வு இரவு சுவாமி உலா வருதல். சுவாமியின் அலங்காரம் மூன்று நான்கு மணி நேரம் நடக்கும். அதைப்போல் சுவாமி வரும் சப்பரத்திற்கான அலங்காரமும் பல மணிநேரம் நடக்கும். அதை சிறுவர்கள் சலிக்காமல் வேடிக்கைப்  பார்த்துக்கொண்டிருப்போம்.  ஒரு வழியாக நன்கு இருட்டிய பிறகு சுவாமி சப்பரத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலம் வர ஆரம்பிக்கும். சிறுவர்கள் நாங்கள் அந்த சப்பரத்தை ஏதாவது ஒரு பாகத்தை தொட்டபடி கூடவே வருவோம். 

 அச்சமயம் பெரியவர்கள் சிலர் எங்களை தொந்தரவாக கருதி விரட்ட முயல்வார்கள். அதை நாங்கள் சட்டைசெய்யாமல் ஒரு வித பெருமிதத்தோடு உடன் வருவோம். வீட்டினர் தேடிப்பிடித்து திட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வரை இப்படி சப்பரத்தை தொட்டுப் பின் தொடர்தல் நடக்கும். சப்பரத்தை இப்படி தொட்டுக்கொண்டு செல்வதில் ஒரு மகிழ்வும் தன்னிறைவும் தோன்றும். நாங்கள் உருப்படியாக எதுவும் செய்யாவிட்டாலும்கூட அந்த சுவாமி ஊர்வலத்தில் ஏதோ ஒரு பங்காற்றிய நிறைவு இருக்கும். 
   இன்று தமிழ் இலக்கிய உலகில் வெண்முரசு என்கிற ஒரு மிகப்பெரிய சுவாமி சப்பரம் உலா வருகிறது. அந்த பிரம்மாண்டத்தைப்பார்த்து அஞ்சி ஒதுங்கி போவோர்கள்  ஒருவகையினர். இதெல்லாம் ஊருக்கு அவசியமா என  அவர்கள் வெளியில் வீம்பு பேசி உள்ளெ நடுங்கி கதவடைத்து வீட்டினுள் பதைப்தைப்புடன் அஞ்சி இருக்கின்றனர். சிலர் அந்த சப்பரத்தின் அழகை, அது உலா வரும் கம்பீரத்தை, இமை அசையாமல் ஆர்வத்துடன் பார்த்துக் களிக்கின்றனர். அந்த நிகழ்வை எஞ்சிய வாழ்நாளெல்லாம் மறக்காத வண்னம் மனதில் நிறுத்திக்கொள்கிறார்கள்.    அந்தப் பெரு நிகழ்வில் நான் முடிந்தவரை இணைந்து இருக்க வேண்டும் என விழைகிறேன்.  என்னால் என்ன செய்யக்கூடும்?

 வெண்முரசில் நான் அறிந்தவற்றில், அடைந்த அனுபவத்தில், இருந்து  என்னால் எழுத முடிந்த அளவு எழுதிவருகிறேன்.  யாரும் அறியாத ஒன்றை   நான் எடுத்துரைப்பதாகவோ அல்லது எனக்கு புரிந்த ஒன்றை மற்றவருக்கு விளக்குவதற்காகவோ நான் எழுதுவதில்லை. உண்மையில் நான் எனக்காக  எழுதிக்கொள்வதே முதல் நோக்கம். 

 இதற்கு முன்  நான் நான்கு வரி கூட பொது வெளியில் எழுதியதோ பேசியதோ   கிடையாது. நான் வெண்முரசில் அறிந்ததை எழுதுவதில் முடிந்த அளவு நேர்த்தியும் கடமைப்பாடும் இருக்க வேண்டும் என்பதற்காக குழுமத்தில் பதிவிடுகிறேன்.   இப்படி எழுதுவதன் மூலம்  அந்த சுவாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டே பின்தொடரும் சிறுவன் என என்னை உணர்கிறேன். இதனால் அந்தச் சப்பரத்திற்கு என்னால் ஆவது ஒன்றும் இல்லை என எனக்குத் தெரியும்.    அந்த  இறை திருவுருவை தாங்கிச் செல்லும் பெரும் சப்பரத்தை தொட்டபடி பின்தொடரும் சிறுவனாக இருக்கும்  பேரின்பத்தைத்தவிர வேறென்ன வேண்டும் எனக்கு.

தண்டபாணி துரைவேல்

அரங்குசொல்லி





அரங்குசொல்லி என்னும் கதாபாத்திரம் சம்ஸ்கிருத நாடகத்தில் மிக முக்கியமானவன். தெருக்கூத்து போன்ற நாடகங்களிலும் அவன் முக்கியமானவன். அவன் நம் சமகாலத்தையும் நாடகம் நடக்கும் காலத்தையும் இணைப்பவன். காலங்களை இணைப்பவன். இடைவெட்டுக்கள் எல்லாமே அவனால்தான் நிகழ்த்தப்படும்.

அரங்குசொல்லி இந்த நாடகத்தில் மிகமிகநுட்பமாக விளையாடுகிறான். உரியநேரத்தில் ஒரு சாமானியனாக தன்னை உணர்ந்து திரும்பிச்செல்கிறான். தன் எளியகூட்டுக்குள் அவன் செல்வது அரிய இடம். பெருங்காற்றுகள் வாழும் வானத்தின் கீழ் எந்நம்பிக்கையில் பறவைகள் கூடுகட்டுகின்றன என்பது மகாபாரதப்பின்புலத்தில் மகத்தான ஒரு வரி

சுவாமி

மாநாகர்






நாகர்களின் உட்போர் பற்றிய செய்திகள் இல்லையேல் காண்டவ அழிப்பை ஒரு வெறும் இனப்போராக ஆக்கிக்கொள்ளமுடியும் என தோன்றுகிறது. நாகர்கள் எதன்பொருட்டு போரிடுகிறார்கள்? அவர்களின் போரெல்லாம் அவர்களுக்குள்ளேயே. அவர்களின் மகாக்குரோதை அன்னை ஏன் கோபம் கொண்டிருக்கிறாள்? யார் மேல் கோபம்?

முன்பு பன்னகர்கள் உரகர்களுக்குச் செய்ததைத்தான் இப்போது நாகர்களுக்கு பிறர் ஒட்டுமொத்தமாகச் செய்கிறார்கள். அப்படிபார்க்கையில் எளிமைப்படுத்தவே முடியாத ஒன்றாக உள்ளது இந்தபோர். நாகர்களை அழித்த அர்ஜுனன் நாகர்குல உலூபியை மணந்தான் என்பதை வைத்து இதைப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

மனோகர்

நாகர்கள் யார்?






வெண்முரசின் பாம்புகளை ஆரம்பத்திலேயே விழைவு என்று சொல்லிவிடீர்கள். இப்போது அவர்கள் தொன்மையான குடிகள் என வருகிறது. உலூபி கதையிலும் அவர்கள் விழைவாகவே சொல்லப்படுகிறார்கள். அத்துடன் அர்ஜுனனும் பீமனும் செல்லும் நாக உலகங்களும் விழைவின் பாதாளங்களாகவே வருகின்றன.

அப்படியென்றால் இந்த நாகர்கள் யார்? அவர்கள் தொன்மையான அடிப்படி உணர்ச்சி மட்டும் கொண்டவர்களாக இருந்தார்களா? ஆகவேதான் அழிந்தார்களா? அவர்களை விழைவு மானுட உருவம் கொண்டவர்கள் என ஏன் நம் முன்னோர் நம்பினர்?

இந்தக்கோணத்தில் சிந்தித்தால் பல இடங்களுக்குச் செல்லமுடிகிறது. மகாபாரதத்தை புதிய கோணத்தில் வாசிக்கவைக்கிறது

ராம்  

இரு எல்லைகள்





ஜெ

திரௌபதியை ஓர் எல்லையிலும் மறு எல்லையில் கண்ணனையும் நிறுத்தியபடிச் செல்லும் வெண்முரசின் மையமே அங்கதநாடகத்திலும் எதிரொலிக்கிறது. திரௌபதி நாராயணி. கண்ணன் நாராயணன். இருவருமே ஆக்கமும் அழிவும் கலந்த தெய்வ உருவங்கள் எனத்தெரிகிறது. இந்த யூனிட்டி ஆச்சரியமளிக்கிறது

அங்கதநாடகத்தை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்கவேண்டும் என நினைக்கிறேன்.அதில் நீங்கள் சொல்லிவரும் பல நுட்பமான விஷயங்கள் மடித்து மடித்து வேறுவகையில் சொல்லப்பட்டுள்ளன

ஜெயராமன்