கண்ணன் மேல் பிரேமைகொண்ட பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பார்க்குமிடமெல்லாம கண்ணன் தன் தோற்றம் காட்டுகிறான், அவன் காக்கைச் சிறகின் கருமையில் பளிச்சிட்டு மறைகிறான். தீக்குள் விரலை வைக்கும் கணத்தில் நம்மை தீண்டிவிட்டு ஓடுகிறான். பார்க்கும் மரங்களின் பச்சை நிறங்களில் முகம் காட்டி ஒளிந்து விளையாடுகிறான். ஏதுமறியாச் சிறுகுழந்தையின் முகத்தில் புன்னகையாகத் தோன்றுகிறான். விளையாடும் சிறுவர்களில் அவனும் ஒருவனாகி விளையாடுகிறான். நாணப்படும் கன்னியர் கன்னங்களின் செம்மை அவன் இதழ் ஒற்றி எழுந்தவையாக உள்ளன. காதலியின் மெல்லுடலை வருடும் காதலனின் விரல்களில் அவனின் மயிற்பீலி குடிகொள்கின்றது. நாம் உண்ணும் உணவின் சுவையென ஆவது அவன் புரந்த பசுக்களின் பால்சுவை. அன்னையின் அன்பென, தந்தையின் ஆதரவென, தோழர்களின் நட்பென, அரசின் பாதுகாவலென நமக்கு உதவுவை அனைத்தும் கோவர்த்தன் கிரி தூக்கிய அந்தக் கண்னனின் கரங்களே. கலைஞர்களின் அத்தனை இசைக்கருவிகளிலும் எழுவது அவன் குழலிசையே. அவன் கோபிகைகளுக்காக மரங்களை உலுக்கிச் சேகரித்த மலர்களே ஓவியர்களின் தூரிகைவழி சித்திரங்களாக வரையப்படுகின்றன. நடனமாடுபவர்களின் உடலை திரையாக்கி அங்கு தான் கோபியரிடம் ஆடிய நடனங்களை அவன் பிரதிபலிக்கிறான். எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன் எனத் தோன்றும் இந்தப் பித்து நிலை ஒரு பேரின்பம். பச்சைமாமலைபோல மேனி கொண்டு பவளச்செவ்வாயும் கமலக்கண்ணும் உடைய அச்சுதனாகிய அவன் அமரர்களின் தலைவனாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கோ வெறும் ஆயர் குலச் சிறுவன். அதனால் எங்களுக்கு மிகவும் நெருங்கியவன். அவனின்மேல் கொண்ட இந்தப் பித்தளிக்கும் பேரின்பத்தைவிட எமக்கு என்ன வேண்டும். அந்த விண்ணுலகாளும் இன்பமும் பெரிதாகுமோ?
இத்தகைய பித்து நிறைந்த பக்தர்கள் என்றும் இருந்த வண்ணம் இருக்கிறர்கள். துகாராம், நாமதேவர், மீரா பாய், சக்குபாய், புண்டரீகன், புரந்தரதாஸர் என்பவர்கள் நாம் அறிந்தவர்களின் வரிசை. நாமறியாத பல்லாயிரம் பேர் அவன் பித்தில் தன்னைக் கரைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கண்ணனின் காலம் வரலாற்றின் கண்களுக்கு அப்பாற்பட்ட புராணகாலம். அப்போதிருந்த கண்ணனை இன்றும் உணர்ந்து பித்தாகிறார்கள் எனும்போது அவன் இருந்த காலத்தில் அவனுடனிருந்தோருக்கு அவன்மேலான பித்து எவ்வளவு இருந்திருக்கும்? கண்ணன் விட்டுச்சென்ற கோகுலம் என்னவாயிற்று என நாம் அறியோம். அதை வெண்முரசு யூகித்துக் காட்டுகிறது. காலம் நதி போல ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் கோகுலவாசிகளின் மனம் கண்ணன் காலத்திலேயே உறைந்து இருக்கிறது. கோபியர்கள் தன் மனதை உறைய வைத்து இருக்கின்றனர். அவன் பருஉடலாக இருக்கும்போது எங்காவது ஓரிடத்தில்தான் இருப்பான். ஆனால் இப்போது காணுமிடமெல்லாம் இருக்கிறான். அவனும் காலத்தில் உறைந்து அங்கே இன்னும் சிறுவனாகவே இருக்கிறான்.
“அவரை பிரியமுடியாது என்றுசொல்லி ஸ்ரீதமரும் சுதமரும் வசுதமரும் உடன்சென்று துவாரகையில் அமர்ந்தனர். அவர்கள் அறிந்த இளைய யாதவர் அகவைமுதிர்ந்துகொண்டே இருக்கிறார். இங்கே நாங்கள் அதே கன்றுகளுக்குப்பின் அதே வளைதடியுடன் குழலூதிச்செல்லும் அதே யாதவனைக் கண்டு உடனிருக்கிறோம்” என்றார் விலாசி. “இங்கு அவர் இல்லாத இடமே இல்லை.
அவனோடு ஆடிய கோபியர் இன்னும் தம் மனதை தன் முதுமையில் தொலைத்துவிடாமல் இருக்கிறார்கள். கடவுள் எங்கும் இருப்பவர் இருப்பினும் நாம் அவரை ஒரு விக்கிரகத்தில் வடித்தெடுத்து நம்மருகில் வைத்திருப்பது பெரும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியது. இப்போது கோகுலத்தில் எங்கும் நிறைந்திருக்கும் கண்ணனை மீண்டும் தொட்டு அணைத்து தூக்கி கொஞ்சி மகிழ அநிருத்தன் என்ற அவன் பெயர்மைந்தன் வந்திருக்கிறான். அவர்கள் தம் உள்ளத்தில் இருக்கும் கண்ணனை அவனில் ஆவாஹனம் செய்துகொள்கிறார்கள்.. அவர்கள் தாங்கள் கண்ணனோடு வாழ்ந்த அந்த வாழ்வை அநிருத்தனின் மூலம் மீட்டெடுக்கின்றனர். கடவுளைவிட கடவுள் விக்கிரகம் அணுக்கமானது. அதை கண்ணெடுத்து காண முடியும் கையால் தொட்டு குளிப்பாட்டி அலங்கரிக்க முடியும். நம் கையால் படைக்கும் பிரசாதத்திற்காக காத்திருந்து பெற்றுக்கொள்ளும் சிறு குழவி என கடவுள் அவ்விக்கிரகத்தில் இருப்பார். யசோதையின் உடலை காலம் முதுமைப்படுத்தியிருக்கிறது. ஆனால் அவள் உள்ளத்தில் இருக்கும் இளங்கண்ணனை அவளும் அநிருத்தனில் காண்கிறாள். கண்ணன் கோகுலத்தில் இருந்த காலத்தில் அவனுக்கு தொடர்ந்து வந்த ஆபத்துகளின் காரணமாக எப்போதும் அச்சத்தில் இருந்த யசோதை அவனை வளர்ப்பதன் ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்கவியலாமல் இருந்தாள். இப்போது அநிருத்தனை சீராட்டுவது யசோதைக்கு எளிதாக இருக்கிறது. அந்த நாட்களில் குறைபட்ட ஆனந்தங்களை இப்போது அவள் நிறைவாக்கிக் கொள்கிறாள். அவள் அநிருத்தனிடம் சொல்கிறாள்;
“இன்றுபோல உன் மூதாதையிடம் நான் விளையாடவே இல்லை, தெரியுமா? ஒன்று நோக்குகையில் நூறு செய்யும் பிள்ளையை எண்ணி ஒருநாளும் மெய்மறந்து துயின்றதில்லை… இன்று எண்ணி எண்ணி அந்நாட்களை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறேன்.”
யசோதை பல ஆண்டுகளுக்கு பிறகு தன் முதிய வயதில் மீண்டும் இளந்தாயென ஆகி இன்பத்தில் திளைக்கிறாள். அநிருத்தன் இன்னொரு கண்ணனாக கோகுலத்தில் வலம் வருகிறான். ஆனால் அந்த இனிமையெல்லாம் இழந்து கண்ணன் அரசியலில் உழலவேண்டியிருக்கிறது. அங்கு அவனை எவ்வித கேள்விகளும் இல்லாமல் நேசிப்பவர்கள் குறைவு. அப்படி நேசிப்பவர்கள் அவனுக்கு ஏதாகிலும் ஒருவகையில் கடன்பட்டவர்கள் அல்லது அவன் உதவியை எதிர்ப்பார்ப்பவர்கள். ஆனால் எவ்வித எதிர்பார்ப்புகளும்,
எவ்வித கேள்விகளும் அற்ற பரிபூரண நேசத்தை காண கண்ணன் கோகுலத்திற்குத்தான் வர வேண்டும் போலிருக்கிறது.
தண்டபாணி துரைவேல்