Wednesday, August 31, 2016

சிருஷ்டி கீதம்



சொல்வளர் காடு துவங்கியதில் இருந்தே எப்போது வரும் என்று காத்திருந்த ஒன்று இன்று (சொல்வளர்காடு 40) வந்துவிட்டது. அதுவும் எப்பேற்பட்ட அத்தியாயத்திற்குப் பின்!!! சொல்வளர்காடு 39 மிக மிக முக்கியமான ஒரு அத்தியாயம். ஒரு வகையில் இந்நாவலின் தரிசனம் என்று கூடச் சொல்லலாம். ‘லீலை என்பதன் பொருளின்மை’ என்று சுருக்கமாக வரையறுக்கலாம். எதற்கும் பொருளில்லை. அதை முழுமையாக வாழ்ந்து முடித்தவர்களே அதன் முழுப் பொருளையும் உணர முடிகிறது. உணர்ந்து ஏற்க முடிந்தவன் ஞானி ஆகிறான். தாண்டிச் சென்றவன் கடவுளாகிறான். அப்படி ஒரு பிரபஞ்ச லீலையை உணர்ந்து அதன் பொருளின்மையின் முன் திகைத்த ஒரு ஆதி ரிஷி கொண்ட பிரமிப்பே ஆகப் பழைய வேதமான ரிக் வேதத்தின் இந்த மகத்தான சிருஷ்டி கீதம்

அதையே மிக அருமையாக தற்போதைய சாந்தீபனி முனிவர் தன் சீடர்களுக்கு இன்று கூறுகிறார். தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்து தன்னை முழுதுணர்ந்த அவர் தன் சீடர்களிடம் ‘தத்’ எனும் ‘அதைப்’ பற்றி இவ்வாறு கூறுகிறார்.

ஒன்றேயான அது என அதை அறிந்தனர். அதுவன்றி ஏதுமிருக்கவில்லை என உணர்ந்தனர். ஒருமையான அது மேலே உள்ளதா இல்லை கீழே உள்ளதா, அங்கு படைப்பாற்றல் உண்டா, அது முன்னால் உள்ளதா இல்லை பின்னால் உள்ளதா, அது எப்படி பிறந்தது, அதை யார் உருவாக்கினர், அல்லது உருவாக்கவில்லை என பல்லாயிரம் வினாக்களாக அதை அணுகினர். வான் வடிவமான அதுவே அறியும், அல்லது அதுவுமறியாது என்று வகுத்தனர்”. ஒரு கணம் விம்மி விட்டேன்.