அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
எழுதழல் வஞ்சத்தின் தழல் என்று எழும் என்று எண்ணியிருந்தேன். அது ஞானத்தின் பெருஞ்சுடர் என்று ஒளிர்கிறது. வெண்முரசு என்னும் நாராயண வேதம் இனி பல நூற்றாண்டுகள் நின்று முழுமுதன்மை தனக்கு இட்ட பணியை செய்யும். கண்ணன் ஒருவனையும் அவனை புரிந்து கொண்ட சிலரையும் தவிர வேறுயாரும் தங்கள் நோக்கத்தில் முற்றும் தெளிவு கொண்டவர்கள் அல்ல. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் அல்லது தன் முனைப்பினால், சாதி உணர்வினால் பலரும் ஸேம் சைட் கோல் அடிக்க முயன்று இருக்க கண்ணன் ஒருவன் மட்டுமே மொத்த விளையாட்டினையும் உணர்ந்தவனாக பந்தை தான் விருப்பிய திசையில் தட்டிச் சென்று கொண்டு இருக்கிறான். பேருண்மை நோக்கில் எழுதுபவர் சமகாலச் சிக்கல்களை புறக்கணித்து விட வேண்டும் என்று தங்கள் கருத்து வாசித்துள்ளேன். கண்ணனும் அதையே செய்கிறான். தங்கள் சாதியை முன்னிறுத்துவது தங்கள் தனிப்பட்ட தன்முனைப்பை திருப்தி செய்வது, வஞ்சம் தீர்ப்பது, மண்ணின் மீதான பேராசை, பெண்ணாசை, ஒவ்வொருவருக்கும் ஒரு சமகால சிக்கல். அத்தனையையும் அவன் புறக்கணிக்கவே செய்கிறான். முழுமுதன்மையின் பாதையில் அவை முள் மரங்களாக கவிய முற்படும்போது அவற்றை வெட்டி அகற்றுவான். மெய்ப்பொருள் உணர்ந்தவன் எவ்வித சாதி, மத, இன உணர்வுகளுக்கும் உட்பட்டவன் அல்ல, என்றாலும் யானையின் மீது அம்பாரி இடுவது போல, வன விலங்கின் முதுகில் காமெரா கட்டுவது போல அல்லது ஆழ்கடல் மீனின் உடலில் ஒளிவிளக்கும் காமெராவும் பொருத்துவது போல சிலவற்றை செய்கிறான். விடாப்பிடியாக நூற்றாண்டுகள் கொண்டு செலுத்தும் குலப்பெருமைகளின் மீதே வேதாந்தம் இட்டு காலத்தின் பரப்பில் செலுத்துவது அன்றைய ஞானியர் மேற்கொண்ட உத்தி போலும். பாறையின் மீது மெய்ப்பொருள் குறித்த குறிப்புக்கள் எழுதுவது. பாறை ஒருபோதும் அதை உணர்ந்து பயன்படுத்தப் போவதில்லை, யாரேனும் சிலர்க்கு என்றேனும் அது பேரருளின் கரம் என அமையக் கூடும்.
முழுமுதன்மை உணர்ந்து உற்றோர் சிலரேனும் எக்காலத்திலும் உண்டு. தேடி சென்று அவர் அருகணைக. உடன் அமர்தல் வழி என்னும் குறிப்பை யுகங்களுக்கு வழங்குதல். மெய்யுணர்வு எய்திய ஒருவர் அவர் காலத்தில் மெய்யுணர்வு எய்திய அனைவருமாகவும், இவ்வுலகு தோன்றியது முதல் இதுவரை மெய்யுணர்வு எய்திய அனைவருமாகவும் இனி வரும் காலத்தில் மெய்யுணர்வு எய்த உள்ள அனைவருமாகவும் இருக்கிறார். முழுமுதன்மை எப்போதும் முழுமுதன்மையே. அது ஒருபோதும் வெல்லப்படுவதில்லை. அதன் திசைப்படு தொழில் தடைபடுவதும் இல்லை.
பல மதத்தினர் உணர்ந்து உணராது பலவகையாக பரவிடும் முழுமுதன்மை கண்ணன் என்னும் உருக்கொண்டு அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று பல்வேறு வேதங்களில் இருக்கும் தன்னைச் சுட்டும் துளிகளை ஒன்று இணைத்து வேதத்தை விரிவு செய்கிறது. புழுவின் வேதம் மட்டுமே புழுவுக்கு எதனினும் பெரிது என்று தோன்றலாம். இவ்வுலகின் அத்தனை உயிர்களின் வேதங்களை இணைந்தாலும் மனிதரும் தேவரும் அறிந்திரா உலகங்களின் வேதங்களை இணைந்தாலும் கூட அது ஒருபோதும் முழுமுதன்மையினும் பெரிது அல்ல. முழுமுதன்மையை முழுமுதன்மையே அறிதல் கூடும். முழுமுதன்மையின் அங்கீகாரத்தை வேதங்களுக்கு கண்ணன் பெற்றுத் தருகிறான். "ஆமாம் அதைச் சுட்டும் ஒரு துளி இதிலும் உள்ளது" என்று யாவற்றிலும் மெய்ப்பொருள் பால் கனவுற்ற இடங்களைத் தொட்டு இணைக்கிறான். அப்பாலும் அடி சார்ந்தார் உண்டு, விழிப்புறல் மானுடப் பொதுமை என்று நகர்த்திச் செல்கிறான். இன்று ஏதேனும் எவ்வகையிலும் எனக்கு சார்பற்ற ஒரு மதத்தின் வேதத்தை எவ்வித மனத்தடையும் இல்லாமல் என்னால் மதிப்புடன் நோக்க முடியும் என்பது அவன் மானுடத்தை வெல்லச் செய்தான் என்பதற்கு என்னிடம் இருக்கும் நேரடியான எளிய ஆதாரம்.
"நம் எல்லைக்குள் நின்று அவனை புரிந்து கொள்ளமுடியாது." மதவெறியர் தரப்பு, சாதி வெறியர் தரப்பு, தரித்திர ஆராதகர் தரப்பு என்று பல தரப்பு மூர்க்கங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. உடல் என வாழ்ந்து உடல் எனவே பிறரையும் காண்பவர் முன் உயிர் என வாழ்ந்து உயிர் எனக் காண்பவன் அவன். நாட்களை வருடங்கள் என ஆக்கி பெரும் சுமையென சுமப்பவர் முன் வருடங்கள் நிமிடங்கள் என வாழ்பவன் அவன். இன்று தோன்றி நாளை மறையும் குப்பைகளையே தின்று செரிக்க முடியாமல் தவித்து தாம் படைத்த நரகில் தாமே தவிப்போர் முன் எக்காலத்தும் காலத்தை விலக்கி நிற்க விழைவோர்க்கு அருளின் அமுது ஊட்டும் அன்னை அவன்.
வேதங்களுக்காக சண்டை என்பது உண்மையில் தங்கள் இனம்-சாதி தலைமை கொள்வதற்கான சண்டையே அன்றி உண்மையில் வேதங்களுக்கானது அல்ல என்பது உலக உண்மை. இங்கு மட்டுமல்ல கத்தோலிக்க-ப்ரோட்டஸ்டன்ட், சவுதி-ஈரான் என உலகின் பல பாகங்களில் நடைபெறுவதும் அவ்வாறுதான் என்று கொள்கிறேன். கண்ணன் செய்வது ஒன்றுதான் முழுமுதன்மைக்கான மானிட ஆர்வத்தை, நாட்டத்தை, வழிகளை சிறுமைகள் தடை செய்துவிடாமல் காக்க விழைகிறான்.
ஆண்கள் உடன் அமர்தலை மேற்கொள்ள அவர்களின் தர்க்கங்களை எதிர்கொண்டு திருப்தி செய்ய வேண்டியது இருக்கிறது. பெண்களுக்கு அன்பு ஒன்றினாலே எவ்வித வேதமும், தர்க்கமும் இல்லாமலே எய்துதல் அமைதல் என்று வரம் இருக்கிறது.
உவகை கொண்டு அருள், உபநிடதம் என்று கடிதம் எழுத எண்ணி இருந்தேன். “அருகமைதல் மெய்யின் வழி” என்று எழுதி ஆசிபோலும் விடை தந்தீர். எந்த ஒன்று கருதினாலும் அதுபற்றி தாங்கள் ஏற்கனவே விரிவாக எழுதி இருப்பது காண்கிறேன், சுதசோமன் "பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது" என்பது போல் ஏதாகிலும் சொல்லிவிட்டு "ஜெமோ கூறியுள்ளார்" என்று சொல்லி "எங்கு கூறியுள்ளார் ?" என்று கேட்டால் "தளத்தில் கூறி இருப்பார் அல்லது அவரது நூல்களில்" என்றுதான் சொல்ல வேண்டும் என்று எண்ணி சிரித்துக் கொண்டேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை