தழல் உருக்கொள்வதகு முன் எங்கிருந்தது? எரிந்து முடிந்த தழல் எங்கு சென்றமைகிறது? தன்னை வெப்பமென்று ஒளியென்று உருக்காட்டிக்கொள்ளும் அதன் ஆதி எது? இரு பொருட்களின் உரசல்களில்தான் அது உயிர்கொண்டதா? உரச வைத்த கரங்களில் உறைந்திருந்ததா? அந்த உரசலை சிந்தித்த உள்ளத்தை மூலமாகக் கொண்டதா? அந்த உள்ளத்தை அணிந்திருக்கும் ஆன்மாவில் இருந்திருந்ததா? அல்லது ஆன்மாவை தன்னுளிருந்து ஒரு அலையென தோற்றுவித்த பேரான்மாவிலிருந்த வித்தா?
சிறு பொறியென பிறந்தெழும் அதில் இருப்பது அடங்காப்பசி ஒன்றே. அருகிலிருக்கும் எதையும் அள்ளித்தின்ன முயல்கிறது. நாவொன்றே உடலென்று எழுந்த யட்சி. எப்பொருளையும் நக்கி நக்கி கரைந்தருந்தத் துடிக்கிறது. உண்ணும்தோறும் பெருகி வளர்கிறது. பெருகும்தோறும் பசிகொள்கிறது. அது தொடும் பொருட்கள் எல்லாம் அதனால் உண்ணப்படுகிறது, ஒரு வீட்டையே உண்பதுண்டு, ஒரு ஊர் முழுமையும் உண்டமைவதுண்டு, ஒரு வனத்தையே சுழற்றி தன் வாயிலிட்டுக்கொள்வதுண்டு. பூமியை அகலாக்கி, மலையை திரியெனக்கொண்டு பெருந்தீபமென எழுவதுண்டு.
விசும்பில் எழுந்த தழற்பொறிகளே ஞாயிறென்றும் விண்மீன்களென்றும் சிதறிக்கிடக்கின்றன. அல்லது இந்த விசும்பே ஒரு தழல்வெளியோ? விசும்பில் இருக்கும் ஒவ்வொன்றும் அப்பெருந்தழலில் எழும் தழல்நாவுகளின் தோற்றங்களோ? தழலால் ஆனதுதானோ இந்த பிரபஞ்சம்?
ஒருவரின் சிந்தையில் அகங்காரமென கருக்கொண்டிருக்கிறது தழல். எண்ணங்களின் உரசல்களில் பொறியென தன்னை உருக்கொண்டு விழித்தெழுகிறது. எண்ணங்களை உண்டு பெருத்து வளர்கிறது, வஞ்சமென்றும், சினமென்றும், துயரமென்றும், களிவெறியென்றும் சோம்பலென்றும், காமமென்றும் வளர்ந்தெழுந்து சடசடத்து எரிகிறது அது. ஒருவரிலிருந்து சொற்களாக செயல்களாக தழல் நாக்குகள் எழுகின்றன. அது எதிரிலிருப்பவரை எரிக்க முயல்கிறது. தோன்றிய உள்ளத்தையும் சேர்த்து எரிக்கிறது. அழிப்பதொன்றே அதன் நோக்கம் எனக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் ஒருவர் தன் உள்ளத்தில் எழும் தனலை உணவு சமைப்பதற்கான் அடுமணை நெருப்பென ஆக்க முடியும். அனைவரையும் நேசிக்கும் அன்பென, அனைவரின் துயர் போக்க நினைக்கும் கருணையென, மற்றவர் தவறுகளை பொறுத்துக்கொள்ளும் தயையென, தன்நலனுக்கான பலனை மற்றவருக்காக கைவிடும் தியாகமென, மாய இருள் நீக்கும் ஞானத்தீபமென தன் உள்ளத்தில் தழலை காத்து வருபவர்களின் பொருட்டே இவ்வுலகு இன்னும் எரிந்து நீறென ஆகாமல் இன்னும் குளிர்ந்திருக்கிறது.
இலக்கிய வெளியில் நிகழும் பெரும் ஞான வேள்வியில் எழுந்தமைந்து சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது வெண்முரசு என்ற ஞானப்பெருந்தழல். அதன் இன்னொரு தழல்நாவென எழுகிறது எழுதழல். பெருகி வளரும் அந்த வேள்வித்தீ படிப்பவர் உள்ளத்தில் ஒளி நிறைத்து வருகிறது. அந்த வேள்வித்தழலை போற்றுகிறேன். அந்த வேள்வியை தனியொருவராக தன் அறிவு, நேரம், அனுபவம் என அனைத்தையும் ஆகுதியாக்கி நடத்தும் ஆசானை வணங்குகிறேன்
தண்டபாணி துரைவேல்