Thursday, January 31, 2019

பதரி நிழலில்

அன்பு  ஜெ ,                 
                              

 "கார்கடல் 31 " இதில் "காலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான்.  "          

இக்காட்சிகள் "பத்ரிகாசரமத்தில்" நரநாராயணனாக இருவரும்  தோற்றமளிப்பதை , மெல்லிய பனித்தீற்றலாக கடந்தது என்னை !                           ஆன்மா தானான இன்பத்திலிருந்து விடுபட்டு  , பரமாத்விற்கு  தான் அடிமைநிலை யென உணர்ந்து  . அதற்கான தளைகளைத்  தாண்டி  , பேரின்ப வீடெய்தி அடையும் நிலையைக் குறிக்கும் அர்த்த பஞ்சகத்தை உணர்த்தும் ,  திருமந்திரமெனப்படும்  எட்டெழுத்து மந்திரத்தை , குரு ஸ்தானத்திலிருந்து  நரனுக்கு உபதேசித்ததை காட்சி படுத்தி கடந்து சென்றதைக் கண்டு வியக்கிறேன்.                                                    

 இன்ப துன்பங்கள் , விருப்பு  வெறுப்புக்கள் எனும் இரட்டையைக் கடந்து ,தனது தவத்தாலும் ,ஞானத்தாலும் பேரின்ப நிலையெய்தும் யோகிகள் எனும் வரிகள் வந்துள்ளது .இதனையே  கைவல்யநிலை யென வைணவம் பேசுகிறது, தன்னைத் தானே அனுபவித்தல். இதற்கு  உதாரணமாக அரவிந்தரை , எனது தந்தை  மேற்கோள் காட்டியதும் நினைவில் வந்தது கண்ணனும் இக்கேள்வியையே அர்ச்சுனன் முன் வைக்கிறான் என்றே நினைக்கிறேன் .அவனும்  பேரின்ப  வாழ்வினையும் இழந்து  நிற்க முற்படும்போது , கண்ணனும் எள்ளலுடன்  , " இறப்பின் கணத்திலிருக்கும் நீ யே ! தெரிவு செய்வாய் வாழ்வா ,சாவா என்று உன் திடமான சொல்லினால் ! என்கிறான்.

ஆனால்  அவனோ , வாழ்வென்று கவர்ச்சியாக  மணம்  வீசும்  பத்மத்தைப் போன்ற  இவ்வுலக வாழ்வினையே வேண்டி நிற்க்கின்றான், ஆனால்  வெகு சூஷ்மமாக வாழ்வென்று மரணமும் , சாவெனும் தொணியில்  பேரின்ப வாழ்வும் விளக்கப்பட்டுள்ளது இதில்.                        

அன்புடன் ,
                                                 
செல்வி .அ.

வஞ்சம்
ஜெ

மகாபாரதப்போரில் இருந்துகொண்டு இந்த வரியை வாசிக்கையில் எவ்வளவோ அர்த்தங்கள் உருவாகின்றன


வஞ்சம் கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை? எவ்வளவு? எதுவரை? ஒவ்வொன்றும், அனைத்தும், இறுதிவரை என்று உரைக்கில் மட்டுமே வஞ்சத்தில் வெற்றியை அளிக்கின்றன. வஞ்சநிறைவின் இனிமையை அளிக்கின்றன.


வன்மம் மனதில் இருந்தால் அது எரித்து அழித்துவிடும் என்பதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். இதை அன்றாட வாழ்க்கையில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் நான் பார்த்தவரை வஞ்சம் நிறைந்த மனம் உள்ளவர்கள் வேறு ஏதோ வகையில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மிகப்பெரிய குறை மனசில் உள்ளது. அதைத்தான் இப்படி நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்


என் வாழ்க்கையிலேயே இதைப்பார்த்திருக்கிறேன். தீராத வன்மத்துடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அவர்கள் எல்லாருமே துக்கத்தால் அவதிப்பட்டவர்கள். புருஷனால் கைவிடப்படுவது. கொடுமைப்படுத்தப்படுவது. நிர்க்கதியாக நிற்பது. அன்பே கிடைக்காமல வாழ்வது. இப்படித்தான் ஆகியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள வெறுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.

டி.சுசீலா

குந்தியின் முகம்
அன்புள்ள ஜெ

குந்தி கர்ணன் சந்திப்பு நான் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் சென்று நிறைந்தது. அதை உணர்ச்சிமிகுந்த ஒரு சந்திப்பாக நான் நினைத்திருந்தேன். கூடவெ கர்ணனின் வாக்கை பெற்றுக்கொள்ளும்போது குந்திசெய்யும் தந்திரங்களும் வெளிப்படும் என்று நினைத்தேன். ஆனால் கர்ணனின் வெவ்வேறு ஆழங்கள் பேச்சு வழியாக வெளிப்படுகின்றன. கர்ணன் யார் என்பதை இத்தனை நெருக்கமாக இதற்குமுன் உணர்ந்ததே இல்லை. அவன் சூரியனைப்போல குற்றமே இல்லாத ஆணழகு கொண்டவன். மலர்களைப்போல பெண்கள் அவனை நினைத்து ஏங்குவார்கள். அணுகவே முடியாது. இன்னொருவனுக்கு இடம்கொடுக்கும் மனமே இல்லாதபடி நிறைவான ஆண் அவன் .ஆகவே அவன் self cenrterd ஆக இருக்கிறான். ஆகவேதான் அவனால் பிறரை நினைக்கவே முடியவில்லை. அவனைப்பற்றி அத்தனைகூர்மையாக குந்தி சொல்லும் இடம் ஆழமானது. இதுவரை நாம் வாசித்த அத்தனை கர்ணனைப்பற்றிய சித்திரங்களையும் இதை வைத்து முழுமையாக்கிக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

பாஸ்கர் எம்

ஆழம்ஜெ

கர்ணனுடன் பேசும்போதெல்லாம் குந்தி இங்கே வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இந்தக்குடிலுக்கு அடியில் எவர் இருக்கிறார்கள் என்று கேட்கிறாள். அங்கே இருப்பது அந்த நாகம். அந்த நாகம் வரும் பாதாளவழி திறந்திருக்கிறது. நாகங்களை இந்த நாவல்முழுக்க நீங்கள் ஆழ்மனதில் வாழும் உணர்வுகள் என்றுதான் சித்தரித்திருக்கிறீர்கள். முதல்நாவலான முதற்கனலே அதைத்தான் சொல்கிறது. அப்படியென்றால் அங்கே இருப்பது கர்ணனின் ஆழ்மனம்தான். அவள் அறியவே முடியாத ஒன்று. அவள் அவனை வென்று செல்கிறாள் என நினைக்கிராள். அது உண்மை அல்ல. அவனுடைய ஆழ்மனதை அவள் அறியவே இல்லை. அதை உணர்கிறாள். ஆனால் அவளுக்கு அதற்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. ஆகவே அவள் சோர்ந்துதான் திரும்பிச்செல்கிறாள்

சத்யமூர்த்தி

ஜைத்ரம்இனிய ஜெயம் 

பயணத்திலிருந்து தம்பி தொலைபேசினான் . புவனேஸ்வர் ல நிக்குதுப்பா வண்டி என்றான் .  பேசிய கணம் நானும் பயணத்திலிருந்தேன். பேருந்து ஜன்னலுக்கு வெளியே ,  விரிந்த நீர்வெளியை, வான் பரப்பை , பொன்னென ஒளிரவைத்துக் கொண்டிருந்தது அதிகாலைச்சூரியன்.  இயல்பாக உள்ளே எழுந்த சித்திரம் கொனார்க் சூரியனார் கோயிலில் வளாகத்தில்  அமர்ந்து கண்ட, கோயிலை நிழலாக்கி  அணைந்து கொண்டிருந்த அந்திச் சூரியனின் இறுதித் தங்கப் புன்னகை . புலரியில் ,அந்தியில் ஒரு குறிப்பிட்ட கணத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் , அந்திக்கோ புலரிக்கோ சம்பந்தம் அற்ற கதிரவனின் பொற்சிரிப்பின் தழளொளி  .

அன்றைய இரவு படுக்கையில் கிடந்தபடி யோசித்தவைகளில்  சூரியனார் கோவில் குறித்த கதைகளும் அடங்கும் . கதைகள் ஒன்றின் படி , தனது நோயை குணமாக்கிய சூரியனுக்கு கோவில் கட்ட விழைகிறான் நரசிம்ம தேவன் . பாரத நிலத்தின் மிகப்பெரிய கோயிலாக இது அமையவேண்டும் என கனவு காணுகிறான் .கனவு ஆணவமாக மாறுகிறது . தலைமை சிற்பியை கசக்கிப் பிழிகிறான். [ பச்சைத் தமிழன் ராஜராஜன் எத்தனை மேன்மை கொண்டவன் .பெருந்தச்சருக்கு வெற்றிலை மடித்து தந்தெல்லாம் சேவகம் செய்திருக்கிறான் ;) ]

கும்பாபிஷேகத்துக்கு மன்னன் குறிப்பிட்ட நாள் நெருங்குகிறது .சிற்பியோ கோயில்  விமானம் உச்சி மீது , இறுதியாக பூட்டாக  வைத்து முடிக்கும் கலசத்தை , இத்தனை பெரிய விமானத்தில் வைத்துப் பூட்ட வகை தெரியாமல் திணறுகிறான் . மன்னன் நாள் தவறினால் சிற்பிகள் அனைவரையும் தலை வெட்டி வீசுவேன் என கோபப்படுகிறான் . இந்த சூழலில் சிற்பியின் பதின்வயது ஒரே மகன் அந்த சிக்கலுக்கு தீர்வை சொல்லுகிறான் .

கோவில் பணி சிறப்பாக முடிய ,மன்னன் அனைவர்க்கும் பரிசு வழங்கி பாராட்டுகிறான் .அதே சமயம் இப்படி ஒரு கோயில் இதற்க்கு பிறகு பாரத நிலத்தில் கட்டப்படக் கூடாது எனும் தன்முனைப்பில் ,சிற்பியின் மகனுக்கு மரண தண்டனை விதிக்கிறான் . தலைமை சிற்பி உன் காலத்துக்குப் பிறகு ,இந்த விமானம் இடிந்து சரியும் என சபிக்கிறான் . 

மகன் தனது இறுதி ஆசையாக அந்த விமானத்தின் உச்சியில் இருந்து விழுந்து உயிர் துறக்க விரும்புவதாக தெரிவிக்க ,மன்னன் அனுமதிக்கிறான் .  மகன் விமானத்தில் ஏறும்போது ,விமானத்தின் திசை நோக்கும் சிற்பங்களின் ஒன்றான சிங்க சிற்பம் ஒன்றினை ,[அது விமானத்தின் பூட்டுக்களில் ஒன்று ] தனது தொழில் அறிவு கொண்டு ,சற்றே அணுவிடை அளவு நிலைபெயர செய்து விட்டு ,உச்சிக்கு சென்று உயிர் தியாகம் செய்கிறான் .

மன்னனின் காலம் முடிந்ததும் ,விமானத்தில் அந்த சிங்கம்தான் முதலில் உடைந்து விழுகிறது . கற்களின் எடையை தாங்கும் சமதளத்தின், பரப்பளவு விசைகள் கொஞ்சம் கொஞ்சமாக கணக்குகள் பிழைக்க , எஞ்சுவது இதோ இப்போது நாம் காணும் கோவில் .

இந்த கார்கடலின் வாசிப்பின் தொடர்ச்சியாக அந்த கோனார்க் கோயிலுக்கு என்னுள் வேறொரு முகம் அமைந்து விட்டது. 

ஆம்  எனக்கு இனி  அதன் பெயர் ஜைத்ரம். 

போர்க்களத்தில் கர்ணன் நீங்கிய பின் தனித்துக் கிடக்கும் அவனது பொற் தேர் .

ஜைத்ரம் கர்ணன் ஆரோகணிக்க வந்த சூரியனார் கோவில் . வெகுசீக்கிரம் ,மீண்டும் சென்று ஜைத்ரத்தை காணவேண்டும் ;)
 

கடலூர் சீனு

Wednesday, January 30, 2019

வியூகம்
ஜெ

அஸ்வத்தாமனின் உள்ளத்தில் ஒரு வியூகம் எப்படி உருவாகிறது, அது எப்படி வளர்கிறது என்பதைப்பற்றிய வர்ணனை பார்த்தேன். நான் ஒரு கட்டிட வரைவாளர் –பொறியாளர். கட்டிடத்தை மனதில் ஒரு சின்ன ஐடியாவாகத்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அந்த ஐடியா இப்படித்தான் வரும். அந்த இடத்தைப் பார்த்ததுமே ஒரு கொந்தளிப்பு போல அந்த ஐடியா வந்துவிடும்.

அதன்பின் வரைந்து விடுவோம். பாகம்பிரித்து வேலை ஆரம்பிக்கும். வேலை நடக்கநடக்க நம் மனசிலிருந்து கட்டிடம் போயே போய்விடும். கொஞ்சநாள் கழித்து ஃபினிசிங் நடக்கும்போதுதான் மீண்டும் கட்டிடம் நம் கண்ணுக்குத்தெரியும். அடடா இது நமக்குள் இருந்ததா என்ற எண்ணம் வரும். பார்க்கப்பார்க்க சலிப்பாகவே இருக்காது. ஆனால் கட்டிமுடித்தபின்னர் மறுபடியும் குறைகள் மட்டும்தான் தெரியும்.

திருத்தித்திருத்தி ஒரு கட்டத்தில் அப்படியே விட்டுவிடவேண்டியதுதான். கடைசியில்தான் நமக்கு அந்தக்கட்டிடம் நம் படைப்பு என்ற நினைப்பே வரும். அந்த பலபடிகளை அந்த இடத்திலே வாசித்தேன். நன்றாக இருந்தது

செல்வக்குமார் டி.எம்

குந்தி எனும் மந்திரம்
அன்புள்ள ஜெ

குந்தி உள்ளே நுழையும்போது அவளிடம் கர்ணன் சொல்லும் வரி அப்போது பொதுவான ஒரு வரியாகவே இருந்தது

அரசகுடியினர் பெருங்கவிஞன் ஒருவனின் கவிதைச்சொல்போல சொல்லில் செறிவுகொண்டவர்கள் என்று ஒரு சூதர்சொல் உண்டு. தாங்களோ ஓர் ஊழ்கநுண்சொல்லின் ஆழம் கொண்டவர்கள். இப்போது அச்சொல் மேலும் ஒலியின்மை நோக்கி சென்றுள்ளது

ஆனால் அவள் விடைபெற்றுச் செல்லும்போது அந்த வரி பலமடங்கு அர்த்தம்கொண்டதாக ஆகிவிட்டது. அவள் எத்தனை ஆழமானவள் அவளுக்குள் என்னென்ன ஓடுகிறது என்று பார்க்கையில் அவள் ஒரு மூலமந்திரம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீம் என்பதுதான் துர்க்கையின் மந்திரம். துர்க்கையின் மந்திரம் தான் இவளுக்கும். இவளுடைய சூழ்ச்சி கோபம் அன்பு அரவணைப்பு விளையாட்டு எதையும் நம்மால் முழுமையாகப்புரிந்துகொள்ளவே முடியாது. தியானிக்கத்தான் முடியும்

குந்தி எவ்வளவு ஆழமாக கர்ணனைப்புரிந்து வைத்திருக்கிறாள். அவனையே நினைத்திருந்ததனால் மட்டும் அல்ல. அவள் தேவி என்பதனால்தான்

ஸ்ரீனிவாஸ்

பெண்கள் அறிந்தவன்
அன்புள்ள ஜெ

குந்தி கிருஷ்ணனைப்பற்றிச் சொல்லும்போது அவன் இந்த யுகத்தின் நாயகன் அடுத்த யுகத்தின் சிருஷ்டிகர்த்தா என்று சொல்லும் இடம் என்னை மெய்சிலிர்க்கச்செய்தது. என்னதான் தன் பிள்ளைகளைப் பற்றியே கவலைப்படுபவளாக அவள் இருந்தாலும் அவளுக்கு உண்மையில் இளைய யாதவன் யார், எதற்காக பிறப்பெடுத்திருக்கிறான் என்பதெல்லாம் தெரிந்திருக்கிறது. வெண்முரசில் வரும் எல்லா பெண்களும் கிருஷ்ணனை அணுக்கமாக அறிந்திருக்கிறார்கள். அறியாதவர்கள் ஆண்கள் மட்டும்தான். பெண்ணாக இருந்தமையால்தான் அர்ஜுனனால் கண்ணனை அறியமுடிகிறது

சம்பத்குமார்

மறுபக்கம்அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று கார்கடலில் வாசித்த   "மறுபக்கம் பாண்டவர்கள் மெல்லிய துடிப்புடன் நின்றிருந்தனர். ஏதோ ஒன்று நிகழுமென அவர்கள் எவ்வண்ணமோ அறிந்திருந்தனர். அவ்வண்ணம் முடிவதற்குரியதல்ல அது என்பதையே அவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். அது பிறிதொன்று" என்ற இந்த வரிகள் மிகவும் உலுக்கியது. மெல்லிய துடிப்புடன் காத்திருந்த ,வெறும் ஊழின் முன் இருந்த கணங்கள், "முடியாது இப்படி இந்த நிகழ்வு முடியாது அவர் கண்டிப்பாய் நம் பக்கம் வருவார் ,"அவர் அவனை விட்டுவிட மாட்டார் " என பேசியபடி கழித்த இரவுகள். "மிராக்கிள் அல்லது புதுமை " ஏதாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கை. இன்றும் அப்படிதான் ஒவ்வொரு நாளும் கழிகிறது. ஒவ்வொருவருக்கும் வாழ்வு இப்படிதான் இருக்கிறதா?   

கார்கடல் 31ம் அத்தியாயத்தில்வரும் வரியான "இளைய யாதவர் குறுகிய மூங்கில் கணுப்படிகளினூடாக வண்டுபோல் தொற்றி கீழிறங்கி வந்தார். அவரது மேலாடை காற்றில் பறந்தமையால் விண்ணிலிருந்து இறகு விரித்துப் பறந்து இறங்கி மண்ணில் நிற்பவர் போலிருந்தார்" என்று வாசிக்கும்போது மிகவும் கிளச்சியாக இருந்தது. ஏனென்றால் இது எனக்குள் கிடந்த கிறிஸ்துவின் படிமம். நான் படித்த பள்ளியின் உள்ளே இருந்த தேவாலயத்தில் கிறிஸ்து வானத்தில் அங்கி பறக்க தோமாவுக்கு காட்சி தர எழும்  ஒரு ஓவியம் இருந்தது. எவ்வளவோ வருடங்கள் கடந்தபின்னும் இந்த வரியை வாசிக்கும்போது கண்முன் அதை கண்டேன். இளையயாதவர்  உயிருக்கு போராடிகொண்டிருக்கும் அர்ஜுனனை எழுப்புவது கிறிஸ்து மரித்த லாசரை எழுப்புவது போல் இருந்தது. கிறிஸ்துவும் லாசர் சுகவீனமாய் இருக்கிறான் என்று தெரிந்தே தாமதிப்பார். கிருஷ்ணனும் அப்படியே . ஆனால் கிறிஸ்து இறந்து நான்கு நாள் ஆன பின் வருவார். இது நடப்பது போர்களத்தில். கிறிஸ்து லாசரை உயிரோடு எழுப்பியபின் தனது வாழ்வின் கடைசிக்குள் செல்வார். அது அவரே தன்மீது தொடுத்துக்கொண்ட போர். 

ஆனால் அர்ஜுனனை பார்க்க வந்த இளைய யாதவர் .....................அர்ஜுனனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குனிந்து அவன் காதில் “பார்த்தா!” என்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா!” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா!” என்று அவர் மூன்றாம் முறை அழைத்தபோது இமைகள் நலுங்கின. அவன் “ம்ம்” என்று மறுவிளி கேட்டான்.
காலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களைச் சூழ்ந்து நீரோசையும் காற்றோசையும் நிறைந்திருந்தன. “இது பிறிதொரு காலம், பாண்டவனே” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்று சென்று நின்று நான் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ எழ விழைகிறாயா? இங்கு இன்னும் எஞ்சியுள்ளதா?” என்றார். “ஆம். எனக்கு ஆணையிடப்பட்டதை நான் இன்னும் முடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன். “அனைத்தையும் செய்து முடித்தவன் ஆவநாழி ஒழிந்தவனும்கூட” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒழிந்து இங்கு அனைத்திலிருந்தும் பறந்தெழவே விழைகிறேன். இப்பிறவியில் இங்கு எச்சமென எதுவும் இருக்கலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.
“நோக்குக, இவ்வினிய நீர்! இவ்விளங்காலை. இக்குளிர்காற்று. இங்கு அனைத்தும் எத்தனை இனிமை கொண்டுள்ளன! அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன? இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது? அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்திலும் உள்ளது! மரத்தில் வேர்முதல் இலைவரை தேன் மறைந்திருப்பதைப்போல” யாதவரின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றான்.
“சிறிய வாழ்வில் புழங்குந்தோறும் இன்பமும் துன்பமும் இனிமையும் கசப்புமென இவ்வுலகு நிலைமாறி அலைகொள்கிறது. இங்கு செயல்யோகியென ஒருவன் மாறுகையில் துன்பங்கள் மீதும் கசப்பின் மீதும் ஆளுகை கொள்கிறான். இன்பத்தை தனித்தறியத் தொடங்குகிறான். ஞானத்தால் தவத்தால் அவன் வீடுபேறடையுந்தோறும் இனிமை மட்டுமே எஞ்சுகிறது. அமுதொன்றே எஞ்சும் ஒரு நிலையும் உண்டு. அதில் அமர்ந்தோர் யோகிகள். அவ்வமுதனைத்தையும் உதறி இங்கிருந்து செல்பவனே வீடுபேறடைபவன்” என்றார் இளைய யாதவர். “உன் நெற்றியின் ஊற்றுக்கண் திறந்து இனிமைப் பெருக்கு எழுந்து உடலின் ஒவ்வொரு கணுவும் உவகை கொள்ளும் தருணம் ஒன்றிலிருந்து முற்றிலும் உதறி மேலெழ இயலுமா உன்னால்?”
“ஆம், இக்கணம் அதை என்னால் உறுதியாக சொல்ல இயலும். இங்கிருக்கும் பேரின்பங்கள் அனைத்தும் திரண்டு ஒரு துளியென ஆகி என் நாவிற்கு எட்டும் தொலைவில் முழுத்திருந்தாலும் ஒதுக்கிவிட்டு முன்செல்லவே விழைவேன்.” இளைய யாதவர் நகைத்து “எனில் சொல்க, மீண்டெழ விழைகிறாயா? இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க!” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது. அதனுள் உள்ளன அனைத்து அழகுகளும் இனிமைகளும். காற்றில் எழுந்து பரவி அனைத்து சித்தங்களுக்குள்ளும் நுழைந்து அருகே இழுக்கின்றது அதன் நறுமணம்.”
“உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா?” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க! நான் வெளியேறும் வழி எது?” இளைய யாதவர் அவனருகே குனிந்து “அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”
அர்ஜுனன் “ஆம், நான் அதற்கு ஒருக்கமே” என்றான். “எனில் எழுக!” என்று சொல்லி இளைய யாதவர் அவன் நெற்றிப்பொட்டை தன் கைவிரலால் தொட்டார். அவன் வலக்கால் இழுத்துக்கொண்டது. முகம் கோணலாகி உதடு வளைந்து எச்சில் வழியத்தொடங்கியது.

இதை அப்படியே கிறிஸ்து -லாசர் உரையாடல் போல் வாசித்தால் வேறொரு உலகு திறக்கிறது. பைபிளில் இது இல்லை. உண்மையில் ஒரு ஞானி இப்படிதான் பேசியிருப்பார். அது சுற்றி உள்ளவர்களுக்கு புரியவேண்டுமே ? கதையின் பாதையில் குறிக்கிடுகிறது என மேற்கத்திய பதிப்பு கம்பெனிகளின் எடிட்டர் போல் வெட்டி இருப்பார்கள்.அப்ப வெட்ட ஆரம்பித்தவர்கள்தான் இன்னும் புரிந்துகொண்ட பாடில்லை.கிருஷ்ணனுக்கு எப்படி அர்ஜுனனோ அதேபோல் லாசரும் அவரும் அவரது சகோதரிகளும் கிறிஸ்துவுக்கு நண்பர்கள் .
  ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Tuesday, January 29, 2019

அபிமன்யுஅன்புள்ள ஜெயமோகன் சார்,


அபிமன்யு கதாபாத்திரம் குருஷேத்திரத்தின் மிகவும் முக்கியமான ஒரு கண்ணி.ஒரு வகையில் நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் வாழும் வாழ்க்கை. ஒன்றை பிடித்துகொண்டு அடம் பிடித்து அதனில் நுழைந்து அதிலேயே உழண்டு வழிதெரியாமல் திக்கி திணறி நிற்பது. முட்டும் போது திரும்பி வர வழி தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இன்னும் கொஞ்சம் தூரம்தான் இன்னும் கொஞ்சம் தூரம்தான் என பதமவியூகத்தினுள் செல்பவரே மிகுதி.


 ஒட்டுமொத்தமாக வாழ்க்கை அப்படிதான் என்றாலும் அதில் எதோ ட்ரிக் இருக்கிறது. வாழ்க்கை கைவிட்டுபோவதை, முடிவில்லாமல் செல்வதை, அது ஒரு பொறி என்பதை  அறிந்து திரும்பி பின்னால் வர முடியும் என்று தோன்றுவதே இல்லை.புரியும்போது காலம் எண்ணும் பத்மவியூகம் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பிக்கிறது. அரைகுறையாய் போர்களத்திற்குள் வந்தவர்கள் தள்ளபட்டவர்களின் கதையை நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறது.

" இருபது  வருடத்திற்கு முன் பார்த்த "கிரீடம்" படத்தில் வரும் சேதுமாதவன் இன்னும் நெஞ்சில் ஓரத்தில் துடித்துக்கொண்டுதான் இருக்கிறான். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சேதுமாதவன்  தான் தான் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அப்போது தெரியவில்லை நானும் ஒரு பத்மவியூகத்தினுள் நுழைந்துகொண்டிருக்கிறேன் என்று. இப்போது சேதுமாதவன் நான் தான் என்று  ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் பத்மவியூகம் என்பதை உணர்த்து  குருஷேத்திரதிற்கு உண்மையாய் தயாராகிறவர்கள் பாக்கியவான்கள்.  


முதற்கனலில் உத்தங்கர்  ஜனமேஜேயனிடம் "குருவம்ச மாவீரன் அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு தன் பதினாறாவது வயதில் குருஷேத்ரப் போர்க்களத்தில் மடிந்தான். அவன் மனைவி உத்தரைக்கு அப்போது பதினாறு வயது. அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். 

அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடியாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்" என்று கூறுகிறார். ஆனால் அபிமன்யுவின் மைந்தன் பரீக்ஷித் மூலம் தான் குருகுலம் தளிர்க்கிறது. பத்மவியூகம்  என்னும் சர்ப்பத்தின் வளைவுகளுக்குள்  சிக்கிகொண்டவர்கள் சொல்லவருவது எதை ? 

அர்ஜுனனுடன் துவாரகையை விட்டு வெளியேறியபின் சுபத்திரை கூறுகிறாள்"இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்று.அதற்கு அர்ஜுனன் அவளை பார்க்க  "வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்று கூற ,அர்ஜுனன் அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். 

இன்று வெண்முரசில் கிருஷ்ணன் அர்ஜுனனோடு கடந்த காலத்தின் நதியில் நின்று பேசும்போது அர்ஜுனனும் வெளியேறமுடியாமல் தவிக்கிறான். வெளியேறிவிடவேண்டும் என்று துடிக்கிறான். ஆனால் அதற்கான விலை என்ன ?  நாம் செயல்களின் மூலம் வாழ்ந்தாலும் தினமும் அறுந்து தெறிக்கும் ஒட்டவே முடியாத பல்லியின் வால்கள் எத்தனை?  அவைகள் துள்ள துடிப்பது போலவே நமது மனம்  துடிக்கிறது.

காண்டீபத்தில் ஒரு கல்மண்டபத்தில் நாடோடியாய் இருக்கும் அர்ஜுனனுக்கு வணிகர்கள் மூலம் அபிமன்யு பற்றிய நினைவுகள் கிளறப்படுகின்றன. ஒரு வணிகன் “சுபத்திரை இப்போதும் இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”  என்று மற்றொரு வணிகனிடம் கூறுகிறான். 

அதை  போர்வீரனின் வேஷத்தை சூடிகொண்டிருக்கும் அர்ஜுனன் கேட்டுகொள்கிறான். அவனின் பெயரில் அமைந்த மாபெரும் நகரான இந்திரபிரஸ்தத்தில் பிறக்கும் அபிமன்யுவை பற்றி அறியும்போது அவன் நாடோடி.  அபிமன்யுவை அவன் சந்திக்கும்போது கூடவே சுஜயன், சுருதகீர்த்தி ,சுபத்திரை இருக்கிறார்கள்.அந்த சிறுகுழந்தை அபிமன்யு கலிங்க இளவரசியை சிறைபிடித்து வரபோவதாகவும் , பிறகு சிறிதுநேரம் கடந்தவுடன்  எல்லா குழந்தைகளையும் போல அல்லது அவனது இயல்பின்படி "அவள் கெட்டவள் " என கூறி சிரிக்கிறான். 

சுபத்திரை அர்ஜுனனின் கண்ணையும், வார்த்தையையும் கண்காணித்துகொண்டே அபிமன்யுவை பூரிப்பாய் பார்த்துகொண்டிருக்கிறாள். மரத்தில் தொங்கும் ஒற்றை மாங்காய் காண்டீபத்தால் அர்ஜுனனால் வீழ்த்தப்பட அதற்கு சுஜயனும் அபிமன்யுவும் முறைத்துகொள்வதை அர்ஜுனன் பெருமூச்சுடன் பார்ப்பதும் காண்டீபத்தை பார்ப்பதும் நடக்கிறது. அரசகுடியினர் ,உயர்குடியினர் கனவுகளே வேறு. அவர்கள் சிறுவயதிலே வேறுவகையில் வளர்க்கபடுகிறார்கள். அதை சாமானியர்கள் புரிந்துகொள்ள முடியாதுபோலும். ஆதலால் இன்றும் அரச,உயர் குடியினரின் குழந்தைகளை,அவர்களின் நடத்தைகளை கண்டு சாமானியன் திகைக்கிறான். 

வெறும் பாலியல் நடத்தைகளை கொண்டு அவர்களை திரித்து திரித்து மகிழ்கிறான். அவர்கள் இரண்டு வயதிலே பாலியலை அறிந்தவர்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை. பிறகும் அவர்கள் வெற்றிகரமாக இருப்பது அவனின் அனைத்து கணிப்புகளையும், அடித்து நொறுக்க வெம்பி வெறுத்து கூச்சலிடுகிறான்.    

இந்திரபிரஸ்தத்தில் ராஜசூயம் பற்றி ஆலோசனை நடக்கும்போது அர்ஜுன் கொஞ்சம் யோசிக்க சுபத்திரையின் மைந்தன் "“எந்தையே, தங்களிடமிருந்து அச்சத்தை நான் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் விரும்பினால் இந்த வேள்வி கோரும் அனைத்துப்போர்களையும் நான் ஒருவனே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். அதற்கு  அர்ஜுனன் ஏதோ சொல்ல முயல்வதற்குள் “அதற்கான ஆற்றல் எனக்குண்டு என்பதை தாங்களே நன்கறிவீர்கள். இந்த அவையும் அறியும்” என்றான். “தனிவீரத்திற்குரிய களமல்ல இது மைந்தா” என்று அர்ஜுனன் பொறுமையிழந்து சொன்னான்.

“நான் உரைப்பதே வேறு. நாம் பாரதவர்ஷமெனும் பெரும் களத்தில் ஆடப்போகிறோம்.” அபிமன்யு “ஆம், ஆனால் ஆடுவது நானோ நீங்களோ அல்ல. அன்னை. நான் அவர் அறைக்குள் செல்லும்போது நாற்களத்தை விரித்து அவர் ஆடிக்கொண்டிருப்பதை கண்டேன். இது என்ன என்றேன். இது மகதம் இது புண்டரம் இது வங்கம் இது அங்கம் என்று எனக்கு சொன்னார்கள். எந்தையே, நாற்களத்தில் அவர் முன்னரே வென்றுவிட்டார். அவர் சொல்லட்டும்” என்றான்.

அர்ஜுனன் சினத்துடன் “நாம் பேசிக்கொண்டிருப்பது போரைப்பற்றி” என்றான். “ஆம், போரை நிகழ்த்துவது அன்னை. நாம் அவர் கையின் படைக்கலங்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அபிமன்யு. பதினைந்து வயதில் அபிமன்யு இப்படி பேசு அனைவரும் அவனை மதிக்கிறார்கள்.  பிறகு உத்ரையை மணந்து , இன்று போரில் பத்மவியுகதினுள் நுழைய காத்திருக்கிறான். அவனுக்கான பத்மவியூகத்தை அமைத்தவள் பாஞ்சாலிதானா? 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

இணைதல்ஜெ

முதற்கனலை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். கணியன் பூங்குன்றனின் வரிகளுக்குச் சமானமான வரிகளாக இந்த வரிகள் வந்தன  என்ற வரிகளை இங்கே இப்படிக் கண்டது ஒரு பெரிய ஆச்சரியமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,.

நெடுநீர்வழிப்படும் புணையெனப்போகும் இவ்வாழ்வில் பெரியோரென்றும் சிறியோரென்றும் எவருமில்லை.

நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின்  மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!


வெண்முரசின் சாராம்சமே இதுதான் என தெரிந்தது. தமிழையும் இந்தியாவின் மெய்ஞான மரபையும் இணைப்பது. இதை ஒற்றை உரையாடல்பரப்பாக காட்டுவது. அந்த மகத்தான இலட்சியத்தை இங்கே கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்.

தமிழகத்தின் ஞானமாகிய சைவம், வைணவம் பௌத்தம் சமணம் அனைத்துமே இந்திய அளவில் முகிழ்த்து வலர்ந்தவை. நாம் மொழியாலும் கருத்தாலும் ஒன்றாகவே இருந்தோம். வெண்முரசு அதை உறுதிசெய்யும் காவியம்

வணக்கம்

திருஞானசம்பந்தன்

நஞ்சுஜெ

கர்ணன் குந்தியிடம் சொல்லும் இடம் இது

ஒரு போர் எந்த நஞ்சினால் தொடங்கப்பட்டதோ அது முற்றழியாமல் ஒருபோதும் முடிவடையாது. இப்போரை இன்று இவ்வண்ணம் சில சூழ்ச்சிகளினூடாக நிறுத்துவோமெனில் அந்நஞ்சு எஞ்சியிருக்கும். ஆழத்தில் புளித்து நுரைத்து பொங்கும். என்றேனும் மேலும் விசை கொண்ட ஒரு பெரும்போர் இங்கே எழும். இது உடலில் ஊறிய நஞ்சு. கட்டியென்று ஆகி பழுத்து சீழாகி உடைந்து வெளியேறட்டும். உடல் நலம்பெற அது ஒன்றே நாம் செய்யக்கூடியது

இந்தப்போர் ஒரு பெரிய அறுவை சிகிச்சை. இங்கே எல்லா கட்டிகளும் அறுத்து மருந்திடப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் மொத்த வெண்முரசின் கதையே நூற்றுக்கணக்கான கட்டிகள் இப்படி தலைமுறை தலைமுறையாக பழுத்து சீழ்கட்டிக்கொண்டே இருப்பதுதான். இதுவரை சொல்லப்பட்ட கதைகளுடன் ஒவ்வொருநாளும் போரில் புதியகதைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை கோபங்கள், வஞ்சினங்கள். எல்லாமே இந்த 18 நாட்களில் தீரப்போகின்றன

பாஸ்கர்

இரக்கமின்மை
அன்புள்ள ஜெ

குந்தி ruthless என்று சொல்லப்படவேண்டிய கதாபாத்திரம். அவள் தன் ஐந்து மைந்தர்களுக்காக கர்ணனிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். ஆனால் அவளுக்கு அவனை அர்ஜுனன் கொல்லமாட்டான் என்ற ஒரு சொல்லை கூற மனமில்லை. அவள் விடைபெற்றுச்செல்லும்போது நன்றாகவே தெரிந்திருக்கிறாள். அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவான் என்று. அவளே பலமுறை அதைச் சொல்கிறாள். கர்ணன் களத்தில் சாவான் என்று. அதைப்பற்றி அவள் இம்மிகூட கவலைப்படவில்லை. அந்த இரக்கமில்லாத பிடிவாதத்தைப் பார்க்கையில் இவள்தான் மகாபாரதப்போருக்கே அடிப்படையானவள் என்ற எண்ணம் வருகிறது. திரௌபதி எல்லாம் இவள்முன் ஒன்றுமே இல்லை

எஸ்.அரசன்

Monday, January 28, 2019

துயில்ஜெ

சிலநாட்களுக்கு முன் ஓர் அனுபவம் எனக்கு. காலை எழுந்ததுமே என் முதல் எண்ணம் முந்தியநாள் இரவிலே நான் நினைத்துக்கொண்டிருந்ததன் தொடர்ச்சி. நடுவே ஏழுமணிநேரம் தூங்கியிருக்கிறேன்

அதை எங்கேயோ வாசித்தேனே என்று தேடித்தேடி கடைசியில் கண்டுபிடித்தேன். அது வெண்முகில்நகரத்தில் வரும் வரி


துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் எண்ணங்களுடன் அன்றாடச்செயல்களுடன் அத்தனை உரையாடல்களுடன் அந்தச்சினமும் உடனிருந்தது.

ஒரு பெரிய கதையைச் சொல்லிச்செல்லும் நாவலில் இவ்வளவு சிறிய நுட்பமான அன்றாட விஷயம் வந்திருக்கிறது. மட்டுமல்ல அதை நான் ஞாபகம் வேறு வைத்திருக்கிறேன். வெண்முரசு காவியமாக ஆவது இத்தகைய சின்னச்சின்ன வரிகளின் வழியாகத்தான்

எம்.ராஜன்

குந்தியின் ஆடல்
ஜெ

குந்தி கர்ணனை உளவியல் ரீதியாகத் தாக்குவதைத்தான் நாம் மூன்று அத்தியாயங்களிலே காண்கிறோம். ஆனால் கர்ணன் குந்தியை மிக வலுவான ஓர் உளவியல் ஆயுதத்தால் தாக்கிவிட்டான். அவன் குந்தியிடம் கேட்கிறான் “சொல்லுங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி, உங்களுக்கிணையான அரியணையில் ராதையை உங்களால் அமரச்செய்ய இயலுமென்றால் சொல்க! உங்களை அன்னையென்று நானும் அவையில் ஏற்றுக்கொள்கிறேன்

குந்தியை விஷக்கத்தியால் குத்துவதுபோன்றதுதான் அது. அவளால் அதை தாளவே முடியாது. ஏனென்றால் அவள் வாழ்க்கைமுழுக்க வெறுத்துவந்தது ராதையைத்தான் என எவரும் ஊகிக்க முடியும். அவளுடைய இடத்தில் இருப்பவள். அவள் மகனை கொஞ்சி வளர்ப்பவள். ஆகவேதான் அவள் மேலும் சற்றுநேரம் கழித்து இன்னும் கூர்மையாகத் திருப்பி அடிக்கிறாள்.

அவள் கர்ணனிடம் சொல்கிராள். உனக்கு ராதை அணுக்கமானவள் அல்ல. எந்தப்பெண்ணும் அணுக்கமானவள் அல்ல. நீ தன்னந்தனியானவன் என்று. அவனை வீழ்த்தியபின் நீ அம்மாப்பையன் என்கிறாள். அதாவது ராதை உன்னை அணுகவே இல்லை, நான் அணுகிவிட்டேன் என்று. அந்த மனவிளையாட்டு நம் சூழலில் இருந்தே புரிந்துகொள்ளக்கூடியதுதான்

சாரங்கன்

பிள்ளைதின்னிஅன்புள்ள ஜெ

குந்தி கர்ணனை வேண்டிக்கொண்டு எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதை வாசித்தபோது எனக்கு நீங்கள் எழுதிய அன்னை என்ற கதைதான் ஞாபகம் வந்தது. ஒரு பெண் தன் குழந்தையுடன் படுத்திருக்கிறாள். அவள் ஒரு கனவு காண்கிறாள். அதில் அவள் வெளியே சென்று தன் குழந்தையைத் தின்னும் ஒரு பன்றியை கனவுகாண்கிறாள். தன் குழந்தையை வாயில் கடித்தபடி தெய்வமாக அமர்ந்துவிடுகிறாள்:

அந்தக்கதையைப்பற்றிய ஒரு பேச்சில் சில அன்னையர் தன் பிற மக்களுக்காக ஒரு மகனை கொல்வார்கள். பெரும்பாலும் மூத்தமகனை. நேரடியாக அல்ல. கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வார்கள். அவனை பிணைக்கைதிபோல வைத்து வேலைசெய்யச்செய்து தன் மற்றபிள்லைகளை வளர்ப்பார்கள். தன் மகனே ஆனாலும்கூட அந்த மூத்தமகனின் வாழ்க்கையை அழிப்பதைப்பற்றி கவலையே படமாட்டார்கள் என்று சொன்னீர்கள்

என் அப்பா அப்படிப்பட்டவர். 17 வயதில் அவர் வேலைக்குச் சென்றார். அவர் திருமணம் செய்துகொண்டது 51 வயதில் அதுவரை நல்ல சட்டைபோட என் பாட்டி விட்டதில்லை. ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட விட்டதில்லை. திருமணம் செய்துகொள்ளவும் அனுமதிக்கவில்லை. குற்றவுணர்ச்சியை உருவாக்கிக்கொண்டே இருந்தார். கடைசித்தங்கைக்கு திருமணம் ஆனபின்னாலும் கூட திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. எட்டு பெண்கலுக்கு சீர் செய்ய யார் இருக்கா, நீ திருமணம் செய்துகொண்டால் நானும் என் பெண்களும் தெருவில் நிற்கவேண்டும் என அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். ஆனால் என் அப்பா திருமணம் செய்துகொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே இறந்துபோனார். பாட்டி எங்களுடந்தான் இருந்தார்கள். அம்மா பாட்டியைப்பற்றி சொல்லும்போது பிள்ளையத்தின்னி என்றுதான் சொல்வார்கள். அப்பாவுக்குரிய வேலை அம்மாவுக்கு கிடைத்ததனால் நாங்கள் பட்டினி இல்லாமல் வாழ்ந்தோம்.

குந்தி போன்ற பெண்கள் நம் சமூகத்திலே இருந்துகொண்டேதான் இருக்கிறர்கள்


சுரேஷ்குமார்

அஸ்வத்தாமன்அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று கார்கடலை வாசிக்கும்போது அஸ்வத்தாமனின் பரிணாமம் அவன் விரும்பி வந்து அடைந்ததா? இல்லை அவனுக்கு கொடுக்கபட்டதா? என்று கேள்வி எழும்பியது.
 
கிருபி கருவுற்றிருக்கும்போது துரோணரின் சந்தோஷமான மனநிலை குறித்து "இதுதான் மகிழ்ச்சியா, இதைத்தேடியா மானுடர் இத்தனைநாள் ஓடுகிறார்கள் என்று வியந்துகொண்டான். ஆம், இதற்காக எதையும் செய்யலாம். இதற்காக பொறாமை கொள்ளலாம். வஞ்சகமும் செய்யலாம். மானுடனாக வாழ்வதில் இத்தனை இனிமை இருக்கையில் ஏன் நினைவறிந்த நாள்முதல் மனம் சுளித்தபடியே வாழ்ந்தேன்? காற்றுக்கு எதிர்த்து நின்று முறுக்கிக்கொண்ட மரம்போன்றவன் நான். என்னை தொலைவில் காண்பவர்கள் கூட என்னிலிருக்கும் அந்த முறுக்கத்தைக் கண்டுகொள்வார்கள். இதோ என் அகம் புரியவிழ்கிறது. இதோ கூட்டின் விளிம்புக்கு வந்த பூங்குஞ்சு தயங்கி சிறகடித்து காற்றிலெழுகிறது" என்று வெண்முரசு கூறுகிறது. அப்போதே துரோணர் அஸ்வத்தாமனுக்காக என்னவேணும் செய்யலாம் என்ற மனநிலைக்கு வருகிறார்.அச்வதாமனின் பிறப்பு அனைவரையும் குருஷேதரம் நோக்கி கொண்டுவந்ததின் முக்கியமான கண்ணி.  அச்வதாமனின் பிறப்பு நேரத்தை வைத்து ஜோதிடம் சொல்லும் கனிகர் "அனைத்து களங்களிலும் அனல் திகழ்கிறது. வாழும்நாளெல்லாம் எரிந்துகொண்டிருப்பான். பெருஞ்சினத்தால். வஞ்சத்தால். ஏன்? எவரிடம்? எதையும் களங்கள் சொல்வதில்லை.”  என்கிறார். பிறகு அச்தினபுரியில் ஒரு யானை பிறந்திருப்பதையும் அஸ்வத்தாமனும் யானையும் பிணைக்கபட்டிருப்பதையும் கூறி செல்கிறார். பிறகு கனவிலும் நினைவிலும் பால் பற்றிய எண்ணத்திலேயே இருக்கும்  அச்வத்தாமனுக்கு பால் வாங்கும் பொருட்டு கிருபியால் துரத்தப்படும் துரோணர் தனது குருகுல மாணவனாகிய துருபதனிடம் அவமானபட்டு அரற்றி புலம்பும்போது அவரின் அன்னை குசை தோன்றி  ’தாம்யத’   ‘தத்த’ ‘தயை’ என்னும் மூன்று வார்த்தையை மந்திரம் போல்  கூற கடுப்பாகி அவளிடம் இருந்து விலக முயல அவள் அனல் உருவாக விஸ்வரூபம் எடுக்க துரோணர் பயப்பட்டு தனக்கு ஒன்றும் வேண்டாம் என கூறுகிறார். ஆனால் அன்னையின் நிழல் என எழுந்தவர்கள்[ குதிரைகளா அவை ?] அவரின் சார்பாக  “இவனுள் ஓடும் காயத்ரிக்கு அனல்சிறகுகள் முளைக்கட்டும். அவள் தொட்ட இடங்கள் எரியட்டும்!” என அவளிடம் கேட்க அன்னை “அவ்வாறே ஆகுக!” என்றாள். துரோணரை போன்றே குலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும்,  இரக்கும்போது வணிகத்தினால்,நட்பினால் அவமானபட்டு அழிந்து போன கோடானுகோடி ஆத்மாக்களின் ஒற்றை நம்பிக்கை துரோணர். அவரின் வாரிசு அஸ்வத்தாமன். 

அஸ்வத்தாமனை பிறகு அஸ்தினபுரியில் துரோணர் அர்ஜுனுக்கு கல்வி வழங்கும்போது,அர்ஜுனனைவிட வீரமாய் நுட்பமாய் குதிரையை அடக்கி அர்ஜுனனின் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறான்.பிறகு இருவருக்கும் சண்டைவர அதில் அஸ்வத்தாமனை கொல்ல அர்ஜுனன் தொடுத்தவில்லில் யானை மாட்டுகிறது.துரோணர் கல்வியில் முக்கால்வாசி குதிரையை அடக்குவதை பற்றிதான் அர்ஜுனனுக்கு கற்றுகொடுக்கிறார். குதிரைகளின் அரசனாகிய தனது மகனை வெற்றிகொள்ளதான் அவனுக்கு கற்றுகொடுத்தாரா?.பிறகு குருதட்சணையாக பாஞ்சாலத்தை கேட்க அர்ஜுனன் துருபதனை இழுத்துகொண்டு அவர்முன் போட துருபதனின் ராஜ்ஜியத்தில் பாதியை தன் மகனுக்கு கொடுக்கிறார் ஆனால் துரோணரின் வஞ்சத்தை நேருக்கு நேர் கண்ட அர்ஜுனன் மனதில் "இக்கணத்தில் துரோணரின் பாதம் என் நெஞ்சிலிருந்து அகல்கிறது. இதோ அவர் இறந்து என்னிலிருந்து உதிர்கிறார். இதோ நான் இறந்து மீண்டும் பிறக்கிறேன்" என்று கூறுகிறான்.பிறகு அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சால நாட்டை விதுரரின் ஆலோசனைப்படி ஆள ஆரம்பிக்கிறான்.  மறுபிறவி எடுத்திருக்கும் துருபதன்  மனதை  புரிந்து கொண்ட அவரின் அமைச்சர் ரிஷ்யசிருங்கதிற்கு சென்று துர்வாசரை சந்திக்கலாம் என புறப்படும்போது அஸ்வத்தாமன் துருபதனிடம் ஆசிர்வாதம் வாங்குகிறான். என்ன எண்ணிக்கொண்டு துருபதன் ஆசிர்வாதம் வழங்கி இருப்பான்? அப்போது அஸ்வத்தாமன் கண்ணீருடன் கூறுகிறான் "“இப்பிறவி முழுமையும் இருக்கிறது எனக்கு அரசே”  என்று. பிறகு குருஷேத்திரத்தின் மற்றொரு கண்ணியாகிய  பாஞ்சாலி பிறப்பு. இதை எல்லாம் கோர்க்கும்போது " இந்த பூமியைவிட்டு செல்லும்போது வஞ்சத்தோடு செல்லவேண்டுமா? வஞ்சத்தை தீர்த்துவிட்டா ? என்று தோன்றியது. ஆனால் இவர்கள் வரலாற்று நாயக நாயகியர் இவர்களுக்கு பிறகு வரலாறே மாறுகிறது ஆனால் நீ உண்டும் உறங்கியும் உயிர் மட்டுமே வாழும் கோடானுகோடி மானுட புழுக்களில் ஒருவன் என்றும் மனது கூறுகிறது.  துருபதன் சத்ராவதியை விட்டுகிளம்பும்போது அஸ்வத்தாமனிடம் பத்ரர் கூறுகிறார் "“அரசே, போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது. தங்கள் தந்தைக்கும் மூதாதையருக்கும் சத்ராவதியின் குடிகளுக்கும் செய்யவேண்டிய கடன்கள் எஞ்சியிருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் காத்துக்கொள்ளுங்கள்” என்று .ஆம் குருஷேத்திரத்தில் நிற்பவர்கள் அனைவரும் கருணையை தன்னிரக்கத்தை கைவிட்டவர்கள். நிழல் உருக்களுக்கு கடன்பட்டவர்கள்.

வாரணவதத்தில் பாண்டவர்கள் இறந்தபின் அஸ்தினபுரியின் அமைச்சரவைக்கு பீஷ்மர் வரும்போது அர்ஜுனனின் இழப்பை பெரிதாக பொருட்படுத்தாதவராக தோன்றும் துரோணரிடம் பீஷ்மர் அஸ்வத்தாமன் நலம் விசாரிக்க “இன்று இருப்பவர்களில் கர்ணனும் என் மாணவனே. அர்ஜுனனுக்கு நிகரானவன். அஸ்வத்தாமனும் கர்ணனுடன் வில் குலைக்க முடியும்.அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனை பலராமரின் மாணவர் என்று சொல்கிறார்கள். துரியோதன மன்னர் உண்மையில் கதாயுத்தத்தின் அடிப்படைகளை என்னிடம்தான் கற்றார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அத்துடன் அவருக்கு வலக்கை கர்ணன் என்றால் இடக்கை அஸ்வத்தாமன் அல்லவா?”பீஷ்மர் “அஸ்வத்தாமன் எப்படி இருக்கிறான்?” என்றார். துரோணர் முகம் மலர்ந்து “நலமாக இருக்கிறான். அவன் நாடாளவே பிறந்தவன் என்கின்றனர் சூதர். இன்று பாரதவர்ஷம் முழுக்க அவனைப்பற்றியே மன்னர்கள் அஞ்சுகிறார்கள். சத்ராவதி இன்று பாரதவர்ஷத்தின் பெரும் துறைமுகமாக ஆகிவிட்டது. நாளொன்றுக்கு இருநூறு பெருநாவாய்கள் வந்துசெல்கின்றன அங்கே. கருவூலம் மலைத்தேன் கூடு போல பெருத்து வருகிறது. சில வேள்விகளைச் செய்யும் எண்ணம் அவனுக்கு உள்ளது. அதன்பின் அவனை சத்ரபதி என்றே ஷத்ரியர்களும் எண்ணுவார்கள்.துரோணர் கைகளை வீசி கிளர்ச்சியுடன் “இத்தனை அரசு சூழ்தலை அவன் எங்கிருந்து கற்றான் என்றே நான் வியப்புறுவதுண்டு. அவன் அன்னை அவனுடன் இருக்க விழைந்து சத்ராவதிக்கே சென்றுவிட்டாள். அங்கே அவளுக்கென கங்கைக்கரையிலேயே அரண்மனையும் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரும் அளித்திருக்கிறான். என்னை அங்கே அழைத்தான். நான் இங்குதான் என் ஆசிரியப்பணி என்று சொல்லிவிட்டேன்” என்றார். பீஷ்மர் “அவன் நல்லரசை அமைப்பான் என்று நான் எண்ணினேன்… நல்லது” என்றார்.துரோணர் இருக்கையில் முன்னகர்ந்து “அவனைப்பற்றி பாடிய ஒரு சூதன் இன்று பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தியாகும் வீரமும் ஞானமும் உடையவன் அஸ்வத்தாமன் மட்டுமே என்றான். அந்தக்காவியத்தை இங்கே என்னிடம் கொண்டுவந்து காட்டினான்” என்றார். அதன்பின்னரே அவர் பிழை நிகழ்ந்துவிட்டது என்று உணர்ந்தார். உடலை அசைத்து “நான் சொன்னேன், அது நிகழும் என்று. பாரதவர்ஷத்தை கௌரவ இளவரசர் ஆளும் நாள் வரும். அப்போது அருகே வில்லுடன் நிற்பவன் அவன். அவன் கொடிக்கீழ் பாரதவர்ஷம் அன்றிருக்கும் அல்லவா?” என்றார். பீஷ்மர் புன்னகையுடன் “உண்மை” என்றார். இதை மீண்டும் படிக்கும்போது "அடபாவிகளா எல்லாருக்கும் இதே எண்ணம்தானா என்று தோன்றியது. 

பிறகு அஸ்வத்தாமனின் உத்தரபாஞ்சாலநாட்டை சேர்ந்த  காளகூடத்தில்  சிருங்கசிலை எண்ணும் ஊர் அமைத்து பகன் தனியரசு அமைக்கமுயல அவனை தோற்கடிக்கும் பொருட்டு அஸ்வத்தாமன் போர்தொடுக்கிறான். ஆரம்பத்தில் வீழ்ந்தாலும் பிறகு சுதாரித்து புத்திசாலித்தனமாய் காத்திருக்கிறான். ஆனால் பகன்  அவனை ஏமாற்றி தப்பிவிட கடுப்பில்[அகத்தில் ஒரு நரம்பு முறிந்தது] அந்த ஊரையே எரிக்க ஆணையிடுகிறான். "அஸ்வத்தாமன் எரியை ஆள்வதில் பெரும்திறல் கொண்டிருந்தான்,நச்சுப் புகை கக்கும் ரசங்களை சிறுகுடுவைகளிலாக்கி அம்புகளின் முனைகளில் பொருத்தி ஏவும் முறையை  உருவாக்கியிருந்தான் என வெண்முரசு கூறுகிறது. 
பிறகு பாஞ்சாலியின் சுயவரத்தின் போது அனைவரும் அஸ்வத்தமனுக்காக காத்திருக்கிறார்கள்."பச்சைநிறப் பட்டின் மேல் மணியாரங்கள் சுற்றப்பட்ட முடியும் பொன்பட்டு சால்வையும் அணிந்து அஸ்வத்தாமன் கைகூப்பியபடி நடந்துவந்தான். அவனை துருபதனே அழைத்துவந்து அவையில் அமரச்செய்தார் என வெண்முரசு கூறுகிறது. துருபதணும் அஸ்வத்தாமனும் அந்த தருணத்தில் என்ன எண்ணி இருப்பார்கள்? 

பிறகு பாஞ்சாலியுடன் முதலிரவு கொள்ள செல்லும் பீமனிடம் குந்தி " அஸ்வத்தாமன் பெரிய எதிரி எனவும் , அவனை வெல்லவேண்டும் " என்று எண்ணி அதை திரவ்பதி மூலம் தர்மருக்கு சொல்லும்படி வற்புறுத்துகிறாள். ஆனால் அதை பீமன் மறந்துவிடுகிறான். உணமையிலே பீமன் அப்படி மறந்துவிடுகிற ஆளா என்ன ?
பிறகு பாண்டவர்களுக்கு எதிரான கவுரவர்களின் காம்பில்ய படையெடுப்பின் போது கவ்ரவர்களோடு போரிடுகிறான். ஆனால் கவுரவர்கள் தரப்பு தோற்கிறது. ஆனால் திருஷ்டதும்யுனனை அஸ்வத்தாமன் வீழ்த்துகிறான்.ரிஷபன் " ”அஸ்வத்தாமரை எதிர்கொள்ள அர்ஜுனராலும் கர்ணராலும் மட்டுமே இயலுமென ஏன் சொன்னார்கள் என அன்று கண்டேன். யாதவரே. என் விழிகளால் அவர் கைகளை பார்க்கவே முடியவில்லை. புதர்மறைவில் இருந்தவர்களை இலையசைவைக்கொண்டே அறிந்து வீழ்த்தினார். விண்ணிலெழுந்த அம்புகளை முறிக்கும் வில்லவர்களை கண்டிருக்கிறேன். அம்பெடுக்க எழுந்த கையை ஆவநாழியுடன் வெட்டி வீசும் வில்லவரை அன்று பார்த்தேன்.” என கிருஷ்ணனிடம் கூறுகிறான். ஆனால் கிருஷ்ணை என்னும் கிருஷ்ணனின் ஆடிபிம்பம் அஸ்வத்தாமனை "சதக்னியினாலவது " கொன்று இருக்கவேண்டும் என்று கூறுகிறது. 


பிறகு அனைத்து குடிவிழாக்களிலும் ,  அரசவைகளிலும் கலந்து கொண்டு இப்போது குருஷேத்திரத்தில் தந்தையோடு வந்து நிற்கிறான் அஸ்வத்தாமன்.  

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்