Wednesday, December 31, 2014

துரோணரின் பிம்பம்



துரோணர் குரு தட்சனையாக துருபதனை கேட்டவுடன், அதற்கு சம்மதித்து. அதை நடத்துவதற்கு என்ன காரணம் சொல்வது என்று விதுரர், பிதாமகர், சகுணி திட்டம் இடுவதை படித்த போது எனக்கு அமெரிக்கா தான் நினைவுக்கு வந்தது. எந்த நாட்டிலும் சென்று போர் செய்வதும் அதற்கான 'உத்தம' காரணத்தை எடுத்து உலகுக்கு  சொல்வதையும் இந்த திட்டமிடல் போலத்தான் செய்வார்களோ?

“ஆம், அனைத்துச் சிற்றரசர்களுக்கும் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கும். ஆனால் இதை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களெல்லாம் நம் அடிமைகள் என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் ஷத்ரியர் என்பதனால் நட்புநாடுகள் என்ற பாவனை அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதை நாம் கலைக்கையில்தான் அவர்கள் சினம் கொள்கிறார்கள். அது கலையாதபோது எதையும் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் நம் நட்புநாடாக இருப்பதற்கு நம்முடைய படைபலமன்றி வேறென்ன காரணம் இருக்கிறது? ...” என்றார் விதுரர்.

இது தான் இன்றைய உலக அரசியலின் நிலை போலும்.

சரி இவ்வளவு தந்திரமாக இவர்கள்(அஸ்தினாபுரம்) காரணம் ஜோடித்து போர் செய்ய என்ன காரணம்? மக்கள் நன்மைக்கா? இல்லை மண் ஆசையினாலா? ஒரு தனி மனிதரின் தேவை அதை நிறைவேற்ற இத்தனை செயலுகளும் நடக்கிறது. அவர் ஒரு குரு. குரு சொன்னால் தட்டலாகாது. குரு கூறுவதை நிறைவேற்றியே தீர வேண்டும்.  இது தான் மத குருக்களுக்கும் பொருந்துமோ, அதனால் தான் உலகிலும் வரலாற்றிலும் கொலை வெறி அடங்கியதில்லையோ?

துரோணர் இவர் ஒரு சிஷ்யனிடமும் சரியான ஒரு குரு தட்சனையை கேட்க மாட்டார் போலும். பிறப்பிலிருந்து இறப்புவரை அல்ல, இறப்புக்கு பிறகும் நிலை பேறு இல்லை என்று சாபம் வாங்கிய மனிதருக்கு வாழ்வில் பிடிப்பிருப்பதே பெரிய விஷயம். துரோணருக்கு அதையும் மீறி அவர் அகங்காரம் இவ்வளவு திடமாக இருப்பது ஆச்சரியம் தான்.

இந்த போரீன் மூலம் இவர் நிருப்பிக்க நினைப்பது ஓரே ஒருவனிடம் - துருபதன். அந்த ஒற்றை மனிதனிடம் இந்த ஒற்றை மனிதன் பழி தீர்க்க தான் இத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டதா? இறந்த பின்னும் முழுமை அடைய போகாத ஆன்மா இந்த தனி மனிதனிடம் வெற்றி பெற்று என்ன செய்ய போகிறது? தன் உள்ளத்தில் இருந்த அனல் கட்டியை எடுத்து வெளியில் வைக்க தெரியாத எளியவர்.

இந்த காரியத்தை வேறு மனிதர்கள் செய்தால் புரிந்து கொள்ள தக்கது. ஆனால் வாழ்நாள் முழுதும் வில்லை கற்று தேர்ந்து அதை ஒரு யோகமாக கொண்ட ஒரு மனிதரா இதை செய்வது. நம்பிக்கை துரோகம் அதை விட பெரிய விஷம் உலகில் இருக்க முடியாது போலிருக்கிறது. அதற்கு பீமனும், துரோணரும் ஒருவரே தான். ஆளை முழுதாக ஆக்கிரமித்து அவர்களின் உள்ளத்தில் முழுமையாக நிரம்பிவிடுகிறது. பின் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை போலும்.

துருபதனை அடித்து இழுத்து வந்து ஒரு புழு போல் அவன் முன் போடுகிறான். அவன் முன் என்னென்னமோ பேசும் துரோணரை எளிய சில வாக்கியங்களால் குத்தி குலைத்து விட்டு மீண்டும் செல்கிறான் துருபதன். இனி அந்த வாக்கியங்களே அவர் மனதில் தீயாய் எரிய கூடும். நிறைவடைய ஒரு ஆன்மா. கசந்து முடிந்தது அந்த போர்.

அர்ஜுனன் மனதில் மட்டும் அல்ல வண்ணக்கடல் முழுதும் என் மனதில் வளர்ந்து வந்த துரோணர் இந்த ஒரு நிகழ்வால் நொறுங்கினார். எளியவரானார்.

ஹரீஷ்

வெண்முரசு குழுமத்தில் இருந்து...

ஒற்றைத்தந்தி



இனிய ஜெயம்,

வேட்டை வழிகள் துவக்கத்தில் வரும் சூதன் பிரமதன் மீண்டும்  என் நினைவுகளை பின் நோக்கி அழைத்து செல்கிறான்.  நினைவில்  தீர்க்க சியாமர் எழுந்து வருகிறார். தீர்க்க சியாமர்  கையில் இருக்கும் யாழுக்கும்  பிரதமன் கையில் இருக்கும் யாழுக்கும் எத்தனை  பண்பு பேதம்.

தீர்க்க சியாமர்  தான் கைக்கொண்ட யாழுக்காக தன்னை தகவமைத்துக் கொண்டவர். அவற்றின் தந்திகளை மீட்ட  கட்டை விரலுக்கு இடையே தசையை கிழித்துக் கொள்கிறார். பெண்கள் குரல் மட்டுமே எட்டு கட்டை எனும் சுருதியை எட்டக் கூடியது. ஆண்களால் இயலாது. அந்த சுருதியை எட்ட சியாமர்  'காம விலக்கம்' [விதைகளை நீக்கிக் கொள்வது வழியாக இருக்கலாம்] கொள்கிறார்.  அவரது சொல்லில் பரவும் கதைகளை  இந்தப் பின்புலத்தில் பிறந்த அவரது இசையுடன் இணைத்தே புரிந்து கொள்ளப் படவேண்டும்.

பிரமதனின் யாழ் நேர் எதிர். அதில் ஒரே ஒரு தந்தி. அதன் முதல் மீட்டலிலேயே பார்வையற்ற திருதா 'சூதரே அது என்ன இசைக் கருவி' என்று வினவுகிறார். இந்த கருவி பிரமதனுக்காக தகவமைன்தது. அவனது கீழ் ஸ்தாயி [பெண்களால் இது முடியாது] குரலுக்கு இசைந்து வருவது. வண்டின் ரீங்காரம் போல இசை எழுவது. பிரமதன் சொல்லும் பகனின் வீழ்ச்சியை  இந்த பின்புலத்துடன் இணைத்தே சபை கேட்கிறது.   எனில் ஒரு சூதன் பாடலில் வரும் முக்கிய பாத்திரத்தின் எழுச் சியும் வீழ்ச்சியும்  அவர்கள் முன் வைக்கும் இசையுடன் கலந்து  முற்றிலும் புதிய பரிமாணத்துடன்  மிளிர்கிறது.

பிரமதன் பாடும் பகனின் கதை  துவக்கமே வீழ்ச்சியின் சித்திரத்துடன் தான் துவங்குகிறது.  ரா வணனின் கொடி வழி அவர்கள். அவர்க்களின் வாழ் இடம்  உஷ்ணம் கொண்ட உலோகப் பரப்பில் விழுந்த நீர் சொட்டு போல சத்ரியர்களால் சுருங்குகிறது.

பகன் தன மூதன்னை கதை வழியே தான் ராவணன் கொடி வழி என உணர்கிறான். அதை உணரும் கணம் அவன் அடிப்படை ஆளுமை விழித்துக் கொள்கிறது. [ பைமி அனுமன் கதை கேட்டு முடியும் கணம் அவனுக்குள் உரையும் அவனது அடிப்படை ஆளுமை விழித்துக் கொள்வதைக் காண்கிறோம்].

பகன் தன உயிர் ஆற்றல் அத்தனையும் திரட்டி ராவணன் விரலின் வைர மோதிரத்தை பற்றிக் கொள்கிறான். இங்கே இந்த வைரம் மூதன்னை உடையில் பொதிந்து வைக்கப் பட்டிருக்கிறது. அங்கே ஹஸ்திநாபுரியின் அஸ்வதந்தம் எனும் வைரமும், அது வைக்கப்படும் இடமும்  அதை நோக்கிய விதுரரின் அசைவும்  இப்போது கூடுதல் பரிணாமம் பெறுகிறது.

பகன் பலராமர் வசம் சீடனாக சேருகிறான். பலராமர் அவன் தனது சீடன் என ஒரு முத்திரை மோதிரம் அளிக்கிறார்.பகன் தனக்கென சிறிய அரசு அமைக்கிறான். அது அஸ்வத் தாமனால்  முற்றிலும் அழிக்கப் படுகிறது. தவறாக  பகனின் குடியில் பெண்களும் குழந்தைகளும் யுத்த நெறிக்கு புறம்பாக  அஸ்வத்தாமனால் கொல்லப் படுகிறார்கள்.

இயற்க்கை கழித்த குழந்தை அதை மறைக்க அதிலேயே அமர்ந்திருக்கும் அது போல அஸ்வத்தாமன் தன் பிழையை மறைக்க  பகனின் நிலம் மொத்தத்தையும் தீக் கிரை  ஆக்குகிறான்.

பகனின் குடியில் ஒரு பெண், ஒரு குழந்தை உயிருடன் இல்லை. பகன் மனம் திரிபடைக்கிறான்.  இங்கு வரும் சித்திரம் முக்கியமானது. பகன் தனது ராவணன் மோதிரம், குருவின் இலட்சினை இரண்டையுமே தூக்கி வீசி விடுகிறான்.  இப்போது அவன் வெறும் 'கொல்லும் மிருகம்' மட்டுமே.  ஆக பீமன் பலராமரின் சீடரை கொல்ல வில்லை. இயல்பால் மிருகமாகத் திரியும் ஒருவனை மட்டுமே கொல்கிறான்.

அங்கே வனத்தில்  பீமன் பைமியைக் காணும் தோறும் திருதாவை எண்ணிக் கொள்கிறான். இங்கே திருதா பகனின் 'வதம்' வழியே எங்கோ பீமன் 'உயிருடன்' இருக்கிறான் என்று உணர்ந்து ஆறுதல் கொள்கிறார்.  

வேட்டை வழிகள் முற்றிலும் தனித்துவம் கொண்ட அத்யாயம்.

கடலூர் சீனு

மூன்று முகங்கள்



ஜெ

கிருஷ்ணனை ஒரேசமயம் மூன்று கோணங்களில் அறிமுகம் செய்கிறது வேட்டைவழிகள் பகுதி

1. யாதவ அரசன். அவன் ஒரு பெரிய பேரரசை உருவாக்க நினைக்கிறான். ஆகவே நகரத்தை உருவாக்குகிறான். வலுவான திருமண உறவுகளை உருவாக்க நினைக்கிறான். அவனை மற்றவர் பயப்படுகிறார்கள் -கர்ணன் பார்க்கும் கிருஷ்ணன்

2. அரசியல் ஞானி. விளையாட்டாகவே அரசியலை ஆடி எப்போதும் ஜெயிக்கக்கூடியவன். இது பலராமரின் வருகை வழியாக பீஷ்மர் புரிந்துகொள்வது

3. விதுரர் புரிந்துகொள்வது முழுமையான கிருஷ்ணன். புன்னகையுடன் வந்து புன்னகையுடன் லீலை புரிந்து திரும்பிச்சென்றவன். விதியையும் மக்களையும் நன்றாக அறிந்தவன்

சண்முகம்

குணச்சித்திரமும் ஆளுமையும்



ஜெ,

பிரயாகையின் கதாபாத்திரங்கள் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் குணச்சித்திரங்கள் மாறுவதே இல்லை. இந்த ஆச்சரியம்தான் ஒரு பெரிய புனைவிலக்கியத்தில் கவனிக்கப்படவேண்டியது என்று தோன்றுகிறது. கர்ணன் திரும்பி வரும்போது கொஞ்சம் மாறியிருக்கிரான். துரியோதனன் பீமன் செத்துப்போன பிறகு மாறியிருக்கிறான். இந்த மாற்றங்கள் எல்லாம் நம்பமுடியக்கூடியவையாகவே இருகின்றன. காரணம் அந்த மாற்றம் அவர்களின் பெர்சனாலிட்டியில்தான் நடக்கிறது. பெர்சனாலிட்டி மாறிவது இல்லை. அப்படியேதான் இருக்கிறது

அதேசமயம் எவருக்கும் பேச்சு, உருவம் அல்லது வேறுவகை அடையாளங்களில் கிளீஷேக்கள் எதையும் அளிக்கவும் இல்லை. இந்த மாற்றத்தில் முக்கியமானதாக எனக்குத் தோன்றியது குண்டாசியின் மாற்றம்தான். அதைப்போல வருத்தமான விஷயம் வேறு கிடையாது. ஆனால் நாம் வாழ்க்கையிலே அதைப்போல பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்

நீலம் வாசித்து ரொம்பநாள் பிரயாகை வாசிப்பதை தள்ளீப்போட்டேன். கடந்த ஒரு மாசமாக உட்காந்து வாசித்து நெருங்கிவிட்டேன்

அகிலா

இடைநாழி



ஜெ

ஒரு இடைவழியில் நடந்து இந்தப்பக்கம் வருவதற்குள் துரியோதனன் எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்துவிடும் அந்த இடம் மிக நுட்பமானது

ஏனென்றால் அவனுக்கு முன்னரே தெரியும். மனசில் ஆழத்தில் இருந்தது. கனவிலேயே எல்லாம் வந்துவிட்டது. யானையின் எலும்பு இல்லை என்று கனவு சொல்லிவிட்டது. அதை மூளைக்கு எட்டாமல் ஒளித்துவைத்திருந்தான். கர்ணன் டிரிக்கர் செய்ததும் மனசிலிலிருந்து மூளைக்குச் செய்திபோய்விட்டது. அந்த இடம்தான் அந்த இடைவழி

அந்த மாதிரி இடங்கள்தான் இந்நாவலை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டுசெல்கின்றன. சில இடங்கள் நேராக இருக்கின்றன. சில இடங்கள் மிகவும் பூடகமாக உள்ளன. இந்த மர்ம விளையாட்டுத்தான் என்னை மிகவும் கவர்கிறது

குண்டாசியின் மனசு மாறிக்கொண்டிருக்கும் விதமும் அதேபோலத்தான். முதலில் மனம் கலங்குகிறான். பிறகு ஆறுதல் அடைகிறான். அதன்பிறகு குற்றவுணர்ச்சியால் குடிக்கிறான்

எனக்கு மிகவும் கூர்மையாகப்ப்பட்ட இடம் கர்ணனின் நடத்தை. நாம் நினைக்காத ஒன்று அவனிடம் இருக்கிறது. அதனால்தான் அவன் குண்டாசியை போய் பார்க்கிறான். பாண்டவர் சாகவில்லை என்று அவனுக்குத்தெரியும். அதனால் அமைதியாக இருக்கிறான். செத்ததாகத் தெரிந்திருந்தால் வேறுமாதிரி இருந்திருப்பான்

சுவாமி

பிரயாகை-61-அப்பாக்களின் அகம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அன்னை முரண்களால் ஆனவள், அவள் சுமப்பாள்,பிறப்பிப்பாள், உணவூட்டுவாள், வளர்ப்பாள், அதற்கும்மேலாக விழுங்கியும் விடுவாள். எப்படி விழுங்குவாள்? நம்மைபோல சிறுசிறு உருண்டையாக பிடித்து மென்று தின்பதல்ல அவள் வேலை. பெரும் கவளமாக விழுங்கிவிடுவாள். பூமாதேவியையும் அவளின் பூகம்பத்தையும் நினைத்து கொள்வோம் அன்னையின் முரணுக்கு சாட்சியாக.

தந்தைக்கு இந்த முரண் இருக்கிறதா? இருக்கிறது என்றுதான் காட்டுகின்றான் வாயுபகவான். தந்தை சுமப்பதோ, பிறப்பிப்பதோ, உணவூட்டுவதோ, வளர்ப்பதோ, விழுங்குவதோ வெளியில் தெரிவதில்லை ஆனால் அத்தனையும் அவன் செய்கின்றான்.

அன்னையின் முரண் பூகம்பம் என்றால் தந்தையின் முரண் அசைவின்மை. அன்னை பக்தி மார்க்கத்தில் செய்யும் அனைத்தையும் தந்தை ஞானமார்க்கத்தில் செய்கின்றான். அன்னை செய்வது ஞானத்தில் வந்து நின்றுவிடுகின்றது. தந்தை செய்வது பக்தியில் வந்து நின்றுவிடுகின்றது. 

இடும்பி தன் மகனை காட்டைவிட்டு வெளியில் அனுப்பினால் அவன் ஏளனப்படுத்தப்படுவான் என்பதை அறிந்து இருக்கிறாள். பீமன் தன் மகன் காட்டில் இருந்தால் பறக்கமுடியாததால் ஏளனப்படுத்தப்படுவான் என்பதை அறிந்து இருக்கிறான். அன்னை அறியும் உண்மையை தந்தை அறியாமல் இருப்பதும், தந்தை அறியும் உண்மையை தாய் அறியாமல் இருப்பதும் இயற்கைாக அமைந்த முரண். இடும்பி அறிந்திருக்கும் உண்மை முகக்கண் கண்ட உண்மை. பீமன் அறிந்து இருக்கும் உண்மை அகக்கண் கண்ட உண்மை. இடும்பி காட்டின் இருட்டில் இருந்து நாட்டின் வெளிச்சத்தைப்பார்க்கிறாள். பீமன் நாட்டின்வெளிச்சத்தில் இருந்து காட்டின் இருட்டைப்பார்கிறான்.  நாட்டுக்கும் செல்ல முடியாமல் காட்டிலும் வழமுடியாமல் புள்வெளியில் வாழும் ஒரு வாழ்க்கை கடோத்கஜன்முன் நிற்கிறது. அன்னை, தந்தை மனதில் என்ன வேண்டுதல் இருக்கும்?  

பீமன் அகம்படும்பாடு எப்படி இருக்கும்?. பீமன் நீள்மூச்சுடன் “இன்றுஅவனை கொண்டுசென்று காட்டவேண்டும்அன்னைநாலைந்துமுறை கேட்டுவிட்டாள்” என்றான்.-பிரயாகை-60ல் வரும் இந்த வரிகள் வழியாக பீமன் குந்தியின் உள்ளத்தை  நமக்கும் காட்டுகிறான். ஆனால் குந்தியின் பெயரையோ, அண்ணன் பெயரையோ தம்பிகள் பெயரையோ பாண்டுவின் பெயரையோ தனது குழந்தைக்கு பழக்காமல் ஏன் திருதராஷ்டிரன் பெயரைப்பழக்குகின்றான்?

காட்டு வாழ்க்கைதான் பிடிக்கிறது என்றும் அரசின் எந்த முறைமையும் பழகிக்கொள்ளாமல், நல்லுடை உடுத்தாமல் காட்டுவேடன்போலவே வாழும் பீமன். எளிய மனிதர்கள்தான் தன்னை தேடுபவர்கள் என்று எளிய மனிதர்கள் உடன் அமர்ந்து உண்டு பேசி சிரிக்கும் பீமன் வாரணவதம் வந்த அன்று அனைத்து தளைகளும் விடுபட்டதுபோல் உணர்ந்து நிம்மதி அடையும் பீமன் என்று பீமனின் தனித்தன்மைகள் கூடிக்கூடி அற்புதமாக உள்ளது. ஆனால் தந்தையானபின்பு மகனை பேரரசன், சக்ரவர்த்தி என்றே கொஞ்சுகின்றான். இந்த இடத்தில் பீமன் தன்னை கண்டுகொண்டது திருதராஷ்டிரனாக.

அப்பாக்கள் எல்லோருமே கண்ணில்லாத திருதராஷ்டிரன்தான். இது அப்பாக்களின் முரண்.

யானைக்கட்டி ஆண்ட பரம்பரையில் ஒரு காடுகூட சொந்தம் இல்லாமல் வாழ்க்கை வாழும்  பீமன் மனிதில், மகன் பேரரசன், சக்கரவர்த்தி என்ற எண்ணம் வரும் என்றால் திருதராஷ்டிரன் நினைவுக்கு வரவேண்டிய தருணம்தான் இது. அற்புதம் ஜெ. பெரும் உடலுக்காக மட்டும் இல்லை பெரும் தந்தைபாசத்திற்காகவும் திருதராஷ்டிரன் இங்கு நினைவுப்படுத்தப்படுகின்றான்.

தந்தை பாசத்தில் ஆடிப்பிம்பங்களாய் நிற்கும் பீமனையும், , திருதராஷ்டிரனையும் விஞ்சும் ஹனுமானின் தந்தை வாயுவின் தந்தைப்பாசம் அதிர வைத்தது. பிள்ளைப்பாசத்தில்  வாயுவாகிய தந்தை பாதாளத்திற்கு செல்கிறான்.உலகத்தில் அசைவின்மை உண்டாக்குகின்றான். நிகரற்ற காட்சி, நிகரற்ற உண்மை ஜெ.   

//வாயுவில் ஏறிய ஹனுமான் ‘தந்தையேபாதாளத்துக்குச்செல்லுங்கள்’ என்று ஆணையிட்டான்மைந்தனைத் தூக்கிக் கொண்டுகாற்று பாதாளத்திற்குள் சென்றுவிட்டதுபூமியில் எங்கும் காற்றேஇல்லைகடல்கள் அசையாமல் துணிப்பரப்பு போல ஆயின.கிளைகளும் இலைகளும் அசையவில்லைநெருப்புகள்அசையவில்லைதூசி அசையவில்லைபூச்சிகளின் சிறகுகள்அசையவில்லைஉலகமே அசைவிழந்தது ஆகவே மக்களின்உள்ளங்களும் அசைவிழந்தனவிளைவாக சிந்தனைகள்அசைவிழந்தனஇறுதியில் பூமியே செயலற்றது.//

அன்னைகள் விழுங்குபவர்கள் என்றால் தந்தைகள் அசைவின்மையை உண்டாக்குபவர்பகள். பூமியில் பூகம்பம் வருவதும், அசைவின்மை வருவதும் ஒன்றுதான்.

அன்னைகள் அனைவரும் பூமாதா. தந்தைகள் அனைவரும் வாயுபகவான்.  பிள்ளைகள் அனைவரும் வானரங்கள்.  வானில் பறந்து சூரியனை பிடிக்க நினைக்கிறது, அருகில் சென்றதும் ராகுவை பிடிக்கப்போகின்றது, அங்கு சென்றதும் சிந்தை மாறி கேதுவைப்பிடிக்கப்போகிறது அதையும் பிடிக்காமல் வாலில் தட்டுப்படும் ஐராவதத்தை பிடித்து ஊதலாக நினைத்து ஊதுகிறது. சென்றவிடத்தில் அறிவை செலவிடக்கூடாது என்கின்றார் வள்ளுவர். சென்றவிடத்தில் எல்லாம் அறிவை செலவிட்டு செலவிட்டு செல்வதுதான் பிள்ளைகளின் விளையாட்டு அந்த பிள்ளைக்காகத்தான் தந்தை உலகத்தை அசைவிடாமல் செய்கிறான். 

சென்ற இடத்தால் செலவிடா தீதொரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு-திருக்குறள்.


பீமன், திருதராஷ்டிரன், வாயு மூன்று தந்தைகளும் ஒரு கோட்டில் வந்து நிற்கும்போது அகமும் முகமும் ஒன்றாய் இருப்பது அழகு. மூன்றுதந்தைகள் ஆனால் மூவரும் ஒருவர்.

திருதராஷ்டிரன் என்ற பெயர் கேட்டதும் கடோத்கஜன் அமைதிஅடைவதும், பின்பு பேச்சை மாற்றுவதும் அற்புதம். குழந்தையும் தெய்வதும் ஒன்று என்று சொல்வார்கள். பிடிக்காதவர்களை குழந்தைகள் புறக்கணிப்பது தெய்வம் அறிந்த கலை ஆகும். பாண்டவர்களுக்கு தீமை செய்பவன் திருதராஷ்டிரன் என்று அந்த பிஞ்சு உள்ளம் எப்படி அறிந்தது.?

ஹனுமான் கதையில் தர்ப்பை படுக்கையில் தீ என்ற உவமை வந்தபோது கடோத்கஜன் “திருதராஷ்டிரர்“ என்று பெயர் சொல்வது  வாசக உள்ளத்தை அதிரவைக்கும் குறியீடு ஜெ. அவனே “திருதராஷ்டிரர்..திருதராஷ்டிரர்” என்று பீமனை வெறுப்பு ஏற்றுவது உச்சம். தந்தைகளைக்கண்டு தந்தைகள் பயப்படும் இடம்.  மீண்டும் குழநதைகள் தெய்வம் என்ற குறியீட்டை நிறுவுகின்றீர்கள்ஜெ.
ஹனுமான் கதை கற்பனை வளத்தில் குழந்தைகளின் உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும் விதத்தில் அமைந்து பறக்க செய்துக்கொண்டே பெரியவர்கள் உள்ளத்தை சிந்தனையில் துவைத்து காயவைக்கிறது.

கதைதான் என்று நினைக்கின்றோம் அது வாழ்க்கையையே மாற்றி அமைத்துவிடுகிறது. ஹரிச்சந்திரன் கதை காந்தியை மாற்றி அமைத்ததுபோல ஹனுமன் கதை கடோத்கஜன் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது. குந்தியின் கதை பீமனை மாற்றி அமைத்துவிட்டது. பறக்கதெரியாத கடோத்கஜன் மாருதிபோல் பறப்பது அவன் இடும்பர்களின் இடும்பன் என்பதை காட்டுகின்றது. இடும்பன் பீமன் வேண்டுதல் பலித்துவிட்டது.
//ஒருகட்டத்தில் அவன் பறவைபோல காற்றில் பறந்து பறந்துஅமைந்தான். பீமன் எழுந்து நின்று கைவீசி நகைத்தான்.இடும்பர்களிலேயே கூட எவரும் அப்படி மரங்கள் மேல் பறப்பதைஅவன் கண்டதில்லை//
பிள்ளைகளுக்காக அம்மா, அப்பா வேண்டகூட தேவை இல்லை நினைத்தாலே வேண்டுதலை இறைவன் நிறைவேற்றிவிடுகிறான். இறைவன் அம்மையப்பன்.

அன்புள்ள ஜெ பிரயாகை-61ல் ஒரு கடலை அண்ணாந்துப்பார்த்தேன். அண்னாந்துப்பார்த்துக்கொண்டே இருக்கும்போதே வானவெளியில் நின்று கடலை குனிந்தும் பார்த்தேன். மேலே பறக்கும் பறவைகளையும், கடலுக்குள் நீந்தும் மீன்போன்ற குரங்குகளையும் பார்த்தேன். இது அற்புமான காட்சி. இணையற்ற அனுபவம். //காற்றில் இலைக்கடல் அலையடித்தது.அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்துசுழன்று இறங்கி அமைந்தனபச்சைவெளிக்கு அடியில் இருந்துபறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது.
தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்றுஅவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச்சொறிந்தபின்னர் கிளைகளில் தாவி மேலேறி வந்து சற்று அப்பால்அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்றது. 
   
காடு இனி காடு அல்ல அண்ணாந்துப்பார்க்கும் பச்சைக்கடல்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Tuesday, December 30, 2014

அறத்தின் வாள்



இனிய ஜெயம்,

“ஆம், நான் அதை அறிவேன். என்னால் அதை செய்யமுடியாது. அதற்கும் ஒரு ஷாத்ர வல்லமை தேவை” என்றார் விதுரர்.

இன்றைய பீஷ்ம விதுர விவாதத்தில்  விதுரர் வந்து சேர்ந்திருக்கும் சுய அளவீட்டின்  எல்லை அழகு.

திருதுராராஸ்த்ரர்  பத்ரசேனர் இருவரும்  உணர்சிகளையே ஆயுதமாக்கி பொருதுகின்றனர்.  இரு சத்ரிய குணங்களும் விடாக் கண்டன், கொடாக் கண்டன் நிலை.

கிருஷ்ணன் உச்ச பட்ச ராஜ தந்திரி.    சார்லி சாப்ளின் திரைப் படத்தில் ஒரு காட்சி வரும். கப்பல் கட்டும்  இடம் ஒன்றில் சார்லி பணிக்கு சேர்வார். முதல் பணியாக  அவருக்கு ஒரு சிறிய  கட்டை ஒன்று பொறுக்கி வரும் பணி தரப்படும். சார்லி  எடுத்துவரும் கட்டை, கட்டப் பட்டு வரும் கப்பல் கடலுக்குள் இறங்கி விடாமல் இருக்க அறையப்பட்ட ஆப்பு.

கிருஷ்ணனும்  பலராமர் வழியே அதையே செய்கிறார். எதற்கு எங்கு  ஆப்பு செருக வேண்டும், எந்த ஆப்பை எப்போது உருவ வேண்டும் இதுவே கிருஷ்ணன் செய்வது.

பலராமர் சீடன் செத்தே போனான் என  கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறார். திருதாவோ ஆனந்தத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

உணர்சிகள் அத்தனயும் ஒன்றாக குவியும் ஒரு இடத்தில் அதன் காரணம்  எதுவோ அதை ஒன்றுமே இல்லாமல் இல்லாமல் ஆக்கி விடுகிறான் கிருஷ்ணன்.

ஒரு மந்தையை 'வழிநடத்தும்' களிரை மட்டுமே திசை திருப்பினால் போதும் , மந்தை மொத்தமும் திசை மாறும். இதை திருதாவின் அருகிருந்து செய்ய கணிகன் என்ன பாடு படுகிறான். ஆனால் கிருஷ்ணன் எங்கிருந்தோ அதை செய்கிறான்.

பீஷ்மரும் விதுரரும் ஒருவரை ஒருவர் நோக்கி விழிகளால் புன்னகைத்துக் கொள்வது பேரழகு. 

இன்னும் பீஷ்மர் கிருஷ்ணனை சந்திக்க வில்லை. கடும் பிரம்மச் சாரியும், காமவினோதாலீலனும்  சந்திக்கும் அந்த முதல் நிகழ்வு எப்படி இருக்கும் என கற்பனை பறக்கிறது.

கடலூர் சீனு

முதலில் உணர்ந்தவர்



அன்புள்ள ஜெ

ராமன் கிருஷ்ணன் இரண்டையும் பூர்ணாவதாரங்கள் என்பார்கள். இரு வாழ்க்கையும் இரண்டுவகையில் முக்கியமானது. ராமன் வாழ்க்கை அவதி நிரம்பியது. கிருஷ்ணன் வாழ்க்கை அப்படி அல்ல. அது கொண்டாட்டம். ஆனால் இரண்டுமே பெரிய போராட்டங்களும்கூடத்தான்

நான் அடிக்கடி சிந்திப்பேன். கிருஷ்ணனை மட்டும் ஏன் குழந்தையாக நினைத்தது \நம்முடைய பாரம்பரியம்? ராமனை ஏன் அப்படி உருவகிக்கவில்லை? ஏனென்றால் கிருஷ்ணனிடம் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கிறது. செய்வது எல்லாவற்றையும் விளையாட்டாகவே செய்துவிட்டுப்போனவன் அவன்.

அந்த விளையாட்டுத்தனத்தை அவன் பிள்ளைப்பிராயத்துக்கு extend செய்துவிட்டார்கள் நம்மவர்கள். அதுதான் அவனை சின்னப்பிள்ளையாகப் பார்க்கவைக்கிறது . அதுதால் லீலாவினோத கிருஷ்ணன்

அந்த விளையாட்டுத்தனத்தை அதன்பிறகு பெரிய கிருஷ்ணனில் blow up செய்தார்கள். ஆகவேதான் கோலாகலனாகிய கிருஷ்ணன் வந்தார். பதினாறாயிரத்தெட்டு மனைவிகளை அடைந்த கிருஷ்ணன் கற்பனைசெய்யபபட்டார்

இன்றைக்கு விதுரர் கிருஷ்ணனின் விஸ்வரூபமான புன்னகையை உணரக்கூடிய இடம் அந்த சித்திரத்தை அளிக்கிறது. அவன் யாரென்று முதலில் உணர்ந்தவர் விதுரர்தான்

சுவாமி

கர்ணனும் அருணனும்



ஜெ

இன்றைக்கு பிரயாகையின் ஒரு அத்தியாயத்தை வாசித்தேன். குந்தி தன் பிள்ளைகளுக்கு அருணனின் கதையைச் சொல்கிறாள். அருணனும் கர்ணனும் ஒன்றாகக்கூடிய அந்த மேஜிக் அழகாக அமைந்திருந்தது. அருணனைப்போலவே முழுசாக வளராமலேயே கர்ணனும் வந்துவிட்டன் ஆனால் ஒளியுடன் இருக்கிறான். அவனுடைய பிரச்சினையே அதுதான் என்று தோன்றியது.

கர்ணனைப்பற்றிய எல்லா ஒளிமிக்க வர்ணனைகளிலும் அவனுடைய கருப்பும் வந்துகொண்டே இருக்கிறது இல்லையா? பிறந்ததுமே அம்மாவை சாபம்போட்டுவிட்டுச் செல்லக்கூடிய அருணனின் கதாபாத்திரம்தான் அது

இந்த வகையான ஒரு கற்பனையை இதற்கு முன் வாசித்ததில்லை. மிகச்சரியாக குந்தி - வினதை, காந்தாரி - கத்ரு, ஆயிரம் நாகங்கள் - நூறு கௌரவர் எல்லாமே சரியாக வருவதைப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது

ப்ரியா

குழந்தை கௌரவர்



ஜெ,

குண்டாசியும் யுயுத்ஸ்வும் இரு சின்னப்பையன்களாக அறிமுகமானதை நினைத்துப்பார்க்கிறேன். இருவரும் இரண்டுவகையிலே மாறிவிட்டிருக்கிறார்கள். திக்கித்திக் பேசும் சின்னப்பையன்கள். இப்போது யுயுத்ஸு ஒரு சின்ன தருமனாக ஆகியிருக்கிறான். குண்டாசி குடிகாரனாக மாறியிருக்கிறான்

இதைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம். இளமையிலே நமக்கு தெரிந்த பல பையன்கள் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத மனிதர்களாக மாறி நம் முன் வரும்போது பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் ஒரு மரம் வளைந்து நிற்குமா என்பதை விதையைப்பார்த்துச் சொல்லமுடியுமா என்பார்கள். அதை நினைத்துக்கொண்டேன்

வாழ்த்துக்கள் ஜெ

ராஜாராம்

பெண்கள் மீளும் இடம்


[திவிஜன் குப்தா. அம்பா அம்பிகா அம்பாலிகா ஓவியம்]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் மழைப்பாடலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நாலைந்துநாள் ஒன்றுமே செய்யத்தோன்றவில்லை. வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் என்ற நினைப்பு வந்துவிட்டது. பெண்ணின் வாழ்க்கையில் சிறுமியாக இருக்கும்போதுதான் சந்தோஷமே இருக்கிறது. அப்போதுதான் அவளுக்காக அவள் வாழமுடிகிறது. அதோடு அந்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு அத்தனை பெண்களும் அந்த இளமைப்பிராயத்தை நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்று பிறகு எதுவுமே இல்லை. ஏனென்றால் சுதந்திரம் இருந்தால்தானே சந்தோஷம். அன்றும் இன்றும் அதேதான் நிலைமை இல்லையா?

அம்பிகை அம்பாலிகையை கட்டிபிடித்துக்கொண்டு நமக்கு யாருமே இல்லையடி என்று சொல்லும் இடத்தில் கலங்கிவிட்டேன். என்ன ஒரு வாழ்க்கை. அங்கே அவர்களை சிறைப்பிடித்துக்கொண்டுவருகிறார்கள். பிள்ளைகள் அவர்களை மீரி பிறக்கின்றன. ஒன்றுக்குமே அர்த்தம் இல்லை. அவர்கள் அதன்பின்னர் போட்டது எல்லாமே வேசம். அதுக்குள் அவர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் கைகளைப்பிடித்துக்கொண்டு காட்டுக்குள் போகும் இடம் கண்ணீர் வரவழைத்தது. அதேபோல சத்யவதி சியாமையிடம் சொல்கிறாளே,. நீ யமுனைக்கரைக்கு போய் நாம் விளையாடியதை எல்லாம் நினைத்துக்கொண்டிரு என்று அதுவும் நினைக்க நினைக்க கண்ணீர் வரவழைத்தது. ஒரு பெண்ணாகத்தான் அதை உணரமுடியும்

நான் அப்போது என் சின்னவயசிலே வாழ்ந்த திருவாரூருக்கு போவதைப்பற்றி நினைத்துக்கொண்டு அழுதேன். மழைப்பாடலே போதும். அதுவே தமிழிலே நான் வாசித்த ஈடு இணை இல்லாத நாவல் என்று தோன்றுகிறது


சந்திரா

பிரயாகை-60-அப்பா




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

புராணயுகம் முதல் இதோ இந்த புதுயுகம் வரை எத்தனை எத்தனையோ அப்பாக்கள். எத்தனை எத்தனை உருவங்களில் பிறந்து வாழ்ந்து இறந்து பிறந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அப்பாவின் அகம் மாறி இருக்கிறதா? மாறுமா?

ஐம்பத்தாறு தேசத்தின் அதிபதியாக இருந்து வாய்மைக்காக மகனோடு மனைவியை விற்று அந்த மகனை எரிக்கும் சுடுகாட்டில் அந்த தந்தையே பிணம்சுடுபவனாக நிற்கும் ஒரு காட்சி. அந்த தந்தையை நினைக்கும்போதெல்லாம் உருகி உருகி ஓடி கங்கையில் கலந்து அவன்பெயரில் நிற்கும் ஹரிசந்தஹாட் படித்துறையை தொடுவதன் மூலம் அவன் பாதம் தொடமாட்டேனா என்று ஏங்குவது உண்டு.

நித்தம் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து அதன் பின் உண்பேன் என்ற அடியவரின் அகம் அறிய எழுந்த சிவனையே தன்முன் குந்தவைக்க பெற்ற பிள்ளையை அறிந்து சமைக்கும் தந்தை ஒரு காட்சி.
வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.-பட்டினத்தார்.  

வைகுந்தம் தருபவனை பிள்ளையாக பெற்றும் அவனுக்கு நாட்டில் ஒரு வீடுகூட கொடுக்க முடியாமல் மனைவிச்சொல்லில் மாண்டுபோன தந்தை ஒரு காட்சி.  

இந்த தந்தைகளின் செயலுக்கும் பின்னால் இருக்கும் தந்தையின் அகம்  படும்பாடு வார்த்தையில் வடிக்கும் வண்ணம் இருப்பது இல்லை. புராணங்களும் கதைகளிலும்தான் இந்த தந்தைகள் உள்ளனரா? என்றால் இல்லை என்று ஒவ்வொரு தந்தையும் சொல்வார்கள். இன்றும் தந்தைகள் உள்ளம் அதேதான். தந்தைகள் நினைவில் வாழும் புராணங்கள் ஆகும்போதுதான் அதை அறிய முடிகின்றது.

நண்பனின் தந்தை பெயர் புருஷோத்தமன். வெயிட்லிப்டிங்க் சாம்பியன். குட்டி ஜமின்தார்போல் வாழ்ந்தவர்.  நண்பனின் உடன் பிறந்தவர்கள் இரட்டை இலக்கம் உடையவர்கள். கடைசித்தம்பியின் பெயர் அலெக்ஸாண்டர். எனது தந்தை அந்த பெயர் முரணை என்னிடம் அவிழ்த்தார்கள். அவரை வெல்லும் யாரும் இருக்கக்கூடாது என்று எண்ணத்தில், மகனிடம் தோற்றவன் என்ற நினைவுத்தோன்ற அந்தபெயரை கடைசி மகனுக்கு வைத்துள்ளதாய் அப்பாவிடம் சொல்லி உள்ளார். மாவீரன் அலெக்ஸாண்டரிடம் தோற்றவன் போரஸ் என்னும் புருஷோத்தமன். ஒரு வரலாறு ஒரு குடும்பத்தில் அப்பாவும் மகனுமாக அவர்களின் பெயருக்கு இடையில் வாழந்துக்கொண்டு இருப்பதை அப்பா காட்டினார்கள். அது அப்பாவுடன் சிரித்து பறந்த கணத்தில் ஒன்று. 

மகனிடம் தோற்றுப்போகவேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்? ஏன் குழந்தையை தனக்கு எதிராக நிறுத்தினார்? அதுதான் அவருக்கு கடைசி மகன் என்று யார் சொன்னது? நண்பனும் நண்பனின் தந்தையும் நினைவுக்கு வரும்போது இந்த கேள்வியும் வருகின்றது.  பலம் இழந்த தருணம் கண்டுகொண்டாரா? தோல்வியின் சுவையை அஞ்சினாரா? 

தோற்காத அப்பாவிற்கும் எங்கோ தோற்றுவிடுவோம் என்ற பயம் வருகின்றது அல்லது அப்பாவானபிறகு தோல்வியைப்பற்றி ஒரு பயம் வருகிறது. மகன் வெல்லவேண்டுமே என்ற ஆசையே பயமாக மாறுகின்றது. தான் தோற்காதவன் என்பதை விட தனது மகன் வென்றவன் என்பதில் இருக்கும் சுகம்தான் பெரிது அதுதான் அந்த புருஷோத்தமன் அலெக்ஸாண்டர் பெயர் நினைவு படுத்துவது. 

இடும்பவனத்தில் எதையும் பகடியின் மூலம்தாண்டிப்போகும் பீமனின் நஞ்சு நெஞ்சை அசைத்துக்கொண்டு அசையவிடாமல் அமைதி நெஞ்சாக்கியது எது? எதையும் கதாயுதத்தின் மூலம் பொடியாக்கி, சீறும் நாகமாக எழும் பீமன் கைகளை அசையவிடாமல் செய்தது எது?. முது இடும்பன் தன் மகனைப்பற்றி பேசும் வார்த்தையை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த  பீமன் அங்கு இல்லை அங்கு இருந்தது பீமன் என்னும் பெயரில் ஒரு அப்பா. அப்பா மட்டும்.

ஒரு ஆண் தந்தையானபின்பு அவன் ஒரு பெருவானம். அந்த வானம்தான் குழந்தைகள் பறக்க துடிக்கும் வெளி. அவர்கள் தொட நினைக்கும் எல்லை. ஆனால், தந்தை மகனின் காலுக்கு கீழே பூகம்பத்திலும் அசையாத மண், மண் மட்டும். சொந்த காலில் பிள்ளைகள் நடக்கவேண்டும் என்று அப்பாக்கள் புலம்பிக்கொண்டே இருந்தாலும் தன் காலை இழுத்துக்கொண்டு பிள்ளையை மண்ணில் இறக்கிவிடும் தந்தைகள் உண்டா மண்ணில்?  மகன் ஒரு நாள் வானம் தொடும்போதும். மகன்கள் இன்னும் பறக்கவே இல்லை என்றபோதும் அப்பாவின் அகம் அறியமுடியுமா? மகனுக்கு அப்பா ஒரு பிம்பம் மட்டும்தான். அப்பாவை மகன் அறியும்போது அப்பா அகம் மட்டும்தான் உடம்புகூட இல்லை.  இன்று பீமன் அப்பாக்களின் அக அடையாளமாக நிற்கின்றான் ஜெ.

//என் செல்லமேஎன் அரசனேஎன் பேரழகனே” என்று சொல்லி பீமன்அவனை முத்தமிட்டான். ”பறக்க மாட்டாயா நீஎங்கே பற” என்றுஅவனை தூக்கி வீசி பிடித்தான்//

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியையும்,
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்-என்ற திருக்குறளையும் வாழ்ந்து காட்டிய பீமனின் அகத்தில் அப்பாவைப்பார்க்கின்றேன். பிள்ளை நிலைக்கவேண்டும் என்று என்னும் அம்மாவின் கண்ணீரை மண்ணறிகிறது. பிள்ளை பறக்கவேண்டும்  என்று என்னும் அப்பாவின் கண்ணீரை வானம் அறிகிறது. அப்பாவின் பாதம் போற்றி.

பீமன் அகம் ஆயிரம் பாடுகள் படுகின்றது என்றாலும், இடும்பியின் ஒற்றை பதிலில் அவள் அன்னையாக வென்று நிற்கின்றாள். தான் அம்மாவாக இருப்பதாலேயே வென்று விடுகிறாள். இடும்பி “நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், அவன் இந்தக்காட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவனுடைய பெருந்தோற்றமே அவனை அங்கெல்லாம் அயலவனாக்கிவிடும். அரக்கன் என்ற சொல் அச்சத்துடன் மட்டுமே சொல்லப்படவேண்டும். ஒருபோதும் ஏளனத்துடன் சொல்லப்படலாகாது” என்றாள். அப்பாக்கள் மகனிடம் மட்டும் இல்லை மனைவியிடமும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் அப்பாவாக இருப்பதற்காக. 

அப்பா என்றதும் முதலில் நினைவில் வந்துபோகும் திருதராஷ்டிரன் நினைவில் வந்துபோகின்றான் //இருகைகளையும் ஓங்கி அறைந்து அவன் மட்டும் வைசியமகன் இல்லை என்றால் யுயுத்சுவை அரசனாக்கியிருப்பேன். பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த நாட்டை ஒருநாள் அவன்தான் ஆளப்போகிறான் என்று கூவியபடி தேரில் ஏறிக்கொண்டார்//-பிரயாகை-58. தன்னை மறந்து எத்தனை உயரம் சென்றுவிட்டான் இந்த திருதராஷ்டிரன். அப்பாவாக இருக்க அவன் அத்தனை உயரத்தில் இருந்து விழும் கொடுமையை நினைக்கையில் திருதராஷ்டிரன் மேல் கருணைவந்தது. விதுரர் இந்த கதையை கேட்டது அப்பாவாக தான் தனது மனைவியிடத்தில் தோற்றபிறகு என்பதை நினைக்கையில் சிரிக்கதோன்றிது.  ஆனால் சிரிக்கக்கூடாது. அம்மாக்கள் எல்லோரும் ஒரே மாதரி அம்மாவாக மட்டும் இருக்கையில் அப்பாக்கள் மட்டும் எப்படி   ஒரே மாதரி  அப்பாவாக இல்லாமல் இருக்கமுடியும்.   

இடும்பர் குலத்தில் எல்லோரும் இடும்பராகவும், இடும்பியாவும் இருக்க முதன் முதலில் ஒரு புதுப்பெயர் “பானை மண்டையன் என்னும் கடோத்கஜன்“  மாற்றம் ஒன்றுதான் மாறாதது. 


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.