Thursday, September 21, 2017

நுழைவு



இனிய ஜெயம்,


அபிமன்யுவின்   அஸ்தினாபுரி  நுழைவு, அரண்மனை நுழைவு, பாட்டியுடனான  சந்திப்பு   அனைத்தின் வழியே  துலங்கி வருகிறது  அபிமன்யு போன்ற ஒருவனின் இளமைக்கே உரிய வசீகர ஆளுமை. 

முன்பு  ஒரு பதிவில்  ஒரு மாலில் , அதன் கண்காணிப்பாளர்களால்   தான் நடத்தப்பட்ட விதம் குறித்து போகன் மனம் கசந்து எழுதி இருந்தார்.  உடையும் ,உடல்மொழியும் ,  ஒரு மாலுக்குள் புழங்க  எந்த அளவு  மறைமுக நிபந்தனையாக செயல்படுகிறது என எழுதி இருந்தார். 

அவர் என் நண்பரை  கண்டால் வியந்து வாயைப் பிளந்திருப்பார்.   எனது நண்பனுக்கு இருபத்து நாலே வயது,   மாலின் எந்த பிரும்மாண்ட வாயில் ஆனாலும்  அதன்  மையக்கோட்டில் வைத்தே நுழைவார்.   பெரும்பாலோர்   அத்தனை பிரும்மாண்ட  வாசலால் துணுக்குற்று  ஏதேனும் ஒரு ஓரத்தை சார்ந்தே நடப்பர்.    உள்ளே  யாரை சந்தித்து எதை கேட்கவேண்டும் என்றாலும் , உடலிலோ மொழியிலோ  ஒரு சிறு குழைவோ பணிவோ  இன்றி  தடாலடியாக ,நேரடியாக  கேட்பார்.    கலைந்த தலை, டீ ஷார்ட் , நைட் பேண்ட் , சாதா செருப்பு , இதுதான் பெரும்பாலும் நண்பனின் உடை.  இத்தோடுதான் பல மால்களுக்குள்  சுற்றித் திரிந்திருக்கிறோம்.   அவனைக்கண்டு   சுருங்கிய  ஒரு விழியை இதுவரை நான் கண்டதில்லை.  மாறாக    அவனுக்கு  அவன் கேட்டதற்கும்   மேலதிகமாக  எதயோ சொல்ல வருவார்கள்,  அதற்குள்  அவன் விருட்டென  வெகு தொலைவு சென்றிருப்பான். 

காரணம்  ஒன்றே ஒன்று. அவன் வழியே  கொப்பளித்துத் ததும்பும் இளமை.   அந்த  இனிய   பொழுதுகளை  ,அப்படி ஒரு இளமையின் அருகே இருந்து பார்த்தால்தான்  உணரவே முடியும்.    அபிமன்யு  முழுக்க முழுக்க அந்த  சித்திரம் வழியே ,இளமை கொண்டு பொலிகிறான் . 

அத்தனை பேரையும் கொல்ல வேண்டும்  என்று மனம் புழுங்குகிறாள் குந்தி.  அவள் மீது  அபிமன்யுவுக்கு கோபமே இல்லை.   ஏன்?  அதற்கான பதிலைத்தான் அவன்  அந்த கைவிடு படைகள் முன்பு நின்று சொல்கிறான்.  

ஆம் அது குந்தியின் வஞ்சமல்ல , அவள்  சத்யவதி கொண்ட வஞ்சத்தின் கைவிடு படை மட்டுமே.  அந்தக் கைவிடு படைகள்  கொல்ல வேண்டிய  உயிர்கள், அவை  பூட்டப்பட்ட கணம்  பிறக்கவே இல்லை.  அந்த பிறக்காத  தலைமுறையை சேர்ந்தவன்தான் அபிமன்யு.  அவனுக்கு இன்று நடப்பது  எல்லாம்    என்னவாக  பொருள் அளிக்கும்? இங்கே  அவன் செய்வதற்கு என்ன இருக்கிறது?   ஒன்றே ஒன்றுதான்  அதைத்தான் அவன்   குருஷேத்ரத்தில் செய்கிறான்.