Monday, August 22, 2016

ஆணின் கண்களில்




ஆணின் கண்களில் இருக்கும் காமம் எத்தனை கொடுமையானது எத்தனை கூர்மையானது எத்தனை விடம் கொண்டது.

உலகில் உள்ள பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு உறவு என்று எல்லைக்கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள்தான். அந்த எல்லைக்கோட்டை உடலால் தாண்ட முடியாதபோதும் கண்கள் தாண்டிவிடுகின்றன. இது கண்ணனின் குற்றமா? அழகை சுமந்து வந்த பெண்ணின் குற்றமா? இதில் குற்றம் என்பது எதுவும் இல்லை. கண் கவரப்படுகிறது, அழகு கவர்ந்துக்கொண்டு இருக்கிறது. இரண்டும் அதற்கான வேலைகளை செய்கிறது. ஆண்கண் பெண்கண் என்ற பேதமைதான் இங்கு குற்றம். இந்த பேதம் மறைந்தால் ஞானம். காமம் அந்த பேதத்தை மாயவிடுவதும் இல்லை. 

தட்சன் பேரழகியான மகள் தாட்சாயினியை தனது இரண்டாயிரம் கண்களாலும் கண்டு நிறைவுப்பெறாதவன்.
//இருபத்துநான்கு மகள்களிருந்தும் அவளையே தாட்சாயணி என்று அவன் அழைத்தான். பிரசூதியின் பேரழகுக்கணம் ஒன்று முளைத்து உருவாகி வந்தவள் அவள் என அவன் நினைத்தான். பெண்ணழகையும் பொருளழகையும் தேவர்களின் அழகையும் அவளழகு வழியாகவே அவன் அளந்தான். தெய்வங்களை அவள் வழியாகவே அவன் வணங்கினான். அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். தட்சனோ ஆயிரம் தலைகளில் ஈராயிரம் கண்கள் கொண்டவன்//

இப்படிப்பட்ட பேரழகியான மகள் தன்னை புறம்தள்ளி மலைவேடன் பெரும்பித்தனை திருமணம் செய்துக்கொண்டாள் தந்தையின் மனம் என்னப்பாடுபடும். மகளை கொல்லும் அளவுக்கு சென்று கைலாயமலையை தனது உடலால் நெருக்கி உடைக்க முயன்று தோற்று, அதற்கும் அப்பால் ஆயிரம் தலை விடமும் பத்தாமல் அதிகவிடம்தேடி நோம்பு இருக்கிறான். இந்த கதையில் தாட்சாயனி தன் மணவாளனுக்காக நோற்கும் நோம்பில் // தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.// என்று வரும் இடம் அதிர அடித்கும். ஒவ்வொரு பெண்ணும் இதை செய்யவேண்டிய நோம்பில்தான் இருக்கிறாள். 

தந்தையும் பெண்ணும் பெயர்தான் மாறுகின்றது. உணர்வுகள் அதேதான். மித்ரர் சுலஃபை என்று இன்று கதை வருகின்றது. தாட்சாயனியை இரண்டாயிரம் விழிகளால் தட்சன்நோக்கியதுபோலத்தான் மித்ரர் தனது இருவிழியால் நோக்குகிறார். இரண்டாயிரம் விழிகளால் அவன் அடைந்த உள்ள அமுதைத்தான் மித்ரர் தனது இருவிழியால் அடைகிறார்.  யாக்ஞவல்கியரை சுலஃபை தேர்ந்து எடுக்கும் இடத்தில் மித்ரர் தட்சன்  நிலையை அடைகிறார்.  

அழகிய மகள் மனம்விரும்பாதவனை மணக்கும்போது தந்தையடையும் மனநிலை முதல்கனல்//தன்னை உதறிச்சென்ற தாட்சாயணியை கொல்வதற்காக கைலாயமலைக்குச் சென்று அம்மலையை தன் உடலால் நெரித்தான். இறுக்கத்தில் உடல் நெரிந்து விஷம் கக்கியபின் அங்கேயே துவண்டுகிடந்த அவனை தம்பியரான கார்க்கோடகனும் காலகனும் தூக்கிவந்தனர்//. 

அழகிய மகள் மனம்விரும்பாதவனை மணக்கும்போது தந்தையடையும் மனநிலை சொல்வளர்காடு //// சலிப்புடன் திரும்பி தன் மாளிகையை அடைந்து சுருண்டு படுத்துக்கொண்டார் மித்ரர்.//

வேறுவேறு இடத்தில் வேறுவேறு சூழ்நிலையில் உருவாகும் வாழ்க்கைசித்திரத்தில் மானிடஅகம் கொள்ளும் உண்மையின் வெளி ஒன்றுதான்.
அழகிய அம்மா அழகிய சகோதரி அழகிய தோழி அழகிய மனைவி அழகிய மகள்  அழகிய பேத்தி என்று கேட்கும் இந்த கண்கள் எத்தனை யுகங்களாய் தன் நிலையில் மாறாமல் விழைவில் இருக்கிறது. என்ன ஒரு சுயநலம்.

“கண்ணிரண்டும் எச்சில் கறந்தபாலும் எச்சில்“ என்று அம்மாசொல்வார்கள். 

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் 
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.-என்று சிவவாச்சியர் சொல்கிறார். 

குருதேவர் பகவான் ராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்கிறார் “எச்சில் படாதது பிரம்மம்” 

ராமராஜன் மாணிக்கவேல்