இன்று தருமன் பாஞ்சாலியை நோக்கி இருட்டில் நின்றிருந்த இடம் எனக்கு பெரிய ஒரு துக்கத்தை உருவாக்கியது. அவன் பெரிய வீரனாக இல்லாமலிருக்கலாம். ஆனால் உண்மையான அன்பும் பெருந்தன்மையும் உள்ள பெரிய மனிதன். பாஞ்சாலி அவனை சரியாகப்புரிந்துகொள்ளவே இல்லை.
நடந்தவற்றில் அவளுடைய தப்புதான் அதிகம். அதை அவள் புரிந்துகொள்ளவும் இல்லை. எல்லாவற்றையும் தருமன் மேலே போட்டு கோபமாக இருக்கிறாள்.. தருமனின் அந்தத்தவிப்பைப் பார்க்கும்போது அந்த வரி எத்தனை சிறப்பாக வந்து பொருந்துகிறது என ஆச்சரியமடைந்தேன்
கணவர்கள் அவர்கள் கணவர்கள் என்பதனால் விரும்பப்படுவதில்லை, மைத்ரேயி. மாறாக அவன் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறான். மனைவி மனைவி என்பதனால் விரும்பப்படுவதில்லை. அவள் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறாள்.
பிரகதாரண்யகத்திலே வரும் வரி இது. அங்கே வெளிப்படுவது தருமனின் உணர்ச்சி அல்ல. ஆத்மாவின் தேடல்தான். இந்த வரி விரும்பப்படுவது என்பதைப்போலவே வெறுக்கப்படுவது என்பதுக்கும் சரியாகப்பொருந்தும் இல்லையா?
ராஜசேகர்