வெண்முரசு நாவல்களின் துவக்க அத்தியாயம் பொதுவாக அந்த நாவலின் மொத்த அமைப்பையும் சுட்டி நிற்பது வழக்கம். எழுதலும் அவ்வாறே. மிகச்சரியாக கனலை தழலாக்கும் முதல் வஞ்சத்தைச் சுமப்பவளான குந்தியில் துவங்கியிருக்கிறது. அம்பையை வணங்கி நகர் நுழையும் அவள் அம்பையின் ஆற்றாது அழுத கண்ணீரைச் சுமந்து உள்நுழைகிறாள். அவள் காணும் ஒவ்வொன்றும், அந்த இயற்கை வர்ணனை உட்பட ஓர் படை நகர்வையே சுட்டி நிற்கின்றன. நாவல் ஒரு வகையில் மழைப்பாடல் விட்ட இடத்தில் துவங்குகிறது. இந்த பாரத விளையாட்டை ஆடும் மூவர் கதையின் இரு அத்தியாயங்களிலும் வருகிறார்கள். குந்தி, சகுனி மற்றும் விதுரர். மழைப்பாடலில் சகுனி விதுரரைப் பார்த்து மனதுள் எண்ணிக் கொண்ட 'உண்மையில் ஆடப் போவது இவனிடம் தான்', என்பது தான் நினைவுக்கு வந்தது.
அன்புடன், அருணாச்சலம் மகராஜன்