Wednesday, August 3, 2016

சகதேவன்

 
 
வனவாழ்க்கைக்கு செல்லும் முன் திருதராஸ்டிரன் இடம் ஆசிவாங்க வரும் பாண்டவர்களில் சகாதேவனுக்கு ஆசிவழங்கும் முன் திருதராஸ்டிரன் ஒரு கணம் தயங்கி பின் ஆசிர்வாதம் செய்வான். ஒரு கணம் என்னை நிற்க வைத்த இடம் இது.


தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்-என்கிறார் திருவள்ளுவர் 


ஐம்புலங்களும் அறிந்த ஒன்றை பொய்யென்று ஐம்புலன்கள் இடம் நம்பவைத்துவிடலாம் ஆனால் நெஞ்சறிந்த ஒன்றை பொய்யென்று நெஞ்சை நெஞ்சாலும் நம்பவைக்கமுடியாது.
வேரும் மரமும் கிளையும் சிம்பும் நிறைந்து காய்த்துத்தொங்கும் பலாமரமென  பெரும் தந்தையாய் விளங்கும் திருதராஸ்டிரன் கௌரவர்களின் தந்தை என்று மட்டும் இல்லாமல் பாண்டவர்களின் தந்தையென, அஸ்தினபுரியின் தந்தையென சொல்லால் செயலால் உடலால் நிமிர்ந்து இருப்பவன், துரியோதனனின் தந்தை என்று மட்டும் நிற்கும் ஒரு தருணத்தில் பாண்டவர்களுக்கு ஆசிவழங்குகின்றான்  தயங்குகின்றான் திருதராஸ்டிரன், இதை பாண்டவர்களில் சகாதேவன் அறிவது நெஞ்சுக்கு அருகில் நின்று. திருதராஸ்டிரன் நெஞ்சும் குருடாகும் தருணம். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிறான் பாரதி. வாக்கினில் ஒளி உண்டாக நிற்பவன் சகாதேவன் அதானால் அவன் உள்ளம் உண்மை ஒளியால் நிறைந்தது அதை எப்படி இருள் தொடமுடியும்?  .   

திருதராஸ்டிரன் ஒருசொல் சகாதேவனிடம் கேட்டு இருந்தால் அவன் அவனுக்கு விதுரரைவிட, கணிகரைவிட நெஞ்சறியும் நற்சொல் சொல்லமுடியும் ஆனால் அவன் கேட்கவில்லை. மனிதர்கள் அனைவருமே நெஞ்சை நம்பவைக்கவே முயல்கிறார்கள், மாறாக நெஞ்சம் சொல்வதை கேட்க யார் உளர்?. நெஞ்சம்சொல்வதை கேட்பவன் பிரபஞ்சதாயாகின்றான். அது எளிதா என்ன?

எதிலும் தன்னை நிறுத்தி வைத்தே சிந்திக்கும் பீமன் ஒருபுறம், தன்னை எதிலும் நிறுத்தி வைக்காமல் சிந்திக்கும் அர்ஜுனன் ஒருபுறம். தான் ஒருவனே பீமனாகவும் அர்சுனனாகவும் இருந்து சிந்தித்து முட்டிக்கொள்ளும் தருமன் நிலையில்லா தராசு முள்ளென அங்கும் இங்கும் அசைந்துக்கொண்டே இருக்கையில் சொல்லில் நின்று சொல் சொல்லும் சகாதேவன் கலைவாணியின் அம்சம்.


// முதலில் நாம் வெல்லவேண்டியது நம்மை. எளிய விழைவுகளாலோ தனிப்பட்ட வஞ்சங்களாலோ நம் செயல்கள் தூண்டப்படாதிருக்கட்டும். என்றும் மாறாத சில உண்டு என்றால் அவற்றால் நாம் நடத்தப்படுவோம்.”

திருதராஸ்டிரன் பீஷ்மர் துதோணர் கர்ணம் துரியோதன் கிருபர் தோன்றது எந்த இடம் என்பதை சகாதேவன் அறிந்து அங்கிருந்து பாண்டவர்கள் அனைவரையும் வெல்லச்சொல்கிறான். குறிப்பாக தருமனை வெல்லச்சொல்கிறான். தருமனின் தோல்வி பாண்டவர்கள்தோல்வி. தருமனின் வெற்றி பாண்டவரின் வெற்றி. பாண்டவர்

கள் வெற்றிப்பெறுவது கண்ணனால், கண்ணன் எங்கிருந்தால் என்ன இங்கு பாதம் காட்டுகின்றான்.
//ஆம்பலிதழ் வெண்மையுடன் சகதேவனின் உள்ளங்கால்கள் நீந்திச் செல்வதை கண்டார். ஒருகணம் உளம் அதிர்ந்தது. நன்கறிந்த கால்களல்லவா அவை என எண்ணி மூச்சிழந்து மேலெழுந்தார்//

 
 
இருளே உலகத்து இயற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை-கைவிளக்கின் 
நெய்யேதன் நெஞ்சத்து அருளுடைமை நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர்-
 
அறநெறிச்சாராம்
சாகதேவன் படைப்பு அற்புதம் 


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.