அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்.
விடாரபுரத்தைவிட்டு பாண்டவர்கள் புறப்பட்டதுமே, நாவல் எப்படி முடியப்போகிறது என்றறியும் ஆவல் எனக்குள் பொங்கியபடி இருந்தது. அடுமனை, புதுமணத்தம்பதி, அதற்கப்புறம் விறலியர் பாடல் வழியாக நீண்டு முடிவு கொள்ளும் நளன் தமயந்தியின் கதை, நளன் - பிள்ளைகள் சந்திப்பின் நெகிழ்ச்சி என கடந்து சென்று, இறுதியாக உத்தரையின் ஆழ்ந்த பார்வையைத் தாங்கமுடியாமல் வெளியேறி வந்து நிற்கும் அர்ஜுனனைக் காட்டி ஒரு கவித்துவமான புள்ளியில் நின்றுவிட்டது. முழு விசையோடு சுழன்ற பம்பரம் மிக இயல்பாக ஒரு புள்ளியில் நின்று சாய்வதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. தொடக்கத்தில் இருந்த எழுச்சி, சிறிதும் குன்றாமல் இறுதிப்புள்ளி வரைக்கும் படர்ந்திருக்கிறது. பாண்டவர்கள் கதையையும் நளதமயந்தியின் கதையையும் இணைத்திருக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இரு மாதங்களுக்கு முன்புதான் பழைய நோக்கியா பேசியை மாற்றிவிட்டு, புதிதாக லெனோவா பேசியை வாங்கினேன். அதனால் கிடைத்த முதல் பயன், வெளியூரில் இருந்தாலும் அங்கங்கேயே அமர்ந்து அத்தியாயங்களை விடாமல் படித்ததுதான். முன்பெல்லாம் வீடு திரும்பும் நாளுக்காகக் காத்திருந்து தொகுத்து படிக்கவேண்டிய நிலை இருந்தது. அதனால் நீர்க்கோலத்தை ஒருநாள் கூட தவறவிடாமல் படித்து வந்தேன். என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்று எழுதழல் அறிவிப்பைக் கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கென மீண்டுமொரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
பாவண்ணன்