Tuesday, May 24, 2016

ஆடி எதைக்காட்டும்?

ஆடிச்சுயத்தின் மரணம் (பன்னிருபடைக்களம் 55):

சிசுபாலனின் காரணமேயற்ற கிருஷ்ணன் மீதான வெறுப்புக்கு அச்சாரம் இட்டவள் என்ற வகையில் அவன் தாயான சுருதகீர்த்தியின் ஆளுமை மிக முக்கியமானது. வெண்முரசு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவற்றின் உப்பக்கத்தைக் காண்பிப்பதில் என்றுமே வெற்றி பெற்று வந்துள்ளது. அவ்வகையில் இந்த விருச்சிக மாதத்தின் நாயகன் சிசுபாலனின் மறுபக்கமும் மிகத் தெளிவாக, அட்டகாசமாக வந்துள்ளது. அவன் அவனுக்காக எதையாவது செய்கிறானா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவன் எண்ணங்கள், செயல்கள், ஆசைகள் ஏன் காமம் கூட அவன் பெற்றோர்களின் நீட்சியாகவே உள்ளன.

அவன் நிலையுணர்வான ஆணவம் அவன் அன்னையிடம் இருந்து அவனுக்கு வந்தது. உண்மையில் சுருதகீர்த்தியின் கிருஷ்ணன் மீதான வெறுப்பின் ஊற்றுக்கண் எது? அவள் யாராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ அவள் மீதான போட்டியுணர்வே அது. அவ்வுணர்வு தந்த போலி ஆணவமே அது. ஆம். அவளின் கம்சன் மீதான காதல் உண்மையில் அவள் தன் ஆளுமை மீது கொண்ட காமத்தின் புற வடிவமே. அவள் கம்சனைக் காதலிக்கத் துவங்கும் முன் நடக்கும் நிகழ்வுகள் அதையே காட்டுகின்றன. அவளை மையமாக வைத்து நடத்தப்படும் அரசியல் நாற்களத்தில் தன் எதிரில் இருப்பவளைக் கண்டு கொள்கிறாள். ஒரு வகையில் அவளின் எல்லா காய்களையும் வெட்ட வேண்டும் என்ற வகையிலேயே தன் கருக்களையும், காய்களையும் நகர்த்துகிறாள், அவளுக்குத் தெரிந்த வகையில். குந்தி வெல்லக்கூடாது என்பதற்காகவே கம்சனை வேட்கிறாள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் குந்தி இவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை அவள் கம்சனைக் கடந்து செல்கையிலேயே புரிந்து கொள்கிறாள். அக்கணத்திலேயே அவளும் கம்சனை நிராகரிக்கிறாள். குந்தியைப் போன்றே ஒரு ஷத்ரிய அரசுக்குச் செல்ல வேண்டும் என்ற வகையிலேயே அவள் தமகோஷருக்கு மாலையிடுகிறாள். அத்தருணத்தில் அவள் இழந்த யௌவன வாழ்வை அவளுக்கு நினைவூட்டுபவனாக கம்சன் இருக்கிறான். அவள் சென்று சேர வேண்டிய எல்லையாக குந்தி அவளுடன் வருகிறாள்.

சூக்திமதியில் சபரியின் மத்தகத்தில் இருக்கையில் அவளுக்குத் தெரிபவர்கள் இவர்கள் இருவருமே. அவளின் உள்ளத்தில் தான் இல்லை என்ற நினைப்பே தமகோஷரை வெறித் தனமான காமத்தில் ஆடச் செய்கிறது. ஒவ்வொரு முறையும் அவள் முன் தோற்றுச் செல்கிறார். அவள் மைந்தன் பால் அவளுக்கு ஏற்படும் பாசம் கூட இளைய யாதவனால் அவன் ஒருங்கிணைக்கப்படும் போது தான். அது வரை அவனை தன் உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏதோ ஒன்றாக ஒரு அருவருப்புடன் தான் காண்கிறாள். அவள் சிசுபாலனைக் கருவுற்றதை அறிந்த தினம் கம்சன் இறந்த தினம். ஒரு வகையில் அவள் அந்த கம்சனை உள்ளூற வெறுத்திருக்கக் கூடும். அவனைப் பற்றிய எண்ணம் அல்லவா அவள் இளமையை துயர் உற்றதாக்கியது. பேரன்னையாகப் பரிணமித்திருக்க வேண்டியவளை ஒரு தோல்வியுற்ற அரசியாகச் சுருக்கி விட்டது. அவன் இறப்பு அவளுக்கு ஒரு மறுவாழ்வைத் தந்திருக்கக் கூடும். ஆனால் அதே தினத்தில் அவள் கருவுற்றது அவளை நிலையழியச் செய்கிறது. எந்த வெறுப்பு வெளியேற வேண்டும் என்று நினைத்தாளோ அதே வெறுப்பு அவளுள் சூல் கொண்டு விட்டது. மீண்டும் அவளை ஒரு அன்னையாக உணரச் செய்தவன் சிசுபாலன் என்னும் தெய்வமே. விருச்சிகனான மகனை மனிதனாக்கிய இளைய யாதவன் இரண்டாமவன். ஒரு வகையில் அவளின் வெறுப்பை, அவள் விரும்பிய வாழ்வின் மறுதலிப்பை அவளுக்கு உறுதிப் படுத்தியவர்கள் இவர்கள் இருவருமே. தெய்வத்திடம் கொள்ளச் சாத்தியமற்ற வெறுப்பு கண் முன் உலவும் இளைய யாதவனிடம் திரும்புகிறது. அதையே தன் மகனிடமும் ஊட்டி விடுகிறாள் அவள். அதன் வழியாக அத்தெய்வத்தையும் பழி வாங்குகிறாள்.

ஒரு வகையில் சபரியை இவளின் ஆடிச்சுயம் (alter ego) என்று கூடச் சொல்லலாம். சபரி பேரன்னை, குல மூத்தாள், பேரரசி. இவள் ஆக விரும்பிய ஒருத்தி. காலமெல்லாம் அவளாக விரும்பிய இவள் கடைசியில் அடைந்ததென்னவோ அவள் தோல் நிறத்தை மட்டும் தான். அந்நிறத்துக்குரிய தாமசக் குணத்தை மட்டும் தான். அவளில் எஞ்சிய அந்த தாய்மையும் அவள் சிசுபாலனை பலி பீடத்துக்கு அனுப்புகையில் முற்றிலுமாக மரித்துப் போவதையே சபரியின் மரணம் உணர்த்துகிறது. இனி இவள் ஆடி எதைக் காட்டும்?!!


மகாராஜன் அருணாச்சலம்

Wednesday, May 18, 2016

வெண்முரசில் காமமும் வஞ்சமும்

வெண்முரசில் காமமும் வஞ்சமும்

மகா நாராயண உபநிஷித்தில் பாகம் 61 மற்றும் 62 யில் வரும் அழகான மந்திரம் இது. உபகர்மாக்களில் ஒன்றாக வருவது. இங்கு “காமம்” ‘Lust” என்ற அர்த்தத்தில் மட்டும் வருவது இல்லை “Desire” என்ற பொருளில் வருகிறது. “மன்யு” என்றால் “கோபம்”. ““காமோ காரிஷீத்” – ‘இந்த செயல்கள் விழைவினால் /ஆசையினால் செய்யபட்டவை”. “மன்யுக காரிஷீத்” – ‘இந்த செயல்கள் கோபத்தினால் செய்யபட்டவை”. இவை “பாவ மன்னிப்பு” கோரிக்கைகள் அல்ல மாறாக “பாவம் ஏன் செய்யப்பட்டது” என்பதை தன்னளவில் ஆராய தூண்டும் வரிகள்.

ஜரா சநதனின் முடிவுஜரா சந்தன் எனும் அரக்கன்  - பாதி மானுடனாகவும் மீதி அரக்கனாகவும் வாழ்ந்தவன்  தன் வீரமரணத்தை அடைந்தான் .இது அவன் விரும்பியதே  -  நான் தேனருந்தும் யானை. பராசரரேகூட என் துதிக்கையின் ஒரு மூச்சை நிரப்பாதவர்தான். எனக்கு தென்கடல் என அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது.” -- வெண்முரசுநூல் பத்து – ‘பன்னிரு படைக்களம் – 28 இதில் தான் ஜராசந்தன் தொல் வியாசன் எழுதும் மகா காவியம் பாண்டவர்களை பற்றி எழுதப்பட்டு வருகிறது என்று சூதர் கூறும் மொழிகளை நம்பினான் . ஆகவே அதில் தன்னை பற்றியும் குறிப்புகள் இடம் பெற வேண்டும் என அவா கொண்டான் ஜரா சந்தன் . 

 வரலாற்றில் இடம் பெற விரும்பாத மானிடர் யாவரும் இல்லை. இதில் ஜரா சந்தனும் விதி விலக்கல்ல - இளைய யாதவர்  யாரென கண்டு கொண்டான். அவன் நடத்தும் நாடகம் தான் பீமனுடன் தோள் கோர்த்து சாகும் வரை யுத்தம் - இதில் அவனுக்கு முழு உவகை மற்றும் முழு சம்மதம் தான் . முதுமையால் இறந்தாலோ அல்லது வேறு அரசனுடன் பொருதி மரணித்தாலோ மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் ஜரா சந்தன் பேர் இடம் பெற்றிருக்காது.எப்படி ராமாயணத்தில் ஸ்ரீ ராமர்  கதையில் ராவணன் இடம் பெற்றானோ  அதை போல் கிருஷ்ணரின் எதிரியாய் மகா பாரதத்தில் இடம் பெற்று ,வாயுவின் மைந்தன் பீமனால் கொல்லப்பட்டு ஜரா சந்தன்  பாரத காவியத்தில்  நீங்கா இடம் பெற்றான். 

ஆயினும் பீமனால் கொல்லப்பட்டஅரக்கர்கள் -  இடும்பன் எனும் காட்டுக்கு அரசன்  ,மற்றும் பகாசூரன்  எனும் நகரத்துக்கு அரசனை விட மகதம் எனும் தொல் நாட்டின் பேரரசன் ஜரா சந்தன் வதம் மகாபாரதத்தின்  முக்கியமான நிகழ்வு . ராவணன் வீழ்ந்தது பெண்ணாசையினால் - கம்சன் வீழ்ந்தது மண்ணாசையினால் என்றால் ஜரா சந்தன் வீழ்ந்தது தொல் வேதங்களை உயிர்ப்பிக்கும் ஆசையினால். ஆகவே அவன் அழிவை இளைய யாதவர் பீமனால்  நிகழ்த்தி விட்டார் . நன்றி !

தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்


முதற்கனல் அனுபவம்

 
 
மனம் நெகிழ்வுடன் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
மகாபாரதத்தை தொட்டு மீள்வது என்பது அசாதாரண காரியம்!

பாராட்டு என்று எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு இணையாக " வெண்முரசு" பிரயத்தனம் போல் ஆகிவிடும் என்பதால் ஒவ்வொரு பாகம்
முடிந்த பிறகும் என்னுடைய அனுபவத்தை எழுதுவதே இலக்கிய உலகின் காண்டீபம் ஏந்திய உங்களுக்கு இந்த சாதாரணனின் சரியான அங்கீகாரமாக இருக்குமென நம்புகிறேன்!

என்னுடைய வாசிப்பு அனுபவங்களையே உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களாக சமர்ப்பித்துத்துக் கொள்கிறேன்

எனக்கும் என் தாயாரே மஹாபாரதத்தை என் சிந்தையில் முதன்முதலாக ஏற்றியவள். அவளே பிறகு நான் ஏழாவது படிக்கும்பொழுது சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய "வியாசர் விருந்து" புத்தகத்தை பரிசளித்து சரியாக “கீதையை விளக்கும் பகுதிகள்” இருக்கும் பக்கங்களை மட்டும் படிக்க வேண்டியதில்லை என்று சொல்லி அறிவுருத்தியிருந்தாள். பிறகு ஏராளமானவர்களின் முயற்சிகளை இந்த 35வருடங்களில் கடக்க நேர்ந்தது!

கடந்த வருடத்தின் கடைசியில் கிக்காணி பள்ளியில் நீங்கள் நிகழ்த்திய கீதை பேருரையை முழுவதுமான அந்த நான்கு நாட்கள் கேட்க முடிந்தது என் வாழ்க்கையின் "கீதா முஹூர்த்தம்" என்று தான் நினைக்கிறேன்.மஹாபரதம், கீதை ஆகியவற்றின் வித்தியாசத்தை முழுவதுமாக உணர்ந்து, கனிந்து இருந்த சமயத்தில் தான் " வெண்முரசு" என் கையில் வந்து சேர்ந்தது.

எப்போதுமே அடுத்தவர் கற்பனையில் குறுக்கிடவோ, விமரிசனம் செய்யவோ எந்த பாத்தியதையும் கிடையாது என்பதை உணர்ந்தே இருந்திருக்கிறேன்!

கடந்த 30 நாட்களாக உங்கள் " வெண்முரசு" என்னும் மாயக் கம்பளத்தில் ஏறி உங்கள் வழிகாட்டுதலுடன் வேசரதேசத்தில் இறங்கி, இப்போது மழைப்பாடலில் பாண்டு தன் துணைவியருடன் வனத்திற்கு நீங்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்!

" வெண்முரசு"

சூரிய , சந்திர தோற்றமும்,ராஜஸ, சத்வ குணங்களின் அர்த்தமும் இப்போதுதான் புரியலாயிற்று! தட்சகனின் கதை தெரியாமலேயே இவ்வளவு நாள் எதற்கு தட்சகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?என்று எனக்குள்ளேயே எழுப்பிய கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

திருவிளையாடல் திரைப்படம் பார்க்கும்போது சிவபெருமானின் கோபமும்,தாட்சாயணியின் வாக்குவாதமும் "அவிஸ்"என்று ஒரு சொல்லை வைத்து கொண்டு போடும் சண்டைகளும், எங்கு வந்தாய்? எதற்கு வந்தாய்?என்று ஆக்ரோஷமாய் தாட்சாயணியை திருப்ப, தாட்சாயணி தன் தந்தை நடத்திக்கொண்டிருக்கும் வேள்வியின் குண்டத்திலேயே விழுந்து சாம்பலாகும் நிகழ்வுகளும், ஸதி என்ற பதத்தின் பொருண்மையும் அர்த்தமாயிற்று!தாட்சாயணியின் அவதாரத்தையும், அம்பையின் வீழ்ச்சியிலும் உள்ள பொருள் புரிந்தது!

சாதரணமாக நான் இதுவரை படித்த மஹாபாரத உரைகள் பாராசர முனிவர் செம்படவப் பெண் ஒருத்தியுடன் "ஒரு உன்னதமானவர் தோன்றுவதற்கான" வேளையை உணர்ந்து, கூடியதும், பிறகு அவள் கன்னித்தன்மையை அடைந்தாள் எனவோ, அல்லது சந்தனு மகாராஜா கங்கையின் மேல் மையல் கொண்டு, பீஷ்மர் அவதரிக்கும் இடங்களிலிருந்தே ஆரம்பித்து இருந்திருக்கின்றன.

சித்திராங்கதன் அந்த குளத்தில் பார்க்கும் கந்தர்வனின் ஆடிப் பாவையுடன் மறைந்து போவதை நான் மறுபடியும் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.எனக்கு சில குழப்பங்கள் உள்ளன.

சாதரணமாக பீஷ்மர் உணர்ச்சியை காட்டதவர் என்ற பிம்பமே என்னுள் எழுப்பப் பட்டிருந்தது. ஆனால் பீஷ்மர் தன் சகோதரர் வியாஸர்,தாயார் சத்யவதி ஆகியோருடன் நிகழ்த்தும் உணர்ச்சிமிகு உரையாடல்கள்,அம்பை தன்னை எற்றுக் கொள்ள பீஷ்மரை வேண்டிக் கொள்ளும் இடங்களும். பீஷ்மர் ஒரு சிறு துளி காதலுடன் அம்பையை நிராகரிக்கும் இடங்களும் என்னை மிக உணர்ச்சிவசப்பட செய்தன.கற்பனை உரையாடல்கள் எவ்வளவு தூரம் எடுத்துச் செல்லும் என்று உணர்ந்திருந்தாலும், என்னை பீஷ்மராகவும்,சத்யவதியாகவும், அம்பையாகவும் நான் உணர்ந்த தருணங்கள் அது என்றால் மிகையாகாது!உங்களுடைய மனமும், அந்த அந்த கதாபாத்திரங்கள், வரையறைக்குட்பட்டு என்ன உரையாடல்கள் அவர்கள் நிகழ்த்தியிருக்க முடியுமென முடிவு செய்ய எவ்வளவு போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது!

விசித்திரவீர்யனின் நோயும், அதற்கான சிகிச்சைக்கு ஆதுரசலையில் வைத்தியர்கள் காட்டும் முனைப்பு, பீதர்களின் மருத்துவமுறை……(மழைப்பாடலில்---பாண்டுவிற்கு-அக்குபக்ஞ்சர்)விசித்திரவீர்யனின் ஆழ் மனம், தன்னுடைய நிலையை பற்றிய தீர்க்கம், அம்பிகையுடன் நடத்தும் காதல் உரையாடல்கள், அம்பிகையின் புரிந்துணரல் ஆகியவை மிக விஸ்தாரமாக புரிந்து கொள்ள முடிந்தது.

அம்பையின் சோக முடிவின் போது அவள் முருகன் சிலையை கண்டறிவது, “மழைப் பாடல்”-லில் குந்தி, பாண்டுவுடன் உரையாடும்போது ஆறுமுகனைக் குறிப்பிடுவதும், என்னுடைய "திருச்செந்தூர் வள்ளிகுகை"நம்பிக்கைகளை உருவேற்றுகிறது!

சரியான போர்பயிற்சி இல்லாத விசித்திரவீர்யன் பீஷ்மருடன் கொலை வாளை ஏந்தி பொருதுவது, சால்வன் பீஷ்மரிடம் இருந்து காசி இளவரசிகளை வெல்வதற்காக, அவருடன் நடத்தும் விற் போர், அம்பை வெறிகொண்டு ஹஸ்தினாபுரம் நீங்கும் பகுதிகள் திரைப் படங்களின் வேகத்தையும், ஆகர்ஷனத்தையும் தோற்கடிக்கும்.... எழுத்தின் வன்மை இப்போதுதான் புலனாகிறது!

பால்ஹிகன் , வேதாபி கூட உங்கள் "காடு"புதினத்தில் வரும் ராபி, ஆபேல் பாத்திரப் படைப்புகளை நினைவுபடுத்தியது.

தன் மகள்களுக்காக துயருறும் காசி அரசி புராவதி, கார்த்தியாயினி அவதார நிகழ்வு, உடை வாளை சிம்மாசனத்தில் வைத்து காசி இளவரசிகள் இருவரும் மணம் புரிவது,ஸ்தானகர்,விசித்திரவீர்யன் மற்றும் அகஸ்தியர் ஆகியோரின் உரையாடல்கள் நம் தொன்மத்தை உரைத்தன!

அரிஷ்டம், அஹிபினம் ஆகியவற்றின் உபயோகங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின!

பார்கவர்&சிகண்டி, சிகண்டி&அக்னிவேசர் ஆகியோரின் நடவடிக்கைகள் அந்த புராதன தனுர் வித்தையின் அடிநாதத்தை உணர்த்தின!

சூதர்களின் பாடல்களை கொண்டு நீங்கள் மூலக் கருவினை இடையிடயே கொணருவது அருமையான யுக்தி.தொய்வடையாமல் ஒரு காட்சி மாறுதலையோ அல்லது கதாபாத்திரங்கள் மாறாமல் கதையின் போக்கை மாற்றும் கலை மிக அருமை!

நான் அடுத்து "மழைப்பாடல்"பற்றி எழுதுவதற்கு முன்--முதற்கனல்- -லில் வரும் பாத்திரங்களின் உளவியலை பற்றி உங்களோடு உரையாட ஆசை!

எனக்கு முதற்கனல் ஒரு முதற்கனவு போல உள்ளது!
 
சுந்தர் கார்த்திகேயன்

Saturday, May 14, 2016

இருள் அன்னையின் பிள்ளைகள்


ஒவ்வொரு  வீட்டிலும்  ஆண் மகன்கள் தந்தையின் சொல் மீறும் காலம், எந்த காலத்திலும்  நடப்பது தான். முன்பு ஒரு முறை ,சேதி நாட்டு இளவரசிகள் விசயத்தில் பாண்டவர்களுடன் துரியோதனன் பகை கொண்டமையின் போது துரியோதனன் ,துச்சாதனன்  மற்றும் அவர்களை காக்க இடையில் நுழைந்த கர்ணரும், மத வேழம் திருதராஷ்டிரால் தாக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்து, பின்பு பல காலங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு உடல் தேறினர். அப்போது கூட -- துரியோதனன் -- "திரும்பி உடைந்த குரலில் யுதிஷ்டிரனிடம்இது தண்டனை மூத்தவரே. தண்டனையைத் தரவேண்டியவர் தந்துவிட்டார்என்றான். “நீங்களும் உங்கள் இளையவர்களும் எங்களை தண்டிக்க வேண்டும் மூத்தவரே. எந்தத் தண்டனைக்கும் நாங்கள் சித்தமாக இருக்கிறோம். உயிர்கொடுப்பதென்றால் கூட "-‘வெண்முகில் நகரம் – 87 -  

  அன்று திருதராஷ்டிரர் தன் தந்தை தண்டித்ததை அரக்கு மாளிகை நிகழ்வுக்கு கிடைத்ததாய் துரியோதனன் கருதினான். தந்தைக்கு அடங்கி நின்றான்.ஆனால் இன்று தன் தோள் தோழன் ஜரா சந்தனின் மரணம் துரியோதனை  மிகவும் துயர் கொள்ள செய்து விட்டது .அவனின் நிகர் நிலைமை நிலைகுலைய தொடக்கி விட்டது.ஆனாலும் தந்தையுடன் மல்லுக்கு நின்றவன் தன் தாயின் சொல் கேட்டு தன் முடிவை மாற்ற நுட்பமான காரணங்கள் இரண்டு உள்ளன 

‘.1."படைகொண்டு செல்வதும் மண் வென்று முடிசூடுவதும் ஆண்களின் உலகம். ஆனால் ஒரு தருணத்திலும் பெண்டிரின் நிறைமதிப்பு அழியும் செயல்களை ஆண்மகன் செய்யலாகாது.நாமனைவரும் அன்னையின் கருவறையில் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் தெய்வங்கள் வாழும் கருவறை. அங்கரே, நாங்கள் ஜரர்கள் ஒருபோதும் பெண்விலங்கை வேட்டையாடுவதில்லை.என் குருதியில் ஓடுவது ஜரா குலத்தின் முலைப்பால். அங்கு எங்கள் காடுகளில் பதினெட்டு அன்னையர் நிரைவகுத்திருக்கிறார்கள். பதினெட்டு கருவறைகள். பதினெட்டு முலைச்சுனைகள். பெண்டிரை சிறுமை செய்யும் எச்செயலையும் ஜரை மைந்தன் ஏற்கமுடியாது" - ஜரா சந்தன் துரியோதனனிடம் சொன்னது -வெய்யோன் – 54 - 

 ஜரா சந்தன் தான் அரக்கன் என்று சத்திரிய அரசர் நினைக்கும் அளவுக்கு கொடுமைகள் செய்தாலும் தாயின் மதிப்பு மற்றும் அருமை தெரிந்தவன் - ஆதலால் துரியோதனன் ஜரா சந்தன் அறநெறியில் தாயின் சொல்லை தட்ட முடியாமையில் நிற்கிறான்.தாயின் சொல்லை மீறினால் காந்தாரியின் நிறை மதிப்பு அழியும் என உணர்ந்து பணிந்து விட்டான் துரியோதனன்.2. பேரரசர் ஜரா சந்தனின் வளர்ப்பு தாய் ஜரை வாழுமிடம் இருண்ட குகை தான்.தன் மகன் பேரரசன் என ஆடம்பரமான வாழ்வை விளையாதவள் - இருட்டு குகையில் முதாதையரின் துணையுடன் வாழும் வாழ்க்கை தான் அது .துரியோதனனின்  தாய் வாழ்வும் அதற்க்கு நிகர் தான் - ஹஸ்தியின் அரண்மனையில் கண்களை கட்டிக்கொண்டு இருளில் தான்  வாழ்கிறாள் - இருளில் வாழும் தாயின்  பிள்ளைகள் அது ஜரா சந்தனாகட்டும் அல்லது துரியோதனனாகட்டும்  - ஒரே சிந்தனை நேர்க்கோட்டில் நிற்கிறார்கள் - தாய் சொல்லே வேதம் . நன்றி ஜெயமோகன் அவர்களே !

தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)
ஜராசந்தனின் கதை ஒருவர் சிறுவர் கதை, சாகசக் கதை என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். அதில் தத்துவங்கள், உளவியல் நுட்பங்கள், மனித கும்பல் மனோபாவத்தைப்பற்றிய அலசல்கள், தந்தைமை, தாய்மை, போன்றவற்றின் உச்சங்கள், மனித இனக்குழுக்களுக்கிடையேயான அரசியல் உருவாகி வளரும் விதம் , இந்திய சமூக  வரலாறின் ஒரு பகுதி,  மனிதர்களுக்கிடையேயான  வஞ்சங்கள், குரோதங்கள், மனிதமனம் கொள்ளும் சிறுமைகள், மனிதர் அடையும் உயர்வு வீழ்ச்சி என இவ்வளவு க்கதையில் பொருத்தப்பட்டிருப்பது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.  உண்மையில் ஜராசந்தனின் ஆதி கதை என்ற எலும்புக்கூட்டின் மேல் தசைகளை உள்ளுறுப்புகளை, தோலை பொருத்தி, மேலும் ஐம்புலன்களை உருவாக்கி செயல்படவைத்து, வண்ணமும், வடிவமும் கொடுத்து ஒர் வலிமையான  உடலை உருவாக்கி உயிர்கொடுத்து உலவவிடுகிறார் ஜெயமோகன்.  இந்தக் கதையே ஒரு சிறு நாவலென விரிகிறது.
  

இறுதியிலான கிருஷ்ணன், ஜராசந்தனுக்கிடையிலான உரையாடல், ஒரு கீதை என ஆகிறது.  இவ்வுரையாடலின் முடிவிலேயே ஜராசந்தன் வீழ்ந்துவிடுகிறான். அங்கேயே சம்ஹாரம் முடிந்துவிடுகிறது. ஜராசந்தன் இதுவரை அவனுக்கு பேராற்றலையும் உறுதியையும் அளித்துவந்த கொள்கையை, தத்துவத்தை தகர்த்து எறிகிறான் கண்ணன். உள்ளம் உறுதியை இழந்த பின்னர், மறுநாள் வெறும் உடலை வீழ்த்துகிறான் பீமன்.
   இந்த உரையாடல் தொல்வேதத்தை திரும்பகொணர்வது ஏன் தவறாகிறது என விளக்குகிறது. ஒரு மனிதன் வளர வளர அதன் ஆடைகளின் வகை வடிவம் மாறுகிறது. குழந்தையாக இருக்கும்போது மிகப்பொருத்தமாக, வசதியாக, அழகாக இருந்த ஆடை வயது ஏற ஏற பொருத்தமற்று, வசதிக்குறைவாக, மாறிவிடுகிறது. ஒருகாலத்தில் பிடித்திருந்த ஆடை, அதை அணிந்திருப்பதில் பெருமை அளித்த ஆடை  இப்போது பிடிக்காது போகிறது. எல்லா வயதுக்கும் பொருத்தமான ஆடையை எவராலும் அடைய முடியாது.
  

அதைப்போல்தான் மனிதகுலம், தன்னை பாதுகாத்துக்கொள்ள, தன்னை மேம்படுத்திக்கொள்ள, தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள, பண்பாடுகள், சடங்குகள், மரபு,  போன்றவற்றினால் ஆன ஆடையை அணிந்துகொள்கிறது. மனித குலம் வளர வளர, அந்த ஆடைகள் மாற்றப்பட்டுக்கொண்டு வருவது இயல்பு.  இப்படி  தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவை மாற வேண்டியதன் அவசியத்தை கிருஷ்ணன் உணர்த்துகிறான். எப்படியாவது உயிர் வாழவேண்டும் என்பதே முதன்மையானது என்ற காலத்திய வேதம்,  பல்கிப் பெருக வேண்டுவது ஒன்றே நோக்கம் என்ற காலத்திய நோக்கத்திற்கு போதாததாகிறதுய். பின்னர் அதற்கென ஒரு வேதம் திரண்டு வருகிறது.  ஆனால் அந்த வேதம் பின்னர் மனிதர்கள் சமூகங்களாக உருவான பின்னர் தம் தம் குழவினரின் பாதுகாப்புக்கென  தன் விழைவுகளை கட்டுப்படுத்திக்கொண்டு சுயநலத்தை தாண்டி சிந்திப்பதற்கு தடையாக அமைகிறது. அந்தக் காலத்திற்கேற்ப மற்றொரு வேதம் கண்டெடுக்கப்படுகிறது.  மனிதர்கள் ஒன்றிணைந்து தம் வேறுபாடுகளை  களைந்து ஒன்றினையும் காலத்தில் அந்த வேதமும் சரிவராமல் போய் அனைவரையும் ஒன்றிணைக்கும் புது வேதம் உருவாகிறது.  அதற்கப்புறம் அதைவிட தனிமனித சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தும்  ஒரு வேதம் உருவாகி வரலாம்.
   

ஆனால் வேதங்கள் சமூக நலனுக்காக  அவை மேலான கொள்கைகளாக, தத்துவங்களாக கூறப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அதை பாதுகாப்பதே நோக்கமாக தம் வாழ்க்கையைய அர்ப்பணிக்கும் உயர் நெறியினர்  சிலர் இருக்கின்றனர். ஆனால் அவ்வேதம்  கால ஓட்டத்தில் பொருளற்று மனித முன்னேற்றத்திற்கு தடையென ஆகும்போது ஒரு புது வேதம் மனித சமூகத்தை முன்னின்று வழி நடத்துபவர்களின் மூலம் உருவாகிறது. அப்போது ஒரு கூரிய விவாதம் அவர்களுக்கும் பழைய வேதத்தை காத்துவருபவருக்கும் இடையில் நடைபெற்று அந்த காப்பாளர்கள்   விவாதத்தில் வெல்லப்பட்டு  புதிய வேதம் நிறுவப்படுகிறது.
 

  இங்கு வேதம் என்பது மதக்கோட்பாட்டை மட்டும் குறிக்காமல், பண்பாட்டு நிலைகள், சமூக நெறிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆண் பெண் இடையேயான உறவைப்பற்றிய சமூக நெறி எப்படி காலத்திற்கேற்ப மாறிவருகிறதுஎன்பதைக் காண்கிறோம். காலத்திற்கேற்ப இனக்குழுக்களுக்கிடையேயான அதிகாரப் பரவல்கள் மாறி அமைகின்றன.  மனிதகளுக்கிடையேயான உயர்வு தாழ்வுகளை உருவாக்கும் காரணிகள் மாற்றமடைகின்றன. 


   அப்படி புதிய வேதம் நிறுவப்பட்டபின்னும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பழைய வேதத்தை நிலை நிறுத்த சிலர் விடாப்பிடியாக முயன்றுவருகிறார்கள். அவர்களின் ஒரே வாதம், சென்ற காலத்தில் சரியாக இருந்தது , இந்தக் காலத்தில் ஏன் சரியாக வராது என்பதுதான்.  மனித நாகரீகத்தின் வளர்ச்சியை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.  அதற்காக சில அமயம் அவர்கள் தீவிர நிலையை எடுக்கும்போது மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளாக அமைகிறார்கள். அவர்களை நாம் அடிப்படைவாதிகள் என்று தற்போது கூறுகிறோம். அதில் மிகத்தீவிர நிலை எடுப்பவர்கள் அனைவருக்கும் தீங்கானவர்களாக மாறிப்போவதை அவர்கள் உணர்வதில்லை.  இந்த  அடிப்படை வாதத்தால் அது சரியென நினைக்கும் சிலர்களால் உலகில் தீங்குகள் நிகழ்கின்றன. அப்படி நிகழ்த்துபவர்கள் சுயநலம் கொண்டவர்களோ கெட்டவர்க்ளோ இல்லை. அவர்கள் தாம் மிகப்பெரிய நன்மை செய்வதாக நினைத்துகொண்டுதான அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
 

  ஜராசந்தன் ஆதி மக்களின்,  விழைவை நிறைவேற்றிக்கொள்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்ட தொல்வேதத்தை மீட்டுக் கொணர முற்படுகிறான்.ஒரு காலத்தில் மக்கள் பெருக்கம் நிகழவும், ஊக்கம் பெற்று சமூகத்தை கட்டி எழுப்பவும் தேவைப்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால் இது இப்போது மனிதர்களுக்கிடயே கடும் போட்டிகளை உருவாக்கி சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் வலியவர்கள் மெலியவர்களை அடிமைப்படுத்துவதில், கொன்றொழிப்பதில்  முடிவதாக ஆகிவிடுகிறது. ஜராசந்தனே அதற்கு ஒரு உதாரணம் என ஆகிறான்.   இது மனித குலத்தை மீண்டும் பின்னோக்கி செலுத்துவதாக அமையும். ஜராசந்தன் என்றவரின் கொடுஞ்செயல்கள் அவன் ஆயுட்காலத்தோடு முடிந்துவிடும். ஆனால் மீண்டெழுப்பப்படும் தொல்வேதக் கருத்துக்களை அழிப்பது மிகச் சிரமமான செயலென ஆகி  உலகத்தில் தீங்கான விளைவுகளை நெடுங்காலத்திற்கு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். ஆகவே தொல்வேதத்தை மீண்டும் கொணர்வதை தடுப்பது மிக முக்கியமான தேவையாக கிருஷ்ணன் கருதுகிறான். அதற்காகவே ஜராசந்தனின் வதம் நிகழ்த்தப்படுகிறது. 

தண்டபாணி துரைவேல்

விளையாட்டு

 
 
எப்போதெல்லாம் கையறு நிலையில், தன் அனைத்து அரசு சூழ்தல் அறிவும் திகைத்து நின்று விதுரர் தவிக்கும் போதெல்லாம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல மிக எளிமையான தீர்வுகளை எடுத்தளிக்கும் சுருதையை மீண்டும் சந்தித்தது இரு நாட்களாக இருந்து வந்த ஒரு உளச் சோர்வில் இருந்து அபாரமாக என்னை மீட்டது. ஒரு வகை ஆசுவாசம். எனக்கே இப்படி என்றால், விதுரருக்கு!!! மிகச் சரியாகத் தான் விதுரர் சொல்கிறார் - "முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய்."

"காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது..........." எனத் துவங்கும் ஒரு பாராவில் ஒரு முழு வாழ்வையுமே சொல்லத் தனி அருள் வேண்டும். இறுதியாக சுருதையின் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவர் நெகிழும் அந்த காட்சி தந்த பரவசம், ஆஹா!! என்ன இருந்தாலும் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம்!! என்ன ஒரு எழுத்து வன்மை!! அபாரம் ஜெ. 

வயதானாலும் அவர்களுக்குள் எந்நாளும் இருந்துவரும் அந்த ஒளித்து விளையாடும் விளையாட்டு மட்டும் போகவே இல்லை. எது முதலில் இருந்ததோ அதுவே கடைசி வரை எஞ்சும் போலும்!! 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

சிக்கல்களின் விரிவுகசங்கிய பட்டுச் சேலையை நீவி நீவி விரித்தெடுப்பது போல ஜெ மகாபாரதத்தின் விளங்க முடியா சிக்கல்களை நீவி நீவி சிக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். சூதாட்டத்திற்கு திருதாவிடம் அனுமதி வாங்க விதுரரே செல்கிறார். ஏன் விதுரர், பீஷ்மர் உட்பட ஒவ்வொருவரும் அதற்கு அனுமதியளித்தனர் என்பதற்கு விடை பன்னிருபடைக்களத்தின் விருச்சிக மாத அத்தியாயங்கள். ஜராசந்தனின் வருகையையும், அவன் கொண்ட பேருருவையும் அதற்கான முழு நியாயத்தையும் வெண்முரசு செய்து விட்டது. இதோ குருஷேத்ரம் ஒருங்கி விட்டது. அது தவிர்க்கப்படவே ஒவ்வொருவருமே முயன்று கொண்டிருக்கப் போகிறார்கள். எண்ணற்றோர் குருதி வீழ்வதைத் தடுக்கவே ஒவ்வொரு சிறு சிறு அறப் பிழைகளையும் அனுமதிக்கப்போகிறார்கள். ஆம், மிகப்பெரிய அறத்தில் இருந்தே மாபெரும் தீமை கிளைத்தெழ இயலும் இல்லையா!!!

அருணாச்சலம் மகராஜன்

Saturday, May 7, 2016

அசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:பீமன் தொடுகையில் சலனமற்றிருக்கும் யானத்து நீர், ஜராசந்தன் தொடுகையில் ஒளி கொள்கிறது. அவன் அதை வலக்கையால் தொடவில்லை, இடக்கையால் தொடுகிறான். அவன் கனிந்த பாகம். தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகம். அதை அளிக்கப்போகும் ஒருவன் மீது பெருங்காதலோடு இருப்பதில் என்ன சந்தேகம்!! மிக இயல்பாக அவனை மீறிய உளவிரைவோடு அவன் கூறுகிறான் – ‘வெற்றி கொள்க’. மிக உணர்ச்சிகரமான பகுதி இது.

ஏன் ஜராசந்தன் தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும்? இருமைகளின் எண்ணச் சுழல்களில் சிக்கியவர்களுக்குத் தெரியும் அது தரும் வாதை என்ன என்பது. விடுபடவே இயலாத ஒன்று அது. ஜராசந்தனின் ஒரு பக்கம் நுண்மையானது, அற உணர்வு கொண்டது, நால்வேதம் அறிந்தது, நெறி நிற்க விழைவது. மறுபக்கம் காட்டின் நியதி கொண்டது, தொல் மரபிற்கு மாண்பு சேர்க்க விழைவது, அது பின்பற்றுவது தொல் நெறிகளையே, அது விரும்புவதும் தொல்வேதங்களையே. அந்நெறிகள் மரபின் நெறிகளுக்கு கொடூரம் எனத் தெரிகிறது. ஆற்றுபனுக்கும் அது தெரியும் என்றால் அவன் கொள்ளும் வாதை எப்பேற்பட்டதாய் இருக்கும்? அந்த வாதையைக் கடக்கவே கழுவேற்றும் இடத்திலேயே அதை ரசிக்கிறான் ஜராசந்தன். ஆயினும் அச்செயல்கள் அவனுள் ஒரு வெறுமையை விட்டுச் செல்கின்றன. உள்ளூர அவன் கொடூரமானவன் என எண்ணத் தலைப்படுகிறான். அவ்வெண்ணத்தை காட்டில் இருக்கும் சிங்கம் செய்யும் கொடுமைகளை விட தான் ஒன்றும் செய்யவில்லை என்று கடக்க முயல்கிறான். அத்தனை கொடுமைகளுக்கும் ஈடு செய்யும் வகையில் அவன் தன் மைந்தனிடம் கனிவோடு இருக்கிறான். உண்மையில் ஒரு அரசன் எரிச்சல் அடைந்து கோபப்பட வேண்டிய இடங்களில் கூட (சகதேவனின் சிறுபிள்ளைத் தனமான பேச்சுகள் மற்றும் தந்தையை குற்றம் சாட்டும் கூற்றுகள்) அவ்வெரிச்சலை எளிதாகக் கடந்து வருகிறான். மற்றொரு வகையிலும் அவன் தன் கொடூரங்களை ஈடு செய்கிறான். அது, பெண்கள் பால் அவன் காட்டும் பரிவு. இத்தனை அரசுகளை, ஷத்ரியர்களைக் கொல்லும் அவன் அவர்கள் பெண்டிரை ஒன்றுமே செய்வதில்லை. மிக மிக மரியாதையாகவே நடத்துகிறான்.

உண்மையில் அவனுக்கு யாதவர்களோடு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. மருமகனான கம்சன் இறந்த போது கூட அவன் கோபம் கொண்டு படையெடுக்கவில்லை. ஆனால் தன் மகள்கள், இத்தனைக்கும் அவர்களை அவன் பெற்றவர்கள் அல்ல, அவனுக்கு மகள் முறை வருபவர்கள் மட்டுமே, அவமானப்படுத்தப் பட்ட போது படையெடுக்கச் சொல்கிறான். அதிலும் அவன் நேரடியாக மகதப் படைகளை அனுப்பவில்லை. அவன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் அசுரப் படைகளையே அனுப்புகிறான். ஏனென்றால் அவனுக்கு உண்மையிலேயே யாதவர்கள் பால் வெறுப்பு இல்லை. ஒரு வகையில் மகதத்தின் தொல் பன்னிரு குடிகளும் ஆபுரந்தவர்கள் தானே. அவர்களை ஷத்ரியர் பாடாய்ப்படுத்தியதால் தான் அவன் ஷத்ரியர்களை எந்த தயக்கமும் இன்றி கொல்கிறான். தன் வேர் மறந்து ஷத்ரியர்களாக நடந்து கொண்டதால் தான் அவன் உடன்பிறந்தவர்களையும் கொல்கிறான். அவன் தங்கள் தொல்குடியை நினைவூட்டியதாலும், அவனே ஒரு தொல்குடியினனாக இருப்பதாலுமே மகத மக்கள் அவனுடன் நிற்கின்றனர். ஆம், தட்சிணனுக்கும்(அவன் வலப்பக்கம்) ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

ஆனால் வாமனன்(அவன் இடப்பக்கம்) மனது தற்கால நெறிகளில் உள்ளது. காட்டின் நெறிகள் நாட்டில் செல்லாது என்பதை உணர்கிறது. எப்படியாவது அவன் காட்டு நெறிகளுக்கு ஈடு செய்ய விழைகிறான். தன்னை எதிர்த்த ஷத்ரியர்களுக்கு இரவில் உண்டாட்டு நடத்தி, அபிமன்யூவை மகன் என ஏற்றுக் கொண்டு, சூரசேனர் காலில் விழுவது வரை அனைத்தையும் அவன் மறுநாள் நடக்கப்போகும் நிகழ்வுக்கு ஈடு செய்யவே நிகழ்த்துகிறான். நன்றாகப் பார்த்தால் அந்த உண்டாட்டில் அவன் நெகிழ்ந்து கண்ணீர் விடுகையில் அவன் இடக்கண் மட்டுமே நீர் வடித்துக் கொண்டிருக்கும். வலப்பக்கம் ஒருவித இளக்காரமாகவே நின்றிருக்கும்.

ஷத்ரியர்களைத் தலைக் கொய்து கோட்டை முகப்பில் வைக்கச் சொல்லும் அவன் உடல்மொழி சற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. அவன் மனம் சினத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அவனில் உள்ள காட்டாளன் சினத்தில் இருக்கிறான். அதை அவன் உணரவும் செய்கிறான். அவன் இடப்பாகம் அதை ஏற்கவில்லை. அபிமன்யூவைக் கொல்ல இறுக்கி அணைக்கும் போது கூட அவனது இடக்கால் தடுமாறத் தான் செய்கிறது. மேலும் வெண்முரசு அவன் கண்கள் வாயிலாக, “கடும் வலி கொண்டவனின் கண்கள் போல” என்று அவன் தடுமாறலைக் குறிப்பிடுகிறது.

பாவம் தான் இல்லையா, இரு நெறிகளுக்கு இடையே அல்லாடுகிறான். ஒவ்வொரு புறமும் எடை ஏறிக் கொண்டே இருக்கும் துலாத் தட்டுகள் போல அவன் இருமைகளுக்கிடையே அல்லாடுகிறான். அவன் சித்தமெனும் துலா முள் அசைவின்மைக்கு ஏங்குகிறது. இருபுறமும் நிலைநிற்க வேண்டும் என விரும்புகிறது. மரணம் தவிர வேறு எது இந்த துலாவை சமன் செய்ய இயலும்!! அதை அவன் இடப்புறம் நன்றாக உணர்ந்து கொள்கிறது. எனவே மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறது. அதை வழங்க வந்திருக்கும் தேவனை பெருங்காதலோடு அணைக்கத் துடிக்கிறது.
அவன் ஏன் அத்தனை மகிழ்வோடு மரணத்தை ஏற்கிறான்? ஏனென்றால் அவன் மரணம் எதன் பொருட்டும், அவன் எச்செயல்களின் பொருட்டும் நிகழப் போவதில்லை. அவன் மரணம் அவனுக்காகவே, அவன் பொருட்டே, அவன் நிறைவுக்காகவே, அவன் இருக்கிறான் என்பதற்காகவே நிகழப்போகிறது. அவனில் இருக்கும் துலாமுள் நிலைக்கவே நிகழப்போகிறது. அவன் கிருஷ்ணனிடம் சகதேவனை அடைக்கலப்படுத்துவது எல்லா விதங்களிலும் வாலி அங்கதனை ராமன் கையில் ஒப்படைப்பதற்குச் சமமானதே. அபாரமான காவியத் தருணங்கள் இவை.

பீமன் அந்த தொல்முரசுகளை கிழிப்பது ஒரு முக்கியமான அறைகூவல். ஜராசந்தன் மகதத்தின் அரியணைக்கு அதன் தொல்பண்பாட்டைக் கொணர்ந்து வந்திருக்கிறான். அதை அழிக்கிறேன் என்றே பீமன் அறைகூவுகிறான். அதாவது ஜராசந்தனில் இருக்கும் காட்டாளனுக்கே அவன் அறைகூவல் விடுக்கிறான். மிக நுட்பமான இடம் இது. ஏனென்றால் நேர்போரில் ஜராசந்தன் வெல்ல இயலாதவன். மற்போர் நெறிகள் செல்லுபடியாகாது. காட்டின் நெறியற்ற இறப்பு ஒன்றே இறுதி என்றாகும் போரே ஜராசந்தனை வெல்லச் சாத்தியமான ஒரே வழி. அவனில் இருக்கும் காட்டாளனையும் நிறைவு செய்யவும் அவ்வகைப் போர் ஒன்றே வழி.

ஜராசந்தனின் இந்த தடுமாற்றங்களை வாசகரிடம் கடத்த நாவலின் வடிவத்தை பயன்படுத்தியிருக்கிறார் ஜெ. இந்த ஐப்பசி அத்தியாயத்தின் அமைப்பே துலாத் தட்டுகள் போல ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. பல வகைகளிலும் ஜராசந்தனை மாற்றுப் பார்வையில் பார்க்கச் செய்து விட்டார் 


அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

வேதங்கள்ஜெ

ஒரு புனைவாக வெண்முரசில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அனைத்து உயிர்களுக்கும் அனைத்துச் சமூகங்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டுள்ளன என்பதும் அவற்றிலிருந்து முறைப்படுத்தித் தொகுப்பட்டவையே வேதங்கள் என்றும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வேதங்களே அழிவுகளை உருவாக்கின என்றும் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். குர் ஆன் அவ்வாறு பிழையாக புரிந்துகொள்ளப்பட்டவேதம் என்றும் அதனால் உலகில் ஆயிரமாண்டுக்காலம் ரத்தம் பெருக்கெடுக்கநேர்ந்தது என்றும் சுவாமி சொல்கிறார்

ஜே .எஸ். கிருஷ்ணன்

நாக உலகம்வெண்முரசின் சமீபத்தைய அத்தியாயங்கள் மெல்ல அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கின்றன. படிப்படியாக உருவாகிவரும் ஒரு மிகப்பெரிய சித்திரத்தைக் காணமுடிகிறது. ஆரம்பத்திலேயே மானசாதேவி வழியாக ஒரு நாகர்பண்பாட்டின் அடித்தளம் மீது மகாபாரதம் நிகழ்வது சொல்லப்பட்டுவிட்டது. அதன்மேல் தான் மகாபாரதமே வளர்கிறது. அனைத்து திருப்புமுனைகளிலும் நாகர்கள் இருக்கிறார்கள்

வெய்யோனில் நாகங்களின் வரலாற்றுச்சித்திரம் ஒன்று விரிவாக உருவாக்கப்பட்டுவிட்டது. இப்போது அது வரலாற்றுமோதல் என்பதற்கு அப்பால் சென்று ஒரு தத்துவமோதலாக உருவம் கொள்கிறது. இத்தனை ஆயிரம் பக்கங்களில் மிகமெதுவாக ஆனால் ஒத்திசைவாக விரியும் இந்த அடித்தளம்தான் வெண்முரசின் மிகப்பெரிய கொடை

சாமிநாதன்

வேதமுடிவுஇன்றைய வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42 ஜராசந்தன் ,இளைய யாதவர் உரையாடல் மிக  அருமை .இன்னும் மகாபாரத போருக்கு நீண்ட தொலைவுகள் உள்ளன.ஆனால் இளைய யாதவர் -" முறைகொண்ட நால்வேதம். அதுவே முழுதும் மானுடர்க்குரியதல்ல. அதுவும் மீண்டும் செதுக்கி கூராக்கப்படவேண்டும். அதிலிருந்து அதன் இறுதி பிரித்தெடுக்கப்படவேண்டும்.”-என உரைக்கிறார்  ஆம் அந்த இறுதி தான் பகவத் கீதையாய் கண்ணனிடம் இருந்து  நான்கு வேதங்களின் சாரமாய் உலகுக்கு அறங்கள் காக்க வரப்போகிறது..உண்மையிலே கீதையின் தோற்றதிருக்கும் அரக்கன் ஜரா சந்தன் ஒரு வகையில் காரணமாகி விட்டான். நன்றி ஜெய மோகன் அவர்களே !

தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

பசுவும் நாகமும்


ஜெ அவர்களுக்கு

சத்குரு ஜக்கி அவர்கள் எழுதியுள்ளார் நாகமும் , பசுவும் பரிணாமத்தில் முக்கியமானவை என்று.

நாகம்                            - பசு 
கர்ணன்,ஜராசந்தன் - பாண்டவர்கள்,இளைய யாதவன் 

இப்போது வெண்முரசு இந்த கோணத்தில் விரிவடைகிறது. உங்களின் ஹிமாவானை நோக்கிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா

Friday, May 6, 2016

ஜராசந்த வதம்

 
 
மிக சரியாக ஏப்ரல் முதல் தேதியில் இங்கு மழை ஆரம்பித்தது. அதற்கு முன் மழை பற்றிய பேச்சுகள் தான். அலுங்காத வாழ்வு என்பதால் அதிகம் வியர்க்கவில்லை எனினும் மரங்கள் எல்லாம் தூசு மூடி கிடந்தன. வெயிலின் மறப்பு அதிகாலை மட்டுமே இருந்தன. எதிர்பாரா காதல் என பின் பெய்ய தொடங்கியது. சூரியனை மறைத்து வைத்து கொண்டு கொட்டல்... மேலிருந்து தொடர் ஒளியாக, சீரான மூச்சு போல ... வானம் நிறைந்து வழிந்து கொட்டுவது போல ...ஸல் என இரைச்சல். திடுக்கென்று விழித்து அழும் குழந்தை போல சில சமயம் சப்தமுடன் ஒரு அரை மணி நேரம் ஓடைகளை நகரங்களின் எல்லா தெருக்களிலும் காட்டிவிட்டு உம்மென்று உறுமி கொண்டு கருது கிடந்தபடி .....

இப்படி பார்த்தபடி நாட்கள் செல்லும்போது அங்கே ஹஸ்தினாபுரி மழை பற்றிய எழுத்துகள். 
கர்ணன் விதுரரிடம் அடுத்த நகர்வு பற்றி குழம்பி தவிக்கையில் உள்ளே பட்டது கரியவன் நகர்வான் என. மூன்று பேருடன் என நினைக்கவில்லை. 

ஏன் அவனை பிடித்தது? இடத்தும் வலதும் அவன் இரண்டு உடல் இருப்பது தான். எதிரி என்பவன் அழிக்கப்பட வேண்டியவன் எனும் போது எவ்விதம் என்பதில் என்ன வேண்டி கிடக்கிறது. ( துருபதனை அவமதித்த அர்ஜுனன் - மதுராவை பிடித்த கரியவன் என எல்லாரும் ஒன்று தான் இந்த இடத்தில ) அதிலும் எல்லோரையும் நேற்று வரவேற்று, குடி ஊத்தி, உணவு நிறைத்து, மறு நாள் அடித்து அடைத்து வைக்கும் வெறி பற்றி படிக்கையில் ஒரு மிருக நிறைவு தான் வந்தது. இவன் மட்டும் தானே மற்ற எல்லா அரசர்களுக்கும் குதம் குளிர வைத்தவன் ..."இந்நகர் என்னுடையது" என்று ஜாரசந்தன் + ஐவரின் கரியவள் தவிர எவர் தன்னில் காண முடிந்தது ... கிருஷ்ணன் தொட கூடா தொலைவென்று சென்று அமைத்து கொண்டது என இப்போது தெரிகிறது. ஏன் பிடித்தது? கர்ணனை அணைத்து கொண்ட தோள்கள் ஆனால் அதற்கு முன் வரை போர் தொடுபதற்கு தயார் என இருந்தவன். நாகம் என முழு விழிப்புடன், விஷம் நிறைந்து இருந்தவன் ... சிவனை நினைத்து இருந்தவன் என்பதாலா ?
 
 
எப்பேர்பட்ட வீழ்தல் ஜராசந்தன் கொள்ள போகிறான். ஒரு நிம்மதி பெருமூச்சு தான் வருகிறது.... வரலாற்றின் ஒரு திசை மாற்றத்தின் முதல் சுழல். 

அவனின் சாவிற்கு காத்து இருக்கும் 
லிங்கராஜ்

களியாடல்:இரண்டாவது முறையாக வெண்முரசில் வருகிறது இந்த அசைவற்ற நீரில் அகத்தைப் பிரதிபலிக்க வைக்கும் 
தரங்கபிரஸ்னம் என்னும் சோதனை. முதற்கனலில் அக்னிவேசர் சிகண்டி உட்பட தன் மாணாக்கர்களுக்கு வைக்கும் சோதனை. ஒரு மாணவன் கூட, துரோணர் உட்பட, இச்சோதனையில் வெற்றி பெற்றதில்லை. நிலையான நீர்கொண்ட யானத்து நீரில் நீட்டும் விரலில் இருக்கும், நீட்டுபவனின் அகம் கொண்ட துடிப்பு. எவ்வளவு சிறிய துடிப்பும் ஏற்படுத்தக் கூடும் நீரில் ஒரு சலனத்தை.

இன்று பீமனும், ஜராசந்தனும் மற்போருக்கு முன் நெஞ்சில் வஞ்சமோ, சினமோ இல்லை என்று நீர் தொட்டு சான்றுரைக்கிறார்கள். சினமும், வஞ்சமும் இல்லையென்றால் அப்போருக்கு நோக்கமும் இல்லை என்றே பொருள். நோக்கமற்ற ஒன்றிற்காகவா மூவரும் கிளம்பி வந்துள்ளார்கள்? உண்மையில் இது ஒரு பிரபஞ்ச தரிசனம். இப்புடவியும் பிரம்மமும் கொள்ளும் அலகிலா விளையாட்டின் ஒரு பகுதி தான் இப்போர். இங்கே இறப்பதும், வாழ்வதும், தோற்பதும், வெல்வதும் எல்லாம் விளையாட்டே. அவற்றுக்கு எந்த நோக்கமும் இல்லை, எந்த காரணமும் இல்லை. அவை நிகழ்கின்றன ஏனென்றால் அவை அவ்வாறு தான் நிகழ்ந்தாக வேண்டும். புடவியின் நெறி வகுத்த பிரம்மனின் நிகழ்வு நதியில் மற்றொரு துளி. அவ்வளவே.

அதற்காகவே மிகப்பெரிய ஒரு களியாட்டின் பகுதியாக இவ்விளையாட்டு நிகழ்கிறது. இது இவ்வாறு தான் நிகழப் போகிறது என்பதற்கு இம்மூவரும் நகர் நுழைந்த விதமே ஆதாரம். அவர்கள் பெண்களுடன் களியாடி, மேலெங்கும் லேபனங்களுடன் தான் நகர் நுழைகிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் செயல்கள் அனைத்திலும் விழைவு இல்லாத களியாட்டு மட்டுமே இருக்கிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்