Thursday, November 30, 2017

திட்டம்



ஜெ,

இப்போது  மழைப்பாடலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மகத்தான பிளான் இப்போதுதான் புரிகிறது. அது வேதங்கள் விளைந்த நிலங்களை முதல்பார்வையில் காட்டுகிறது. சிந்துவுக்கு அப்பால் தொல்வேதம் விளைந்த மேற்கு. அதன்பின்னர் புதியவேதங்கள் விளைந்த நிலமாகிய கங்கை நிலம். போர் இந்த இரு நிலங்களுக்கு இடையேதான். வென்றது புதியவேதம். இத்தகைய பிரம்மாண்டமான திட்டம் உங்களுக்கு முதலிலேயே இருந்ததா இல்லை எழுத எழுத உருவாகி வந்ததா என்று தெரியவில்லை. முன்னரே இருந்திருந்தால் அது ஒரு பெரிய தரிசனம்தான்


சங்கர் 

அன்னையருக்குரிய தெளிவு



நாம் பிளவுற்று மடிவது ஊழ் எனில் அவனும் அதை தடுக்கமுடியாது. என் மைந்தன் அப்பழி கொள்ளவேண்டாம் என்று மட்டுமே சொல்லவந்தேன் – என்று தேவகி சொல்லும் இடத்தை வாசித்தபோது என்ன ஒரு தெளிவு என்னும் எண்ணம் வந்தது. அன்னையருக்குரிய தெளிவு அது. கிருஷ்ணன் மகாபாரத யுத்ததில் ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகும் என்று எண்ணும்போதுதான் அவள் சொன்னதன் அர்த்தமே புரிகிறது


சித்ரா

இந்திரனின் மைந்தன்



இந்திரனின் மைந்தன் ஒரு முக்கியமான வெற்றியை நோக்கிச் செல்கிறான். கண்ணன் அவனுடன் இருக்கப்போகிறான் என்னும் செய்தி. ஆகவே அவனுக்கு தந்தையின் வாழ்த்து இடிமின்னலாக வந்து நின்றிருக்கிறது. அந்தக்காட்சியின் நுட்பமான வர்ணனைகள் வழியாக அதை கண்கூடாகவே பார்க்கமுடிந்தது. 

யமுனை நிரோட்டம் சூடாவது. குளிர்காற்று. பின்னர் மழையில் தெரியும் காட்சிகள். மழையை மீன்களும் பறவைகளும் கொண்டாடுவது. எல்லாமே நுட்பமான விவரணைகள். நிர்மித்ரனின் இந்திரத்துதியும் இயல்பாகவந்து சேர்ந்தது. அங்கே இந்திரனைத் துதிப்பது ஆசிரியர்தான் என்ற எண்ணம் ஏற்பட்டது


மகாதேவன்  

Wednesday, November 29, 2017

மீன்கள்




ஜெ

அந்த இடிமின்னல், மழை. அதில் துள்ளிவிளையாடும் மீன்கள்தானே உபபாண்டவர்கள்? அந்த நாளின் கொண்டாட்டம்தான் கடைசியாக. பறவைகள் வானத்தில் நிறைந்திருக்கின்றன இல்லையா?


அருண்

அர்ஜுனன்



அன்புள்ள ஜெ

கிளம்பும்போது சகதேவன் மகனிடம் சொல்கிறான். மதுராவில் கௌரவர்களுடன் கூட்டு வைப்பதைப்பற்றி இயல்பாக இருந்தார்கள் என்றால் அந்தக்கூட்டு உறுதியானது. அவர்கள் ஆவேசமாக அதை ஆதரித்துப்பேசினார்கள் என்றால் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் விலகி வருவார்கள் என்று. என்ன ஒரு மதிநுட்பம். நடைமுறை உண்மை அது


ஜெகதீஷ்

வினைமுடிப்பவன்



அன்புள்ள ஜெ

கிளம்பும்போது சகதேவன் மகனிடம் சொல்கிறான். மதுராவில் கௌரவர்களுடன் கூட்டு வைப்பதைப்பற்றி இயல்பாக இருந்தார்கள் என்றால் அந்தக்கூட்டு உறுதியானது. அவர்கள் ஆவேசமாக அதை ஆதரித்துப்பேசினார்கள் என்றால் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் விலகி வருவார்கள் என்று. என்ன ஒரு மதிநுட்பம். நடைமுறை உண்மை அது


ஜெகதீஷ்

எதிர்பாராதகதைகள்





ஜெ

மதுராவின் நிகழ்வுகளை கிட்டத்தட்ட முள்முனையில் நின்று வாசித்துவந்தேன். பதற்றமும் ஆர்வமுமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நான் மகாபாரதத்தை பலமுறை முழுமையாகவே வாசித்தவன், சிலமகாபாரதப்பேருரைகளும் ஆற்றியிருக்கிறேன். இப்போது ஊரில் இல்லை. சின்னவயதில் எங்களூரில் மகாபாரதம் முற்றோதும் வழக்கம் இருந்தது.

நன்றாகத்தெரிந்த கதை. ஆனால் அத்தனை திருப்பங்களும் புதியவை. அத்தனை மனவிளையாட்டுக்களும் மிகமிக நம்பகமானவை. அர்ஜுனன் முதல் அத்தனைபேரும் சொல்லும் தரப்புக்களும் அவரவருக்குரிய முழுமையான நியாயங்களுடன் சரிதானே என்று சொல்லும்படி அமைந்துள்ளன

அர்ஜுனனுடையது கண்மூடித்தனமான பக்தி. அப்படி ஒரு பக்திதான் அவனை அணுகி அறியமுடியும். கண்மூடித்தனம் இல்லாமல் பக்தி என்பதே கிடையாது என்பதுதான் உண்மை

ரங்கநாதன்

யோகி


ஜெ

அர்ஜுனன் மிக எளிதாக நினைத்ததை சாதித்துவிட்டான் அவன் எதையும் திட்டமிடுவதில்லை. முன்னரே நினைத்து நினைத்து பார்ப்பதுமில்லை. மனதை காலியாக வைத்திருக்கிறான். ஆனால் குறிதவறுவதில்லை
உபகௌரவர்கள் எல்லாருமே மிகமிகப்புத்திசாலிகள். மிகக்கூர்மையாகத்திட்டமிடுகிறார்கள். தெளிவாக யோசித்துச்செய்கிறார்கள். சிறந்த சொல்லாட்சி உள்ளது. 

ஆனால் அவர்கள் எவருமே நினைத்தவை நடக்கவில்லை. அதேசமயம் யோசிக்காமல் அம்புவிட்ட அர்ஜுனனின் ஒரு இலக்குகூட தவறவில்லை. இந்த வேறுபாட்டை எண்ணிக்கொண்டிருக்கிறேன்

திறமை என்பது எய்துவதுதான் என்றால் அர்ஜுனன் மட்டுமே விழியினால் விளக்குவோன் ஆக உள்ளான். அது யோகத்தால் வந்தது. பயிற்சியால் அல்ல என நினைக்கிறேன்


சுந்தரம் செல்லப்பா

பேரன்னை




ஜெ

ஒவ்வொருவரின் ஆளுமையும் திரண்டு வரும் வெண்முரசில் ஆர்க்கிடைப் போல மாறாத அடையாளத்துடன் இருக்கும் சிலர் உண்டு. ராதை ஒருத்தி. தேவகி யசோதை போன்றவர்கள் மேலும் சிலர். தேவகி பேரன்னையாக கிளம்பிவந்து கிருஷ்ணனுக்கு ஆணைகளிட்டு அனைத்தையும் தலைகீழாக்கும் காட்சியை அதனால் மிகவும் ரசித்தேன்.

யாதவகுலப்பெண்கள் மிக வலிமையனவர்கள். அவர்கள் தாய்வழிச்சமூகம். ஆகவே அவள் சொல் மீறப்படமுடியாதது. அவள் உள்ளே வரவே இல்லை. ஆகவே உள்ளே இருக்கும் அத்தனைபேரும் மறந்துபோன அறங்களை எல்லாம் அவளால் ஞாபகப்படுத்திக்கொடுக்க முடிகிறது என நினைக்கிறேன்


சுப்ரமணியம்

யோகம்



திரு. ஜெ,

உங்களை நேரில் சந்தித்து துபாயில் பேச முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

எரிதழலில் வரும் சொற்றடர் “யோகம் என்பது யுஜ் என்னும் முதற்சொல்லின் விரிவு. அமைதல். இணைதலே அமைதலின் வழி. ஒன்று பிறிதெனபிற அனைத்துடன்அனைத்தும் ஒன்றெனபிறிது இல்லையென.” “இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம். இணைக்கும் வழியறிவதே ஊழ்கம். இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர்.

Based on this theory only a management book named “The Fifth discipline”  has been written by Peter Senge in 1990”. The book popularized the concept of learning organization. One of the fundamental principles of learning organization is “Systems thinking”.  It says “Systems thinking is a management discipline that concerns an understanding of a system by examining the linkages and interactions between the components that comprise the entirety of that defined system”.
Everything is fundamentally connected with each other. Only thing, we, as a common man, are not able to see the larger connection.

எம் கே மூர்த்தி

Tuesday, November 28, 2017

கலப்பை



ஜெ
ஒவ்வொருவர் பேசும்போதும் இவர் சொல்வதுதான் சரிபோல என்று தோன்றும்படி எழுதுகிறீர்கள். நான் அக்ரூரர் பேசும்போது சரிதானே என உண்மையாகவே நினைத்தேன். அக்ரூரர் சொல்வதைத்தான் எந்த நல்ல அமைச்சரும் சொல்லவேண்டும். சக்கராயுதத்தால் கிருஷ்ணர் யாதவர்களை அழித்தாரென்றால் அதற்கும் கம்சருக்கும் என்னதான் வேறுபாடு என அவர் கேட்பது ஆழமான கேள்வி

அதற்கு அர்ஜுனன் சொல்லும் பதிலும் ஆழமானது. பெரியவேறுபாடேதும் இல்லை. கலப்பையும் பல்லாயிரம் உயிர்களை அழிக்கும் படைக்கருவிதான். விளைவதென்ன என்பதே முக்கியம். இன்றுவரை உலகை மீட்கவும் மாற்றவும் வந்த கொள்கைகள் உருவாக்கிய மானுட அழிவுதானே அதிகம்? நான் கல்லூரியிலே வாசிக்கும்போது ஆசிரியர் சொன்னார். ஜனநாயகத்துக்காகத்தான் அதிகமான மனிதர்கள் செத்திருக்கிறார்கள். அதைத்தான் இப்போது நினைத்துக்கொண்டேன்


சாந்தா

அரசியல்


ஜெ

மதுராவின் அவையில் யுதிஷ்டிரர் உபப்லாவ்யத்தின் அரசர் என்றே அழைக்கப்படுகிறார் என்பதைக் கவனித்தேன். எத்தனை நுட்பமான அரசியல்விளையாட்டு என நினைத்தேன். அந்த சபையில் அதை ஏற்றுக்கொண்டபின்னர்தான் மேலே பேசமுடியும். அர்ஜுனனை சினம்கொள்ளச்செய்தது அந்த திமிர்தான் என நினைக்கிறேன்


ஆர்.எஸ்.சுகுமார்

இளையவன்



அன்புள்ள ஜெ

உபபாண்டவர்களின் கதாபாத்திரங்களில் இனிமேல் என்ன வரமுடியும் என நினைத்திருந்தேன். ஒன்பதுபேரும் ஒன்பது குணங்கள் கொண்டிருக்கிறார்கள். அபிமன்யூவின் மூர்க்கம் கொஞ்சம்கூட பிறரிடம் இல்லை என்பதும் காட்டப்படுகிறது. அவனிடமிருக்கும் விளையாட்டுத்தனம்கூட எவரிடமும் இல்லை. அவர்களில் இளையவன் நிர்மித்ரன். அவன் ஒரு பையனாகவே தெரிகிறான். மதுராவின் சபையில் அவன் கொள்ளும் பரபரப்பும் புத்திசாலித்தனமும் சின்னப்பிளைத்தனமும் கலந்து அவன் அச்சபையைப்பார்க்கும் பார்வையும் அற்புதமானவை.


ஜெயராமன்

உள்விளையாட்டு



அன்புள்ள ஜெ

ஒருபக்கம் உபபாண்டவர்களின் குணச்சித்திரம் விரிந்துகொண்டே வருகிறது. மறுபக்கம் அவர்களின் பார்வை வழியாகவே மகாபாரதப்போருக்கான முஸ்திபுகள் வெளிவருகின்றன. மகாபாரதப்போருக்கான மையம் கிருஷ்ணன்/ ஆகவே கிருஷ்ணனின் குலத்தில் என்ன நிகழ்கிறதென்பது முக்கியம். 

ஆனால் மகாபாரதத்தின் கட்டமைப்பில் இது நேரடியாக வரவில்லை. மௌசாலபர்வத்தில் தனியாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது இடைச்செருகல் என்றும் ஒரு தரப்பு உண்டு இருக்கலாம். 

ஆனால் இங்கே கிருஷ்ணனின் குடும்பத்தின் அழிவை நுட்பமான உள்விளையாட்டுக்களின் வழியாகச் சொல்லிச்செல்கிறீர்கள். இது மகாபாரதப்போரை ஒரு பங்காளிச்சண்டையாகச் சுருக்கிப்புரிந்துகொள்வதற்கு எதிரான ஒரு பெரிய விவரிப்பாக அமைந்துள்ளது


சாரங்கன்

Monday, November 27, 2017

வைசேஷிகம்



ஜெ

இன்றைய வெண்முரசில் சதானிகனும் தம்பியும் பேசிக்கொள்ளும் இடம் அந்த இடத்திற்கான தேவையையும் மீறி அசாதாரணமான ஒரு விஷயத்தைச் ச்சொல்கிறது. உபமானம் என்பது ஒரு தரிசனம், அது ஓர் இலக்கிய அணி அல்ல. வைசேஷிகம் முதலிய மரபுகளில் உபமானம் பிரத்யட்சம் அனுமானம் சுருதி ஆகியவற்றுக்கு சமானமான ஒரு பிரமாணமாகவே சொல்லப்படுகிறது. அதை சதானீகனும் சொல்கிறான் நேர்க்காட்சி, உய்த்தல், முன்கூற்று என்னும் மூவகை அறிவடிப்படைகளில் சிக்காது எஞ்சுவதை அறிவதற்கானது அது என்று நுண்சிறப்பு தத்துவத்தோர் கூறுவார்கள். வைசேஷிகத்துக்கு நுண்சிறப்புத்தத்துவம் என்ற மொழியாக்கம் சிறப்பாக உள்ளது. ஒரு நல்ல உபமானம் என்பது இரு ப்ரபஞ்ச வியவஹாரங்கள் நடுவே ஒரு சமானத்தன்மையை கண்டுபிடிப்பது. ஒன்றை வைத்து இன்னொன்றை விளக்குவது. இரண்டிலும் அந்தர்யாமியாக உள்ள சத்யமே அப்போது வெளிப்படுகிறது


சுவாமி

வெறும் கனவு



அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயத்தில் அர்ஜுனனின் சொற்கள் ஒரு டிரான்ஸ் நிலையில் இருந்து வெளிவந்தன. ஆமாம் அவர் சொல் வெல்லும் என்று அவன் சொல்லும்போது அது வென்ற வரலாற்றுக்குப்பின்னால் நின்று பார்க்கும் நமக்கு அது ஒரு உண்மை என்றே தோன்றுகிறது. அன்றிருப்பவர்களுக்கு அது ஒரு வெறும் கனவு என்றுதான் தோன்றியிருக்கும். அந்தக்கனவை நம்பி நம் குலத்தை அடகுவைக்கவேண்டுமா என்று அக்ரூரர் கேட்பது ஒரு குலத்தலைவர் என்றவகையில் அவருடைய இயல்புக்கு உகந்ததேயாகும்


சரவணன்

ராதையும் அர்ஜுனனும்



எப்பொழுதும் ராதை என உணர்ந்த நெஞ்சம் இப்பொழுதெல்லாம் பார்த்தனெனவே உணர்ந்து கொள்கிறது.  இது மெய்மை தேடலில் நான் அடையும் முதிர்வென்று தருக்கிவிட்டோனோ என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இல்லை. தானே  மூலப்பிரஹ்ருதியாகவும் பரமாணுவாகவும் திகழும் இப்பிரஞ்ச வீதியில் மயக்கம் தீர்ந்த அனைவரும் உணரக் கூடிய உண்மை இவை என்றே உணர்ந்து கொள்கிறேன்.

என்றேனும் சந்தர்ப்பம் வாய்த்தால் இருமையாக நின்றிருக்கும் இவர்கள் இருவர் குறித்தும் இன்னும் உரையாடி  விரித்துக் கொள்ளும் விழைவு உள்ளது.   


கிருத்திகா

ராதைக்கு எந்த சிரமமும் இல்லை, இயல்பாகவே அங்கிருந்தாள்
அர்ஜுனன் நம்மைப்போல. அல்லற்பட்டு அலைக்கழிந்து அங்கே சென்று நிலைகொள்ளவேண்டியவன்
ஜெ

Sunday, November 26, 2017

கணிகரும் கண்ணனும்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சாம்பன்-கிருஷ்ணையின் திருமணத்தில் ஒருவரும் எதிர்பார்த்திராதவாறு கண்ணன் தோன்றுகிறான். ஒருவேளை கிருஷ்ணை எதிர்பார்த்திருக்கக் கூடும்.  கணிகர் எதிர்பார்த்திருக்கக் கூடும்.  முன்பு எதிர்பார்த்திரா சமயத்தில் அபிமன்யுவை பாணசுரரிடம் இருந்து காக்க கண்ணன் களத்தில் தோன்றினான்.

அடுத்த அத்தியாயம் இந்திரனுக்குப் பூசை, படைகாளிக்கு பூசனை, பலி, முன்னோர்கள் கையாண்ட படைக்கலங்கள், குருதி, கொலைத்தெய்வங்கள் எழுகின்றன என்று சபூர்ணரின் விழையவிருக்கும் பேரழிவினைக் குறித்த அச்சம் என்று எழும் தழலின் கடுமை உணர்த்தி வர, அதன் அடுத்த அத்தியாயம் வேறொரு மனநிலை தந்தது.  கண்களில் நீர் மல்கச் செய்தது.  சர்வதனுடன் லட்சுமணன் மோதுகின்றான்.  புன்னகையுடனே சர்வதனுடன் சண்டையிட வருகிறான்.  கதையினை ஓங்கி விசை குறைத்து விளையாட்டாய் தலையில் தட்டி அவனை தோளில் அமர்த்தி நடனம் ஆடுகிறான்.  எவ்வகையிலும் பகை உணர்வு அவர்களிடம் இல்லை.  வஞ்சம் இல்லை.  அதற்கும் மேலாக புருஷோத்தமன் என்று கூறப்படும் இளைய யாதவரே உத்தமன் என்று கருதி உவகை கொண்டு தழுவுமாறு நடந்து கொள்கிறான் விருஷசேனன்.  வில்திறம் என்றால் அர்ஜுனன், அவன் நினைவே எழுகிறது மக்களுக்கு, அவர்களின் அன்பை, அவர்கள் கொண்ட மதிப்பை விருஷசேனன் மதிக்கிறான்.  மக்கள் மீதும் அர்ஜுனன் மீதும் தனக்கு இருக்கும் மதிப்பைத் தெரிவிக்கிறான்.  அவன் தந்தையின் ஈகை அவனிடம் உண்டு, ஆனால் அவரது தன்முனைப்பு அவனுக்கு இல்லை.  

உபகவுரவர்களின் சண்டை விலங்குகளுடையது போன்று என்று கூறப்படுகிறது.  அவர்களிடமும் வஞ்சம், குடிபகை இல்லை.  அவர்கள் பலி விலங்குகள்.  ஒருவகையில் குழந்தைகள்.  கண்ணன் அவர்களை தழுவுகிறான்.

நான் கடவுள் பட வசனம் போல மரணம் சிலருக்கு தண்டனை சிலருக்கு விடுதலை.  இங்கு தழல் ஆணவங்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு தம்மை ஒப்புவித்து உடல் ஈனும் தியாகியருக்கு வீரருக்கு அழிவின்மை வழங்கும் அருட்சுடர் !

வெண்முரசு வழங்கும் போரின் காரணங்கள் தான் எத்தனை!  ஒருவகையில் இது வெவ்வேறு குடியினரின் பூசல், மற்றொரு வகையில் இது வேதம்-வேதமறுப்பின் மோதல்.  பிறிதொரு வகையில் இது உலகியலுக்கும் ஆத்மிக வாழ்க்கை அல்லது அருளியலுக்குமான முரண்பாடு.  மற்றொரு வகையில் ஆண்களின் வக்கிரங்களுக்கு -ஆதிக்கத்திற்கு எதிரான பெண்களின் போராட்டம், வஞ்சம் தீர்ப்பு.  மனிதர்களின் சகல உணர்வுகளும் சகல ஆசைகளும், விருப்பு வெறுப்புகளும் இதில் இருக்கின்றன.  பெரும்பாலோருக்கு இது ஏதோ ஒருவகையில் உலகியல் காரணம் சார்ந்ததாக இருக்க கணிகருக்கும் கண்ணனுக்கும் இது தத்துவத்தை பரிசோதித்துப் பார்க்கும் களமாக இருக்கிறது.  கணிகர் கண்ணனை அறிவார், அவன் ஞானி என்று அறிவார், அவனது வேதாந்தத்தின் உச்சமும் அருளியலும் அறிவார்.  என்றாலும் என்ன விலை கொடுத்தும் பரிசோதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார் போலும், முழு வீச்சுடன் மோதத்தான் வேண்டும், சத்தியமும் மெய்பொருளுமாயின் அது வென்று நிலைக்கட்டும், உண்மையில் கண்ணனின் மெய்ப்பொருள் உலகில் வெல்ல வேண்டும் என்றே அவர் விருப்புகிறார் என்று எண்ணுகிறேன்.


அன்புடன்
விக்ரம்
கோவை

அபிமன்யூ சதானீகன்


அன்புள்ள ஜெ

கடைசிமுயற்சியாக வேண்டாவெறுப்பாக யுதிஷ்டிரர் மதுராவுக்கு அர்ஜுனனை தூதனுப்புகிறார். அந்தப் பயணத்துடன் என்ன நிகழப்போகிறது எவரெவர் அணிசேர்கிறார்கள் என்பதெல்லாம் முடிவாகிவிடும் என்பது மகாபாரதத்தின் கதை. தெரிந்தகதை. ஆனால் அது பாண்டவர்களின் மகன்களின் பார்வை வழியாக வரும்போதுதான் வேறு அர்த்தம் அடைகிறதென நினைக்கிறேன். இந்தப்போரில் ‘வீணாக’ அழிவது அவர்கள்தான். அவர்களுக்கு எந்தப்பகையையும் காணவில்லை. அவர்களுக்கு பெரிய அளவில் மண்ணாசையும் இல்லை. ஆனால் அவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

ஒன்பதுபேரில் அபிமன்யூ சதானீகன் இருவருடைய குணாதிசயங்கள்தான் நுட்பமானவை அழகானவை என நினைக்கிறேன்


செந்தில்

கொண்டாட்டங்கள்.




ஜெ,

பொதுவாக இத்தகைய பெரிய நாவல்களில் சிலபகுதிகள் நமக்குத்தேவையில்லாமல் விரிவதுபோலத் தோன்றும். அஸ்தினபுரியின் காட்சிகள் அப்படி விரிந்துசெல்கின்றன என நினைத்தேன். நிறைய அரசாங்க முறைமைகள். கொண்டாட்டங்கள். கட்டித்தழுவல்கள். அப்படியே செல்கிறது. 

ஆனால் பின்னர் யோசித்தபோது அவையெல்லாம் பாண்டவர்களின் மைந்தர்களால் காணப்படுகின்றன என்பதை எண்ணிக்கொண்டேன். அவர்கள் எவருக்கும் இதெல்லாம் முன்னர் தெரியாது. அவர்கள் வளரும்போதே நாடிழந்துவிட்டார்கள். உறவு, அரசப்பதவி இரண்டையும் ‘கடைசியாக’ அனுபவிக்கிறார்கள். 

போரும் அமைதியும் நவாலில் விருந்துகள், வேட்டைகள் விரிவாகச் சொல்லப்படும். ஆனால் மெல்லமெல்ல போர் வந்து அவையெல்லாம் அழியும். அதன்பின்னர்தான் அந்த விவரணைகள் எல்லாம் அழிந்துபோன பழைய மாஸ்கோவின் அடையாளங்களாக நின்றுவிடுவதை நாம் உணர்வோம்.


ராஜ் 

சம்பாபுரி சயனம்



கிருஷ்ணையின் மணவிழாவையொட்டிய நிகழ்வுகளின் உச்சத்தை அங்கனின் அகம்  உணர்ந்ததாலேயே சம்பாபுரியில்
சயனம் கொண்டிருக்கிறான் போலும்.

இளைய யாதவர் அங்க இளவரசர்களை உச்சிமுகர்வதையும், உபபாண்டவர்களும்,உபகௌரவர்களும்,அங்க இளவரசர்களோடு ஒற்றைப்பெருக்கென மனம்கோர்த்து நிற்பதையும் கண்டு சல்லியரைப்போல,
 பலராமரைப்போல தானும் ஒரு கணமேனும் நிலையழியக்கூடும் என்ற அச்சத்தினால் அஸ்தினபுரிக்கு வராமல் இருக்கிறான் என்று எண்ணத்தோன்றுகிறது.

-யோகேஸ்வரன் ராமநாதன்

பீமன் மீண்டும்



அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ

பீமன் மீண்டும் அவைபுகுந்து எது நடைமுறை லாஜிக்கோ அதைச் சொல்கிறான்.வெண்முரசு ஆரம்பம் முதலே பீமனின் கதைபாத்திரம் இந்த குணாதிசயத்துடன்தான் இருக்கிறது. முந்தைய நாள் தர்மன் எல்லாவற்றையும் மறந்து அஸ்தினபுரிக்கு சென்றிருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது. ஆனால் பீமன் பேசிக்கேட்டதுமே அது தவறானதோ என்ற எண்ணம் வந்துவிட்டது. அது கடைசியில் இவங்கள்லாம் ஒண்ணுதாம்பா என்ற எண்ணத்தைத்தான் உண்டுபண்ணும் என்று சொல்வது சரி. கடைசியில் அது நடக்கவும் நடந்தது இல்லையா? கௌரவர்களுக்கும் சேர்த்து தர்மன் தான் தர்ப்பணம் செய்தான் . வென்முரசில் இப்படி எல்லாகோணமும் சரியாகச் சொல்லப்பட்டிருப்பதே முக்கியமானது என நினைக்கிறேன்

சக்தி கணேஷ்


Saturday, November 25, 2017

கடைசிக் களியாட்டு



அன்புள்ள ஜெ

இந்திரனின் முன்னால் நிகழும் அந்தக்களியாட்டை வாசிக்கும்போது வெண்முரசில் வரும் கடைசிக் களியாட்டுதானா இது என்ற எண்ணம் வந்தது. பாண்டவர்களின் மைந்தர்களும் துரியோதனனின் மைந்தர்களும் சேர்ந்து அதைக் கொண்டாடுகிறார்கள். சென்ற சில அத்தியாயங்களாகவே வெண்முரசில் ஒருபக்கம் போருக்கான முஸ்தீபுகள் நிகழ்கின்றன. இன்னொரு பக்கம் குலமரியாதைகளும் கொண்டாட்டங்களும் நெகிழ்ச்சியான அன்பும் வருகின்றன. இரண்டும் இரண்டு சரடுகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் செல்கின்றன. இரண்டு அம்சங்களாலானதுதான் மகாபராதம் என நினைக்கிறேன். அங்கே மிகப்பெரிய பகைமையும் இருந்தது. குடிப்பிறப்பின் மரபுகளு இருந்தது. ஆனாலும் உபகௌரவர்களையும் உபபாண்டவர்களையும் சேர்ந்துவிளையாடுவதாகப்பார்ப்பது நெஞ்சை கரையச்செய்வதாக உள்ளது.


அருண்

இந்திரனின் மகன்



அன்புள்ள ஜெ

அஸ்தினபுரியில் நடக்கும் அந்த போர்க்கள விளையாட்டில் முன்பு அர்ஜுனன் சின்னக்குழந்தையாக இருந்தபோது பாடப்பட்ட அதே வேதச்செய்யுள்தான் பாடப்படுகிறது அதை வாசித்தபோதே அர்ஜுனனை அவர்கள் தலைக்குமேல் பறக்கவிட்டு விளையாடிய காட்சி நினைவிலெழுந்தது. அது பல ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதிருந்த எவரும் இப்போது உயிருடனிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் கடைசியில் அவர்கள் அர்ஜுனன் பெயரைச்சொல்லி கூச்சலிடத் தொடங்கியபோது அவர்களின் உள்ளங்கள் மாறவே இல்லை என்பதைப்புரிந்துகொண்டேன். அது அச்சரிய அளிக்கவில்லை. ஏனென்றால் அவார்களின் மனதில் தர்மர், பீமன்,அர்ஜுனன் ஆகியோர்தான் ஆழமாகப்பதிந்திருக்கிறர்கள்

சிவக்குமார்

விருஷசேனன்



அன்பின் ஜெ,

வணக்கம்!

வெய்யோனில் சிந்துநாட்டு பட்டத்தரசியாக ஜயத்ரதனின் 
மகவை கைக்கண்டு அஸ்தினபுரி நுழையும் துச்சளை, அங்கனையும் அழைத்துக்கொண்டு புஷ்பகோஷ்டத்து மாளிகையில் காந்தாரியை சந்திக்கிறாள்.

ஜயத்ரதனின் குழந்தையை பார்த்து 
"அழகன்" என்று கர்ணன் சொல்கிறான்.

"அழகனெல்லாம் இல்லை. நான் நன்றாக தொட்டுப்பார்த்துவிட்டேன். உனக்கு உன்னைப்போல மைந்தன் பிறந்தால்தான் எனக்கு அழகிய பெயரன் அமையப்போகிறான்”  என்று பதிலுறைக்கிறாள் காந்தாரி.

தலைச்சன் பேரனாக லெட்சுமணன் இருந்தாலும், ஆசைமகளின் சிறு மகவு கையில் இருந்தாலும், அங்கனின் வாரிசே அழகனென அமைவானென எதிர்பார்க்கிறாள் காந்தாரி.

இதோ,   பண்பாளனாகவும் பரிமளிக்கிறான் அவ்வழகன்
எழுதழலில். மொத்தகுடிகளும் பிறிதொன்றை ஒருகணம் எண்ணி அமைந்திருக்க,வீதியுலா சென்று திரும்பும் உற்சவரை ஆலயம் சேர்க்கும் பக்தியுடன் மின்கதிரை தரையிறக்கி தம்பியருடன் தாள்பணியும் விருஷசேனன்...

வெண்முரசில்  அங்கனுக்கு
ஈடாக யாதொரு மாந்தரும் இதுகாறும் என்மனதில் தோன்றியதில்லை. துலாத்தட்டில் விருஷசேனனை விரும்பி ஏற்கிறேன்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

ஆதிகவித்துவம்



ஜெ

புராணங்களுக்கு ஒரு வழிமுறை உண்டு. இங்கே இகத்தில் உள்ள ஒவ்வொன்றும் பரத்தில் உள்ள ஒரு கருத்தின் பொருள்வடிவம்தான் என்பது அது. அது ஒரு வேதாந்த ஞானம். அந்தக் கருத்து வெவ்வேறு பொருள்களில் வெளிப்படுகிறது. அந்த உணர்வை அவை வெளிப்படுத்தும் ஒருமுறை உண்டு. கீதையிலேகூட அது வருகிறது.

துருவனைப் பற்றிச் சொல்லும்போது  துருவன் எண்களில் சுழி. சொற்களில் அகரம். ஒலிகளில் ஓங்காரம். எண்ணங்களில் தன்னுணர்வு என்கிறார் குரு. அதாவது நிலைபெயராமை என்பதன் வடிவங்கள் இவை. அதேபோல குதிரையைப்பற்றி சொல்லும்போது நகுலன் விலங்குகளில் அனல் . படைக்கலங்களில் அவை அம்பு. மலர்களில் அவை காந்தள். தெய்வங்களில் அவை இந்திரன் என்கிறான். விசை என்றோ ஓளி என்றோ அதைச் சொல்லலாம். இந்த ஆதியான கவித்துவம் வெண்முரசின் அழகுகளில் ஒன்று


நடராஜன்

கண்ணனுக்கே திரும்பக்கொடுப்பது



ஜெ

திரௌபதியின் அந்த ஆழ்ந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வாசகர் எழுதியதுபோல அவள் கிருஷ்ணை அளித்த அந்த பட்டை திரும்பக்கொடுக்கவில்லை. அன்றுமுதல் அவள் அணிந்த அத்தனை ஆடைகளும் கிருஷ்ணை அளித்ததுதான் என்று அவள் உணர்கிறாள். அதைத்தான் திரும்பக்கொடுக்கிறாள். அது கண்ணனுக்கே திரும்பக்கொடுப்பதுதான் என்பதே அவள் மனநிலை. அரசியாகவோ அன்னையாகவோ அல்ல பெண்ணாக அதைக்கொடுக்கிறேன் என அவள் சொல்லும் இடம்தான் முக்கியமானது என நினைக்கிறேன்


செல்வராஜ்

Friday, November 24, 2017

பரம்



ஜெ

ஒவ்வொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிரும் பரம் என்பது நாராயணகுருவின் வரி. தெய்வதசகத்தில் உள்ளது. நான் இளமைமுதலே எங்கள் வீட்டில் பாடுவது. நாங்கள் மலையாளிகள். சேலத்தில் செட்டில் ஆகிவிட்டோம். வெண்முரசில் அந்த வரியை வாசிப்பது மனநிறைவை அளிக்கிறது. நகுலனின் மகனாகிய சதானிகனிடம் குரு சொல்கிறார்

ஒவ்வொரு முறை வேண்டுகையிலும் உங்களில் எழும் சொற்களை உள்ளிருந்து விலக்குக! அச்சொற்கள் ஏந்திய விழைவும் துயரும் உடன்விலகுவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம்


ஸ்ரீதர்

இளைஞர்களின் மனநிலை



ஜெ

சதானிகன் காலையில் உணரும் இரண்டு மன உச்சங்களை மொத்தமாகச் சற்றுக்கழித்துத்தான் எண்ணிப்பார்த்தேன். முதலில் அவன் நிர்க்குணப்பிரம்மத்தை உணர்வதற்கான மொழியற்ற தியானத்தை அவனுடைய ஆசிரியரிடமிருந்து உபதேசமாகப்பெறுகிறான். அதன்பின் சகுணப்பிரம்ம வழிபாட்டுக்கான அறிவுறுத்தலை தந்தை நகுலனிடமிருந்து பெறுகிறான். முதலில் வடிவமும் சொல்லும் இல்லாத தியானநிலையை அறிகிறான். அதன்பின் அதன் வடிவாக அவன் தந்தை குதிரையைப்பற்றிச் சொல்கிறார்

ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம் என்று கார்க்யாயனர் சொல்கிறார். ஒவ்வொன்றும் விலகுவது ஞானம். ஆனால் நகுலன் ஒன்றை பற்றுக! அது அருகிருக்கும் மரக்கிளைகூட ஆகலாம். காலிடறும் கூழாங்கல்லாகலாம். ஒன்றை பற்றுக! அதை தெய்வமெனக் கொள்க!  என்கிறான்.

இந்த முரண்பாட்டை சதானீகன் உணரவில்லை. அவன் இரண்டையும் இயல்பாக இரு மனநிலைகளாக எடுத்துக்கொள்கிறான். இதுவும் இளைஞர்களின் மனநிலைதான். அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அதில் சாரம்காண முயல்கிறார்கள்



சத்யமூர்த்தி

காலை



அன்புடன் ஆசிரியருக்கு

வெண்முரசு எனக்கு அளிப்பது என்ன என்ற கேள்விக்கு இன்றைய அத்தியாயமும் மிக தீர்க்கமான ஆனால் பகிர முடியாது விடையை அளித்தது. வெண்முரசில் என்னை அமிழ்த்திவிடும் அத்தியாயங்கள் ஆசிரியர்களின் சொல்லாகவே உள்ளன. அக்னிவேசர் பீஷ்மர் துரோணர் என நீண்டு செல்கிறது ஆசிரியர்களின் நிரை. 

விடியலில் நான் உணரும் அச்சங்களும் அமைதியின்மையும் அந்த நாள் முழுவதுமே என்னைத் தொடரும். பிறர் உணர முடியாமல் போனாலும் விழிப்புதட்டி பிறகு படுக்கையில் கிடக்கும் நாட்களில் அந்த எண்ணக் கசடு என்னை தொற்றிக் கொண்டு உடன்வரும். அதனை வெல்ல இன்று விழிக்கையில் உங்களை எண்ணிக் கொண்டேன். அதற்கும் வெண்முரசு தான் காரணம். எப்படியென நீங்களே அறிவீர்கள். இருந்தும் சொல்கிறேன். துரோணரின் பாதங்களை பணிந்தெழும் அவர் மாணவனாக. உற்சாகத்துடன் எழுந்தேன். அதன் இனிய நீட்சியாக சதானீகனின் புலரி.

இவ்வுணர்வுகளுக்கு நேரெதிரான ஒரு முடிவு இன்றைய அத்தியாயத்திலேயே. திரௌபதி கிருஷ்ணைக்கு ஆடையை அளித்ததை சொல்கிறாள். அதை அளித்தது கிருஷ்ணை தான் என்பதையும் நினைவுறுத்துகிறாள். மலைப்பை ஏற்படுத்திவிட்டன அச்சொற்கள். 

எழுதழல் மிக இறுக்கமான நாவலாக சென்று கொண்டிருக்கிறது. எண்ண ஓட்டங்கள் எத்தனை விரைவாகத் திரும்புகின்றன மனிதன் கொள்ளும் உணர்வுகளுக்கு பொருளென ஏதாவது இருக்குமா என்றெல்லாம் சிந்திக்க வைத்துவிட்டது. குறிப்பாக சுருதகீர்த்தியிடம் சல்யர் பேசுவதும் அபிமன்யூவிடம் பானு பேசுவதும் பலராமர் கொள்ளும் உணர்வுகளும் ஆழமான அகச்சோர்வை ஏற்படுத்திவிட்டன. ஆனால் இன்றைய அத்தியாயம் வெண்முரசில் என்றும் ஒளிரும் இனிமையை மீட்டுத் தந்துவிட்டது. 

அன்புடன் 

சுரேஷ் பிரதீப் 

சதானிகனின் கதாபாத்திரம்



அன்புள்ள ஜெ
உபபாண்டவர்களில் கடைசி ஜோடி அறிமுகமாகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் இருக்கிறார்கள். அது சொல்லப்படவில்லை, ஆனால் தெரிகிறது. முக்கியமாக சதானீகன் ஒரு கவித்துவமான மன அமைப்புடன் இருக்கிறான். அந்தக் குணத்தை பிறரில் இதுவரை காணமுடியவில்லை. சிந்தனையின் கூர்மை சுருதகீர்த்தியில் இருக்கிறது. தீவிரமான பக்தியும் உள்ளது. யௌதேயனிடம் வருவதை உணரும் கூர்மையும் சூழ்ச்சித்திறனும் உள்ளது. பிரதிவிந்தியன் ஒப்புநோக்க அப்பாவியாக இருக்கிறான். அவர்களில் சதானிகனின் கதாபாத்திரம் மட்டுமே அந்தப்பிரபஞ்சத்தன்மையை உணர்கிறது என நினைக்கிறேன். இன்று அவன் சொல்லற்ற தியானத்தைப்பற்றி உணர்வதும் அவன் கொள்ளும் மன எழுச்சியும் குதிரைகளைப்பற்றி நகுலன் அவனிடம் சொல்வதும் எல்லாம் சிறப்பாக இருந்தன


ஜெயராமன்



திரௌபதியும் கிருஷ்ணையும்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றய 'எரிதழலில்' கிருஷ்ணையின் மணவிழாவிற்கு தான் போக தோன்றாததை எண்ணி எண்ணி யுதிஷ்டிரர் மாய்வதும்,தனக்கு ஆதரவாக 
திரௌபதி  ஏதாவது கூறுவாள் என எண்ணி அவளிடம் கேட்பதும்,அவளோ என் வாழ்த்துக்களை முதன்மை சேடியின் மூலம் அனுப்பினேன் என்று கூறி   சற்றும் யாரும் எதிர்பாராதவாறு யுதிஷ்டிரரை திகைக்க செய்கிறாள்!.ஆனால் இதற்கு மேல்தான் தங்களின் கைவண்ணம் உச்சம் பெறுகிறது!. மணப்பரிசாக  முன்பு கிடைத்த  பட்டாடையை கொடுக்கச்சொன்னேன் என்று கூறி வாசிக்கும் எங்களெல்லாரையும் கூட ஒரு கணம் துணுக்குற செய்துவிட்டீர்கள்!.எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலில்  தனக்கு கிடைத்த பட்டாடையை,ஒரு பெண்ணுக்கு தன் வாழ்நாளில் மிக முக்கியமாக கருதும் ஒரு தருணத்தில் நினைவுறுத்தி/அளித்து தனது நன்றிக்கடனை செலுத்திவிட்டாள்!.(எப்படித்தான் உங்களுக்கு எப்படி மிக கச்சிதமாக எழுதத்தோன்றுகிறதோ?!)

அன்புடன்,

அ .சேஷகிரி