வெண்முரசு வாசிப்பவர் மனமெங்கும்
எழுதழலாக அபிமன்யு பற்றிப் படர்ந்து கொண்டிருக்கிறான்.
குருவம்சத்தின் உச்சகட்ட கொந்தளிப்பின் போது பிறந்த உபபாண்டவர்களின் குழந்தைப் பருவம் எவ்விதம் இருந்திருக்கும்.
ஒற்றை கணத்தில்
காலடி மண் நழுவியது போல பெற்றோர் கானேக, சூதால் பழிசூடியவன் பெருந்தந்தையாய் நின்று குலம் காக்கிறான். அந்த அன்பே எவ்வளவு பெரிய பேரெடையாய் அந்த இளந்தலைமுறையினர் மேல் கவிந்திருக்கும்.
அம்பை ஆலயத்தில் பலிமேடை முன் மலரை சுவைக்க நாநீட்டும் ஆடு மனதில் வருகிறது.
ஆழ் கடலில், பெருநதிகளில்
இரு பெரும் நீரோட்டங்களின் விசையில் உண்டாகும் நீர்ச்சுழல் போல, சுபத்திரை, அர்ஜுனன், கண்ணன் எனப்
பெருவிசைகளின் சங்கமத்தில்
ஊழின் மகவென உருவாகி நிற்கிறான் அபிமன்யு.
நோக்குக்கு ஆழம் காட்டாத சுழல் கப்பலையும் விழுங்கும் தாகம் கொண்டது. அதையே பார்த்தன்கண்டு அஞ்சுகிறான்.
அறிமுகமான கணம் முதலே அறியாத களங்களின் மையம் நோக்கித் தன்னை முன்செலுத்திக் கொள்பவனாகவே இருக்கிறான் அபிமன்யு. சுழற்றிவிட்ட பம்பரம் நிலைத்திருப்பது போல காட்சியளிப்பது போல எங்கெங்கும் மையத்தில் சுழன்று தன்னை சிறுவனாகவும் நிறுவிக் கொள்கிறான். அஸ்தினபுரி அவையோ, இளங்கௌரவர் மாளிகையோ, பாணர் அரசவையோ, போர்முகங்களோ எங்கெங்கும். அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள் என்பது போல அவரவர் பலத்தினால்தான்
வீரர்கள் வீழ்கிறார்கள் போலும். மனிதன் எந்தத் திசையில் அடியெடுத்து வைத்தாலும் இறுதி தருணத்தை அடைவதற்கான திசை தவறுவதில்லை.
வெண்முரசு ஆரம்பம் முதல் எத்தனையோ தந்தை-மகன் உறவுகளைக் காட்டியிருக்கிறது (அது குறித்து தனியாக ஒரு வாசிப்பு நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்) எனில்
ஒன்றே போல கண் சிமிட்டினாலும்
வானின் அத்தனை நட்சத்திரங்களும் வெவ்வேறு என்பது போல எத்தனையெத்தனை தந்தை-மகன் உணர்வு நிலைகள். அத்தனை தந்தைகளையும் வாழ்வில் ஏதோ ஒருவரிடம் பார்த்திருக்கிறோம். அல்லது நம் தந்தையிடமே அனைத்தையும் பார்த்திருக்கிறோம் என்றும் தோன்றுகிறது. எதுவுமே மிகையல்ல. அபிமன்யு அர்ஜுனனின் உரையாடல்கள் அதிலொரு உச்சம்.
ஒவ்வொரு முறையும் ஊரே மெச்சினும் தந்தை முன் ஏதோ ஒன்றைத் தவற நேரிடும் மகன்.
பேரன்பையும் அங்கீகாரத்தையும் வெளிக்காட்டாத தந்தை.
அதற்கொரு வாய்ப்பே அளிக்காமல் ஊழ் தட்டிப் பறிக்குமென்றால்
வில் வேறு மனம் வேறு அல்ல என்றிருப்பவனின் ஊழிதாண்டவம் எண்ணவே மனம் பதைக்கிறது.
மற்ற பகுதிகளைப் போல மனதை நிகழ் கதையில் நிறுத்தி வைக்க மிகுந்த பிரயத்தனம் தேவையாகிறது. எழுதழல் எனும் பெயர் அவ்வகையிலும் முற்றிலும் சரியே. வெந்து தணிகிறது காடு.
காந்தியைப் போல இறுதி நொடி வரை அத்தனை வாசல்களையும் தட்டிப் பேச்சு வார்த்தைக்கு முயலும் தருமனைத் தாண்டி போர் போர் என முரசு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மிக்க அன்புடன்,
சுபா