Tuesday, September 19, 2017

செந்தழல் போற்றுதும்



அன்புநிறை ஜெ,

செந்தழல் போற்றுதும் எழுதழல் போற்றுதும்.

காற்றே இல்லாத பின்னிரவில் தொடங்குகிறது எழுதழல். 

அலுவல்கள் ஓய்ந்து துறையில் மானுடர் மயங்கும் நேரம். துயிலற்ற கங்கை வழிந்து கொண்டே இருக்கிறாள்.   
காலமென்னும் பெருவெள்ளத்திலும் அழியாத கனலோடு கங்கையின் கரையில் அம்பை அணையாநெருப்பெனக் காத்திருக்கிறாள். இருளில் மறைந்ததால் இல்லையென்று நம்ப விழைந்த அனைத்தும் ஒளி கொள்வதற்கு முந்தைய தருணம். 

நெருப்பை அஞ்சிக் கால்பரப்பும் ஆடு மலர் கண்டதும் நாக்கு நீட்டுகிறது. பலிக்களம் வரை விழைவு கொள்ளும் எளிய உயிர்கள்.

முழவொலியில் உயிர்த்து எழும் தேவென காற்று தீண்ட சிறுமொட்டு  பெருங்கனலெனக் களிகொள்கிறது. காடு வெந்து தணியக் காற்றே வாகனம். மாருதனின் துணையோடு களமெரித்தாடப் போகும் அனல்மகளுக்காகக் காத்திருக்கும் செங்களம்.


நோக்கியே நெடுங்காலமாகிவிட்ட அம்பாதேவி, எவரும் வர மறந்த அஜபாகர்  ஆலயம், கண் முன் இருந்தும் மக்கள் மனதில் மறைந்து போன அனுமனின் கதாயுதம், மறக்கவே முடியாத தெய்வவாக்கென தீர்க்கசியாமர் சொற்கள், குருதி மழை, 
உபாலன் மரணம், துரியன் பிறப்பு நினைவுகள் என்று மனதின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் நினைவுகள் மேலெழும் தருணம்.

முற்றாக மூடி சட்டம் அடிக்கப்பட்ட சாளரம் என்ற வரியை வாசித்ததும் விதுரரின் அன்னை உருவம் மனதில் எழுந்தது. அடுத்ததாக இயல்பாக சம்படைக்குச் சென்றது. சகுனியின் மனவோட்டம் செல்லும் திசை சில நொடிகள் முன்னதாக வாசகரின் மனதில் தோன்றுகிறதெனில் கதையின் களமும் நிகழ்வுகளும் மாந்தரின் ஆளுமைகளும் எவ்வளவு தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன!.

இதே சாளரத்தில் இதற்கு முன்னர் வெறித்து அமர்ந்திருந்த சுனந்தை, சந்தனுவின் இளைய மனைவி காந்திமதி மற்றும்
மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும் குறித்து கர்ணனும் சிவதரும் பேசிக் கொள்ளும் தருணம் நினைவிலெழுந்தது. 


காலமெனும் சுருதகர்ணம் ஒலித்து காஞ்சனம் எனப் பொன்னுருகும் வேளை. அஸ்தினபுரி விழித்தெழ வேண்டிய தருணம்.  வெகு நாட்களாக காத்திருந்து பாறை போலாகிய விசைகள் உயிர் கொள்கின்றன. கைவிடுபடைகள் போல துளித்துச் சொட்டும் உளக்குருதியின் நினைவோடு ஒரு மெல்லிய தொடுகையை எதிர்பார்த்தும் அஞ்சியும் மனிதர்கள்  காத்திருக்கிறார்கள்.
நெடுங்காலம் மறக்கப்பட்டுவிட்டவற்றை மறக்க முயன்றவற்றை கனவெனத் தொட்டு எழுப்பும் விடியலுக்கு முந்தைய கருக்கலில் மூன்று மாந்தர்கள் களத்தில்.

கோட்டைச்சுவர் மடிப்புக்குள் இருளுக்குள் செவிகளின் அசைவாக நின்றிருக்கும் யானைகள் போல அனைத்து மனங்களின் வஞ்சங்களும் விழைவுகளும் காயங்களும் இல்லாதிருப்பது போல தோற்றம் கொண்டு பெருங்கதவம் திறந்து விட்டு அசைவு காட்டி மறைந்துநிற்கின்றன.

நிழலும் ஒளி கொள்ள வளர்கவே எழுதழல்.

மிக்க அன்புடன்,
சுபா