Monday, August 31, 2020

கல்வெட்டுகள்

 


அன்புள்ள ஜெ

சமீபத்தில் கல்வெட்டுக்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலான கல்வெட்டுக்களில் சூரியன் சந்திரன் உள்ளவரை என்று சொல்லி சாசனம் செய்யப்பட்டிருக்கும். சூரியன் சந்திரன் உள்ளவரை தன் வார்த்தை நிலைநிற்கவேண்டும் என்று ஒரு அரசன் ஆசைப்படுவதிலுள்ள வேடிக்கையைப்பற்றிச் சொன்னோம்

அப்போது வெண்முரசில் வரும் வரி நினைவில் வந்தது. காலம்கடந்தவை என்று நாம் நம்புகிறோம் என்றால் அச்சொற்களை ஏன் கல்லில் பொறிக்கிறோம்? அச்சொல்லைவிட காலம்கடந்தது கல் என்று நம்புகிறோம் என்றல்லவா அதன் பொருள்? அந்த வரி களிற்றியானைநிரை நாவலில் வருகிறதென நினைக்கிறேன். சிரிப்பை அளித்த வரி. ஆனால் ஆழமானவகையில் நினைவிலும் நின்றிருக்கிறது

ஜெயராமன்

மகாபாரதமும் அடுக்குமுறையும்

 


அன்புள்ள ஜெ

அவைமரியாதைகள் பற்றிய ஒரு கடிதத்தை வாசித்தபோது இதை எழுதவேண்டுமென்று தோன்றியது. வெண்முரசு முழுக்க வந்துகொண்டே இருப்பது இந்த அவைமரியாதை விவகாரம். மழைப்பாடலில் தொடங்குகிறது. பாஞ்சாலி சுயம்வரம், இந்திரப்பிரஸ்த கால்கோள்விழா என்று இது நடந்துகொண்டே இருக்கிறது.

கடைசியில் மகாபாரதப்போரின்போதுகூட இந்த மேல்கீழ் விவகாரம் பேசப்படுகிறது. இது மகாபாரதத்தின் அடிப்படைகளில் ஒன்று என்று சொல்லலாம். போர் நடந்ததே இதற்காகத்தான் என்று வெண்முரசு சொல்கிறது. ஆரம்பத்தில் சபைகளில் நடந்தது கடைசியாக களத்தில் நடைபெறுகிறது. ஒரு பாபெரும் reshuffle நடந்து முடிகிறது. மகாபாரதப்போரில் நடைபெற்றது அந்த reshuffle என்றுதான் வெண்முரசு சொல்கிறது. ஆகவேதான் ஆரம்பம் முதலே அந்த பூசலைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது

ஆர்.கண்ணன்

வெண்முரசின் பாரதம்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் இந்தியா காட்டப்பட்டிருப்பதைப் பற்றிய கடிதங்களைக் கண்டேன். நானும் அதைப்பற்றி நினைப்பதுண்டு. வெண்முரசை வாசித்ததுமே எனக்கு இந்தியாவின் நிலம் பற்றிய சித்திரம் மாறிவிட்டது அதுவரை இன்றைக்குள்ள நிலம் மட்டுமே என் பார்வையிலிருந்தது. நான் அடிக்கடி பயணம் செய்பவன். இன்று உஜ்ஜயினி எப்படி இருக்கிறது காசி எப்படி இருக்கிறது என்றுதான் எனக்கு தெரியும்.வெண்முரசு வாசித்ததுமே அந்தந்த இடங்களில் மிகப்பழைமையான நகரங்கள் வந்து கண்ணிலே பதிந்துவிட்டன. இனி அதை மாற்றமுடியாது. இன்றைக்கு நான் பார்க்கும் இந்தியாவின் நிலமே வேறு

ஆனால் என்ன ஆச்சரியமென்றால் அந்த பழைய நிலம் அங்கேயே இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் சென்றால் அங்கே அந்தப்பழைய நிலத்தை நம்மால் கண்டடையமுடியும்.அந்த பழைய ஆற்றங்கரைகளும் கோயில்களும் அங்கேயே இருக்கின்றன. இன்றைய இந்தியாவுக்கு அடியில் அந்த இந்தியா இருக்கிறது. ஓவியம் மீது வெள்ளையடித்ததுமாதிரித்தான் இன்றைய இந்தியா. வெண்முரசின் மிகப்பெரிய பங்களிப்பென்பது அந்த இந்தியாவை வாசகனுக்கு கனவுமாதிரி உருவாக்கி அளித்ததுதான் என நினைக்கிறேன்.

ராஜசேகர்

பயணங்கள்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசில் பாரதவர்ஷத்தின் சித்திரம் இருப்பதை ஒருவர் எழுதியிருந்தார். அர்ஜுனனின் பயணங்கள், பீஷ்மரின் பயணங்கள் வழியாக மிகமிக விரிவான பயணத்தின் சித்திரம் வெண்முரசிலே உள்ளது. தெற்கே மதுரையிலிருந்து இளநாகன் இந்தியா முழுக்க பயணம்செய்கிறான். காண்டீபம் நாவலில் அர்ஜுனன் மேற்கே சாவுகடல் வரைக்கும் செல்கிறான். பீஷ்மர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரைக்கும் செல்கிறார்.

அர்ஜுனன் வங்காளம் வழியாக அஸாம் நாகநாடு மணிப்பூர் வரைச் செல்கிறான். அதன்பின் கடல்வழியாக தாய்லாந்துக்குள் நுழைந்து இமையமலைக்குச் செல்கிறான். பூரிசிரவஸ் லடாக் வரைச் செல்கிறான். இந்தியாவின் முழு நிலப்பகுதியிலும் வெண்முரசு நடைபெறுகிறது. இதிலுள்ள ஊர்களை அடையாளம் படுத்திப்படிப்பதென்பது ஒரு அற்புதமான அனுபவம்

பாஸ்கர் எம்.


Sunday, August 30, 2020

அவை மரியாதைகள்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசின் பக்கங்கள் முழுக்க திரும்பத்திரும்ப வருபவை என்னென்ன என்று எவராவது ஒருபட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். நான் பலமுறை அவ்வாறு கவனித்த விஷயம் என்னவென்றால் அவைமரியாதைக்காக நடக்கும் சண்டைகள்தான். எவரை எங்கே அமரச்செய்வது, எவருக்கு எவ்வளவு இடம். அதில் பூசல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால் மகாபாரதத்தில் அப்படி ஏதும் இல்லை. நான் மகாபாரதத்தை முழுக்கவே வாசித்தவன். இரண்டுமுறை பூர்ணபாராயணமே செய்திருக்கிறேன். ஆகவேதான் கேட்கிறேன். ஒப்பிட்டு குறைவாக காட்டுவதற்காகக் கேட்கவில்லை. புரிந்துகொள்வதறகாகத்தான் கேட்கிறேன்.

ஆர்.ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜன்

மகாபாரதத்தில் மிகமுக்கியமான கதை சிசுபால வதம். அது அவை மரியாதை சம்பந்தமான போர். அதிலுள்ள அரசியல் உள்ளடக்கத்தையே வெண்முரசு விரித்து எடுத்துள்ளது. வெண்முரசின் கலைப்பங்களிப்பே அதுதான். மகாபாரதத்தில் விதைகளாக உள்ளவற்றை வளர்ப்பது

ஜெ

மண்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் கர்ணன் ஒரு மாபெரும் துயரக்கதாபாத்திரமாக வந்துகொண்டிருக்கிறான். கர்ணனின் கதையில் எப்போதுமே துயருண்டு. ஆனால் இதில் துரோணரால் அவமதிக்கப்பட்டு அவன் பரசுராமரை தேடிச்செல்லும் இடம், அங்கே அவன் படும் துயரம் நெஞ்சை கனக்கச்செய்கிறது. அவன் மண்ணோடு மண்ணாக படுக்கிறான். மண்ணில் முகம்  அமைக்கிறான். புதைந்துவிட நினைக்கிறான். அந்த இடம்தான் ஆழமாக பாதித்தது. ஏனென்றால் கொடுமையான துயரை அடைந்தவர்களெல்லாம் அப்படி மண்ணோடு மண்ணாக விழுந்துவிடுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். [நான் டாக்டர்] அவர்களுக்கு மண் என்ன அளிக்கிறது? மண் உறுதியானது என்று நினைப்பதுண்டு. அதுதான் தாங்கிக்கொள்ளும். அம்மாவின் மடியில் விழுவதுபோல மண்ணில் மனிதர்கள் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.

தட்சிணாமூர்த்தி.

பாரதவர்ஷம்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை வந்ததில் வண்ணக்கடல் நாவல் எனக்கு மிகமிக முக்கியமானது. மொத்த பாரதவர்ஷமும் ஒருநாவலில் ஒரு கோட்டுச்சித்திரமாக வருகிறது.

இளநாகனின் பயணத்தை நானே மனதில் நிறுத்திப்பார்த்தேன். அவன் குமரிக்கு அப்பால் கடல்கொண்ட ஏழுபனைநாட்டிலிருந்து கிளம்புகிறான். மதுரை வருகிறான். பூம்புகார் வந்து அங்கிருந்து காஞ்சி. அங்கிருந்து காளஹஸ்தி. அங்கிருந்து நாகார்ஜுனசாகரில் மூழ்கிப்போன விஜயபுரி. அங்கிருந்து ராஜமகேந்திரபுரி அல்லது ராஜ்முந்திரி. அங்கிருந்து கடப்பா போய் சிலிக்கா ஏரிக்குள் இருந்த துறைமுகம் வழியாக புவனேஸ்வர். அங்கிருந்து அப்படியே வட இந்தியா போகிறான்.

இந்த ஒவ்வொரு ஊரின் நில அமைப்பும் கட்டிட அமைப்பும் மக்களின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நில அமைப்பைக்கொண்டு அன்றைய நில அமைப்பு சொல்லப்பட்டிருக்கிறது. கடப்பா கல் உள்ள பகுதியில் கடப்பாக்கல்லால் வீடு கட்டியிருக்கிறார்கள். சம்பல் நதியின் கரையில் கதை முடிகிறது. ஒரு பெரிய பார்வை. மலைமேல் ஏறிநின்று இந்தியாவை பார்த்த உணர்வு உருவாகிறது

ராஜ்மோகன்

 

மழைப்பாடல்- தலைமுறைகள்

 அன்புள்ள ஜெ

 மழைப்பாடலை இப்போதுதான் படித்து முடித்தேன். இந்நாவல் 26 நாவல்களில் இரண்டாவது. ஒரு தொடக்கம்தான். ஆனால் இந்நாவலிலேயே நான்கு தலைமுறைகள் வந்துவிட்டன. தலைமுறைகளின் கதையாகவே இது ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கிறது. சத்யவதி,பீஷ்மர் ஆகியோர் ஒரு தலைமுறை. அம்பை அம்பிகை அம்பாலிகை போன்றவர்கள் இரண்டாம் தலைமுறை. திருதராஷ்டிரன் பாண்டு மூன்றாம் தலைமுறை. பாண்டவர்களும் கௌரவர்களும் நான்காம் தலைமுறை.

நான்கு தலைமுறையின் கதை ஒரேவீச்சில் நிறுத்தமுடியாத வேகத்துடன் சொல்லப்பட்டுவிட்டது. ஏராளமான நிகழ்ச்சிகள். ஏராளமான உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள். அத்துடன் நாவலுக்குரிய அடிப்படையான முடிச்சும் உள்ளது. ஒரு பெரிய களத்தை அமைத்து அதில் கேள்விகளை விட்டுவிட்டு முந்தைய தலைமுறை விலகிவிட்டது. போரும் அமைதியும் போல ஒரு தனிநாவலை வாசித்த அனுபவம்

 

ஆர்.விஜயகுமார்

வெண்முரசு சுவரொட்டிகள்

 

Saturday, August 29, 2020

கடல்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசின் முதல்வாசிப்பில் சிலபகுதிகள் கிடைக்கின்றன. பலவிஷயங்கள் கைதவறிவிடுகின்றன. அப்படி முக்கியமாக கைநழுவிப்போகும் விஷயம் ன்னவென்றால் உருவகமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்தான்

அவர்களால் இறுதிவரை கடலை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இளமை முதலே யமுனையில் நீராடி வளர்ந்தவர்கள். ஒரு திசை நோக்கி ஒழுகும் நீர் அவர்களின் தோள்களின் நினைவாக இருந்தது. எல்லாத் திசைக்கும் செல்வதும், எங்கும் செல்லாததுமான கடல் அவர்களுக்கு பழகவே இல்லை

கல்பொரு சிறுநுரையில் வரும் இந்தவரியை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன வாழ்க்கையிலிருந்து பெரிய வாழ்க்கைக்குள் சென்ற எல்லாருக்குமே இதெல்லாம் பொருந்தும். அவர்களில் காளிந்தி அன்னை கண்ணனைப் பற்றிக்கொண்டு அப்படியே வாழ்ந்துவிட்டாள். அவளுடைய மைந்தர்கள் தடுமாறுகிறார்கள்

எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

ஆயுதம்

 


அன்புள்ள ஜெ

களிற்றியானைநிரையில் அஸ்தினபுரியின் தொல்குடிகள் அந்நகரை கைவிட்டுவிட்டுக் கிளம்புகிறார்கள். ஏன் கிளம்புகிறீர்கள் என்று யுதிஷ்டிரர் கேட்கிறார். இங்கே இனிமேல் ஆயுதமில்லை. இந்நகரின் வாசலில் நின்ற கைவிடுபடைகள் நாண் தளர்ந்துவிட்டன. ஆயுதமில்லா நகரில் வாழமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆமாம் இனிமேல் இந்நகர் ஆயுதமேந்தாது, ஆயுதத்தால் வந்த அழிவு போதும் என்று * சொல்கிறார்

ஆனால் அந்தக்குடிகள் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் அந்த கைவிடுபடைகளை அந்நகர் ஏந்திய ஆயுதமெனப் பார்க்கிறார்கள். அந்த ஆயுதம்தான் குலக்கலப்பு நடைபெறாமல் பாதுகாத்தது என நம்புகிறார்கள். தங்கள் குலத்தூய்மையைக் காப்பதற்காக கிளம்புகிறோம் என்கிறார்கள். கோபுரகலசத்து விதைபோல எங்கள் குலத்தின் குருதி பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள்

அரசின் ஆயுதம் என்பது வெளியெதிரியை தடுக்க என்றுதான் பொதுவாகத் தோற்றமளிக்கும். ஆனால் அது அந்த நாட்டின் அமைப்பையும் ஸ்டேடஸ்கோவையும் காப்பாற்றி வைக்கத்தான். அது அத்தனைபேருக்கும் தெரிந்திருக்கிறது

மாதவ்

புழுதி

 
அன்புள்ள ஜெமோ

உருவகமாகச் சொல்லப்படும் விஷயங்களின் கவித்துவமே வெண்முரசின் அழகு. நான் நூற்றுக்கணக்கான வரிகளைக் குறித்து வைத்திருந்தேன். அதன்பின் குறிப்பதை விட்டுவிட்டேன். நேற்றுவந்த அத்தியாயத்தில் இந்த வரி என்னை மிகவும் கவர்ந்தது. 

புழுதி மண்ணின் மெல்லிய கை. கொடியின் தளிர்ச்சுருள்போல. இளங்குழவியின் விரல்நுனிபோல. வந்து தொடும். தழுவும். இழுத்து மண்ணுக்குள் செலுத்தும். விழுங்கிப் புதைத்து மேலே எழும்

எங்கள் வீடு கிராமத்திலிருக்கிறது. ஒவ்வொரு முறை செல்லும்போதும் முழு வீடுமே புழுதியால் மூடியிருப்பதைக் காண்பேன். ஆயிரம் ரூபாய் வரை தூசிதட்டவே செலவாகும். புழுதி விடாப்பிடியாக எங்கள் வீட்டை கவ்விக்கொண்டே இருக்கிறது.புழுதிக்கும் எங்களுக்குமான போராட்டம்தான் ஐம்பதாண்டுகளாக நடக்கிறது. கடைசியில் புழுதிதான் ஜெயிக்கும்

அர்விந்த்குமார்

அறம்

 


அன்புள்ள ஜெ

கல்பொருசிறுநுரை நாவலின் தொடக்கவரி எனக்கு ஒரு துணுக்குறலை அளித்தது. சொல்லச் சொல்ல சிதறுவதும் எண்ண எண்ணப் பெருகுவதும் வகுக்கும்தோறும் மீறுவதுமான ஒன்றை அறம் என்றனர் முன்னோர் இத்தனை அறம்பேசி, இத்தனை தத்துவமும் ஞானமும் விவாதித்து, ஒரு பெரிய போர் நடந்து முடிந்து, அறம் வென்றது என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த வரி வருகிறது. அதிலிருக்கும் கூர்மையும் இரக்கமில்லாத தன்மையும் பீதியை உருவாக்கியது. ஏன் மகாபாரதம் இத்தனை பெரிய பிரதியாகியது, மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெண்முரசு அதைவிட மூன்றுமடங்கு பெரிய பிரதியாகியது என்பதற்கான விளக்கம் இந்த வரிதான்

சாந்தகுமார்

முதற்கனல் வாசிப்பு- ஜெயராம்

 


அன்புள்ள ஆசிரியருக்கு,

நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

ஈரோடு சந்திப்பிற்குப் பிறகு கடிதம் எழுத பல தடவை எண்ணினாலும் என்ன தயக்கம் என்று தெரியவில்லை, உங்களுடன் உரையாடாமல் வழிகாட்டுதல் பெறாமல் என்னை வளர்த்துக்கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தும் என்னால் முடியவில்லை. பிறகு வெண்முரசு எழுதிக் கொண்டிருப்பதனால் தொந்தரவு செய்ய வேண்டாம் எழுதி முடித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆசானின் கனவுப் படைப்பு ஆதலால் எழுதி முடித்தவுடன் உங்களுக்கென்று ஒரு 'illustration' வரைந்து அதை வாழ்த்தாக அனுப்பலாம் என்று நினைத்தேன்

ஆனால் நீங்கள் வெண்முரசு எழுதி முடித்தவுடன் மறுபடியும் ஒரு தயக்கம். படைப்பை வாசிக்காமல் அதற்கு வாழ்த்துக் கூறுவது முறையாகுமா ? என்ற கேள்வி. பல முறை வாசிக்க ஆரம்பித்து தொடராமல் ஒரு சில அத்தியாயங்களுடன் நின்றிருக்கிறேன். இப்போது எண்ணிப்பார்த்தால் எப்போதோ இது விஷ்ணுபுரம் கொற்றவை போன்ற நாவல்கள் வாசித்த மேலான வாசகர்களுக்குரியது என்று தளத்தில் படித்த ஞாபகம். அல்லது நானாகவே அப்படி நினைத்துக் கொண்டேன். இன்னொன்று இவ்வளவு பெரிய நாவலை நம்மால் தொடரமுடியுமா என்ற தயக்கம். இதற்கெல்லாம் அப்பால் மகாபாரதம் தெரிந்த கதைதானே என்ற அசட்டுத்தனம்

வெண்முரசு சார்ந்து உங்கள் தளத்தில் வரும் எந்த பதிவுகளையும் தாண்டிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். வெண்முரசு எழுதப்பட்டு முடிந்ததும் குரு பூர்ணிமா நாளில் நடந்த  zoom கூடுகையில்(இது போன்ற கூடுகைகளை நீங்கள் அவ்வப்போது நிகழ்த்த வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். உங்கள் உரையாடலைக் கேட்க உங்களுடன் உரையாட எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்) கலந்து கொண்டு வாசகர்களின் அனுபவங்களை கேட்ட பிறகும் 'இப்போது வரும் இளம் வாசகர்களுக்கு வெண்முரசின் மொழி ஒரு தடையாக இல்லை இயல்பாக நேரடியாக அவர்களால் வாசிக்க முடிகிறது' என்ற அர்த்தத்தில் நீங்கள் சொன்ன வரியும் உத்வேகமூட்டியது. அதனால் இனிமேல் வெண்முரசை தொடர்ந்து வாசித்து 'முதற்கனல்' முடிந்தவுடன் என் வாசிப்பனுபவத்தை கடிதமெழுதவேண்டும் என்றும் முடிவு செய்தேன். எந்த வாழ்த்தையும் விட அது தான் ஆசிரியரியரின் படைப்புக்கு நீதி செய்வது என்பதால்.

முதற்கனல் வாசிப்பனுபவம்:

நீiiiங்கள் வெண்முரசு எழுதியது போலவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் என்று வாசித்தேன். சில போது நம்மைறியாமலேயே மூன்று நான்கு அத்தியாயங்கள் வரை செல்வதுண்டு. அவை பெரும்பாலும் போர் காட்சிகளாக(பீஷ்மர் காசிநாட்டிற்கு சென்று மூன்று இளவரசிகள் சிறையில் எடுத்தது) இருக்கும் அல்லது நில(சப்த சிந்து) வருணனைகளாக இருக்கும். ஏதாவது சில நாட்கள் தவறவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது அதிகமான அத்தியாயங்களை வாசிப்பது அவற்றை ஈடுசெய்யும். இன்னொன்று

மிக முக்கியமானதை பதிவு செய்ய விரும்புகிறேன். சில நாட்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை வாசித்துவிட்டு அடுத்த சில நாட்கள் படைப்புடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது நம்மை படைப்பிலிருந்து விலக்கி விடுகிறது. அதுவரை நாம் செலுத்திய உழைப்பும் வீணாகும் அபாயத்திற்கு இட்டுச்செல்வது என்பதை உணர்ந்தேன். அதனால் ஏதாவது ஒரு வகையில் தினமும் வெண்முரசுடன் என்னைத் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்று வெண்முரசு தளத்தில் வந்த விமர்சனங்களையோ கேள்வி பதில்களையோவாவது வாசித்து விடுவேன். பெரும்பாலும் நான் படித்துக்கொண்டிருக்கும் முதற்கனல் நாவல் சார்ந்தவையாக. நீங்கள் வெண்முரசு சார்ந்த விவாதங்களை தனியாக ஒரு தளத்தில் தொகுத்திருப்பது என்னைப் போன்ற புதிய வாசகர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை

நீங்கள் கூறியது போல் தடைகளேதும் இல்லை  மாறாக சிறிது சிறிதாக நம்மை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது நாவல். சக்கரவியூகத்தில் புகுந்த அபிமன்யுவைப் போல அதிலிருந்து வெளிவருவது கடினம். அதுபோலவே நாம் அதிலிருந்து பெற்றுக் கொள்வதும் அதிகம்அதில் சொல்லப்பட்ட வாழ்க்கைத் தருணங்கள் சொல்லப்பட்ட கருத்துக்கள் வருணனைகளென்று ஏதாவது ஒன்றை நாம் உணர்ந்து கொண்டும் தொடர்புபடுத்திக் கொண்டும் இருக்கலாம்

முதற்கனலில் வரும் காசி மன்னன் பீமசேனனின் மனைவி புராவதி அரண்மனையைத் துறந்து செல்லும் போதும் அத்திரிகை-சத்தியவான் உறவிலும் கங்காதேவி-சந்தனு உறவிலும் பெண்கள் சர்வசாதாரணமாக உறவை முறித்துக் கொண்டு செல்ல ஆண்கள் மட்டும் அவர்களை மறக்க முடியாமல் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கும்போதே அது என் நண்பன் ஒருவனுக்கும் நடந்தது. அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டிருந்தது. பெண்களுடன் பழகி அறியாதவன் இந்த பெண்ணுடன் சாதாரணமாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல மிகவும் நெருக்கமாகிவிட்டான். ஒரு நாளில் சுமார் ஏழு மணி நேரம் வீதம் குறுஞ்செய்தி அனுப்புவதும் உரையாடுவதுமாக மாறினான். திடீரென்று  ஒரு நாள் உடை சம்பந்தமான ஒரு விவாதம் சண்டையாக மாற அவள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு தன் பெற்றோரிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டாள். இவன் தவறையுணர்ந்து மன்னிப்பு கேட்டாலும் அவள் இறங்கி வரவில்லை. உறவு நின்று விட்டது. இவன் மட்டும் இப்போது ஏங்கிக் கொண்டிருக்கிறான்

இதேபோல் பீஷ்மர் அஸ்தினபுரி நீங்கி வருடங்கள் கழித்து மறுபடியும் கங்கநாட்டிற்கு செல்லும்போது கங்கநாடு மாறியிருக்கும். படகுப்பாதையும் வண்டிப்பாதையும் அமைந்துவிட்டிருந்தன. அங்கே கங்கர்களின் வழக்கமான மரவுரி அணிந்தவர்கள் அவரைவிட முதியவர்கள் சிலரே இருப்பார்கள். கலிங்கத்துப் பட்டாடையும் வேசரத்துப் பொன்னும் காந்தாரத்து மெல்லாடைகளும் புழக்கத்தில் வந்துவிட்டிருந்தன. நாம் பார்த்த நிலங்கள் நம் கண்முன்னே மாறும்போது அப்பழைய நிலத்தைப் பற்றிய ஏக்கம் நமக்கிருக்கும். ஆனால் மகாபாரத காலம் முதலே இது இயல்பு தான் என்ற உங்கள் கற்பனை இன்னொரு ஒட்டுமொத்த புரிதலை அளிக்கிறது.  

இப்படிப் பல. முதற்கனல் நாவலே நன்மையும் தீமையும் இருளும் ஒளியும் பிரபஞ்சம் முழுவதிலும் மனித மனங்களிலும் கொள்ளும் இருமையைப் பேசுகிறது. இதில் உயர்ந்த விஷயங்களைப் பற்றி பேசும் பல வரிகள் நாம் மந்திரங்களைப் போல தியானித்து நம்மின் ஒரு பகுதியாகக் கொள்ளத்தக்கவை.

"வித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது”,

"அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்

போன்றவை உதாரணம். நாவல் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலக்காட்சி வருணனைகளும் உவமைகளும் பெரும் பரவசத்தை அளிப்பது. குறிப்பாக சப்தசிந்துவின் அழகிய நிலப்பரப்பு பற்றிய வருணனை. பீஷ்மர் கூறியது போல "இந்த பாரதவர்ஷத்தில் எங்காவது நான் ஒரு குடும்பம் அமைத்து வாழவிரும்புவேன் என்றால் அது இங்குதான்" என்பதை நானும் கூறிக் கொள்கிறேன்

ஷண்முகவேல்-மணிகண்டன் கூட்டணி ஒரு அத்தியாயத்திற்கு ஒன்று என்று அளவில் தேர்ந்தெடுத்து ஓவியம் வரைந்திருந்தாலும், வரைவதற்கான வரிகளும் கற்பனைகளும் குவிந்து கிடக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

 "நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான். இரவு அணைந்தபோது வானில் எழுந்த பலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது. இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்குமுனையில் உதித்தெழுந்தாள்". 

அம்பிகை நிருதனின் படகில் அஸ்தினாபுரம் செல்வதைச் சொல்லும் இவ்வரிகளில் மட்டும் அபாரமான மூன்று காட்சிகள் உள்ளன

இவையனைத்துக்கும் மேலாக என்னை யோசிக்க வைத்து அலைக்கழித்த தருணங்களும் உள்ளன. முக்கியமாக சித்திராங்கதனின் சாவு. இன்னொன்று பீஷ்மர் யானத்தில் யயாதியைக் கண்டது. இதை வாசித்தவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த நாளே உங்கள் தளத்தில் அருணாச்சலம் மகாராஜன் அவர்கள் அதைப்பற்றி எழுதிய பதிவைப் படித்தேன். இதில் பலதரப்பட்ட வாசிப்புச் சாத்தியங்கள் இருப்பதால் படைப்பைப்பற்றிய விவாதங்களை கூர்ந்து கவனிப்பதும் முக்கியமாகப் படுகிறது.

நேற்று முன்தினமே முதற்கனலை வாசித்து முடித்தேன். நேற்றும் இன்றும் வாசித்த அத்தியாயங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாவல் பெரும்பாலும் காட்சிகளாகவும் தரிசனங்களாகவுமே நினைவில் இருக்கிறது. அது எனக்கு இயல்புதான் என்பது ஒரு பக்கம் என்றால் முடிந்தவரை வரிகளுடன் நம்மை அணுக்கமாக்கிக் கொள்வது மேலும் நம்மைப் படைப்புடன் பிணைக்க உதவும். நுண்வாசிப்புகளை சாத்தியப்படுத்தும் என்று நினைக்கிறேன்

இந்த ஒரு நாவலிலே மேலும் நுணுகி வாசிப்பதற்கும் மீள் வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்ற போது அடுத்தடுத்த நாவல்களை நினைக்கும் போது மலைப்பைத்  தருகிறதுஇருந்தாலும் ஒன்று நன்றாகத் தெரிகிறது. இந்நாள் வரை என் ஆளுமையில் பெரும் தாக்கம் செலுத்தியது உங்கள் கட்டுரைகளும் பொன்னிறப் பாதை அறம் போன்ற தொகுப்புகளும் சிறுகதைகளும் மற்றும் நாவல்களுமென்றே நினைத்திருந்தேன்.  அவற்றிற்கெல்லாம் கடன்பட்டவனாயிருக்கிறேன். ஆனால் வெண்முரசு மேலும் உச்சத்திற்கு என்னை எடுத்துச் செல்லும் என்று இப்போது தோன்றுகிறது. அதனாலேயே நிறுத்தாமல் வாசிக்க வேண்டும் என்று எனக்கே சொல்லிக் கொள்கிறேன். அதை உங்களிடமும் சொல்லிக் கொள்வது என்னை மேலும் பொறுப்புடன் வாசிக்கத் தூண்டும்.

உங்கள் கனவுப் படைப்பை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகளையும் அப்படைப்பை வாசிக்க கிட்டிய வாசகனாக மனதார நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
ஜெயராம்