Friday, October 2, 2020

வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’

 


 

நம் இளமைப் பருவம் முதல், அறம் குறித்த பற்பல விவாதங்களையும் விளக்கங்களையும் கேட்டே வருகிறோம்.

"பொய் சொல்லக் கூடாது, புறங்கூறலாகாது" போன்றவற்றைப் பெரியோரிடம் கேட்டு வளரும் நாம், நடைமுறை வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதன் சிக்கல்களை உணர உணர, அறம் குறித்த எண்ணற்ற ஐயங்கள் அனைவரிடமும் எழுவதைப் பார்க்கலாம்.

பாவம் செய்வோரே சொகுசாக வாழ்வதாகவும், நல்லோர் புழுவாய்த் துடிப்பதாகவும் பலர் புலம்ப அதற்கான விளக்கங்கள்  இன்றி பெரும்பாலோர், அதை  உண்மை என நம்பியும் விடுகிறோம்.

இருப்பினும், அறமே வெல்லும் எனக் காட்டும் மஹாபாரதம் உள்ளிட்ட புராணங்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்தும், சொற்பொழிவுகளில் கேட்டும் மகிழ்கிறோம்.

அவை, ஒரு சாராரை முழு கெட்டவர்களாகவும், மறு சாராரை முழு யோக்கியர்களாகவும் காட்டுவதோடு, ஒரே நிகழ்வை ஒவ்வொரு  தொலைக்காட்சியும், ஒவ்வொரு மாதிரி சித்தரிப்பது எனக்குப் பெரும் சலிப்பையே அளித்தது.

அச்சலிப்பிலிருந்து விடுபட, புராணங்களில், குறிப்பாக எண்ணற்ற கிளைக்கதைகளோடு கூடிய மிக நீண்ட கதையாக உள்ள மஹாபாரதத்தை முழுவதுமாக வாசித்துப் புரிந்துகொள்ளும் ஆவல் வெகு காலமாக இருந்து வந்தது.

தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றவருமான திரு ஜெயமோஹன் அவர்களின் புத்தகமான 'வெண்முரசு' என்ற தலைப்பின் கீழ், இருபத்தாறு புதினங்களாக எழுதப்பட்ட மஹாபாரதத்தின் மீள் உருவாக்கம். என் ஆவலைத் திருப்தி செய்வதாக அமைந்துள்ளது.  

மஹாபாரத பாத்திரங்களின் பல கோண விவரிப்புகளை, அக்காலத்தைய அரசியல், சமூக, வணிக மாற்றங்களோடு இக்கால நிகழ்வுகளைப் பொருத்தி வாசகன் எளிதாக உள்வாங்கிக் கொள்ளச் செய்வதே நூலின் சிறப்பான அம்சம் எனலாம்.

போர்க்களத்தில் அர்ஜுனன்  ஒருவனுக்கு எழுந்த ஐயங்களுக்குப் பல கோணங்களில், பல படி நிலைகளாகப் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பதில்களைத் தங்கள்  நடைமுறை வாழ்வோடுப்  பொருத்தி அறிவது பலருக்குக் கடினமானதே.

அந்நிலையில், இம்மாபெறும் இதிகாசத்தின் முக்கிய மாந்தர்களின் வாழ்வனுபவத்தால் எழும் கேள்விகளுக்கு இளைய யாதவரின் எளிய கூரிய பதில்களே, வெண்முரசின் பதினேழாம் நூலான 'இமைக்கண'.

'கொலையை ஒரு பாவமாகக் கருதும் நாம், அதையே தொழிலாகச் செய்யும் தென் திசைத் தெய்வமான யமனை அறத்தின் இறைவனாகக் கருதுவது எப்படி'  என்ற அடிப்படைக் கேள்வியோடு துவங்குகிறது இந்நூல்.

திரேதாயுகத்தில் இறப்பு நின்றுவிட்டதை, தியானிகன் என்னும் புழு, பிரபாவன் என்னும் சிட்டுக்குருவியுடன் ஒரு நாள் திடீரென்று உணர்ந்திட, அதை மற்ற உயிர்களும் அறியச் செய்ததும் அனைத்து உயிர்களும் பெரும் கொண்டாட்டத்தில் திளைக்கின்றன.

முழு ஆண்டு விடுமுறை ஆரம்பத்தில், சிறுவர்களின் மனதில் ஏற்படும் கொண்டாட்டமும், விடுதலையும், வெகு காலம் நீடிக்க நீடிக்க ஓர் அயர்ச்சி அடைவதைப் போல இறப்பு நின்றுவிட்டதால் வாழ்வுக்கும் பொருளே இல்லாமல் போனதை உணர்ந்து திகைக்கின்றன.

இறப்பை அகற்ற உருவான பசி இல்லாமல் போனவுடன், பசியை அடிப்படையாகக் கொண்டுள்ள மொத்த உலக இயக்கமும் நின்றுவிட, உயிர்களின் உறுப்புகள் தனக்கான அர்த்தத்தை இழக்க, அவையும் அவற்றின் இயக்கத்தை நிறுத்தத் தொடங்குகின்றன.

இறப்பு இன்றி உலக இயக்கமும் இல்லை என்பதை உணர்ந்த தியானிகனும் பிரபாவனும் அதற்கான காரணத்தை அறிய நாரதரின் உதவியை நாட, உயிர்களின் எஞ்சிய தவ வலிமையின் மூலம் நாரதர் யமனைச் சந்தித்து காரணத்தை வினவுகிறார்.

ராமர் அவதாரத்தை முடித்து வைத்ததில், தனது அறம் பிழையானதாகக்  குறிப்பு இருப்பதால், தான் இறப்புத் தொழிலை நிறுத்தியதாக யமன் கூறுவதோடு, பாசம் என்னும் மாயையியிலிருந்து விடுபடாமல் எமனுலகம் அடைந்த ராமரால், மாயை குறித்தும், அறம் குறித்தும் எண்ணற்ற வினாக்கள் தன்னுள் எழுவதாகவும் கூறுகிறார்.

அவ்வினாக்களுக்கான விடை, பெருமாளின் மறு அவதாரத்தில் கண்ணன் மூலமே கிடைக்கும் என்பதை நாரதர் உணர்த்த, தான் காத்திருக்க முடிவெடுத்து தொழிலை தொடர்கிறார் யமன்.

மஹாபாரத காலத்தில் பெரும் போர் முற்றிப் போகும் சூழலில், தான் கொண்ட உறுதியைப் பேண இளைய யாதவர் நைமிசாரண்யம் என்னும் காலம் கடந்த காட்டில் தனித்திருக்க, அதுவே தன் ஐயங்களைத் தீர்க்கும் தருணம் என எமன் வருகிறார்.

மானுடர்களின் உலகியல் அனுபவங்களால் உருவாகாத வினாக்கள் பயனற்றவை என உணர, இளைய யாதவரை சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மஹாபாரத பாத்திரங்களின் உள்ளத்தில் புகுந்து, அவரவர் உருவத்திலேயே வந்து அவர்கள் வாழ்வின் அனுபவங்களால் எழுந்த வினாக்களை இளைய யாதவரிடம்  கேட்கிறார் எமன்.

எங்கும் அவமதிப்புகளையே சந்தித்ததால் உளம் புண்பட்ட சாமானியர்களின் பிரதிநிதியாய் கர்ணன், துறவையே எண்ணி பலமுறை நாடு திரும்பிய நிகரற்ற வில்லாளர் பீஷ்மர், அவரைக் கொல்வதையே தவமாகக் கொண்டும் ஐயத்தால் தன் இலக்கை ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்கும் சிகண்டி என தொடங்கி சாமானியர் முதல் முனிவர்கள்  வரை பலரின் பல தரப்பட்ட வினாக்களுக்கு கிடைக்கும் விடைகள், யமனுக்கும் நமக்கும் படிப்படியாக வாழ்வு குறித்த தெளிவை அளிக்கின்றன.

ஆங்கிலப் படங்களில் காட்டப்படும் மாற்றுப் புடவி ( வாழ்வுச் சித்திரம் போல கர்ணனுக்குக் காட்டப்படும், சவால்கள் அற்ற புகழ் மட்டுமே நிறைந்த நீள் வாழ்வு, அவன் திறமை முற்றிலும் வெளிப்படாத நிறைவற்ற வாழ்வாக முடிவடைய, அத்தகைய வாழ்வையே இறைவனிடம் நாளும் கோரும் நாமும் திகைக்கிறோம்.

சிகண்டியைப் போல, விளைவுகளைக் குறித்த ஐயத்தையே பெருமிதமாக எண்ணியும் பேசியும் தன் கடமையைச் செய்யாதோர் நம்மில் பலர் இருக்க, சிகண்டியின் ஐயங்களை அகற்ற இளைய யாதவர் செய்யும் உத்திகள், நம் ஆழ் மனதில் உள்ள ஐயங்களையும் களைந்து செயல்படத் தூண்டுபவை.

பிதாமகர் பீஷ்மரைப் போலவும், அமைச்சர் விதுரரைப் போலவும், தங்களாலேயே இந்நாடு பிழைத்திருக்கிறது எனப் பெருமிதம் கொண்டு, தங்களை மீறி நிகழும் பெரும் போரால் திகைத்து, பொறுப்பேற்கும் அச்சத்தால் அப்போது மட்டும் துறவையும் விடுதலையையும் வேண்டும் பெரியோரை எங்கும் காணலாம்.

சந்தர்ப்பவாதிகள் நிறைந்த இவ்வுலகில், தன் மனசாட்சிக்குப் பயப்பட்டுத் தன் குடி நலனையும் பொது நலனையும் சமன் செய்ய இயலாமல் தவிக்கும் தருமர் போன்ற அறத்தோரை ஒவ்வொரு குடும்பத்திலும் காணலாம்.

‘பெண்களை மாயையின் வடிவாகவும், கடக்கப்பட வேண்டிய தடைகளாகவும் கூறும் வேதம், பெண்களுக்கு அளிக்கும் மீட்பின் வழி என்ன?’ என கேட்காத திரௌபதிகள் உலகில் இருக்க இயலாது.

தங்கள் உடல் அமைப்பையும், உள இயல்பையும் அறிந்து நாம் எதில் முழுமையாக இயங்கி இறுதி மூச்சு வரை முழுத்திறனுடன் வெளிப்பட முடிகிறதோ அதுவே நம் விடுதலையும் மீட்பும் என உணர்ந்து வாழ்வை சீரமைப்பதே இந்நூல் படிப்பதன் பயனாக இருக்க முடியும்.

உதாரணமாக, இறுதிவரை போரிட்டும் தன் கொடைப் பண்பில் வழுவாமல் இறந்த கர்ணன், இன்றும் பெரு வீரனாகவும் பெறும் கொடையாளனாகவும் நினைக்கப்படுகிறான்.

தருமர் இறுதிகணம் வரை அறத்தோராக வெளிப்பட்டதாலேயே, அவர் தன் குடும்பத்தாரைப் பணயம் வைத்ததும், போரில் பொய் உரைத்ததும் பெரிதாக விவாதிக்கப்பட்டு இன்றும் அவர் மூலம் அறம் ஆராயப்படுகிறது.

இப்படிப்பட்ட மாபெறும் வாழ்க்கைச் சூழல்களால் எழுந்த ஞானத்தை அழியா காவியமாக்கும் வியாசர் போன்ற ஆசிரியர்களுக்கு அவர்களின் சொற்களே அவர்களுக்கு அழியாப் புகழும் வீடுபேறும் ஆகும்.

உடனே, பிறப்பால் நாம் அடைந்த கட்டுப்பாடுகளை இயல்பாக எண்ணி ஏற்கும் அடிமைத்தனத்தையே இந்நூல் கூறுகிறதா என ஐயம் எழுவது தவிர்க்க முடியாதது.

இதற்கு இன்றைய உதாரணங்களைப் பொருத்தி அறிவதே சிறந்தது.

ஒரு வங்கியின் கடைநிலை அலுவலர் தன் வங்கி கொடுத்த பெரிய கடன்களால்தான் வங்கியின் வருமானமும், தன் வருமானமும் குறைந்ததாகக் குறை கூறுவதால் அவர் வளர்ச்சி அந்நிலையிலேயே நின்றுவிடும்.

அதற்குப் பதிலாக வங்கியின் ஒட்டுமொத்த அமைப்பையும், உலகப் பொருளாதாரத்திற்கு அது வழங்கும் கடன்களின் பங்கையும், அக்கடன்கள் இழப்பாக  மாறுவதற்கான வாய்ப்புகளையும் அறிவதை நோக்கி அவரின் தினசரி செயல்பாடுகள் இருப்பதே அவருக்காக இந்நூல் கூறும் செயல் யோகமும் வளர்ச்சிக்கான வழியுமாக இருக்க முடியும்.

ஒறு ஊடகவியலாளராக நாட்டின் தலைவரைக் கேள்வி கேட்டு மடக்கி அவரே உடனே தலைவரும் ஆகி நாட்டை உடனே சீர் செய்வது திரைப்படங்களிலேயே சாத்தியம்.

நடைமுறையில், கட்சியின் அடிப்படைத் தொண்டனாகக் களப்பணியாற்றி, படிப்படியாகச் சமூகத்தை அறிந்து வளர்ந்து தலைவன் ஆகுபவன், களப்பணியாற்றத் தொடங்குகையிலேயே தான் விரும்பும் சீர்திருத்தங்களை உருவாக்கும் செயல் யோகி ஆகிறான்.

 

நம் செயல்களுக்கான விளைவுகளைப் பற்றி எண்ணுவதோ, பொறுப்பேற்பதோ வீண் என கர்ணன், சிகண்டி, விதுரர், பீஷ்மர், அர்ஜுனன் போன்றோருக்கு இளைய யாதவர் உறைக்கும் செயல் யோகம், இன்றைய குழந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் எப்படிப் பொருந்தும் எனக் கேள்வி எழுவது இயல்பு.

அவர்கள் அக்காரணங்களைக் கூறி அப்பெரும் போரிலிருந்து விலகினால், மேலும் அவப்பெயரும் அழிவுமே மிஞ்சி அவர்களும் நிறைவுறாதவர்களாகவே மடிவார்கள் என்பதாலேயே இளைய யாதவர் இயல்பான விசையுடன் போரிட அறிவுறுத்தியதை ஆழ்ந்து சிந்தித்து உணரலாம்.

வியாசரின் மைந்தன் சுகரைப் போல இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்டு அனைத்தையும் துச்சமென உதறி முழுமையை அடைவது உலகியலோருக்கு பொருத்தமான மெய்மையின் வழி அல்ல.

நம் அன்றாட வாழ்வுக்கு எது தேவை என நாம் உணர்கிறோமோ, அதை வழங்கும் கல்வியையும், வேலையையும், அது சார்ந்த பொறுப்புகளோடு ஏற்று முழு ஈடுபாட்டோடு செயல்படுவதே, உலகியலாளர்களான நமக்கான அறிதலின் முழுமையை நோக்கிய பயணம் ஆகும்.

அப்பொறுப்புகளால் விளையும் இன்ப துன்பங்கள் அனைத்தும் நாம் விரும்பி ஏற்ற செயல்களாலேயே என உணர, படிப்படியாக இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் பக்குவத்தையும் அடையலாம்.

அப்படி வாழ்க்கையில், நம் இலக்கை நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நாம் இலக்கை அடைந்துவிட்ட நிறைவோடு, நம் சு்ற்றத்தாருக்கும் ஊக்கம் அளிப்பவராக மாறிவிடுவதே நமது செயல் யோகமாக இந்நூலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இறுதியில், சுகர் வடிவில் முழுமையாகத் தெளிவு பெற்று யமன் அடைந்த மாயை குறித்த விளக்கத்தைப் படிக்கும் நாம், மாயையை வெறுப்பதை விடுத்து, அதை நம்மை உயர்த்தும் ஏணியாக மதிக்கும் பக்குவம் பெறுவதோடு நம் வாழ்வு மீதே நமக்கு மதிப்பு பெருகுவது உறுதி. 

இப்படி எளியோர், ஆள்வோர், அறிஞர், முனிவர் என பலதரப்பட்டோருக்கான அறிவையும் மெய்மையையும் அவரவருக்கேற்பக் கண்டடையும் வாய்ப்பு நிறைந்த இந்நூலை, வெண்முரசின் மற்ற இருபத்தைந்து நூல்களோடு சேர்த்து இச்சுட்டியில் வாங்கலாம்.

இமைக்கணம்

 

நட்புடன்

இரா. அரவிந்த்.