Tuesday, April 19, 2016

கர்ணனின் கனவு:


வெண்முரசில் கனவுகள் ஒரு முக்கியமான உத்தி. கனவுகளூடு அதைக் காண்பவரின் அகம் வெளிப்படுகிறது. இன்று கர்ணனின் கனவில் முதலில் அவன் துரியன் கண்ட ஒத்திசைவைக் காண்கிறான். அதன்பிறகு அவன் திரௌபதியைக் காண்கிறான். அஸ்தினபுரியினரின் தற்போதைய நோயினால் வரும் கனவுகள் பொதுவாக அவர்கள் அடையாமல் இழந்தவற்றைப் பற்றியதாகவே இருக்கின்றன. விதுரருக்கு அன்னை போல. உண்மையில் துரியன் திரௌபதி மேல் கொண்டிருப்பது ஒருவகை வழிபாட்டுணர்வே. அதனால் தான் காலடியில் கிடப்பதைப் பற்றி பேசுகிறான். கர்ணன் கொண்டது காதல். ஆனால் அவன் காதல் கொண்ட பெண் யார்? 

ஆயிரம் கவசங்களைக் கொண்டவள். அவளின் எக்கவசத்தை அவன் காதல் கொண்டான்? அவளின் கவசங்கள் அனல் கொண்டவையாக இருக்கின்றன. அதைத் தொடும் கர்ணன் கைகள் உருகி வழிகின்றன. இது அப்படியே சம்வர்ணன், தபதி கதை தானே. இக்கதையைத் தானே பத்து வயதில் திரௌபதி கேட்டாள். அந்த இளம்பெண் தான் கர்ணனை விரும்பியவள். அந்த இளம்பெண்ணைத் தான் கர்ணன் இடத்தொடையில் வைத்துக்கொண்டான். 

அந்த இளம்பெண் தான் இன்றும் மாறா வலியாக அவன் இடத் தொடையில் இருக்கிறாள். அவளே அவனின் துரியனின் நட்பு, குந்தியின் மைந்தன் என்னும் இருமையில் இருந்து ஏதேனும் ஒருவனாக மாற அறைகூவுகிறாள். இறுதியாக கர்ணன் துரியனின் நண்பன் என்னும் ஒருமையாக மாறுகிறான். துரியனின் நலம் நாட, அவன் அஸ்தினபுரியின் நலம் நாட உறுதியான முடிவை எடுக்கிறான். இனி துரியனுக்காக முடிவெடுக்கப் போவது அவன் தான். அதை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் செய்யப்போகிறான். அவன் கனவு அவன் மாற்றமே. இருமையழிந்து ஒருமையாதலே.


அருணாச்சலம் மகராஜன்