பாணர் தன் மகளைப் பற்றி கூறுகிறார்:
“யார் இளம்பெண்? அவள் இன்னும் கைவளையல் போடத்தெரியாத குழந்தை. சென்றமுறை பார்த்தபோது வளையல்களை போட்டுத்தரும்படி என்னிடம் சொன்னாள்” என்றார் பாணர்.
அரசி “அவளுக்கு நாம் உடனே மணமகனை பார்க்க வேண்டும். இப்போதே” என்றாள். “உடனே என்றால்… அவள் சிறுகுழந்தை. இப்போதே மணமா?” என்றார் பாணர்.
அவள் வளர்ந்திருப்பதை அவர் பார்க்கவில்லையா என்ன? மற்றவர்கள் கண்ணுக்கு தெரியும் ஒன்று ஏன் பாணரின் கண்களுக்கு தெரியவில்லை? ஏனென்றால் அவர் உஷயைப்பார்ப்பது தந்தையின் கண்களால். தந்தையின் கண்கள் பலர் வலியுறுத்திக் கூறிய பிறகுதான் தன் மகள் வளர்ந்துவிட்டாள் என உணர்கின்றன.
தந்தை தன் மகன் சீக்கிரம் வளர்வதை எதிர்பார்க்கிறான். அவன் வளர்ந்து ஆளாகி சமூகத்தில் பொறுப்பான மனிதனாக ஆவதை அவன் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறான். மகனும் தந்தையின் கரங்களிலிருந்து விலகி தனி மனிதனாக ஆக விருப்பப்படுகிறான். சீக்கிரத்தில் தன் தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ள முனைகிறான். தன் செலவுக்கு தேவையான பணத்தைக்கூட தன் அன்னையிடம் சொல்லி கேட்டு வாங்கிக்கொள்கிறான். அதனால் தந்தைக்கும் மகனுக்கு இடையில் சீக்கிரம் ஓரு இடைவெளி எற்பட்டுவிடுகிறது. அது மகன் வளர்ந்துவிட்டதை தந்தைக்கு உணர்த்திவிடுகிறது.
ஆனால் ஒரு மகள் அப்படியல்ல. எப்போதும் அவள் தன்னை ஒரு சிறுமியெனவே தந்தையிடம் காட்டிக்கொள்கிறாள்.
தன் மகள் சீக்கிரம் வளர்ந்துவிடுவதை உள்ளூர தந்தை விரும்புவதில்லை. அப்படி வளர்ந்துவிட்டால் அவள் மணம் புரிந்து தன் கணவருடன் சென்றுவிடுவாள். ஆகவே அவள் மெல்ல வளரட்டும் என்று அவன் உள்ளம் நினைக்கிறது. அவளும் தன் குழந்தமையை நீண்ட நாட்களுக்கு தன் செயலில் பேச்சில் தக்க வைத்துக்கொள்கிறாள். தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என கெட்டுக்கொண்டே இருக்கிறாள். அவள் இப்படி இருப்பது தந்தைக்கு இன்னும் உலகில் தன்னைவிட்டு செல்வதற்கு அவள் முதிர்ச்சியடையாதவளாக அவளைக்காட்டுகிறது.
மேலும் ஒரு பெண் வளர்கையில் அவளிடம் பெண்மை குடிகொள்கிறது. அவள் உடலில் வெளிப்படையான மாறுதல்கள் எற்படுகின்றன. இப்போது அவள் ஆண்களின் கண்களையும் கவனத்தையும் கவர்பவளாக மாறுகிறாள்.
ஆண்களுடைய, அவளைப் பார்க்கும் பார்வை, அவளுடனான பேச்சு, அவள் இருக்கையில் மாறும் பாவனைகள் அவளைத் தடுமாறச்செய்கின்றன.
அதன் காரணமாக அவள் ஆணுலகத்திலிருந்து சற்று விலகி இருக்க முற்படுகிறாள். தன்னைச் சுற்றி ஒர் வட்டத்தை வரைந்துகொண்டு அதனுள் ஆடவர் எவரும் வருவதை தவிர்க்கிறாள்,
ஒரு ஆணும் ஒரு வளர்ந்த பெண் தன்னருகில் வரும்போது தனக்குள் தன் எண்ணங்கள் மாறுவதை தன்பார்வை கட்டு மீறிப்போவதை அறிகிறான். அதனால் ஒரு பெண்ணிடம் பழகும்போது தன் கண்ணியத்தை காத்துக்கொள்வதற்காக ஓரளவுக்கு விலகி இருக்கவே முற்படுகிறான். ஆணுக்கும் ஒரு இளம்பெண்ணுக்குமான விலக்கம் என்றென்றும் இருந்துவருவது. எத்தகைய நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் இந்த விலக்கம் இல்லாமல் இருக்காது.
ஒரு பெண் தன் தந்தையிடம் தன்னை வளர்ந்த பெண்ணாக காட்டிக்கொண்டால் அவருடனும் இந்த விலக்கம் வந்து விடுமோ என்று அவள் ஆழ்மனது அஞ்சுகிறது. ஆகவே தன் தந்தையிடம் மனதளவில் தான் இன்னும் ஒரு குழந்தை என்று காட்டவிரும்புகிறாள் என்று நினைக்கிறேன். அதனால் அவள் இன்னும் தன் தந்தையிடம் மழலை பேசுகிறாள், சின்னஞ்சிறுமி என அடம் பிடிக்கிறாள். அறியாத பேதையாய் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். அவள் தன்னுடன் அப்படி இருப்பதைவைத்து தந்தை அவளை முதிராக் குழந்தை என்ற தன் எண்ணத்தை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடியாமல் போகிறது.
மேலும் தந்தை தான் ஆண் என்பதால் ஆணில் மனம் செல்லும் வழிகளை அறிவான். அவன் புழங்கும் ஆணுலகம் எவ்வளவு கள்ளமும் வஞ்சமும் கோபமும் காமமும் கொண்டவர்களால் நிறைந்தது என்பதை அவன் அறிந்திருப்பவன். ஆணின் மனம் எவ்வளவு அலைபாய்வது என்றும் எப்படி பலகீனங்களுக்கு எளிதில் ஆளாவது என்றும் அவனுக்கு தெரியும். ஆகவே அவனால் எந்த ஆணையும் முழுக்க நம்பிவிட முடியாது.
அவன் தன் அறியாச்சிறுமியான மகளுக்கு தகுந்த துணைவனாக ஒரு அப்பழுக்கற்ற திறனுள்ள ஆண்மகனாக ஒருவனை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறான்.
“அவனா?” என்று பாணர் கையசைத்தார். “அவன் வெறும்…” என்று அவர் மேலும் சொல்லப்போக அவள் தடுத்து “இப்படித்தான் தங்களால் சொல்லமுடியும். எந்த தந்தைக்கும் இதுவே தோன்றும். தன் மகளுக்கு மணமாக வருபவனிடம் தகுதியின்மையைத் தேடிக் கண்டடையத் துடிப்பதே தந்தையரின் இயல்பு.
தேடித் தேடி வேறு வழியின்றி இறுதியில் இவன் இருந்துவிட்டுப்போகட்டும் என்று அறைகுறை மனதோடுதான் அவன் ஒருவனை தன் மகளின் துணைவனாக் ஒத்துக்கொள்கிறான் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் இந்த அழகிய நாடகத்தை ஓரிரு வரிகளில் வெண்முரசு ஒரு சித்திரமாக வரைந்திருக்கிறது,
தண்டபாணி துரைவேல்