அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
கண்ணன் களத்தில் தோன்றும் இடம் அப்படி ஒரு மாஸ். அசுரப்படையை குறுகத்தரிக்க முயலும் அபிமன்யுவின் வேகம் - போர்க்கள காட்சிகள் நூறு பாகுபலிகளும் இதற்கு ஈடாகாது. அபிமன்யு அச்சமே இல்லாதவன் எப்போதும் வெற்றி என்றே வில்லெடுப்பவன், விசையும் ஊக்கமும் குன்றாமல் தன் போர்க்கலையை ஊழ்கம் எனக் கொண்டு மானுட வரம்புகளைக் கடந்த உயரம் எட்டுபவன். கண்ணன் அவனை காக்கின்றான்.
எழுதழல் வாசிப்பு பாணாசுரரின் மீது, அசுரர்கள் மீது ஒருவித பரிவைத் தோன்றச் செய்கிறது. அவர்கள் வில்லன்கள் அல்ல. மரங்களைக்கூட கொன்றுவிடாமல் தங்கள் மாளிகைகளை அமைத்துக் கொண்டவர்கள். நல்லரசர் என்று மக்கள் நினைவு கூர்ந்து அவர் வருகை எனக் கூறி அதை தங்கள் பண்பாட்டு விழாவென ஆண்டு தோறும் நம் கேரள மக்கள் இன்று வரை கொண்டாடுவது மாவலி என்ற அசுரரை அல்லவா?.
கண்ணன் வேதம் மறுப்போன், அசுரர் வேதம் கொள்வோனும் அல்ல. பிறிதொன்றை மறுத்து முற்றும் அழித்து தான் மட்டுமே சரி என்று நிற்க விழையும் எதையும் கைக்கொள்வோன் அல்லன் அவன். எல்லா வழிகளையும் அங்கீகரித்து வேதமுடிபு என்னும் சரடால் இணைத்து எல்லாவற்றையும் காத்து யுகங்களுக்கு கொடையென வழங்கும் தலைவன் அவன். ஆதிசங்கரருக்கு முன்னோடி அவன். எவ்வளவு அழகாக நிறுவுகிறீர்கள் அண்ணா? அதேதோ வைணவம் என்னத்த காக்கும் கடவுள்? ஏகப்பட்ட பேரை அழித்தான் - பல பொது போதனைகளில் இருந்து "எல்லாவற்றையும் காத்தான். இன்று நின்று பேச நுமக்கும் ஒரு தத்துவமும் தரப்பும் இருக்குமேல் அது அவன் காத்தருளித் தந்தது. சங்கரர் பணியோ அறிஞர்களை மட்டுமே எதிர்கொள்வது என்பதில் அடங்கிவிடுகிறது. கண்ணனுக்கோ அரசியல்வாதியாகவும், களம் காண்பவனாகவும் பெரும் உலகியல் வெளி நின்று போராடவும் செய்து கொண்டு அருள் நிறுவும் தன் உள்ளொளியாம் யாவும் அரவணைத்து நிற்கும் வேதமுடி நிறுவ வேண்டி இருந்தது.
பகவத் கீதையை மேலோட்டமாக படித்தால் கூட தெரிந்து விடும் அறுசமயக் கொள்கைக்கும் வித்தியாசப்படும் தத்துவங்கள் மெய்மைகாண பலவழிகள் என அங்கீகரிக்கப்பட்டு இணைக்கப்படுவதற்கும், சங்கர் பணிக்கும் யாவற்றுக்கும் முன்னோடி இது என்று. இத்தனை முன்னிற்கும் எளியதான உண்மையும் தெரியாது போனது எவ்வாறு என்று வியக்கிறேன். வைணவ மதம் தரும் மிகவும் கொஞ்சூண்டு கண்ணன் -சமயத்தில் மிகவும் குறுகிய கண்ணன் என ஒருபுறம், கீதை "போரைப் பற்றிய புஸ்தகம்" என்று மறுபுறம். எப்படியோ இங்கு எனக்கு இப்போது சரியான மறுக்கல்வி நடக்கிறது என்பது மகிழ்வு தருகிறது.
உண்மையிலேயே "போரைப் பற்றிய புஸ்தகம்" என்று பாராட்டத்தக்கது (நாளது வசித்தது வரை) எழுதழல் தான்.
நன்றியும் வணக்கங்களும் அண்ணா.
அன்புடன்
விக்ரம்
கோவை