Tuesday, September 19, 2017

எரிதழல்





இனிய ஜெயம்,

மெய்யாகவே  நீண்ட வனவாசம் முடித்து,  குந்தியின் முகத்தை காண்பது போல ஒரு உணர்வு.  

  பிரயாகை துவங்கி நீர்க்கோலம் வரை ,   வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்தின் வழியே  திரௌபதியின்  ஆளுமை  புடம்போடப்பட்டு  செம்மையாகும்  சித்திரத்தை காண்கிறோம்.  

வனவாசத்தின் போது  தனது  பயணமாக கந்தமான மலையை அடைந்து மீள்கிறார் தருமர்.    அந்தப் பயணம்  அவருக்கு அளித்த எதுவும் அவரை பண்படுத்த வில்லையா?   மீண்டும் பழைய தருமராகத்தான் அவர் இருக்கிறாரா?   

பாசுபதம் அடைந்தபின் அர்ஜுனன்  என்னவாக இருக்கிறான்?

திரௌபதியை  அலைக்கழித்த ஜயத்ரதனை  துவம்சம் செய்யும்,   திரௌபதியை அவமதித்த கீசகனை  அடித்துக் கொல்லும்  பீமன்.  அதிலிருந்து இதுவரை என்னவாக இருக்கிறான்? 


அருக  நெறி தேர்ந்து அமரும் சகாதேவன்   நிலை என்ன? 


ஸ்தாயி பாவம் , விஷய பாவம்  எனும்  கருவி கொண்டு அளந்து பார்க்கலாம். 

தேவயானி, தமயந்தி கதைகள் வழியே  திரௌபதியின் விஷய பாவ  குணாம்சத்தின் பரிமாணங்கள் துலங்கும் அதே சமயம் ,இத்தனை அழுத்தங்கள் வழியே அவள்  என்னவாக  ஆகிறாள்?    ஐந்து கிராமம் கூட போதும்  எனும்  வேட்கையோ பற்றோ அற்ற  நிலைக்கு  அவள்  வரும் சித்திரத்தையே மகாபாரதம் காட்டுகிறது.

அர்ஜுனனுக்கு வேறு சவால்.   பாசுபதம் நோக்கிய பயணத்தின் சவால் ஒன்றினில்  தனது மகனின்  உயிரை  எமன் வசம்  சமனாகத் தந்து  வேறொரு உயிரை மீட்கிறான். அவனது அந்த உறுதி இனி குரு ஷேத்ரத்தில் விதியால் சோதிக்கப்படப் போகிறது. வெல்வானா ? அல்லது புத்ர சோகம்  அவனது நில்லாப் பயணத்தை முடித்து வைக்கப் போகிறதா?

கந்தமாதனம்  விட்டு மீண்ட தர்மர்  ஏன் மீண்டும் கீழான மனநிலைகளை  வெளிப்படுத்துகிறார்?     சகாதேவனின் நிலை என்ன?   இரண்டுக்கும் விடை ஒன்றே ..  விசை கொண்டு  அந்த முனை செல்லும் ஊசல்குண்டு , அதே விசையுடன்  இந்த முனைக்கு வந்தே தீரும். 

ஆம்  தர்மனும் , சகாதேவனும்  ஒற்றை மையத்தில் தொங்கி ஆடும் ஊசல் குண்டு. மாறாக  நேமி நாதர்    எரிந்து ,எரிந்து, விண் துளைத்து உயர்ந்து கொண்டே இருக்கும் எரிகல் .  அவரது ஸ்தாயி ,விஷயம் இரு பாவங்களும் ஒன்றே.  அதனால்தான்  அவர் ஆகி அமர்ந்தவர் ஆக மாற, தர்மன் வெறுமே  ஆனவர் ஆகவும், சகாதேவன் வெறுமே அமர்ந்தவர் ஆகவும்  மாற நேர்கிறது. 

பீமன்  ஜயத்ரதன் துவங்கி ,   கீசகன் வரை   திரௌபதி மீதான காதலால் மட்டுமே   நாட்பட நாட்பட சுவையும் போதையும் கூடும் மது போல கனிகிறான் .  மாமலர் தேடிய அவனது பயணத்தின் இறுதி சவால் முன் அவன் கண்களை மூடிக் கொள்கிறான். பயந்து பின்வாங்கி ஓடுகிறான்.  ஆம்   எந்த ஆற்றல் வாய்ந்த மிருகமும் இறுதியில் அதேயே செய்யும்.  ஒரு  வகையில்  பீமனின் மிருக குணம்  எந்த அளவு  அவனுக்கு  முன்னெச்சரிக்கையை  அளிக்கிறது  என அவன் கர்ணனை முதன் முதலாக சந்திக்கும் தருணத்திலேயே தெரிந்து விடுகிறது.   குலாந்தகன் நான் என நெஞ்சை அறைந்து வல்விளி  விடுகிறான்  பீமன்.   குலம்  அறுத்தல் எத்தகைய வலி அளிப்பது ,என  குரு ஷேத்ரத்தில்  கர்ணன்தான் அவனுக்கு உணர்த்தப் போகிறான். பாவம். பாவம்தான் பீமன். 

அனைவருக்கும் மேலே குந்தி.  இன்றைய அவளது இரு பாவனைகளும் ஒன்றே வஞ்சம்.   அந்த நெருப்பைத்தான்  அம்பை வசமிருந்த அவள் மீண்டும்  தூண்டிக் கொள்கிறாள். உலராக் கண்ணீர்  விளைவித்த நெருப்பு.  

மூச்சு முட்டவைக்கும் ஆயாசம் அளித்தது  இன்றைய அத்யாயம்

கடலூர் சீனு