Saturday, September 2, 2017

சுழி

 


அன்பின் ஜெ,

               
                நீர்க்கோலம்....தன்னளவில் முழுமையடைந்து,முழுமையடைந்து பெரிய சுழிபோன்ற கதையமைப்பு கொண்ட நாவல்.ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அமைப்புடன் ,புதிய கதையாடல்களுடன் வந்தது.ஒரு நாளும் விட்டுவிடாமல் தொடர்ந்து  வெண்முரசினை  வாசிக்க வேண்டும் என்று முதல் நாளிலிருந்தே முடிவெடுத்து  தொடர்கிறேன்.என்னுடைய வழக்கமான ஒரே விதமான சுழற்சியில்  வெண்முரசு மட்டுமே என்னுடன் இருக்கிறது என்றே சொல்வேன்.தனிப்பட்ட என்னுடைய பல சிக்கல்களால் பல மாதங்களாக  என்னால் நிறைய செய்திகளில் கவனம் செலுத்த இயலவில்லை.உங்கள் தளத்தில் வரும் வேறு சில கட்டுரைகளை தவற விட்டிருப்பேன்.ஆனால் வெண்முரசினை மட்டுமே எல்லா நாளும்  தொடர்கிறேன்.இடைவெளி வரும் நாட்களில் தான் அது எழுதப்படவில்லை என்பதே என் நினைவில் படுகிறது.

         
 நான் வளர்ந்த குடும்ப சூழலில் மகாபாரதம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.சிறுவர் மலரில் வாசித்த மேலோட்டமான அடிப்படை கதைகள் மட்டுமே தெரியும்.இங்கு நிறைய பேர் வெண்முரசில் சந்தேகங்கள் கேட்கிறார்கள்.அவையெல்லாம் எனக்கு புதியவையே.

    
  என்னைப் பொருத்த வரையில் இது புதிய நாவல் தான்.நானறிந்த நள தமயந்தியும்,பாண்டவர்களும்  வேறு.வெண்முரசில் வாசிப்பவர்கள் வேறு.

         
நீர்க்கோலம் விராடபருவமும்,நளதமயந்தி கதையும் இணைந்த மிக அற்புதமான வடிவம்.கரவுக்காடும்,நிஷாத குலங்களும்,அன்னமும்,நளனின்,வலபனின் சமையல் நுட்பங்களும்,புரவிகளும் நிறைந்த உலகிலிருந்து இன்னமும் நான் வெளியில் வரவில்லை.
      

 பாண்டவர்களின் உருமாற்றங்களில் பிருகன்னளையும்,சைரந்தரியும்,வலபனும் முழுமை கொள்கின்றனர்.

        
 கீசக வதம் இப்படித்தான் நிகழும் என்று நான் முன்பே எண்ணியிருந்தேன்.அதைப் பற்றி விவரிக்காமல் சென்றுவிட்டீர்கள் .அது எனக்கு உற்சாகமாயிருந்தது.பரவாயில்லை வெண்முரசை வாசிக்கும் நுட்பம்  எனக்கு கூட வந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டேன்.
       
சமையல் கூடங்களும்,உண்டாட்டுகளும்,நாகங்களும்,கார்க்கோடனும்,குதிரைகளுமான இவ்வலையமைப்பு வாசிக்க வாசிக்க எனை ஈர்த்ததுக் கொண்டது.
    
நீர்க்கோலம் என்ற தலைப்பு இதற்கு மிகவும் பொருத்தமானது.
  
அடுத்த நாவலின் அறிவிப்பிற்காக  எதிர்பார்த்திருக்கிறேன்.
அன்புடன்
மோனிகா மாறன்.