Sunday, September 3, 2017

நீதிமான் எழுந்து வருகையில்.



அன்புள்ள எழுத்தாளருக்கு...

நீர்க்கோலம் 97-ல் இந்திரகிரி மலைமேல் புஷ்கரனுடன் மற்றுமொரு சூதாடலுக்கு அமர்கையில் மக்கள் கொள்ளும் வெறி ஆச்சரியமளித்தது. அத்தனை ஆண்டுகளாக மூச்சு கூட காட்டாமலிருந்தவர்கள், இன்று புஷ்கரனைத் துண்டாக்கி விடும் அளவுக்கு ரெளத்திரம் காட்டுகிறார்கள். இரண்டாம் முறை படிக்கையில் 'வேறெங்கோ படித்தது போல் இருக்கின்றதே' என்றது ஒரு மனத்துணுக்கு. நினைவு மீட்டலில் சட்டென நினைவுக்கு வந்தது.

பட்டத்து இளவரசனைத் தேர்வு செய்வதற்கு முன் குந்தியுடன் தருமனும் அர்ஜூனனும் பேசுகையில் நிகழும் உரையாடல்  (பிரயாகை 12 ) .அதில் 'வன்முறை மூலம் அரசைக் கைப்பற்றிப் பின் நல்லாட்சி கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வர்' என்று குந்தி சொல்கிறாள். அதற்கு அர்ஜூனன் பதிலில் 'முதலில் ஏற்றுக் கொண்டாலும் நீதியை உரக்கச் சொல்லி ஒரே ஒரு நீதிமான் எழுந்து வந்தாலும் அத்தனை பேரும் அவர் பின்னே திரள்வர், நம்மைக் கைவிட்டு. அந்நிலை ஏற்படாமலிருக்க அரசன் கைவாளும் அரியணை நாற்கால்களும் குருதி பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்' என்கிறான்.

இங்கே அதுதான் நிகழ்கின்றது. எதிர்த்து சொல்லோ வாளோ கொள்ள முடிகின்ற எவரும் இல்லாத நிலையில் புஷ்கரனுக்கு முழுக்க முழுக்க அடிமையாகி விட்டிருந்தனர் மக்கள். அவனுடைய கொடூரங்களுக்குத் துணைநின்றனர். ஆனால் என்று நளன் திரும்பி வந்தானோ, அன்றே நாடு அவன் பின் சென்று நின்று விட்டது. அதை அறியாத ஒருவனாக இருந்தவன் புஷ்கரனே.

அன்று தருமன் உரைத்ததை 'வெறும் நூல் பேச்சு' என்று முகம் சுளித்தாள் குந்தி. சொல்வளர்க்காட்டில் 'வீரமற்ற பேடித்தனம்' என்றிகழ்ந்தாள் திரெளபதி. இந்நிகழ்வை அறிந்தார்கள் என்றால், தருமனின் பொறுமையின் நடைமுறைப் பெறுமதியை உணரலாம்; உணராமலுமாகலாம்.

நன்றிகள்,
இரா.வசந்தகுமார்.