Tuesday, April 19, 2016

கவசங்கள்




இன்றையப்பிள்ளைகளைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. பேச ஆரம்பித்த உடனேயே பாட்டு வகுப்புக்கு செல்கிறார்கள். நடக்க ஆரம்பித்த உடன் விளையாட்டு பயிற்சிக்கு செல்கிறார்கள். மூன்றுவயது ஆரம்பித்த உடன் பள்ளிக்கு செல்கிறார்கள். தொலைக்காட்சி பெட்டி உயரம்கூட இருப்பது இல்லை, நடனப்போட்டியில் சுழல்கிறார்கள். பாட்டுப்போட்டியில் பறக்கிறார்கள். பெரியவர்களை கிண்டல் செய்கிறார்கள். அவர்களுக்க சாப்பிட உட்கார நேரம் இருக்குமா என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி? யார் இவர்களை இப்படி செய்கிறார்கள்?.பெற்றவர்கள். 

யோசித்துப்பார்த்தால் இவர்கள் வாழ்வதற்காக வளர்க்கப்படவில்லை. வாழ்க்கையில் இருக்க தயாரிக்கப்படுகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு திறமையும் அவர்கள் அப்பா அம்மா அவர்களுக்கு போட்டுவிடும் கவசங்கள். ஆயிரம் கவசங்கள் போடுவோம் ஒரு கவசமாவது பிள்ளையைக்காப்பாற்றாதா? என்ற பயம்.

வாழ்க்கை கவசத்திற்குள் இல்லை. எல்லா கவசங்களும் தன்னை சிறைவைத்து இருப்பதை குழந்தைகள் வளர்ந்தபின்பு அறிகிறார்கள். அதில் இருந்து தப்பிக்கவும் முடியாமல், அதற்குள் சிறை இருக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். அந்த கவசங்களையே தான் என்று நம்பி வாழத்தலைப்பட்டுவிடுகிறார்கள். உலகப்புகழ்ப்பெற்ற பெரும் நடனன் மைக்கல்ஜாக்கன் போட்டுக்கொண்ட நடனம் என்னும் கவசம் அவன் தந்தையால் சூட்டப்பட்டு அவன் குழந்தைப்பருவமே மறைக்கப்பட்டது. உலகமே அவனை அவன் கவசமாகத்தான் பார்த்தது.

பன்னிருப்படைகளம்-வெண்முரசில் ம்போத்பவன் மனைவிகள் தம்போத்பவனை அவன் கவசமாக உணர்வபோலவே உலகம் ஒவ்வொரு மனிதனையும் உணரும் விதத்திலேயே கவசத்தை அணிந்துக்கொள்கிறோம்.  பேராற்றலும், பெரும் விழைவும் கொண்ட தம்போத்பவன் தனது அச்சத்தால் ஆயிரம் கவசங்களை அணிகின்றான்.

ஆயிரம் கவசங்கள் உடைப்படும்போது தான் மரணம் அடையவேண்டும் என்றும், கவசத்தை உடைப்பவன் தலைவெடித்து மாளவேண்டும் என்று வரம் வாங்கி வந்து உள்ளான். அவன் மனைவிகள் முன்னால்கூட அவன் முழு நிர்வாணம் கொள்ளமுடியவி்ல்லை. மனைவி முன்னால் கொள்ளும் நிர்வாணம்கூட முழுநிர்வாணம் இல்லை என்று காட்டிச்செல்கின்றான்.  தானே அந்த கவத்தை உடைத்தால்கூட அவன் தலைவெடித்து சாகவேணடும் என்பதில் தெரிகிறது கவசங்கள் எத்தனை அறியாமையால் உருவாக்கப்படுகின்றன, அறியாமையில் இருக்க உருவாக்கப்படுகின்றன என்பது.

மனிதன் தனக்குத்தானே போட்டுக்கொள்ளும் கவசங்களை உடைக்க தன்னாலும் முடிவதில்லை. எதிரிப்போல ஒரு குருவரவேண்டி உள்ளது. அவரும் நூறுசதவீதம் செயல்செய்யும் ஆற்றலும், நூறுசதவீதம் தவம் செய்யும் வல்லமையும் கொண்டு ஒருவனே இரண்டாக இருக்கும் வல்லமைப்பெற்று இருக்கவேண்டும். அப்படி எதிரியாக வரும் குரு கவங்களை எல்லாம் உடைத்து தன்னைத்தான் தனக்கு காட்டி வைக்கிறார். அங்கு சாவதுபோல்தான் இருக்கிறது ஆனால் அது எத்தனை இன்பம்.

தம்போத்பவன் கடைசியில் புன்னகை செய்வது அழகு ஆனந்தமும் நிறைந்தது.
//இறுதி அம்பு வந்து அவன் நெஞ்சில் ஆழ்ந்திறங்கியது. செம்பொன்பரப்பில் செங்குருதி ஊறிப்பெருகுவதை கண்டான். ஒருகையால் நெஞ்சை அழுத்தியபடி இடப்பக்கம் சரிந்து தன் தேர்க்காலில் விழுந்தான். கீழே ஆழத்தில் தன் இறுதிப்பொற்கவசம் விழுந்து மறைவதை இறுதியாக நோக்கி புன்னகைசெய்தான்//

மனிதர்கள் எத்தனை எத்தனை ஆயிரம் கவசங்களை அணிந்தால் என்ன? இறுதிக்கவசமும் உடைந்து சுயம் உணர்வதுதான் பேரின்பம்.

இறுதிக்கவசமும் உடைந்து சுயம்பெறுவதான் பேரின்பம் என்பதற்காக கவசமே இல்லாமல் வாழ்வது வாழ்வாகாது. பிள்ளைகளுக்கு நமது கவசங்களைப்போட்டுவிடுவதைவிட, அவரவர் கவசங்களை அவரவர் அணிந்துக்கொள்வதுதான். ஹிரண்யன் ஆகவழி. ஹிரண்யன்கள்தான் மரணத்தில் புன்னகைக்கமுடியும். ஹிரண்யன்களுக்காகத்தான் நரநாரணன் பிறக்கிறார்கள். 

ராமராஜன் மாணிக்கவேல்.