Friday, August 19, 2016

மரம்




தூரங்களை கடக்க மனிதன் நடந்துசென்றான், நடந்து சென்ற மனிதனை காவடிக்கட்டி, தூளிக்கட்டி, பல்லக்கு வைத்து தூக்கிச்சென்றார்கள். தூக்கிச்செல்வதைவிட வண்டியில் வைத்து இழுத்துச்செல்வது எளிதாக இருந்தது. வண்டியில் வைத்து இழுத்துச்செல்வதைவிட சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து மிதித்துச்செல்வது எளிதாக இருந்தது. சைக்கிள் ரிக்ஷாவில் மிதித்துச்செல்வதைவிட ஆட்டோவைத்து அழைத்துச்செல்வது எளிதாக இருக்கிறது. இதுவும் மாறலாம். இந்த மாற்றம் ஒவ்வொன்றும் முன்னாகி பழக்கத்தில் இருந்த ஒன்றை இழக்கச்செய்துவிடுகிறது அதுவே அதற்கு அழிவாகவும் ஆகிவிடுகிறது. 

இன்று நடக்கும் மனிதர்கள் யார்?
இன்று பல்லக்கில் செல்லும் மனிதர்கள் யார்?
இன்று சைக்கில்  ரிக்ஷா எங்கே?

கைரிக்ஷாவந்தபோது பல்லக்கு தூக்கிகளின் வாழ்வு சிதைந்தது. சைக்கிள் ரிக்ஷாவந்தபோது கைரிக்ஷாவினர் வாழ்வு சிதைந்தது. ஆட்டோ வந்தபோது சைக்கிள் ரிக்ஷாவினர் வாழ்வு சிதைந்தது. பழையது சிதையும்போது புதியது தழைத்து வளர்கிறது. 

மனிதன் வாழ்க்கையை ஒரு தளத்தில் இருந்து மறுதளத்திற்கு கடத்த ஒரு ஞானத்தை கண்டு அடைகிறான் அந்த ஞானத்தை செயல்முறைப்படுத்தும் விஞ்ஞானியாகின்றான். அந்த விஞ்ஞானி பழையவேதத்தின் பழைய ஞானத்தின் காலனாகி அதை காலவதி ஆக்கிவிடுகின்றான். பாழைய ஞானத்தை பழைய வேதத்தை பிடித்துக்கொண்டு இருப்பவர்கள் அந்த புதிய ஞானத்தின் விஞ்ஞானியை மாபெரும் எதிரியாக கண்டு முற்றழிக்க நினைக்கிறார்கள். பழைமைக்கும் புதுமைக்கும் ஞானத்தின் வல்லமையால் பகையும் யுத்தமும் மூண்டுவிடுகிறது. . 

வருணனின் ஞானத்தை வெல்லும் விஞ்ஞானியாய் இந்திரன் வருகின்றான். இந்திரனின் ஞானத்தை வெல்லும் விஞ்ஞானியாய் கண்ணன் வருகின்றான்.  

வெல்கின்றவர்கள் உயர்ந்தவர்கள், வெல்லப்பட்டவர்கள் தாழ்ந்தவர்களா? இல்லை. வென்றவர்கள் எதிர்காலத்திற்கான உயர்வை அறத்தின் வடிவில் வைக்கிறார்கள். தோற்றவர்கள் இறந்தகாலத்தின் அறவடிவங்களாக இருந்து இருக்கிறார்கள்.

ஹரிச்சந்திரன் தனக்கொரு மகன் இல்லாமல் வருந்தும் தருணத்தில் அவனுக்கு மகனை வரமருளும் வேதஞானத்தின் வடிவாக வருணன் இருக்கிறான். இங்கு இது ஒரு புதுமை உயர்வு அர்த்தம் நிறைந்த வாழ்வின் வடிவம். அந்த வடிவம் அழிவது அதற்கான மறு எல்லையில் மகனை பலிக்கேட்கும் இடத்தில். இ்ந்த இடத்தில் உயர்தினையாகிய மனிதனை பலியிடுவதற்கு இடம் கொடுக்காமல் விலங்கை பலிக்கொண்டு அறவாழ்வை இன்னும் ஒருபடிக்கு மேலே கொண்டு செல்கிறான் இந்திரன். விலங்கை பலிக்கொள்ளும் இடத்தில் கண்ணன் வந்து நின்று கோவர்த்தன கிரியை குடையாகப்பிடித்து விலங்கும் ஒரு உயிர் என்று அறத்தை வாழ்வில் இன்னும் ஒருபடிக்கு மேலே கொண்டு செல்கிறான் கண்ணன்.

இந்த இடத்தில் உயிர்கள் மீது மனிதன் கொள்ளும் இணைப்பின் உயர்வை சொல்வளர்காட்டின் மூலம் வெண்முரசு ஓங்கி அறைந்து முழங்குகின்றது.

ஹரிச்சந்திரன் தனது மகன் இறப்புக்கு வருந்துகின்றான். ஆனால் முனிவரின் மகனின் இறப்புக்கு வருந்தவில்லை. விஸ்வாமித்திரர் தனது மகனாக இல்லாதபோதும் இன்னொருவன் மகனுக்காக வருந்துகின்றார் ஆனால் விலங்கு இறப்புக்கு வருந்த வில்லை. கண்ணன் தன்மகன் பிறன்மகன் விலங்கு என்று பிரித்துப்பார்க்காமல் உலகையே கோகுலமாக பார்த்தான் அன்று அதனால்  அறத்தை நீண்டதாக வளர்த்து எடுக்கிறான். ஹரிச்சந்திரன் இடம் இருந்த அறம் தனது குடும்பம் என்று அளவு. விஸ்வாமித்திரர் இடம் இருந்த அறம் தனது கண்பட்ட தூரம். கண்ணனிடம் இருந்த அறம் அவன் சித்தம் பரவும் இடம்வரை.

கண்ணனின் சித்தம் பரவும் இடத்தை தருமன் கண்டுக்கொண்டுவிடுகின்றான். அர்ஜுனன் சத்யகாமன் கதையின் மூலம் அதை விளம்புகின்றான்.

கிளைவிரிந்து எங்கெங்கோ சென்று காடெனபெருகும் மரம் அதன் பழத்தின் மூலம் ஒரு புள்ளியில் குவிகின்றது. அதுபோல் பெரும்கதைகளின் வழியாக பெரும் வனமாகும் சொல்வளர்காடு அறம் நிற்கும் இடத்தை உணர்த்தும் இடத்தின் வந்து கனியாகுகின்றது.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.