பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
"மஹாபாரதத்தில்"வரும் முக்கியமான உணர்ச்சிகரமான நிகழ்வுகளை பெரும்பாலான வாசகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட புராணத்தை தழுவி வெண்முரசு வரும்போது,எங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக மிகுந்த உயிர்ப்புக்களுடன் முக்கியமான கட்டங்களை நீங்கள் சித்தரிக்கிறீர்கள்,அப்படிப்பட் ட ஒன்றுதான் அபிமன்யூ கருவிலேயே வில் வித்தையை அறிபவனாக காட்டப்படுவது.உங்கள் மொழியில்.. "வன்பாலை நிலம் மழைத்துளியை என அவரது ஒவ்வொரு சொல்லையும் அவள் வாங்கிக்கொண்டாள் என்று சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன்.” “தான் கற்றவற்றை தன் சித்தத்தில் நிறைத்து குருதியில் கலந்து கருவில் எழுந்த எனக்கு அளித்தாள்.".
மேலும் அபிமன்யூ அடையப்போகும் பரிதாப முடிவைப் பற்றிய "சமிக்ஞைகளை "அவ்வப்போது உணர்த்திக்கொண்டே வருகிறீர்கள் ,அதற்கு வாசகர்கள் தயாராகும் விதமாகவும் சொல்லாடல்களை சில கதாபாத்திரங்கள் மூலம் முன்கூட்டியே அளிக்கிறீர்கள்!.
"ஆனால் அவ்வாறு ஓர் கரவம்பால் இறப்பவன் அல்ல அவன் என்றும் தோன்றியது. மாமனிதர்களுக்கு பிறவிநோக்கம் உண்டு. இத்தனை பேராற்றல்களை இவ்விளமையிலேயே அவனில் கூடச்செய்த தெய்வங்களின் எண்ணம் ஒன்று உண்டு.
"பிறவிப்பேராற்றல்களின் பொருளையோ பொருளின்மையையோ இப்புவிக்கு காட்டிச் செல்பவன் போலும் இவன்." - எப்பேர்ப்பட்ட "அவலச் சுவை" நிறைந்த வாக்கியம் இது!
அன்புடன்,
அ .சேஷகிரி.