ஒரு வெட்கையான நாளில் திடீரென்று ஒரு இளந்தென்றல் சில வினாடிகள் நம்மைத் தழுவிச் செல்கையில் சிலிர்த்து நிற்போம். அடுத்து அது எப்போது வரும் என நம்மைக் காத்திருக்க வைக்கும். அது செல்லும் வழிகளில் மலர்களின் இதழ்களை மெலிதாக பிடித்திழுக்கும். போகிற போக்கில் மகரந்தத்தை திருடிச்செல்லும். கீழேஇருக்கும் சருகுகளை புரட்டிப்போடும், மகளிரின் ஆடைகளை கலைக்கப்பார்க்கும். அவர்களின் முடிக்கற்றைகளில் ஊஞ்சலாடும். சிற்றகல்களில் தீபங்களை படபடக்கவைத்து பயங்காட்டும். தோரணங்களில் பிடித்து தொங்கி விளையாடும். ஏழை பணக்காரன், அழகானவை அழகற்றவை, உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற எந்த வேறுபாட்டையும் காட்டாது அனைத்தையும் தழுவிச்செல்லும். நம் மனதை உறுத்தும் துக்கத்தை கோபத்தை, வஞ்சத்தை, காமத்தை சற்றேனும் மறக்கவைக்கும். அந்த குறும்புக்காரத் தென்றலை பிடிக்காதவர் யாராவது இருக்க முடியுமா?
இன்று வெண்முரசில் அபிமன்யு என்ற தென்றல் வீசிசென்றதில் மனம் சிலிர்த்து குளிர்ந்து போனது.
தண்டபாணிதுரைவேல்