அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
முகில் திரை - 9. - யசோதையின் மொத்த வாழ்கையின் சாரத்தையும் இந்த ஒரு அத்தியாயம் கவித்துவமாக வழங்கிவிடுகிறது. குழந்தை கண்ணனை முடிவிலி தொடர் நிகழ்வாக்கி தான் அன்னை என்பதையும் முடிவிலி ஆக்குகிறாள். பாரதவர்ஷத்தின் எல்லா நதிகளும் கங்கையே எல்லா மலைகளும் இமயமே, இங்கு ஒவ்வொரு அன்னையும் யசோதையே ஒவ்வொரு ஆண் குழந்தையும் கண்ணனே. கீதையின் கண்ணனுக்கும் ஆண்டாள்-ராதையின் கண்ணனுக்கும் இடையே பாலாகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன் என்று தம் கண்ணனை விடாப்பிடியாக பிடித்து வைத்துக்கொள்கிறார்கள் அன்னையர்.
"எந்தை அவருடைய இளைய வடிவாக வாழ்வதில் சலிப்புற்று காட்டில் அலைகிறார்" என்கிறான் அநிருத்தன், மேலும் "ஒவ்வொரு குன்றுக்கும் அது தலையிலேந்தும் வானம் தனித்ததே" என்றும் "உன் முன் அமர்ந்திருக்கையில் சிலை என்றாகி கோயிலில் வீற்றிருப்பதுபோல் உணருகிறேன்" என்றும் சொல்கிறான். நான் இமயம் அல்ல என்பவனிடம் அவன் கருத்தை பொருட்டாக கொள்ளாமல் குன்றிலும் இமயத்தை நோக்கும் கண்களுடையவள் தான் என்பதை சொல்லாமல் நிறுவுபவள் யசோதை. உருவ வழிபாட்டின் சாரம் இதில் உள்ளது, "இது கல்" என்று கல்லை கல்லாக காணும் தர்க்கத்தின் கண்களுக்கும், கல்லிலும் கூட அண்ணலையே காணவல்ல பேரன்பின் கண்களுக்கும் உள்ள வேறுபாட்டை காண்கிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை