ஜெ
உங்களை ஆசிரியராக பார்ப்பது ஒரு ஆசிரியன் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. அங்கும் ஒரு நல்ல மாணவர் குழாம் உங்களுக்கு அமைந்திருக்கும் என நான் நினைக்கிறேன். அந்த மாணவர்களில் ஒருவனாக நான் இருப்பதாக அகத்தில் கொள்கிறேன்.
சொல்வளர்க்காடு மிக அருமையாக வளர்ந்தெழுகிறது. வேதங்களுக்கான ஒரு சிறந்த அறிமுக நூலாக அது மைந்துவருகிறது. செவிகூர்ந்து சொல்லடக்கி சிந்தைகுவித்து ஆழ்ந்து படித்து வருகிறேன். அதில் பின்வரும் உவமை என்னை பிரமிக்க வைத்தது.
"துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும் காணாமல், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை அல்லவா? இங்கு நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்று அறிந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபடமுடியும். துணியை நாம் காண இயலாது. அதை ஊழ் என்கின்றார்கள். தைப்பவனை நாம் அறியமுடியாது. அதை அது என்று மட்டுமே சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் ஊசியைக்கொண்டு துணியையும் தைப்பவனையும் உய்த்துணர்பவன் விடுபடுகிறான். "
இது ஏற்கெனவே இலக்கியத்தில் இருக்கும் உவமையா என எனக்கு தெரியவில்லை. நான் அறிந்த உவமைகளில் இதைப்போன்று முழுதுணர்த்தும் மற்றொரு உவமையை நான் கண்டிருக்கிறேனா எனத் தெரியவில்லை. அத்வைதத்திற்கான கயிற்றரவு என்ற உவமையின் சிறப்புக்கு சற்றும் குறைந்ததில்லை இதன் சிறப்பு. மிக அருமை. இதை எண்ணி எண்ணி மனதில் தியானம் செய்யவேண்டும்.
அன்புடன்
த.துரைவேல்
அன்புள்ள துரைவேல்
அது என் கற்பனை
இந்தத்தளத்தில் சிந்திக்கும்போது ஓர் உவமை இன்னொன்றை உருவாக்குகிறது
ஜெ