அன்புள்ள ஜெமோ,
பன்னிரு படைக்களம் ஒர் உச்சம் என நினைத்தேன். அதைவிடச் செறிவாகவும் ஆழமாகவும் சென்றுகொண்டிருக்கிறது சொல்வளர்காடு. ஒரேசமயம் இரண்டு கதைச்சரடுகள். ஒன்று அதிகார ஆணவப்போட்டி. இன்னொன்று அதற்குச் சம்பந்தமே இல்லாத தத்துவப்போட்டி. இரண்டும் ஒரே போரில் முடிவுக்கு வருமா என்னும் எண்ணம் வந்தது.
இன்றைய அத்தியாயத்திலும் அதே வேதஞானப்போட்டியை வாசித்தேன். அந்த மோதல்கள் எல்லாமே தந்தைக்கும் மகனுக்குமான போட்டியாக இருப்பது ஏன் என்றே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தந்தையும் மகனும் இயல்பான ஆசிரியர் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அது குறியீட்டு ரீதியாக முக்கியமனாது
வேதமரபை எதிர்த்துக்கிளைவிட்ட உபநிஷத மரபு வேதமரபின் மகன் என்பதைப்போல என புரிந்துகொள்கிறேன். தந்தையை வணங்கும் மரபில் இருந்து மைந்தனை வணங்கும் மரபுக்கு கிறிஸ்து மதம் வந்ததும் இதைப்போன்றதே என நினைக்கிறேன்
சரங்கரநாராயணன்