Wednesday, January 15, 2020

வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

 

வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்கு அதற்கான மனப்பயிற்சி தேவை. ஆனால் வெண்முரசு, கொற்றவை போன்றவற்றை வாசிப்பதற்கு தனிச்சிறப்பான ஒரு மனநிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

நாம் நவீன இலக்கியத்தை ஒரு குறிப்பிட்டவகையிலே வாசிப்பதற்கான பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.அதை ஒருவகையான கிரிட்டிக்கல் ரீடிங் என்று சொல்லலாம். அதை நாம் ஒரு அடல்ட் ரீடிங் என்று சொல்லிக்கொள்ளலாம். அந்த வாசிப்புக்கு நாம் நம் வகையில் இதுவரையான இலக்கியப்படைப்புக்களால் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம்.

நான் அந்தவகையான பயிற்சி கொண்ட வாசகன். ஆங்கிலம் வழியாக நிறைய வாசித்துக்கொண்டிருந்தவன் பிந்தித்தான் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன். தமிழிலும் சமகால இலக்கியத்திலிருந்து பின்னால் சென்று புதுமைப்பித்தன் வாசித்தேன். கம்பராமாயணமெல்லாம் இப்போது வாசிக்கிறேன். எனக்கு என்ன சிக்கலிருந்தது என்று மட்டும் சொல்கிறேன்.

எனக்கிருந்தது மூன்று பிரச்சினைகள். முதல் பிரச்சினை படைப்பிலக்கியத்தின் அடிப்படை ஒரு ஹ்யூமன் கிரைஸிஸ் என்று நம்புவது. ஒரு படைப்பை வாசிக்க ஆரம்பிக்கும்போதே அந்த கிரைஸிஸ் என்ன என்று தேட ஆரம்பிப்பது, கூடியவிரைவில் அதைச் சென்று அடைவது. அதன்பிறகு அந்தப்படைப்பில் அந்த கிரைஸிஸை மட்டுமே வாசிப்பது. அந்த மையத்திலிருந்து விலகுவதெல்லாமே தேவையற்றது என்று பொறுமையிழப்பது

இரண்டாவதாக எனக்கிருந்த பிரச்சினையை நான் இப்போதுதான் கண்டுபிடித்தேன். நான் வாசிக்கும் படைப்புகளிலே உள்ள அந்த ஹ்யூமன் கிரைஸிஸ் தனிநபர்களில் நிகழ்வதைத்தான் நான் கற்பனைசெய்கிறேன். அதாவது அது தனிநபர் சார்ந்ததாகவே எனக்கு இருக்கிறது. அந்த பிரச்சினையை கலாச்சாரத்திலோ வரலாற்றிலோ வைத்து நான் பார்த்ததில்லை. அந்த தனிநபர் ஒரு individual ஆக நிர்ணயம் செய்யப்பட்டவர். அவர் ஒரு சரித்திரப்பின்னணியிலே இல்லை. ஒரு கலாச்சாரப் பின்னணியிலும் இல்லை

இது ஏன் என்று யோசித்தேன். நான் காலேஜில் படிக்கும்போது படித்த முதல் முக்கியமான நூல் அட்லஸ் ஷ்ரக்ட். அயன்ராண்ட் தான் என் தொடக்கம். அதன்பிறகு வாசித்த எல்லா நாவல்களுமே அமெரிக்கா, ஐரோப்பா பின்னணி கொண்டவை. அவற்றின் பண்பாட்டுச்சிக்கல்கள் எனக்கு அன்னியமானவை. சரித்திரம்மீதும் அக்கறையில்லை. நான் அந்நாவல்களின் கதாபாத்திரங்களை வெறும் தனிநபர்களாக நிறுத்தித்தான் வாசித்தேன். அந்த தனிநபர்களுடன் என்னை நான் இணைத்துக்கொண்டு வாசித்தேன்

இந்த வாசிப்புக்கு நான் பழகிப்போயிருந்தேன். என் தலைமுறையில் பெரும்பாலும் அத்தனை வாசகர்களும் அப்படித்தான். என் தலைமுறைவாசகர்களில் பழைய இலக்கியங்களிலோ மதத்திலோ வரலாற்றாய்விலோ ஈடுபாடு கொண்டவர்களை நான் பார்த்ததே இல்லை.ஆகவே நாங்கள் Contemporary crisis என்று நினைப்பது தனிநபரின் சிக்கலை மட்டுமே. இந்த வாசிப்புக்குப் பழகாத இன்றைய இளைஞர்கள் இருப்பார்களா என்று சந்தேகம்தான்
 
இந்த கிரைஸிஸ் என்னவாக இருக்கிறது என்பது ஆளுக்காள் மாறுபடுகிறது. சிலருக்கு இந்தக் கிரைஸிஸ் என்பது மனித உறவுகளைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான விஷயங்களாக உள்ளது. சிலருக்கு இது அடையாளச்சிக்கல் மாதிரி தத்துவார்த்தமானதாக உள்ளது. ஆனால் தனிநபர் சார்ந்த பிரச்சினைதான்.
 
மூன்றாவது பிரச்சினை ஒரு படைப்புடன் பேசிக்கொண்டே படிப்பது.
 argumentative reading என்று நான் அதை சொல்வேன். இந்த வாசிப்பு சமகாலத்தில் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறது. இது அறிவார்ந்த வாசிப்பு என சொல்லப்படுகிறது. போஸ்ட்மாட்ர்ன் காலகட்டத்தின் வாசிப்பு இது. இதில் ஒரு மறைமுக மகிழ்ச்சிதான் உள்ளது. நம்மை நாம் நூலின் ஆசிரியருக்குச் சமானமாக நிறுத்திக்கொள்கிறோம். அவரை விவாதத்திற்கு இழுத்தபடியே இருக்கிறோம்
 
இன்றைய நவீன இலக்கியத்திலுள்ள பெரும்பாலான நாவல்களுக்கு இந்தவாசிப்புதான் சரிவரும். இந்தவகையான வாசகர்களை எதிர்பார்த்து இன்றைய நாவலாசிரியர்கள் அவர்களின் டெக்ஸ்டை மிகவும் சிடுக்கானதாக ஆக்கிக்கொள்கிறார்கள். புதிர்போல மாற்றிக்கொள்கிறார்கள். வாசகன் வழிதவறிவிளையாட விடுகிறார்கள். நன்றாக மூளையை முட்டிக்கொண்டால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. இந்த சிடுக்கையே ஆழம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்
 
ஏராளமான கிராஸ் ரெஃபரன்ஸ்கள் வழியாகவும் சில ஆசிரியர்கள் டெக்ஸ்டை சிக்கலானதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.அவற்றை வாசிக்கவே முடியாமலாக்கிக்கொள்கிறார்கள். வாசகனுக்குச் சவால்விடும் படைப்புககள் அவை என்று சொல்லப்படுகின்றன. சமகால அமெரிக்க இலக்கியப்படைப்புக்களின் வழிமுறை இதுதான்
 
இந்த மூன்று அடிப்படைகளுமே வெண்முரசு போன்ற நாவல்களை வாசிப்பதற்குத் தடையாக அமைகின்றன. வெண்முரசை வாசிக்க கொஞ்சம் நவீன இலக்கியம் வாசித்தவர்களுக்கு தடைகள் இருப்பது இதனால்தான். எனக்கே அந்தச் சிக்கலிருந்தது.
 
உதாரணமாக வெண்முரசிலே விரிவான நிலக்காட்சிவர்ணனைகள் வருகின்றன. நான் முதலில் வாசிக்கும்போது அவற்றை வாசிக்க சலிப்பு ஏற்பட்டது. குறியீடோ அல்லது புதிரோ இல்லாமல் வெறும்நிலக்காட்சிகளை வாசிக்கமுடியவில்லை. அதேபோல கதாபாத்திரங்களின் சகஜமான உரையாடல்கள் வாசிக்கையிலும் சலிப்பு வந்தது.
 
மேலும், உணர்ச்சிகளை நேரடியாகச் சொல்லுமிடங்களில் பெரிய தடை இருந்தது எனக்கு. ஏன் சொல்லவேண்டும், அவற்றை அப்படியே விட்டுவிடலாமே என்ற எண்ணம் இருந்தது. அவை வாசகனால் அடையப்படவேண்டியவை என்று நினைத்தேன். நவீன்நாவல்களில் உணர்ச்சிகளைச் சொல்லும் வழக்கம் இல்லை.
 
ஆனால் வெண்முரசு ஒரு கிளாஸிக் படைப்பு. இந்திய கிளாஸிஸத்தை அது திரும்ப எழுதுகிறது. கிளாஸிஸத்தின் எல்லா அம்சங்களும் அதில் வந்துகொண்டுதான் இருக்கும் என்ற அறிதல் வர ஒருவருஷம் வெண்முரசை தொடர்ந்து படிக்க நேர்ந்தது.
 
அதைவிட முக்கியமான ஓர் அறிதல் உண்டு. ஓராண்டுக்குப்பின் நான் வெண்முரசை நினைவுகூர்ந்தபோது மழைப்பாடலில் வரும் நிலவர்ணனைகள்தான் நினைவில் நின்றன. மொத்த நாவலும் அந்த நிலங்களில் நிகழ்ந்தது என்று தெரிந்தது. அந்நிலங்கள் இல்லாமல் வெண்முரசின் மனிதக்கதையே இல்லை. அந்த நிலங்களிலிருந்து இன்றைக்குவரை வெளியே வரமுடிந்ததில்லை. 208ல் லீவு போட்டுவிட்டுவந்து அந்த நிலங்களில் பயணம்செய்தேன்.
 
அதைப்போல அந்நாவலிலுள்ள உரையாடல்கள். வெய்யோன் நாவலில் கர்ணன் தன் அம்மாவான ராதையிடமிருந்து விலகுமிடம் வெறும் உரையாடலாகவே உள்ளது. அதிலுள்ள நுட்பம் முழுக்க அந்த உரையாடலுக்கு பின்னாலுள்ள உணர்வுகள் ஊகத்துக்கு விடப்பட்டிருக்கிறது என்பதிலேதான். கர்ணன் அம்மாவிடமிருந்த உறவில் ஓர் உடைவு நடைபெறுகிறது. அது வெளியே தெரியாமலேயே நடைபெறுகிறது
 
அதை வாசித்தகாலத்தை விட பிறகுதான் அந்த இடம் பெரிதாகியது. எந்த மனிதரிடமும் நமக்கு ஓர் உள்ளே உடைவு நடைபெறும். அந்த இடம் மிகமுக்கியமானது. அந்த இடத்தை அப்படி உரையாடலிலேயே சொல்லமுடியும். பூரிசிரவஸ் தன் காதலிகளை மீண்டும் சந்திக்கும் இடத்திலுள்ள உரையாடலும் அப்படித்தான்
 
அதன்பிறகுதான் சப்டெக்ஸ்ட் என்பது புதிர்விளையாட்டு அல்ல என்று எனக்குத்தெரிந்தது. அது இந்த இடங்களில் சொல்லப்படாமல் வெளியே இருக்கும் வாழ்க்கையை உணர்ந்துகொள்வதுதான். பூரிசிரவஸின் காதலிகளுக்கு திருமணமானதுமே பூரிசிரவஸ் சிறியவனாக ஆகிறான். ஏன் அப்படி ஆகிறான் என்று உணர்வதுதான் சப்டெக்ஸ்ட் வாசிப்பு. எனக்கு அது தெரிந்தும்தெரியாமலும்தான் உள்ளது
 
உணர்ச்சிகளைச் சொல்லும் இடங்களும் சொல்லாத இடங்களும் வெண்முரசிலே உள்ளன. சொல்லாத இடங்களே மிகுதி. சொல்லும் இடங்களில்தான் மொழியின் அழகு நிகழ்கிறது. நவீனமொழியில் அந்த அழகு வராது. அது இமேஜரிகளானால ஒரு கிளாஸிக் அழகு. விதுரர் ‘சர்வ கல்வித’ மந்திரத்தை பைத்தியம்போல சொல்லும் இடத்தை இன்றைக்கு மீண்டும் வாசிக்கிறபோதும் அதே பரவசம் ஏற்படுகிறது
 
ஆனால் இதெல்லாம் சிறிய தடைகள். பெரிய தடை உண்மையான பண்பாட்டுப்பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதைக்கொண்டு நாவலை வாசிப்பது. ஒரு கடிதத்திலே நீங்கள் எழுதினீர்கள்.  தமிழகக்கோயில்களிலே ஆகமமுறை புகுந்ததைப் பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டால் அதை எப்படி வாசிக்கவேண்டும் என்று. அதுதான் என் திறப்பு. வெண்முரசை வாசிக்க எனக்கு பெரியதடையாக இருந்தது அந்தவகையான புரிதலே இல்லை என்பது. வெண்முரசு வேதம் என்றால் என்ன, அது அசுரர்களை ஏன் தேவர்களாக ஆக்கிக்கொண்டது, ஆதிவேதங்கள் என்ன என்றெல்லாம் பேசி வேதத்தில் வந்த மாபெரும் மாற்றத்தைப் பற்றி ஒரு தீஸிஸை முன்வைக்கிறது. பல ஆயிரம் பக்கங்களிலே இதைப்பற்றிப் பேசுகிறது.
 
இதற்கான வரலாற்றுப்பின்னணியையும் சமூகப்பின்னணியையும் பேசுகிறது. அதை மொத்தமாக புரிந்துகொள்ள பெரியதடையாக இருப்பது பெர்சனல் கிரைஸிஸை தேடுவதுதான். அதிலிருந்து வெளியே வந்து வாசிக்கும்போதுதான் உண்மையான நாவலையே அணுகமுடிகிறது. இந்திரநீலத்தில் எட்டு தேவியர் அந்த பின்னணியிலேதான் அர்த்தமாகிறார்கள். ஒரு கல்சுரல் கிரைஸிஸ் எப்படி நாவலாகும் என்று வெண்முரசு காட்டியது. அல்லது ஒரு ஹிஸ்டாரிக்கல் கிரைஸிஸ். அதற்கு வந்துசேர ஒரு நவீனநாவலின் வாசகன் கொஞ்சம் பயணம் செய்யவேண்டும்
 
கூடவே கொஞ்சம் பின்னணிவாசிப்பும் தேவை. உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் எனக்கு அந்த வாசிப்புக்கு மிக உதவியாக இருந்தது வெண்டி டேனிகரின் 
The Hindus: An Alternative History. சரசரவென்று வாசிக்கத்தக்க நூல் அது. மிகச்சிக்கலான நூல்களையெல்லாம் இதற்காக வாசிக்கமுடியாது. ஆனால் ஒரு பெரிய புரிதலை அது தந்தது. வருணன் அசுரனாக இருந்து தேவனாகியது, இந்திரனின் குணாதிசயங்கள், அவை அர்ஜுனனுடன் இணைந்தது எல்லாமே அதன்வழியாகவே புரிந்தன. கிருஷ்ணன் வருணனை வென்று துவாரகையை அமைக்கும் இடத்தின் சிம்பலிசத்தை அதன்பிறகுதான் புரிந்துகொள்ளமுடிந்தது
 
வழக்கமான நவீன வாசகன் அவனுடைய பழகிப்போன வாசிப்பை கொண்டுவந்து வெண்முரசு போன்ற ஒரு புதியநிகழ்வின்மேல் போட்டால் அவனுக்குத்தான் இழப்பு. நான் நவீனவாசகன் என்ரு சொல்லி நாலைந்து ஐரோப்பிய நாவல்களைச் சுட்டிக்காட்டிவிட்டு போகலாம். ஆனால் நல்ல வாசகன் ஒவ்வொரு நூலுக்காகவும் தன்னை உருவம் மாற்றிக்கொள்வான் என்று நான் நினைக்கிறேன்

 

வெண்முரசு போன்ற நாவல்களை வாசிக்கையில் நமக்கு இறுக்கமான வாசகநிபந்தனைகள் இருக்கக்கூடாது. படைப்பு இப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணங்களை நாம் தவிர்க்கவேண்டும். படைப்புக்கு நம்மை கொடுக்கமுடியவேண்டும். என் அனுபவம் என்னவென்றால் ஒரு இன்னொசெண்ட் ரீடிங் இந்த வகையான நாவல்களுக்கு தேவை. நம் அறிவால் அதை தடுத்துக்கொண்டு நிற்கக்கூடாது. அந்த வாசிப்பு நம்முடைய விர்ச்சுவல் ரியாலிட்டியாக ஆக அனுமதிக்கவேண்டும். அது நமக்குள் போய் பதியவும் நம் கனவில் ஊடுருவவும் இடமளிக்கவேண்டும்

 

அப்படி இடமளித்தால் பல இடங்கள் நமக்குள் மெரிய மெட்டஃபர்களாக மாறுவது என் அனுபவம். வாரணவதம் எரிப்பு, ஜராசந்தன் ஒரு மழையிலே கொல்லப்படுவது எல்லாமே ஆர்க்கிடைப்பல் அனுபவங்களாக மாறி ஒரு ஜ்வரம் போல உள்ளே சென்றுவிட்டன. சில இடங்களில் கொஞ்சம் சாகசநாவல். சில இடங்களில் ஒரு வகையான குழந்தைக்கதை. சில இடங்களில் விளையாட்டுத்தனமான கதை. சில இடங்களில் நேரடியாகவே தத்துவம். வெண்முரசை வாசிக்க வாசகன் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தப்பெரிய படைப்பும் அந்தப் பயிற்சியை வாசகனிடம் கேட்கிறது

 

Friday, January 3, 2020

வெண்முரசின் காவிய முறைமை-ஸ்ரீனிவாஸ்

 

வெண்முரசு நாவல்தொடரை நான் தொடர்ச்சியாகவும், அவ்வப்போது இடைவெளிவிட்டும் வாசித்து வருகிறேன். போர் முடிந்ததுமே ஒரு வைண்டிங் அப் மனநிலை வந்துவிட்டது. ஆகவே கொஞ்சம் சுணக்கம். மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். களிற்றியானைநிரை பாதியில் நிற்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் இந்நாவல்தொடரைப் பற்றிய குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். இந்நாவல்களைப் பற்றிய என் எண்ணங்களை ஒருவாறாக தொகுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

பொதுவாக இலக்கியத்திலே எப்போதும் ஒருவகையான வடிவம் நிலைபெறும்போது அதை உடைக்கும் வடிவங்கள் வரும். அவ்வாறு சிலவடிவங்கள் வருவதற்குப் பலகாரணங்கள் உண்டு. அதிலொன்று, பழகிப்போயிருப்பது. உதாரணமாக பதினெட்டாம்நூற்றாண்டின் பெரிய கிளாஸிக் நாவல்களின் வடிவம் அப்படியே அமெரிக்க திரில்லர் வடிவங்களில் கையாளப்பட்டது. லியான் உரிஸ் எழுதும் நாவல்களெல்லாமே வார் ஆன் பீஸ் போன்ற வடிவம் கொண்டவைதான்

அதேபோல காம்யூ, ஹெமிங்வே முதலியவர்கள் எழுதிய அதே வடிவம் அப்படியே திரில்லர் நாவல்களுக்குப் போய்விட்டது. சொல்லப்போனால் மாடர்னிசத்தின் நடையின் உச்சத்தையே நாம் அந்த திரில்லர்நாவல்களிலேதான் காண்கிறோம். கூர்மையான கதைப்போக்கும் கச்சிதமான மிகையில்லாத அப்ஜெக்டிவான நடையும் அவற்றில்தான் உள்ளன. டெஸ்மண்ட் பேக்லி, லென் டைட்டன் போல எனக்கு பிடித்த சிலர் உண்டு.

ஆகவேதான் இலக்கியம் தடம் மாறியது. அது புதிர்வழிப்பாதை என்ற வடிவத்தை எடுத்துக்கொண்டது. எழுபதுகளுக்குப்பின்னால் வந்த மேலைநாட்டு நாவல்கள் எல்லாமே சிக்கலான புதிர்போடும் வடிவம்கொண்டவையாக இருந்தன. ஆனால் அந்தவடிவமும் உடனே கமர்ஷியல் ஃபிக்‌ஷனுக்கு போய்விட்டது. மிகச்சிறந்த உதாரணம் டாவின்சி கோட் நாவல். உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆஃப்த ரோஸ் நாவலின் இன்னொருவடிவம்தான் அது.

புதிர்போடும் நாவல்களை இப்போதுதான் இங்கே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அந்த வடிவமும் பழகிவிட்டதனால் அடுத்தகட்ட நியோரியலிச நாவல்கள்தான் இன்றைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கு உலக இலக்கியத்தில் புதியவிஷயங்கள் வருவது மூன்று தளங்களிலேதான். ஒன்று, அறிவியல்புனைகதைகள். அவற்றை சூடோ சயன்ஸ் – சூடோ லிட்டரேச்சர் என்று சொல்லிய காலம் இருந்தது. இன்றைக்கு அந்தக் காலகட்டம் கிடையாது. இன்றைக்கு அறிவியல்புனைகதைகளில் பலவகையான உச்சங்கள் நிகழ்ந்துவிட்டன.

இரண்டாவது டயஸ்போரா எழுத்து. ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களின் எழுத்து. இதை வெறுமே சர்வைவலுக்கான போராட்டமாக காணும் பார்வை இன்று கிடையாது. இது இரண்டு பண்பாடுகளை ஒப்பிடுவதன் வழியாக இரண்டு பண்பாடுகளையும் புரிந்துகொண்டு மதிப்பிடுவதாக ஆகிறது. அதுதான் முக்கியமானவையாக ஆக்குகிறது

மூன்றாவது, மூன்றாமுலக நாடுகளின் எழுத்து. அறியப்படாத எழுத்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் இந்தியா இல்லை. இந்தியாவிலிருந்து தரமான எழுத்து மொழியாக்கம் செய்யப்படவில்லை. தரமான மொழியாக்கமும் கிடையாது. தரமான மொழியாக்கம் வரும் நாடுகளில் ஒரு பொதுத்தன்மை உண்டு. துருக்கி ஈரான் போன்ற நாடுகளிலிருந்து அரசாங்க உதவியுடன் பெரும்பணம் செலவழித்து நல்ல மொழிபெயர்ப்பாளர்களுடன் மொழியாக்கங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்தியாவிலிருந்து அமெச்சூர் மொழியாக்கங்களும் கமர்ஷியல் ஃபிக்‌ஷன் மொழியாக்கங்களும்தான் வந்துகொண்டிருக்கின்றன

இந்தச்சூழலில் வெண்முரசு உலக இலக்கியத்திலேயே இல்லாத ஒரு விஷயமாக நடைபெற்றுள்ளது. பொதுவாக இங்கே தமிழில் ஏதாவது புதிசாக நடைபெற்றால் அதன் முன்வடிவம் ஐரோப்பாவில் இருக்கும். ஜே.ஜே.சிலகுறிப்புகள் முப்பதாண்டுகள் பழைய ஜான் அப்டைக்கின் வடிவத்தைத்தான் இங்கே புதிசாகக் கொண்டுவந்தது. அப்படி மேலைநாட்டிலிருந்து கொண்டுவந்தால் அது இங்கே மிகப்புதியதாக கருதப்படும். இங்கேயே அசலாக ஒரு புதியபாய்ச்சல் நடந்தால் நமக்கு அதைப்புரிந்துகொள்ள கருவிகள் கிடையாது.

வெண்முரசு ஒரு புதிய காவியத்தை தமிழில் கொண்டுவந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கொற்றவை எல்லாமே காவியமுயற்சிகள்தான். பின்நவீனத்துவம் சொல்லும் மெட்டா எபிக்குகள் இவை என்று சொல்லலாம். இங்கே உள்ள நவீன இலக்கியவாதிகளுக்குப் பெரிய வாசிப்பு கிடையாது. ஆகவே இவர்கள் மெட்டா எபிக்குக்கும் எப்பிக்குக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்கள். சிலப்பதிகாரம் வேறு கொற்றவை வேறு. சிலப்பதிகாரத்தை திரும்ப எழுதுவது கொற்றவை. திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ இலக்கியமுறை. வரலாற்றையும் பண்பாட்டையும் திரும்பி எழுதுவது அது. ஏற்கனவே இருக்கும் வரலாறும் இலக்கியமுமே எழுதப்பட்ட பிரதிகள்தான் என்ற எண்ணத்திலிருந்தே இந்த திரும்பி எழுதும் முறை உருவாகிறது

வெண்முரசு ஒட்டுமொத்த பௌராணிகமரபையே திரும்ப எழுதும் ஒரு மிகப்பெரிய மெட்டா எபிக் முயற்சி.அப்படி ஒன்று ஐரோப்பாவில் செய்யப்பட்டதில்லை. ஓரளவுக்கு மார்கரட் அட்வுட் போன்றவர்களின் முயற்சி உண்டு, ஆனால் அதெல்லாமே எல்லைக்குட்பட்டவை. இன்று அங்கே இருக்கும் கடுமையான பிரசுரப்போட்டியில் எவரும் பிரம்மாண்டமான கனவுகளைக் காணமுடியாது. அப்படி கனவுகாணவும் எழுதவும் ஒரு சின்ன உலகம் தேவை. எவர் வாசிப்பார்கள் என்று கவலைப்படாமல் எழுதவேண்டும்

ஒரு மெட்டா எபிக் ஆக வெண்முரசை வாசிப்பவர்களால்தான் அதில் உள்ள விளையாட்டை புரிந்துகொள்ளமுடியும். அது பழைய மரபில் உள்ள ‘உண்மை’ இதுதான் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு உண்மை இல்லை, அது ஒரு புனைவு என்கிறது. அதை இன்னொருவகையிலே புனைகிறது. அது உண்மை இது இன்னொரு உண்மை என்று சொல்லவில்லை. மெட்டா எபிக் ஏன் முக்கியமென்றால் புனைவின் சாத்தியங்களைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

ஆகவே வெண்முரசு ஒருநாளும் ஒரு மதநூல் இல்லை. மதத்திலுள்ள உண்மைகள் என்னென்ன என்று அறிவதற்காக அதைப் படிக்கக்கூடாது. அதற்கு மகபாரதத்தையே படிக்கவேண்டும். மதநூல்கள் சொல்லும் உண்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம் என்றும் அவை எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படலாம் என்றும் சொல்வதுதான் வெண்முரசு. இந்த நாவலில் பொருள்கொள்ள பழகியவர்கள் மகாபாரதத்தையும் பொருள்கொள்ள ஆரம்பிப்பார்கள். மகாபாரதத்தை தெரிந்துகொள்ள மகாபாரதத்தையே படிக்கவேண்டும், மகாபாரதம் உட்பட நம்முடைய பழைய மர்பின் டைனமிக்ஸை தெரிந்துகொள்ளத்தான் வெண்முரசு தேவையாகிறது

அந்த பழைய மகாபாரதத்தின் மனநிலைகளை இந்நாவல் எப்படி மாற்றியிருக்கிறது என்பதைக்கொண்டே இதை அறியமுடியும். மூலமகாபாரதத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு எளிமையான பழங்குடித்தன்மையான மனநிலை உள்ளது. உதாரணமாக பீமனையும் திரௌபதியையும் எடுத்துக்கொள்ளலாம். பீமன் ஒரு மூர்க்கமான ஆளாகவே மகாபாரதத்தில் வருகிறான். எல்லா இடங்களிலும் முரட்டடிநியாயமே பேசுகிறான். திரௌபதி தான் அவமதிக்கப்பட்டதையும் காட்டில் அலைவதையும் சொல்லிச் சொல்லி அழுபவளாகவும் வருகிறாள்.

ஆனால் வெண்முரசிலே பீமன் அங்கதமும் பகடியும் கசப்புமாக உரையாடும் ஒருவனாக வருகிறான். ஒரு அவுட்சைடர். ஒரு காட்டுமனிதன். அவனுடைய விமர்சனங்கள் அரசு மீதும் நாகரீகம் மீதும் எப்போதும் எழுகின்றன. பீமன் அந்தக்கசப்பை கங்கையில் மூழ்கி நாகர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறான். அதேபோல திரௌபதியின் கனவு அவள் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே வருகிறது. அவள் அந்தக்கனவிலிருந்து விடுபடுவதே இல்லை.அவள் எதற்கும் நிலைகுலையாத அரசியாக கொற்றவைபோல வருகிறாள். இதெல்லாம் மூலத்திலிருந்து நுட்பமாக மாற்றி எழுதப்படுகின்றன

இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது? திரௌபதி அதற்குமேல் சரித்திரத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரரசிகளின் சாயல்கள் ஏற்றப்பட்டு இன்றைய ஆளுமையாக மாற்றப்பட்டிருக்கிறாள். பீமன் இன்றைய மனிதனின் குரலைத்தான் ஒலிக்கிறான். அவ்வாறு மொத்த மகாபாரதமும் இன்றைய கதையாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மாற்றித்தான் இந்த மோதலும் பிரச்சினைகளும் எப்படி உருவாகின்றன என்பது விளக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மெட்டா எபிக்கின் இயல்பு என்று சொல்லலாம்.

இவ்வாறு இதை ஒரு மெட்டா எபிக் என்று சொல்லும்போது இன்னொரு கேள்வி எழுகிறது. இதை ஒரு கிராண்ட் நேரேஷன் என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் முன்புள்ள கிரான்ட் நெரேஷன்களைப் போல இது எதையும் கட்டி நிறுத்தவில்லை. இதெல்லாம் எப்படி உருவாகிவந்திருக்கும் என்று ஆராய்ந்து சொல்கிறது. இப்படி நடந்திருக்குமோ என்று சொல்கிறது. இந்த வேறுபாடு முக்கியம். அத்துடன் இந்த நாவல்தொடர் ஒரு ஹிஸ்டாரிசிசத்தை உருவாக்குகிறது. அதை நியூஹிஸ்டாரிசிசம் என்று சொல்லலாம். அது போஸ்ட்மாடர்ன் பார்வையை கடந்து வந்த அடுத்தகட்ட பார்வை. வரலாறே ஒரு ஹிஸ்டாரிசிசம், அதற்கு எல்லா கதைகளும் ஒரு வகை ஹிஸ்டாரிசிசத்தையே உருவாக்குகின்றன. இந்தியமரபு என்ற பெரிய புனைவுக்குள் மகாபாரதம் என்ற புனைவு உள்ளது. அந்த புனைவுக்குள் இன்னொரு புனைவு இது. இது போஸ்ட்மாடன் எழுத்திலிருந்து இன்னொரு முன்னகர்வு

ஆனால் இங்கே இலக்கியச்சூழலில் வாசிப்பவர்களுக்கு இன்னமும் இத்தகைய ஒரு புதிய படைப்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. ஆகவே அவர்கள் இது ஒரு பழைய எழுத்து என நினைத்து வாசிக்காமலிருக்கிறார்கள். வாசித்தவர்களுக்கு இந்நாவலே அந்தப்புரிதலையெல்லாம் அளித்துவிடும். அவர்களுக்கு இதெல்லாம் தெரியும். மகாபாரதத்திற்கும் வெண்முரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால் அவர்களால் சொல்லிவிட முடியும்.

வெண்முரசு மகாபாரதத்தை ஏன் திருப்பி எழுதவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு உணவுப்பண்டத்தின் ரெசிப்பியைத் தெரிந்துகொள்வதுபோலத்தான். நமக்கு கிளாஸிக்குகளாக இலக்கியங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவை உருவாகிவந்த நீண்டபாதையாக பார்ப்பதுதான். அதற்கு ஆராய்ச்சியை விடச் சிறந்தவழி அவற்றை இன்று நடித்துப்பார்ப்பதுதான். ஆராய்ச்சியில் வரலாறும் தத்துவமும் தெரியலாம். உணர்ச்சிகளும் வாழ்க்கைநுட்பங்களும் தெரியாது. அதை இன்றைய வாழ்க்கையில் நடிக்கும்போது நாம் அவை உருவானவழியையே முழுதாக அமைத்துப்பார்க்கிறோம்.

வெண்முரசு மகாபாரதத்திற்கு இந்தியா சென்ற வழியை மீண்டும் உருவாக்கிக் காட்டுகிறது என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. மொத்த மகாபாரதப்போரையே அது நான்கு கோணங்களில் பார்க்கிறது. பாலைநிலத்துக்கும் புல்வெளிக்குமான போர். ஷத்ரியர்களுக்கும் பிற சாதிக்குமானபோர், புதிய ராஜ்ஜியங்களுக்கும் பழைய ராஜ்ஜியங்களுக்குமான போர். பழையவேதங்களுக்கும் வேதாந்தத்துக்குமான போர். நான்கும் உண்மையாக இருக்கலாம். இந்த நான்கு வழிகளின் வழியாக குருசேத்திரப்போர் நோக்கி நாவல் செல்கிறது.  அது உருவாக்கியது குருசேத்திரப்போர் மட்டுமல்ல. அது இந்தியாவை இன்றைக்கும் ஆட்டிப்படைக்கும் முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இந்தியாவின் அடித்தளத்தை புரிந்துகொள்ள அது முக்கியமானது

ஒரு உவமையாக நான் நினைத்துப்பார்ப்பது உண்டு. மிகப்பழைய காலத்தில் நடந்த ஒரு போரை இப்போது புரிந்துகொள்ள அந்தப்போரை இப்போது செயற்கையாக திரும்ப நடித்துப்பார்த்தால் எப்படி இருக்கும்?அந்த உணர்ச்சிகள் வரும். ஆனால் நமக்கே தெரிந்திருக்கும், இது நாம் திரும்பசெய்வது என்று. மெட்டா எபிக் என்றால் அதுதான். நாம் கூர்ந்து பார்த்தபடி அதைச் செய்வதனால் நமக்கு கூடுதல் புரிதல்கள் உருவாகின்றன

ஏன் மகாபாரதத்தை எழுதவேண்டும்? அது இன்றைக்கும் ஒரு லிவிங் டெக்ஸ்ட் என்பதுதான் முக்கியமான காரணம். அது இங்கே இன்றைக்கும் அரசியலையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் நூலாக இருக்கிறது. அதில் எல்லா புராணங்களும் உள்ளன. வரலாறும் தத்துவமும் உள்ளது. அதில் ஆர்க்கிடைப்புகள் உள்ளன. ஆகவே அதைப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. திரும்பச்செய்தாலன்றி முழுசாகப்புரிந்துகொள்ளமுடியாது

இலக்கியம் என்பதே வாழ்க்கையை திரும்பச் செய்து பார்ப்பதுதான். எல்லா எழுத்தும் அதைத்தான் செய்கிறது. அப்படியிருக்க ஒரு மொத்த கடந்தகாலத்தையே திரும்பச் செய்துபார்ப்பதென்பது மிகப்பெரிய கனவு. அந்தக்கனவு வெண்முரசிலே சாத்தியமாகியிருக்கிறது. திரும்பச் செய்யும்போது என்ன ஆகிறதென்றால் நாம் நடந்ததை அறிவதோடு நடந்ததை மாற்றியும்விடுகிறோம்.ராஜராஜசோழன் பற்றிய ஒரு வலிமையான கதை ராஜராஜனின் வரலாற்றை மாற்றிவிடுகிறது. நம்மையறியாமலேயே வெண்முரசு மகாபாரதத்தை மாற்றியமைக்கிறது. மகாபாரதம் பேசும் நம் பண்பாட்டையே மாற்றியமைக்கிறது

இந்தப்பிரம்மாண்டமான படைப்பைப் பற்றிப் பேச இங்கே உள்ள இலக்கியவிமர்சகர்கள் எவரும் தகுதியானவர்களாக நான் நினைக்கவில்லை. அவர்களெல்லாம் ஏற்கனவே புழங்கிக்கொண்டிருக்கும் அளவுகோல்களை வைத்திருப்பவர்கள். தங்களுக்கு புரிந்ததையும் தங்களுக்குத் தெரிந்ததையும்தான் அவர்கள் சொல்லமுடியும். ஆகவே அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காமல் கருத்துச்சொல்லாமல் இருப்பது நல்லதுதான்.புதிய அளவுகோல்களை உருவாக்கும் சக்தி கொண்ட விமர்சகர்கள் வரவேண்டும். அவர்கள் வரும்வரை ஒரு தலைமுறைக்காலம் வெண்முரசு காத்திருக்கலாம்

Thursday, January 2, 2020

புழுக்களின் பாடல்- சரவணக்குமார்அன்புள்ள ஜெ,

வெண்முரசின் ஒட்டுமொத்தமும் சரளமான கதையோட்டமாகவே அமைந்துள்ளது. வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக அந்தந்த சந்தர்ப்பங்களின் நாடகீயமான தருணங்கள் வழியாக செல்வது அதன் வடிவச்சிறப்பாக இருந்தது. அந்த கதாபாத்திரம் வழியாக மற்ற கதாபாத்திரங்களின் மனம், அந்தக் கதை நடக்கும் சூழல் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டன.

அந்த ஓட்டத்தில் அவ்வப்போது ஊடறுக்கும் துணைக்கதைகளும் கவிதைப்பகுதிகளும் இருந்தன. அந்த குறுக்குச்சரடுகள்தான் வெண்முரசை மேலும் சிக்கலான பிரதியாக ஆக்கின அவ்வாறு வந்த பல கவிதைப்பகுதிகளை என் நண்பர்கள் பலர் வாசிக்கவில்லை. அந்த வேகத்தில் அப்பகுதிகளை வாசிக்கும் மனநிலை அவர்களுக்கு அமையவில்லை. பின்னர் வாசிக்கலாம் என்று நினைத்து எடுத்துவைத்து வாசிக்காமல் விட்டதுமுண்டு.

நான் அந்தக்கவிதைப் பகுதிகளை வாசித்தேன். ஆனால் அந்த வாசிப்பின் முக்கியமான சிக்கலென்னவென்றால் அந்தக்கதைப்பகுதியுடன் இணைத்தே அந்தக்கவிதைப்பகுதிகளையும் வாசித்தேன். ஆகவே அந்தவகையிலேயே அவை எனக்கு அர்த்தம் அளித்தன அத்துடன் அந்தப் பகுதிகள் உரைநடைவடிவில் பத்திபத்தியாக இருந்தன. அந்த வடிவிலிருந்தாலே அவை ஒரே ஒழுக்காக ஆகிவிடுகின்றன.அவற்றை நாம் வார்த்தை வார்த்தையாக நிறுத்தி வாசிப்பதில்லை. அவை கவிதை என்பது நம் மனதில் உறைப்பதுமில்லை.

அப்படி நான் பல கவிதைகளை விட்டுவிட்டேன். அவற்றையெல்லாம் திரும்ப வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வெண்முரசில் உள்ள நேரடியான கவிதைப்பகுதிகள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை நான் வாசித்து மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் அவைதான் அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டும் இருந்தன. அவற்றிலிருந்து ஏதேனும் ஒருவரி என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

 வெண்முரசில் புல்பற்றியும் வேர்கள் பற்றியும் வந்த கவிதைகள் உண்டு. அம்புகள் பற்றியும் பொன்பற்றியும் வந்தபகுதிகளையும் கவிதையாகவே எடுக்கலாம். அவற்றை வெண்முரசின் கதையோட்டத்திலிருந்து விலக்கி தனியான கவிதைகளாகவே வாசிக்கலாம். அவற்றை தேடிக்கண்டடைவது ஒரு நல்ல விஷயம். அவற்றை தேடுவது வழியாக வெண்முரசுக்குள் மீண்டும் செல்லமுடிகிறது. ஒரேசமயம் புதுக்கவிதையாகவும் அதேசமயம் பழையவைபோலவும் இருக்கும் வரிகள் அவை. வெண்முரசில் அவை ஏதோ சூதன் பாடுவதாக வருகின்றன. ஆனால் அவற்றின் அமைப்பும் குறியீட்டுத்தன்மையும் நவீனக்கவிதையாகவும் உள்ளன.


புழுக்களின் பாடல்


நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும்

பல்லாயிரம் கோடிப் புழுக்களே,

இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள்.

வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள்.

மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே

நெளிந்து நெளிந்து வாழ்ந்து

இறந்து பிறந்து இறந்து

நீங்கள் அறிந்ததென்ன?

 

சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு.

அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம்.

ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர்.

கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல்.

எழாத நாகபடம். கொல்லாத விஷம்.

புழுவாகி வந்ததுதான் என்ன?

 

நீந்தி நெளிந்து வளைந்து துடிக்கும்

பல்லாயிரம்கோடிப் புழுக்களே,

இப்புவியின் உயிரானவர்கள் நீங்கள்.

விழியின்மையில், செவியின்மையில்,

சிந்தையின்மையில்,

இன்மையில்

திளைத்துத் திளைத்து நீங்களறியும்

முடிவின்மையும் நெளிந்துகொண்டிருக்கிறது.

 

ஆழத்தில் காத்திருக்கிறீர்கள்.

குடல்மட்டுமேயான பெரும்பசியாக.

பறப்பவையும் நடப்பவையும் நீந்துபவையும் 

னைத்தும் வந்துவிழும் 

உதரத்தின் ஆழ்நெருப்பு.

எரியும் ஈரம். நிலைத்த பயணம்.

பருவடிவக் கிரணம்.

தன்னைத் தான் தழுவி நெளியும்

உங்களால் உண்ணப்படுகின்றன அனைத்தும்.

உங்களையே நீங்கள் உண்கிறீர்கள்.

வளைந்து சுழிக்கும் கோடுகளால்

பசியெனும் ஒற்றைச் சொல்லை

 எழுதி எழுதி அழிக்கிறீர்கள்.

 

வைஸ்வாநரனே,

உன் விராடவடிவுக்குமேல்

குமிழிகளாக வெடித்தழிகின்றன நகரங்கள்,

நாடுகள், ஜனபதங்கள்.

வந்து, நிகழ்ந்து, சென்று,

சொல்லாகின்றன மானுடக்கோடிகள்.

சொல் நெளிந்துகொண்டிருக்கிறது.

தன்னைத் தான் சுழித்து.

சுழி நீட்டி கோடாக்கி.

ஒன்று கோடியாகி கோடி ஒன்றாகி

எஞ்சுவது இருப்பதுவேயாகி.

ஈரத்தில் நெளிகிறது

சொற்புழுவெளியின் பெருங்கனல்.

 

வண்ணக்கடல் நாவலில் ஒரு சூதன் பாடும் வரிகள் இவை. இந்த வரிகளை நான் இன்று ஒரு பெரிய கொந்தளிப்புடன் வாசித்தேன். இந்த கவிதை தமிழில் புழுக்களைப்பற்றி எழுதப்பட்ட ஒரே கவிதை என நினைக்கிறேன். யானை டாக்டரில் புழுக்களைப் பற்றி ஒரு பகுதி வரும். அதன்பின் இந்தப்பகுதி மேலும் கவித்துவமானது

புழு என்ற படிமம் உருமாறிக்கொண்டே இருக்கிறது இக்கவிதையில். முதலில் அது வலியின் நெளிவாகவும், அனைவரும் மிதிக்கும் மண்ணின் ஆழத்திலுள்ள ரகசியமாகவும் உள்ளது. எழாத நாகபடம், கொல்லாத விஷம் என்று முடியும்போது பலமுறை புழு என்பதன் அர்த்தம் மாறிவிடுகிறது.

புழு பற்றிய எல்லாமே சொல்லி கடந்துசெல்லப்படுகின்றன. சுழித்துச் சுழித்து பசியென்ற சொல்லையே எழுதிக்கொண்டிருப்பவை. எழுதுகோலும் எழுத்துமாக ஆகிவிடுபவை. பசி என்ற வைஸ்வாநரனின் வடிவங்கள். தன்னைத்தானே தழுவிக்கொள்பவை.

கடைசிவரியில் புழு சொல்லாகிவிடுகிறது. ஆழத்தில் நெளியும் சொல்லாக. இந்தக்கவிதை வெண்முரசில் இருந்து தனியாக பிரிந்துவிட்டது இப்போது. ஆனால் சொல்பெருவெளியின் ஆழத்து நெளிவு என்னும்போது வெண்முரசாகவும் உள்ளது


எஸ்.சரவணக்குமார்.