Friday, September 22, 2017

கருக்கிருள்



இனிய ஜெயம்,

என்ன சொல்ல?  வெய்யோன் நாவலில் ,துச்சலையின் மைந்தனை  இவ்வாறுதான்  தூக்கிப்போட்டு  பந்தாடி விளையாடினார்கள்  பால கௌரவர்கள்.  கொஞ்சமும்  மாறாமல்   இன்று  அபிமன்யுவை அப்படித் தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.    உண்ணவும்  சண்டை  செய்யவும் மட்டுமே அறிந்தவர்கள். 

அன்று  உடல் முழுக்க வண்ணக் குழம்புகளால்  நிறைந்து நின்றனர். இன்று  உணவாலும் மதுவாலும் முழுக்காட்டப்பட்ட உடலுடன் திளைக்கிறார்கள்.   வெகு விரைவில்  குருதி கொண்டு  குளிக்கப்போகிறார்கள் .    உண்ணவும்  சண்டை போடவும் மட்டுமே   அறிந்தவர்கள்.  கொடுப்பதில் உவகை எய்துபவர்கள். துரியனுக்காக உயிரை கொடுக்கப் போகிறவர்கள்.  அபிமன்யு அறிவான்  அந்த கைவிடு படைகளின் விசையான வஞ்சத்தை.    இவர்கள் ஏதும் அறியாதவர்கள் .   அவர்கள் அத்தனை பேரையும் கொல்லவேண்டும்  என்ற  குந்தியின்  வஞ்சத்துக்கு மட்டுமே பலி ஆகப் போகிறவர்கள்.   பிரலம்பன்  அந்த அம்பின் முனையில்  குருதியைக் காணும் போது ,ஒரு திடுக்கிடலுடன் வியாசரின் நினைவு எழுந்தது.   அத்தனை பேரும்  வியாசரின் பிள்ளைகள் அல்லவா?