எழுதழல் ஓங்கி வளரும் வேகம் வாசக மனங்களிலும் பற்றிவிட்டது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவிலேயே படித்துவிட எண்ணி இரண்டரை மூன்று மணி வாக்கில் படித்து விடுகிறேன். அதன் பின்னர் மீள் வாசிப்பு செய்ய பல குறிப்புகள் தூண்டுகின்றன.
'முன்செல்லும் பறவை' என்ற சொல்லாட்சியைப் படித்ததும் உடனடியாக சொல்வளர்காட்டில் 'செந்நிற வழிகாட்டிப் பறவை' என்ற உவமையை மனம் தொட்டெடுத்தது.
சொல்வளர்காட்டில் மூன்று ஆதித்யர்கள் குறித்த குறிப்பு வரும் - மாதரிஸ்வான், ஆபாம் நபாத், வாக் என்று அவர்களை தருமன் விவரிப்பார்.
முதலமாவனாகிய மண்ணில் எழுந்த அக்னி பெரும்பசி உடையவன், ஆறாச்சினம் கொண்டவன், வழிகாட்டிப் பறவை. இரண்டாமவன் நீரில் உருக்கொண்டவன். மூன்றாமவன் நாவில் அனலென எழும் அக்னி. இம்மூவரும் ஒருவரை ஒருவர் அறியும் தருணமே வேள்வி என தருமன் விளக்குவார்.
மானுடர் மனங்களில் கருக்கொள்ளும் அணையா நெருப்பு, உடலெனும் மண்ணில் வெளிப்படுகிறான், நிணமென குருதியென நீரில் உறைகிறான், மானுடர் நாவில் அனலென எழுகிறான். வேள்விக்குளமென வாழ்வை அதன் பொருட்டே ஆகுதி செய்கிறான்.
மண்ணுக்காகத் தொடங்கிய போர், தீயில் பிறந்த பெண்ணுக்காகத் தொடங்கிய போர், ஆழிவண்ணன் சொல்லுக்காகத் தொடங்கிய போர் என்ற வகையிலும் இது வேள்விதான். மண்ணில் சொல்வளர்காடுகள் தோறும் அலைந்து, காடுவாழ் கிராதனென உருமாறி, மண்ணில் மலர்ந்த மாமலர் தோறும் தேர்ந்து பெற்ற அக்னி, நீருக்குள் என நீர்க்கோல வாழ்வில் மறைந்திருந்து, தூதென வாக்கில் வெளிப்பட்டு எழுதழல் வளர்கிறது. மனம்
இப்பெருவெளி நடனத்தில் பித்தாகிறது தெளிகிறது.
வேள்விக்களம் நிரத்தப்படுகிறது. அவியாகுதலொன்றே முன் செல்லும் வழி.
சுபா