வெண்முரசு பல இழைகளாக பல்வேறு நாயக நாயகியர் கதைகளை உள்ளடக்கிய பெருங்காப்பியம். அந்த காப்பிய பேராலமரத்தின் வேர் மற்றும் கிளைகளாக சில முக்கிய கதை நிகழ்வுகள் இருக்கின்றன. அதில் மூல வேரென இருப்பது ஒரு அறப்பிழை. அந்தப் பிழை அம்பையின் துயரத்திற்கு காரணமானது. தனி ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி அது. ஒரு அக்கினி குஞ்சென தோன்றி அணையாது இருந்து வருவது. அது பெருந்தீயென எழுந்து அஸ்தினாபுரத்தை அழித்துவிடாமல் இருக்க பீஷ்மர் விதுரன் தருமர் முயல்கின்றனர். ஆனால் அத்தழல் அணையாமல் இருந்து கொண்டே வருகிறது. சகுனியின் உள்ளத்தில் அவன் சகோதரி காந்தாரிக்கும் அவளின் மகன் துரியோதனனுக்கும் இழக்கப்பட்ட வஞ்சமாக அது எரிந்துகொண்டு இருக்கிறது. குந்தியின் உள்ளத்தில் தன் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட வஞ்சத்தின் காரணமாக அந்தத் தீ எரிந்துகொண்டிருக்கிறது. பீஷ்மர் அத்தழலை தன்னால் தனிக்க முடியாது என்று அறிந்து அதற்கான முயற்சியெலாம் கைவிட்ட நிலையில் இருப்பதாகத் தோன்றூகிறது. தருமன் சூதாட ஒத்துக்கொண்டதே அவனுடைய இறுதி முயற்சியாக இருக்கிறது. இனி அவன் ஒன்றும் செய்வதற்கில்லை என்று தோன்றூகிறது. விதுரர் ஒருவர் மட்டுமே இத் தழலை மட்டுப்படுத்த முயல்பவராக இருப்பார். அதற்கு பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்பட அவர் முயல்வார் எனத் தெரிகிறது. துரியோதனுக்கு முழு அஸ்தினாபுர அரசையும் தக்க வைத்துக்கொள்வதற்காக திட்டம் வகுத்து செயல்படுத்துபவனாக சகுனியும், தன் பிள்ளைகளுக்கு இழந்த அரசை பெற்றுத்தருவதற்கான பெரிதும் முயல்பவளாக குந்தியும், அஸ்தினாபுரத்தில் கோரமான போர் ஒன்று ஏற்படாமல் தவிர்க்கப்பார்க்கும் ஒருவராக விதுரும் செயலாற்றவேண்டிய காலக் கட்டத்தை எழுதழல் கூற இருக்கிறது. ஆகவே இந்த மூவரின் பார்வையில் எழுதழலில் நிகழ்வுகள் கூறப்படலாம என நினைக்கிறேன். ஆகவே அவரகளின் மூவரைப்பற்றைய நிகழ்வுகள் முதலில் கூறப்படுகிறது.
தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதும் அம்பையின் சினம் இப்போது குந்தியின் உள்ளத்தில் இருக்கிறது. அம்பை ஆலயத்தில் குந்தி கொடுக்கும் குருதிப்பலி, இனி வரப்போகும் பலிகளுக்கு ஒரு தொடக்கமாக அமைகிறது. துரியோதனனுக்கு எதிராக திரண்டு நிற்கும் பாண்டவர்களின் பெருங் கோபத்தை சகுனி காணும் அனுமனின் பெருங்கதை உருவகப்படுத்துகிறது. இத்தனை நாட்களாக அதை கான்பதைத் தவிர்த்திருந்த சகுனியின் கண்களுக்கு இப்போது அது பெரிதாக தெரிகிறது. போரைத் தவிர்க்கமுயலும் விதுரருக்கு அப்பெரும்போருக்கான காரணங்கள் அம்புகள் பூட்டி நிற்கும் கைவிடு படைகள் போன்று தெரிகிறது, ஒரு சிறு விசை செலுத்தப்பட்டால் பல்லாயிரம் அம்புகள் பாய்ந்தெழுந்து பல உயிர்களை பலிவாங்கும். இனிவரும் கதைக்கான திட்ட வரைகோட்டுப்படமென இம்மூன்றையும் கொள்ளலாம் எனத் தெரிகிறது. இம்மூவரின் திட்டங்களை எப்படி கண்னன் திசை திருப்பி விளையாடப்போகிறான் என்பதை காண மிகவும் ஆவலாக உள்ளது.
தண்டபாணி துரைவேல்