Monday, November 30, 2015

வியூகம்


 [துவராகை முகல் மினியேச்ச்சர்]

அன்புள்ள ஜெ. வணக்கம்; நல்ம்தானே முதலில் சிங்கப்பூர் இந்தோனேசியா பயணம் மற்றும் அதிரப்பள்ளி பயணம் இனிதே முடிந்தமைக்கு வாழ்த்துகள். எப்போதும் தயார் செய்யாத பேச்சுகளே நன்றாக அமைந்துவிடுகின்றன. காண்டீபத்தை நன்றாக முடித்திருக்கிறீர்கள். வெண்முரசு ஒவ்வொன்றும் மற்றொன்றை விடச் சிறப்பாக வாசிக்கச் சலிப்ப்ன்றிச் செல்கிறது . பத்மவியூகத்தை இப்பொழுத்தே தாமரை மலராகவும் கௌரவரை நூறு முதலைகளாகவும் காட்டி விட்டீர்கள். அடுத்தது விரைவில் தொடங்க வாழ்த்துகள்

வளவ துரையன்

பெண்ணுக்கு எதிராக

ஜெ

காண்டீபம் முடியும்போது மீண்டும் ஒரு ஆழமான துக்கம் வந்தது. பெண்களின் வாழ்க்கை. நான் வெண்முரசிலே ஆரம்பம் முதலே பெண்ணின் வாழ்க்கையைத்தான் பார்த்துக்கொண்டு வருகிறேன். இதில் பாஞ்சாலி தனக்கென்று அமைத்துக்கொண்ட அரியணையைப்பார்த்தபோது எனக்கு பாவம் என்றுதான் தோன்றியது. பெண்கள் அப்படி நிமிர்ந்து அமர்வதை ஒருபோதும் ஆண்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். அனுமதிக்க மாட்டார்கள்

மகாபாரதம் வாசிக்கும்போது துரியோதனனுக்கு என்ன அப்படி ஒரு வஞ்சம் ஏன் அவளை சபைக்கு இழுத்துவந்து அவமரியாதைசெய்தான் என்று நினைப்பேன். ஆனால் இந்த நாவலில் நீங்கள் மனித உளவியலை வைத்து அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள். துரியோதனன் மேல் பிரைட் கொண்டவன். அவனால் பாஞ்சாலியின் நிமிர்வை ஏர்றுக்கொள்ளவே முடியாது

அதைத்தான் நாம் கர்ணன் பீஷ்மர் உள்ளிட்ட  அத்தனைபேரிலும் காண்கிறோம். அப்படிப்பார்த்தால் பாரதப்போரே ஒரு பெண்ணுக்கு எதிராக ஆண்கள் செய்த போர் என்றுகூட வாசிக்கமுடியும். இத்தனை நுட்பங்களை இதில் பார்ப்பதனால்தான் விலகவே முடியாமலிருக்கிறது

நான் நடுவே விட்டுவிட்டு இப்போதுதான் வாசித்து முடித்தேன். எப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை

சந்திரா

தேய்ந்திறுதல்ஜெ

வழக்கமாக வெண்முரசு நாவல்கள் முடியும்போது ஒரு துக்கமும் தனிமையும் வந்துசேரும். இந்திரநீலம் முடியும்போதுகூட திருஷ்டதுய்ம்னன் நண்பனை விட்டுவிலகிச்செல்லும்போது ஒரு சின்ன துக்கம் வந்தது. அது இவர்கள் என்னாவார்கள் என்று தெரிந்ததனால் வந்த துக்கமும்கூடத்தான். ஆனால் இந்த நாவல் உற்சாகமாக முடிகிறது. இதிலும் அபிமன்யூ வந்ததுமே விதியைப்பற்றிய குறிப்பு வந்துவிடுகிறது. ஆனாலும் சிறுவர்களின் உலகம் என்பதனால் உற்சாகம் இருந்துகொண்டே இருக்கிறது.

உச்சகட்டத்தில் நாவலை முடிப்பதில்லை நீங்கள். எப்போதுமே கொஞ்சம் கீழிறக்கி ஒரு தேய்ந்திறுதலைத்தான் கொடுக்கிறீர்கள். விஷ்ணுபுரம் ஏழாம் உலகம் எல்லாமே அப்படித்தான் இருந்தன. [காடு மட்டும்தான் விதிவிலக்கு] ஆனால் இந்நாவல் உற்சாகமான மெல்லிய ஒரு சரிந்திறங்கி முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகையாக இருப்பது ஆச்சரியமான இனிமை

சங்கரநாராயணன்
 

மாநகர் – 6 - நிறைவுஇனிய ஜெயம்,


குழந்தைகளுடன் குதூகலத்துடன் நானும் காண்டீபம் காண அவர்கள் பின்னால் சென்றேன். இந்திரன் சந்திரன் என வித வித சக்திகள் பரிபாலித்த வில். அர்ஜுனன் அதை பூட்டி ஏந்துகையில் முழங்கை அளவே இருக்கிறது. இலக்கின் தேவைக்கு ஏற்ப அந்த வில்லை கையடக்கமாகவோ, விஸ்வரூபமாகவோ மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற நுட்பம் அபாரமான கற்பனை.

அபிமன்யுதான் முதலில் மாங்காயை பார்க்கறான். பிறர் எவரும் அதை சுவைக்க அனுமதி வழங்க மறுக்கிறான்.  அர்ஜுனனின் விழிகள் மட்டுமல்ல, பால்யத்தில் அர்ஜுனன் எவ்வாறு இருந்தானோ அதே அக ஆற்றலும் கொண்டிருக்கிறான் அபிமன்யு.

பைமீ நாகாஸ்திரத்தை கண்டு பயந்து ஓடுவது போல, அபிமன்யு தாமரையை விட்டு வெளியேறும் வண்டினைக் கண்டு பயந்து அலறுகிறான்.  சுபத்திரை எந்த வலையையும்  வென்று மீளும் விழைவையே பெற்றெடுத்திருக்கிறேன் என்கிறாள். ஆனால் மகனெனஇங்கு இருப்பதோ பயம். 

அனைவரும் விஜயனின் கதையை கேட்க, விஜயனின் புதல்வர்கள் ராதேயனின் சாகச கதையை கேட்டு வளர்கிறார்கள்.  அனைவரும் தனக்கான துணைகளை கவர்ந்து வர சாகசங்கள் புரிந்து கொண்டிருக்க, ராதேயன் நண்பனுக்காக அந்த சாகசங்களை புரிகிறான். மூடன் மூடன் இனிய மூடன் . அந்த வரிகளை வாசிக்கையில் அங்க மன்னனை மனதால் ஆரத் தழுவிக் கொண்டேன்.

அபிமன்யு தனக்கான மாங்காய் அது அதை கடிக்காதே என சுஜயன் வசம் கோபம் கொள்ளுகையில், அர்ஜுனன் பால்யத்தில் மாலினி மீது கொள்ளும் கோபம் நினைவில் எழுந்தது. அர்ஜுனன் இன்னும் மாலினியை சந்திக்கவில்லை என்பது இனிய துயராக மனதை கனக்க வைக்கிறது.

அந்த மாங்காயை தராவிட்டால் உன்னைக் கொல்வேன் என்கிறான் அபிமன்யு. சுஜயன் நிச்சயம் பயந்துபோய் அதை திருப்பி அளித்திருக்க மாட்டான்.

ஆம் அருகமெய்மையின் விதை அவனுக்குள் முளைத்து விட்டது.

இனிய ஜெயம்  ரைவத மலையில் நான் கண்டதெல்லாம் நான் வாழ விழைந்த வாழ்வே. அந்த உலகை எனக்கே எனக்கு அதில் என்றென்றும் நான் வாழ எனக்கு படைத்து அளித்தமைக்கு  உங்கள் விரல்களுக்கு என் அன்பு முத்தங்கள்.

தொடக்கம்Greetings Jemo ,

I was reluctant to start Venmurasu though I am your biggest fan , I have read most of your novels except few . 

But few days before me and my wife have started to see Vijai tv's mahabaratham and we are getting addicted to it .Since now I have understood basic structure of the epic I  decided to take a deep dive in to my jemo's venmurasu. Have bought mutharkanal  .My wife has got conceived , she s in 3 months, I thought its the prime time to start . I request your blessing for me and my child .You are my Guru .I started reading u 3 years before ,not a single days goes by without reading your blog .I used to think how beautiful my life has become since the day i started reading you , what a lovely journey . Now u have gone a long way in venmurasu , its scary but with all courage i am going to start the book . Many thanks love you lots.

Regards,
Sivakumar

Sunday, November 29, 2015

மாங்காய்அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காண்டீபம் நாவல் முழுவதும் அற்புதமான இடத்தில் வந்து முடிவடைந்ததைக்கண்டு மகிழ்கின்றேன். ஒரு நாவல் இப்படி முழுமையாக முடிவதை இப்போதுதான் உணர்கின்றேன். ஒவ்வொரு நாவலும் அதற்கான அதற்கான இடத்தில் சென்றுதான் தன்னை முழுமையாக்கிக்கொள்கிறது என்றாலும் காண்டீபம் தான் சொல்லவந்ததை சொல்லி முழுமை அடைவதை உணர்கின்றேன்.

அர்ஜுனனின் அக உலக பயணம், புறவுலகபயணம் என்று செல்லும் கதையில் அர்ஜுனன் நான்கு மனைவியரின் அகம் புறம் என்று நெய்துக்கொண்டு செல்கிறது கதை. கதையின் படி பெரும் நாவலாக விரியும் காண்டீபத்தில் வரும் சுபகை, சுஜயன் இருவரின் வாழ்க்கையும் ஒரு சிறுகதைபோல் பூத்து மலர்ந்து காண்டீபத்தை சிறுகதையாகவும் ஆக்கி செல்கிறது. காண்டீபத்தின் பெரும் நாவல் விரிவு அர்ஜுனன் என்றால் நாவலின் கனம் சுபகை, சுஜயனின் வாழ்க்கையால்தான். 

பெரும் பயத்தில் தொடங்கும் சுஜயனின் வாழ்க்கை, பயத்தை வென்ற இடத்தில் வந்து நிற்கும் இடத்தில் காண்டீபத்தை நாவல் என்பதை மறக்க வைக்கிறது. வாழ்க்கை வாழ்க்கை என்று அதிரவைக்கிறது.  கொலைய இரத்தம் வாள் என்று தொடங்கும் காண்டீபம் கொல்லாமையில் வந்து நிற்கும் இடத்தில் காண்டீபம் கதை இல்லை வாழ்க்கையின் இலக்கு என்று இழுத்துச்செல்கிறது. 

மண்ணுக்காக வாழ்க்கை என்று வாழந்து பின்  மண்ணைத்துறந்து பாலையில் அலைந்து இலக்கை அடையும் ரைவதகர் ஒரு புள்ளி. பெண்ணை கண்டு கனிந்து அவள் இறப்பில் கரைந்து உடலை சிதைத்து உருவழிந்து உய்யும் ரிஷபதேவர் ஒரு புள்ளி, மண்வேண்டாம், பெண்வேண்டாம் என்று தனித்து வாழ்ந்து, நாட்டுக்காக, உறவுக்காக என்று அணிமணி புனைந்து வெறுத்து அறுத்துக்கொண்டு போகும் அரிஷ்டநேமி ஒருபுள்ளி. மண் பெ(ஆ)ண் பொன் மூன்று பேராசைகளும் ஒரு புள்ளிபோல்தான் மனித அகத்தில் துளையிடுகிறது. அது உருவாக்கும் காட்டை பெரும்வெளியை அறுத்துச்செல்ல ரைவதகர். ரிஷபதேவர், அரிஷ்டநேமிப்போன்ற மாபெரும் மாவீரர்கள் பாடும்பாடு எத்தனைப்பெரியது! தலையறுக்கும் வீரனின் கதையைமட்டும் அல்ல தன்னையே அறுக்கும் மாவீரனின் கதையும் கொண்டது காண்டீபம். 

அர்ஜுனன் காண்டீபத்தால் அம்பெய்து கொய்த மாங்காயை சுஜயன் கடிக்கப்போகும்போது, அபிமன்யு கடிக்காதே என்பதும், சுருதகீர்த்தி அபிமன்யுவுக்கு பாதிப்போதும் என்றபோதும், அபிமன்யு முகம் சிவந்து “உன்னைக்கொல்வேன், அம்புவிட்டு உன் தலையை அறுப்பேன்” என்கின்றான். அர்ஜுனன் பதி என்று சொன்னபோதும் “எனக்கு முழுமாங்காய் இல்லையேல் நான் உன்னைக்கொல்வேன்” என்று சொல்கிறான். இந்த நிகழ்சிக்குள் சிக்கிக்கொள்ளும் அர்ஜுனன் சிலகணங்கள் இருவரையும் நோக்கிவிட்டு பெருமூச்சுவிட்டு ஆலயத்திற்கு செல்கிறான். மொத்த மகாபாரதமும் இதுதானோ? இதுவரை உலகம் வாழ்ந்த வாழ்க்கையும், வாழபோகும் வாழ்க்கையும் இதுதானோ? உள்ளம் வெண்முரசுக்கொட்டுகிறது.

வாழ்க்கை எத்தனை தெளிவாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் தோன்றும் அலைகளும் சுழிகளும் யார் உருவாக்குவது? யாரைத்தான் குற்றம் சொல்வது. கொல்வேன். அர்ஜுனனைக்கொல்வேன் என்று சொன்ன சுஜயன் கொல்லாமையைப்பற்றி பேசுவதும், நடையே பழகாத குழந்தை கொல்வேன் என்பதும் வாழ்க்கையின் முரண் அல்ல முரணும் வாழ்க்கையே என்று காட்டிச்செல்லும் நடனம்.

கதையை இந்த இடத்தில் முடிக்காமல் அல்லது விட்டுவிடாமல் இந்த மாங்காயை வீசிபிடித்து மைந்தர்கள் விளையாடும் காட்சியைக்காட்டி வாழ்க்கையின் விளையாட்டை ரசிக்கவைக்கின்றீர்கள், சிந்திக்க வைக்கின்றீர்கள். இதுதான் காண்டீபத்தின் நோக்கம். 

நாடு என்னும் மாங்காய் சுபகைப்போன்றவர்களுக்கு தெய்வத்திற்கு உரியது. அர்ஜுனன்போன்றவர்களுக்கு கண்டடையும் கண்களுக்கு உரியது, நான் என்று எழும் அபிமன்யுப்போன்றவர்களுக்கு வாளெடுத்து தலைகொய்ய செய்வது. சுஜயன்போன்றவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுக்க மனம் உருவாக்குவது. சுருதகீர்த்திப்போன்றவர்களுக்கு அது ஒரு உணவாகும்  பொருள்மட்டும்.

ஒரு மாம்பழம் எனது அப்பன் முருகனையே ஆண்டியாக்கும் என்றால் மானிடர்கள் என்ன ஆவர்கள்?

யாரும் மாங்காயிக்காக இங்கு வரவில்லை, ஆலயத்திற்கு செல்லவே வருகிறார்கள். போகும் வழியில் கண்டடையும் மாங்காய் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொன்றாக செய்துக்கொண்டு செல்கிறது. எந்த மாங்காயின் நிமித்தம் தலைகள் அறுக்கப்படும்மோ அந்த மாங்காய் வெறும் விளையாட்டுப்பொருள் மட்டும்தானா? அல்லது ஒரு விளையாட்டுப்பொருளைத்தான் உலகம் இத்தனை பெரும் கொலைக்கு கர்த்தாவாகவும் ஆக்கிக்கொள்கிறதோ?

யுத்தமே விளையாட்டாய், விளையாட்டே யுத்தமாய் உலகை சமைக்கும் மாங்காய் மடையர்களால் வாரலாறுகள் வாழட்டும்.

நன்றி ஜெ அல்லது காண்டீப நாயகன் சுஜெயன்.  

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

திரும்பிவரும் இடம்


திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும் மைந்தனின் விடுதலையை  அடைகிறேன்  -என்ற காண்டீபத்தின் வரி அபாரமானது. எனக்குள்ளும் ஒரு முறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

வேணுதயாநிதி

சுபகை - காதலின் நாயகிசுபகை - என்ன சொல்ல? வெண்முரசில் வந்த மற்றுமொரு அற்புதமான கதாபாத்திரம் அவள். அவள் செய்வது நாயக வழிபாடு அல்ல. அவள் தன்னை முழுமையாகவே அர்ஜுனனிடம் சமர்ப்பித்திருக்கிறாள். அதே சமயம் அவனை அப்படியே முழுமையாக அடைந்தும் இருக்கிறாள். மாலினிக்கும் இவளுக்கும் அர்ஜுனன் பால் கொண்ட அன்பில் எந்த வித்தியாசமும் இல்லை. அந்த அன்பைப் பொழியும் கண்களையே அவன் நினைவில் வைத்திருக்கிறான். அவள் அர்ஜுனனைப் பொறுத்தவரை எப்படியோ, தப்பித் தவறி நினைவில் நின்றவள் அல்ல. எந்த நிலையானாலும் அவன் சென்று சேரும் போது, எச்சொல்லும் இல்லாமல் அவனை அரவணைத்துக் கொள்ளும் சரணாலயம் அவள். அதைத் தான் அவன் காண்டீபத்தின் இறுதி அத்தியாயத்தில், "உன்னைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் நான் வயது முதிர்ந்தவனாக இருந்தேன், நீ இதை விட தொய்ந்து போன உடலுடன் இருந்தாய்" என்கிறான். 

அர்ஜுனன் பெண்களிடம் காமத்தைத் தேடவில்லை. அவன் தேடிக்கொண்டிருப்பது தாய்மையுடன் கூடிய புன்னகையை. பிரயாகையில் பிரீதி என்ற ஒரு தாசியிடம் தான் முதன் முதலில் அவன் காமத்தை அறிகிறான். அத்தாசி அவனை மடியில் சாய்த்து தலை கோதிவிடுகையில் செய்யும் ஒரு புன்னகையை அவன் நினைவில் வைத்து அவனை நீராட்டும் மாருதரிடம் சொல்வான். அவர் இனி எல்லாப் பெண்களிலும் அப்புன்னகையைத் தான் தேடுவீர்கள் என்று அர்ஜுனனிடம் சொல்வார். சுபகை அவள் இளமையில் சிரிக்கும் கண்களும், தெற்றுப் பற்களும் உடையவளாக இருந்திருக்கிறாள். தெற்றுப் பல் அழகிகளின் புன்னகை எப்போதுமே உற்சாகம் தருவது. அதை அவளிடம் கண்டதால் தான் அவன் அவளுக்கு எயினி என்று செல்லப் பெயரிட்டிருக்கிறான். அவனை முற்றும் அறிந்த மாலினி அதனால் தான் சுபகையைக் கண்டவுடனேயே அப்பெயரைக் கூறி விடுகிறாள். அப்புன்னகையை உதட்டிலும், அவன் ஏங்கிய அன்பையும், அரவணைப்பையும் கண்களிலும் கொண்டு அவனை அந்த இரவில் சந்தித்திருந்திருப்பாள் சுபகை. எனவே தான் அவன் நினைவில் அவள் நின்றிருக்கிறாள். 

மேலும் மாலினி அம்மைக்கு அடுத்து அர்ஜுனன் இவளிடம் தான் இயல்பாக இருக்க முடியும். மற்ற அனைவருமே அர்ஜுனன் மீது காதல் கொண்டிருந்தாலும் அவர்களின் வாழ்வுக்கென வேறொரு பிடிப்பையும், விழைவையும் கொண்டிருந்தார்கள். திரௌபதியும், சுபத்ரைக்கும் அவர்களுக்கே உரிய ஆணவமும் (ego), அவர்களின் அடையாளம் என்பதைத் தக்க வைத்துக் கொள்ளும் விழைவும் இருக்கின்றன. ஆனால் சுபகைக்கும் சரி, மாலினிக்கும் சரி அர்ஜுனன் என்ற எண்ணம் தவிர வேறு எந்த பிடிப்பும் வாழ்வில் இல்லை. எனவே தான் அர்ஜுனன் தான் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் திரும்பி வரும் மாலினியின் குடிலுக்கே சுபகையையும் செல்லச் சொல்கிறான். அங்கே தனக்காகக் காத்திருக்கும் படியும் சொல்கிறான். அர்ஜுனனுடன் கூடிய இரவில் நின்ற சுபகையின் காலம் இன்றிலிருந்து மீண்டும் இயங்கத் துவங்கிவிடுகிறது. மிக மிக இனிமையான ஒரு காதல் நம் கண் முன்னே, மிக இயல்பாக மலர்ந்து மணம் வீசுகிறது. உண்மையில் காண்டீபத்தில் வந்த காதல்களில் அர்ஜுனன் - சுபகை காதலே மிகச் சிறந்ததாகத் தோன்றுகிறது.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம் 

கொலைவில்ஜெ

இத்தனை கதைகளுக்குப்பின்னால் காண்டீபம் இப்படி வரும் என நினைக்கவேயில்லை. மிகச்சாதாரணமாக வருகிறது. ஆனால் அந்த காட்சி பிரமிக்கவும் வைக்கிறது. அது கோயிலில் இருக்கிறது என்பதுதான் காரணம். அது என்ன செய்யப்போகிறது என நமக்குத்தெரியும். ஆகவே அது ஒரு கொலைத்தெய்வம் என்பது அதிர்வை அளிக்கிறது. அது கொல்லப்போகும் மனிதர்கள் கண்ணில் விரிகிறார்கள்.

அதோடு இதுவரையிலான நாவலின் உச்சியில் அது வருகிறது. நாவல் நேமியின் வருகையுடன் ஒரு ஆழமான அமைதியை அடைகிறது. அகிம்சை நோக்கி போய்விடுகிறது. ஆனால் காண்டீபம் அதன் உச்சியில் வந்து அமர்ந்திருக்கிறது. ஒன்றுமே செய்யமுடியாது எல்லாவற்றையும் அதுவே  தீர்மானிக்கும் என்று சொல்வதுபோல உட்காந்திருக்கிறது

அதற்கு பூசையிடுவதெல்லாம் ஒரு மாதிரி கலங்க வைத்த காட்சியாக இருந்தது.

அகிலா

கர்ணனும் குழந்தைகளும்ஜெ

கலிங்க இளவரசி என்று வந்துகொண்டே இருக்கிறதே என்று பார்த்தேன். கடைசியில் அது கர்ணனின் கதை. அதைத்தான் குந்தி கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அதைத்தான் பிள்ளைகள் கேட்கிறார்கள். அர்ஜுனனின் குழந்தைகள் மனதில் வாழும் வீரன் கர்ணன். அவர்கள் அவனைமாதிரி ஆகத்தான் முயற்சி செய்கிறார்கள். அவன் மட்டுமல்ல அவர்களும் அவனைத்தான் நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள்

என்ன ஒரு மௌனமான நுணுக்கம். வியந்துவிட்டேன்

சுவாமி

Saturday, November 28, 2015

அர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை


    

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் ஆனகதை என்பது பழமொழி. நாம் ஒன்றைச் செய்யப்போக அது அதற்கு மாறான  ஒன்றாக மாறிவிடுவதை குறிக்கிறது. பெரும்பாலும் ஒரு நல்ல காரியம் செய்யப்போய் அது தவறாக மாறுவதை குறிக்க பயன்படுத்துகிறார்கள்.
   

ஆனால் உண்மையில் களிமண்ணில் பிள்ளையார் செய்வது எளிது. சிறிய வயதில் பிள்ளையார் பொம்மை செய்து விளையாடி இருக்கிறேன்,  உடல் பாகம் ஒரு பெரிய உருண்டை அதன் மேலே ஒரு சிறிய உருண்டையை தலையாக வைத்து ஒரு  உருளையாக களிமன்னை உருட்டி தலையில் தும்பிக்கையென  பொருத்திவிட்டால்  அதை பிள்ளையார் என யாரைவேண்டுமானாலும் நம்ப வைத்துவிடலாம். ஆனால் களிமண்ணில் ஒரு குரங்கு பொம்மையை  செய்வதுதான் கடினமானது. இப்போதும் என்னால் அதை செய்ய முடியாது என நினக்கிறேன். ஆக நான் பிள்ளையர் செய்யப்போக அது குரங்குபொம்மையாக  மாறிவிட்டால் அதற்கு பெரிதாக கவலைப்பட மாட்டேன். உண்மையில் மகிழ்ச்சியடைவேன்.  
  

கோழையாக இருக்கும் சுஜயனை வீரனாக மாற்றுவதற்காக அவன் அர்ச்சுனனின் வீரக்கதைகளை  கேட்க  மாலினியிடம் அனுப்பப்படுகிறான்.  அர்ச்சுனன் விசித்திர நாடுகளுக்கு செல்லும் பயணங்கள், அங்கு அவன் செய்யும் சாகசங்கள், காதல்கள் போன்றவை சுஜயனுக்கு சொல்லப்படுகிறது.  அந்தக் கதைகளில் ஒன்றின் சிறிய பகுதிதான் அரிஷ்டநேமியின் கதை.   ஆனால் அவன் மனம் முழுவதும் அதனால் ஈர்க்கப்படுகிறது.  இது எப்படி நிகழ்ந்தது  என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்

     சுஜயன் தன் கோழைத்தனத்தை உணர்ந்தவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் வீர சாகஸங்களை கனவுகண்டுகொண்டு இருக்கிறான். அவனுடைய கோழைத்தனம் மற்றும் அதனால் கொள்ளும் பயங்களின் மேல் போர்த்திக் கொள்ளும் போர்வைதான் அவன் காணும் வீரசாகச கனவுகள். அர்ச்சுனனின் கதைகள் அவனுக்கு வீரத்தை புகட்டுகிறது அவன் பயங்களை போக்குகிறது.  அதே நேரத்தில் அர்ச்சுனனின் அந்த சாகசங்களால் காதல்களால் அவன் நிறைவடையாமல் அவன் பயணங்கள் மேலும் மேலும் தொடர்வதைப் பார்க்கிறான். அதே நேரத்தில் அரிஷ்டநேமி நிறைந்து கற்பாறையென இறுகி நிற்பதை அறிகிறான்.  சுஜயனின் ஆழ்மனது  வீரத்தைவிட அஞ்சாமையை கண்டு பிரமிக்கிறது.   “அஞ்சுபவர்கள் கொல்கிறார்கள். அஞ்சாதவர்கள் இவ்வுலகிற்கு அன்பை மட்டுமே அளிக்கிறார்கள்”  என்ற வரி அவன் இளமனதில் பதிந்துவிடுகிறது. முதலில் அர்ச்சுனனாக இருந்த அவனுடைய நாயகவடிவம்,  அரிஷ்டநேமியென மாறிவிடுகிறது.

      இதற்கெல்லாம் நாம் சரியான விளக்கம் சொல்லிவிடமுடியும் என்று தோன்றவில்லை. ஒரே சூழலில் இருக்கும் இரு பிள்ளைகள்  வெவ்வேறு குணங்களைக் கொள்வதும், அவர்கள் தம் வாழ்வின் நோக்கங்கள் வேறுபட்டு போவதையும் அவர்கள் முன்வினைப்பயன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.   

தண்டபாணி துரைவேல்

வீரமும் ஆன்மீகமும்ஜெ

வெண்முரசு நாவல்கள் எதிலும் இல்லாத வடிவம் இந்த காண்டீபத்துக்கு. இதில் ஆரம்பத்திலே இருக்கும் பிரபஞ்சதரிசனமே இல்லை. நேராகவே சுஜயனின் கதை ஆரம்பிக்கிறது. அவன் காணும் , அவனுக்குக் கதைசொல்லும் சுபகை காணும் அர்ஜுனனின் சித்திரம்தான் நாவலில் இருக்கிறது. ஆனால் ஓர் இடத்தில் நாவல் அப்படியே திரும்பி நேரடியாகக் கதைசொல்லத் தொடங்குகிறது. அதுவரை சொல்லப்பட்ட கதைகளை எல்லாம் தொகுத்து அதன் சாராம்சத்தை இந்தப்பகுதி சொல்லி முடிக்கிறது.

இந்த வடிவத்தில் தனியான பகுதிகளாக நின்றிருப்பவை ரைவதர், ரிஷபர், நேமி ஆகியோரின் துணைக்கதைகள்தான். அந்தக்கதைகளுக்கும் அர்ஜுனன் சந்தித்த முதலைகளுக்கும் அதற்கு முன்னால் அவன் போன நாகர்குல உலகத்திற்கும் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து அறிந்த உண்மைகளுக்கும் ஆழமான ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ளமுடியும் என நினைக்கிறேன்

இந்த நாவல் ஒரு ஆன்மிகநாவலாக ஆகியிருக்கிறது ஜெ. வீரத்தைச் சொல்லவந்து தியானத்தைச் சொல்லி முடித்துவிட்டீர்கள்

சண்முகம்

காண்டீபத்தின் உருவம்

ஜெ,

காண்டீபம் அபிமன்யூவில் முடிந்தது அழகு. ஏனென்றால் அங்கேதான் அது முடியவேண்டும். அர்ஜுனனில் இருந்த நுட்பமான ஒரு விஷயம் நேமியால் இல்லாமலாகிவிட்டது. அது என்னவென்றால் துருபதனை கட்டி இழுத்துவந்து துரோணர் காலிலே போட்ட அந்த தயக்கமில்லாத தன்மை. அவன் முதிர்ந்துவிட்டான்

அவனிடமிருந்து போனதெல்லாம் பையனிடம் போய் குடியிருக்கிறது. அவன் இவனாக ஆகிவிட்டான். நீங்கள் இன்றைய காந்தி நூலிலே எழுதியிருப்பீர்கள், காந்தியிடமிருந்து போனதெல்லாம் மகனிடம் போய் நிறைந்தது என்று. அதேமாதிரித்தான்

அபிமன்யூ கடைசியில் வருகிறான். உண்மையில் அவன் தான் காண்டீபம் என்னும் வில். அவனை நினைத்தபடியே நாவலை முடிக்கிறேன்

சாமிநாதன்

அபிமன்யூஜெ

அபிமன்யூவின் கதாபாத்திரம் அற்புதமாக வந்திருக்கிறது. அவன் ஒரு குழந்தைமேதையாகவே மகாபாரதத்திலே வருகிறான். அவன் களத்திலே கொன்றழிக்கப்போகிறவர்கள் நிறையப்பேர். அவன் கௌரவர்களின் பிள்ளைகளை எல்லாம் கொல்பவன். இன்றைக்கு சுஜயன் அவனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். ஒரு பேச்சுக்கு அவன் சொல்கிறான், உன்னைக்கொல்வேன் என்று. கொல்லத்தான் போகிறான். அவன் ஒரு நெருப்புத்துளி. தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

ஆனால் அவனைப் பெற்ற அன்னை அவன் அகிம்சையால் விடுதலை அடைந்த நேமியைப்போல இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள் என நீங்கள் எழுதியிருப்பதுதான் உண்மையான டிவிஸ்ட். தந்தை அகிம்சையில் கனிந்திருந்தபோது அவன் பிறக்கிறான். அவனை அர்ஜுனன் இப்படி ஒரு வீரனாக ஆகவேண்டுமென நினைத்திருக்கவே மாட்டான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவைக் காணலாம். வாழ்க்கை அப்படியல்ல. அதற்குண்டான வழியில் அது செல்கிறது. அதைத்தான் ஊழ் என்கிறார்கள்.

மகாபாரதமே ஊழின் கதைதான். அபிமன்யூ மாட்டப்போகும் தாமரைவியூகத்தைப்பற்றி இப்போதே குறிப்பு வந்துவிட்டது. வருத்தமும் நிறைவுமாக இந்த நாவலும் முடிகிறது

சாரங்கன்

சுபகைஅன்புள்ள ஜெ,

வெண்முரசின் நாயக நாயகியர் வரிசையில் இதோ சுபகை பேருருக் கொள்கிறாள் - காண்டீபத்தின் நாயகி.

இந்திரநீலத்திற்கு ஒரே காட்சியை தேர்வுசெய்யவேண்டுமென்றால் துறைமுகத்தில் வழியனுப்ப வரும் சாத்யகியின் தோளை திருஷ்டத்யும்னன் பற்றுவதையே சொல்வேன்.  அதுபோல் காண்டீபத்தில் இளையபாண்டவன் சுபகையின் தடித்த கைகளைப் பற்றி தேரிலேற்றிக்கொள்ளும் காட்சி அப்படியே உறைந்து கண்முன் நிற்கிறது.

சுபகை அம்பையை ஏன் நினைவுறுத்துகிறாள் என்பது வியப்பாக இருக்கிறது.  அவளுக்கு அடுத்தபடியாக இவள்தான் முழுமையான பெண் என தோன்றுவதனாலா?

மேலும் ஒரு Haunting Character-ஐ படைத்தளித்தமைக்கு வாழ்த்துக்கள்! :) 
ஸ்ரீனிவாசன்

Friday, November 27, 2015

முடிவில்ஜெ

வெண்முரசு காண்டீபம் முடியப்போகிகிறது என்பது ஒரு தனிமையை அளிக்கிறது. ஏனென்றால் தினமும் இதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சிலசமயம் ஒரே அத்தியாயத்தை ராத்திரியிலும் வாசிப்பதுண்டு. இது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. இனி கொஞ்சநாள் இல்லை. அப்போது என்ன செய்வது என்ற தவிப்புதான். முந்தைய நாவல்களுக்குஇடையே உள்ள காலகட்டத்தில் நான் பழைய அத்தியாயங்களைத்தான் வாசித்துக்கொண்டிருப்பேன். புத்தக்ங்கள் வாங்கியிருக்கிறேன். ஆனால் இதுவரை புத்தகங்களை வாசிக்கவில்லை. என்றைக்காவது வாசிக்கலாம் என நினைக்கிறேன்

சீக்கிரம் அடுத்த நாவலை ஆரம்பியுங்கள்

சரவணன்

வாசகர்கடிதங்கள்ஜெ

அவ்வப்போது நிறையபெர் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவார்கள். கடலூர் சீனு எழுதும் கடிதங்களும் சுவாமி எழுதும் கடிதங்களும் ஒரே வகையானவை. நுட்பமானவை. விரிவாக எழுதுபவர் தண்டபாணி துரைவேல், மகராஜன் போன்றவர்கள். இந்தக்கடிதங்களெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய திறப்புகளை அளிக்கின்றன.

அவ்வப்போது நிறைய எழுதக்கூடிய சிலர் நிறுத்திவிடுகிறார்கள். ராமராஜன் மாணிக்கவேல், சண்முகம், முருகவேலன் போன்றவர்கள் எழுதாமலாகிவிடுகிறார்கள். இதெல்லாம் ஏன் நிகழ்கிறது என்று நினைத்தேன். வெண்முரசை தொடர்ந்து இத்தனைபேர் வாசிக்கிறார்கள் என்பதே ஆச்சரியம்தான்

ஜெயச்சந்திரன்

சிறுவர்ஜெ

என்னதான் சொல்லுங்கள். சின்னப்பையன்கள் வந்ததுமே கதை எங்கோ போய்விட்டது. அவர்களின் துடிப்பான உலகம் ஒரு அழகு. போர் என்றால் நாம் நினைக்கும் போர் அல்ல. அதெல்லாம் அவர்களுக்கு விளையாட்டு. பெரியவர்கள் சொல்லும் கதைகளிலிருந்து துண்டுத்துண்டாகப்பொறுக்கி எடுத்துக்கொண்டு அவர்களே ஒரு உலகத்தை உண்டுபண்ணிக்கொள்கிறார்கள்

அதிலும் வெள்ளைக்குதிரை என்று சொன்னதுமே இருவரும் ஒரே அலையால் அடித்துச்செல்வதுபோல வாசலை நோக்கி ஓடும் காட்சி சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அற்புதமான நுட்பம் அது. பையன்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

இதேபோல குண்டாசியும் யுயுத்ஸ்வும் இருந்த நாட்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். நாவல் நம்மை அறியாமலேயே இரண்டு தலைமுறையைக் கடந்து வந்துவிட்டது.

சித்ரா

நேமியின் நிழலில்ஜெ சார்

நிறைய எழுதவேண்டுமென நினைப்பேன். கடிதம் எழுதி நீண்டநாட்கள் ஆகின்றன. ஆனால் நான் நினைப்பதை அன்றைக்கே பலர் எழுதியிருப்பார்கள். ஆகவே தயங்கிவிடுவேன்
காண்டீபம் தொடங்கும்போது என்ன நினைத்திருந்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அது மெல்லமெல்ல முடியும்போது அச்சமின்மையையே உச்சகட்ட ஆயுதம் என்று கண்டுகொள்வதாக மாறிவிட்டிருக்கிறது.

நேமிதான் உச்சகட்ட கதாபாத்திரமாக எழுந்து வந்திருக்கிறார். நாவலில் உங்களுக்கான சவால் என்பதே இதுதான். இந்தக்கதைகளெல்லாம் பெரும்பாலும் தெரிந்தவை. இவற்றை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. இத்தனை நாவல்களை வாசித்தபிறகும் நீங்கள் எந்தப்பக்கமாகச் செல்லக்கூடும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை என்பதிலேதான் உங்கள் வெற்றியே இருக்கிறது என நினைக்கிறேன்

ஆனால் இதை நீங்கள் வேண்டுமென்றே செய்வதைப்போலவும் தோன்றவில்லை. நீங்களே வேகமாக உள்ளே செல்கிறீர்கள். தேடித்தேடி ஒரு வழியை கண்டுபிடிக்கிறீர்க்ள். அது புதியவழியாக இருக்கிறது. அர்ஜுனனுக்கு இதுவரை பலர் பல நிறங்களை அளித்திருக்கிறார்கள். அவரை நேமியின் நிழலில் உட்காரச்செய்ததை ஒரு பெரிய தாவல் என்றுதான் சொல்லவேண்டும்.

மனோகரன்

மாநகர் – 5 - பிம்பங்கள்
இனிய ஜெயம்,

மாலினி ஆண்களையே தீண்டாதவள். அர்ஜுனன் சிகர ஆளுமை கொண்ட பெண்களை கண்டு கடந்தவன். மாலினி அர்ஜுனன் கனிந்திருக்கிரானா என்பதை சுபகை கொண்டு அறிகிறாள்.

அர்ஜுனன் சுபகை விழிகளில் பொங்கும் தனக்கே தனக்கான ஒன்றினைக் கண்டு அவளை அறிகிறான். இத்தனைக்கும் சற்று முன்புதான் திரௌபதியை வேறு கண்டிருக்கிறான். ஆம் அர்ஜுனன் இப்போது பெண்கள் என்பதை விட ''பெண்மை'' என்பதை அறிந்தவனாக இருக்கிறான்.

திரௌபதி குறித்த வர்ணிப்பு, அர்ஜுனன் விழிகள் வழியே துலங்கும் அவளது மென் வயிற்று பேற்று வரிகளும், புதிய பருக்களும், பேசுகையில் வாங்கும் மூச்சும், உன்மத்தம் கொள்ள வைக்கிறது.

சுஜயனின் மாறுதல் எதிர்பாராத ஆச்சர்யம். அர்ஜுனனும் நீலனும் வீரம் கொண்டு அனைத்தையும் வென்று முன் செல்கிறார்கள். நேமி அனைத்தையும் அஞ்சாமை கொண்டு வணங்கிக் கடந்து செல்கிறார்.

நேமி தனது துரியத்தில், சுஜயன் தனது கனவில் என இருவரும் எதிர்கொள்வது ஒன்றே தானே.வில்லும் வாளும் கூட தோற்கும், அஞ்சாமை எதன் முன்பும் தோற்காது. தனது பிம்பத்தின் முன்பு கூட. 

கடலூர் சீனு