நாம் வாழும் உலகம் நம்முடையது என்று சொல்ல முடியாது . அதன் நிகழ்வுகள் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நினைத்தபடி நிகழ்வுகள் பெரும்பாலும் நடப்பதில்லை. நாம் நினைத்ததை செய்ய முடிவதில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உலகின் மற்ற கூறுகள் தீர்மானிக்கின்றன. நம்மைச் சூழ்ந்தவர்கள், நம் நண்பர்கள், நம் உறவுகள் எப்போதும் நம் எண்ணப்படி நடப்பதில்லை. ஏன் நம் உடல்கூட நம் எண்ணத்திற்கேற்ப ஒத்துழைப்பதில்லை. நம் விருப்பப்படி எதுவும் அமையாதததால் இவ்வுலகு நமக்கே நமக்கான உலகல்ல. எதோ சௌகர்யமற்ற விடுதியில் இருப்பதுபோல் நம் வாழ்வு இங்கு உள்ளது. நம்விருப்பம்போல் இயங்கும் ஒரு உலகு இருப்பதைப்பற்றிய நமக்கு ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. வேறு வழியின்றி நாம் இந்த உலகை ஏற்றுக்கொண்டாலும் இவ்வுலகில் இப்படி இருப்பதில் மிகவும் சலிப்படைகிறோம்.
இப்படி இவ்வுலகில் திருப்தியடையாத நம் மனம் தனக்கான உலகை தானே உருவாக்கி தனக்கென அனுபவங்களைப்பெற்றுக்கொள்கிறது.
நாம் அறியாமலேயே நம் உள்ளம் தானாகவே ஒரு உலகை சமைத்துக்கொள்வதுண்டு. அது நாம் தூக்கத்தில் காணும் கனவுலகம். நாம் அப்போது அவ்வுலகை முற்றிலும் உண்மையென்றே உணர்வோம். அப்போதைய தருணத்தில் உளம் கொடுக்கும் இன்ப நிகழ்வுகளில் நாம் களிப்படைவோம். துன்ப நிகழ்வுகளில் துயருற்று துவள்வோம். நாம் உண்மையுலகில் இதுவரை அடையாத, நாம் மிக அடைய விரும்பி ஆனால் அடைய இயலாத, நாம் எப்போதும் அடைய விரும்பாத என பற்பல அனுபவங்களையெல்லாம் நாம் அவ்வுலகில் அனுபவிப்போம். இந்தக் கனவுலகதில் உண்மையுலகத்தைப்போலவே நம் ஐம்புலன்களாலும் உலகை அறிவதாக இருக்கும். கனவுலகத்தில் நாம் சினம்கொண்டு சீறி எழுவதுண்டு, துயருற்று கதறி அழுவதுண்டு அதைப்போல் காமக்களியில் மூழ்கி மயங்குவதுண்டு. சிறு குழந்தைகள் கனவுலகில் எதையோ கண்டு புன்னகைப்பதை, அழுவதை கண்டிருக்கலாம். கனவு நமக்கு எதையோ உணர்த்துவதற்காக , கற்பிப்பதற்காக நினைவுபடுத்துவதற்காக நம் உடலில் பதிந்திருக்கும் செய்திகளை உள்ளத்தில் கொண்டுவரும் உத்தியாக இருக்கலாம் என்று கருதுகிறேன். பிறந்த குழந்தைக்கு அதுவே பாலருந்த கற்பித்திருக்கும். யாருமற்ற தனியான இடத்தில் பிறந்ததிலிருந்தே விடப்படும் ஆண் பெண் விலங்குகள் தக்க வயதில் யாரும் கற்பிக்காமலேயே கலவியில் ஈடுபடும் என்று தோன்றுகிறது. அக்கலவியைப்பற்றிய அறிவு அதன் உடலின் ஜீவ அணுக்களில் எழுதப்பட்டிருக்கும் அதை அவற்றின் உளத்திற்கு கொண்டுவருவது கனவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. பறவிகள் வலசை போவட்து கூடு கட்டுவது தேனிக்களின் கூட்டு வாழ்க்கை எல்லாம் அதன் உள்ளத்தில் அறிவென ஆகுதல் இத்தகைய கனவுகளால் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மனிதர்களில் சிலர் குழந்தை மேதையாக இருப்பதற்கு, அவரவர் தன்க்கென கொள்ளும் தன்னறம் போன்றவற்றுக்கான் அடிப்படை கனவுலகத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. நாம் ஆழ் மனம் நம்முடன் கனவுகளின் மூலமாக தொடர்புகொள்கிறது. நம் உடலில் பதிந்துஇருக்கும் மனிதன் தலைமுறைகளாக் சேகரித்து வரும் திறன் மற்றும் சில அறிவுகளை உள்ளத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பது கனவாக இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.
வெண்முரசில் உஷை தன் வயதொத்த சிறுவர்களில்லாது தீவு ஒன்றில் தனித்து வளர்வதில் எப்படி சலிப்படைந்திருப்பாள் என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த சலிப்பைப்போக்க உஷை தனக்கான கற்பனையுலகை உருவாக்கிக்கொள்ள சித்ரலேகை உதவுகிறாள். அக்கற்பனையுலகில் தன்னைப்போன்றே காட்சியளிக்கும் தனக்கென ஒரு தோழியை சித்தரித்துக்கொள்கிறாள். அது உஷையின் வாழ்வை இன்பமும் பரவசமும் நிறைந்த ஒன்றாக மாற்றுகிறது. அக்கற்பனையுலகு அவளுக்கு உண்மைபோலவே இருக்கிறது. அந்த உலகில் உஷை சந்தியை என இருவராக தன்னைப் பிரித்துக்கொண்டு தோழிகளாக அவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள். அதை வெண்முரசு கவித்துவமாக விவரிக்கிறது.
அச்சுவர் நோக்கி தன் ஆடியை மெல்ல திருப்புகையில் அந்த வட்டப்பரப்புக்குள் அவை உயிர்கொள்வதை உஷை கண்டாள். மான்கள் துள்ளின. பசுக்கள் திரும்பி நோக்கின. புரவிகள் பாய்ந்து சுழன்றுவந்தன. கிளிகளும் குருவிகளும் சிறகடித்தன. மயில்கள் தோகைவிரித்தாடின. அவற்றுக்கிடையே கைவீசிச் சிரித்து ஆடினாள் சந்தியை. அழகிய இளமகளாகத் தோற்றம் கொண்டிருந்த சித்ரலேகை அவளுடன் களியாடிச் சிரித்தாள். நாளெல்லாம் அவள் அந்தச் சோலைகளிலும் மலைகளிலும் விளையாடிக்கொண்டிருந்தாள்.
மீண்டும் வந்து மஞ்சத்தில் படுத்தபோது அவள் உடலெங்கும் மெல்லிய சிலிர்ப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. கழுத்திலும் கன்னத்திலும் வியர்வை துளிர்த்திருந்தது. இருகால்களையும் பின்னியபடி மஞ்சத்தில் உடலொடுக்கி படுத்திருந்தாள். பின் புரண்டு மஞ்சத்தை உடலால் அணைப்பவள்போல அழுத்திக்கொண்டாள். மெல்ல மயங்கிய கனவுக்குள் விண்ணிலிருந்து நாகத்தின் நாக்கென துடித்த சிறுமின்னலால் தீண்டப்பட்டாள். சுடர்ந்தெரிந்து ஒளிர்ந்து துடித்து மெல்ல அணைந்து இருண்டு குளிர்ந்து எடைகொண்டு மஞ்சத்தில் கிடந்தாள். காற்றில் அவள் உடல் வியர்வை குளிர்வதை அவள் உணர்ந்தாள்.
அவள் எதையோ அடைவதற்காக தன்னுள் இருந்த சிறுமியை இழந்துவிடுவது அவளைக் கலக்கமடைய வைக்கிறது.
உஷை ஒவ்வொரு நாளுமென உடல் தளர்ந்தாள். அவள் சிரிப்பது குறைந்தது. விறலியர் ஆடும் களிக்கூத்து கண்டு வளைகள் உடைய கைகொட்டி நகைத்து வயிற்றைப்பற்றி குலுங்குபவள் இதழ் கோடும் மென்நகையுடன் அமைந்தாள். துள்ளி ஓடி படிகளிலும் உப்பரிகையிலும் தொற்றி ஏறி குதித்தாடுபவள் தளர்நடை கொண்டாள். கருவுற்றவள்போல பீடங்களிலிருந்து கையூன்றி மெல்ல எழுந்தாள். எப்போதும் சேடியருடன் நகையாடி இருக்க விழைபவள் தனிமையை தேடினாள்.
அவளுடைய அற்புதமான கற்பனை உலகை அவள் கண்ட கனவு கலைத்து விடுகிறது. அவளுக்கு சலிப்புதரும் இந்த உண்மை உலகிலேயே அவள் இருக்க வேண்டியுள்ளது.
தண்டபாணி துரைவேல்