Saturday, October 21, 2017

அறிந்தவற்றிலிருந்து விடுதலை



அன்புநிறை ஜெ,

உஷையின் கதை மித்திரவிந்தையை மீண்டும் வாசிக்கச் செய்தது.  இருவரும்
இளைய யாதவர்கள் குறித்த எந்த சொல்லும் தடயமும் உள் செல்லாத ஓர் உலகு சமைக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள். 
நாயகர்களோ மொட்டவிழும் முன்னர் முகைநுழைந்த நறுமணமென  உள்நுழைகிறார்கள். 

பிளேட்டோவின் குகை உருவக மனிதர்கள் போல உருவாக்கப்பட்ட பொய் உலகொன்றில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.  திரைக்கு அப்பாலிருந்து காற்றென உள்நுழைந்து குழலிசைக்கிறான் முதல் இளைய யாதவன். ஓவியங்களுக்கு அப்பாலிருந்து உள்நுழைகிறான் அனிருத்தன். மனித அகங்களின் கனவுப் பெருவெளி கரவுக்காடு எனில் தனிமனிதனின் அந்தரங்க வெளியென ஆடி காண் உலகு.

என்ன ஓர் அழகான சித்தரிப்பு. புலனுலகிலிருந்து ஆடிகாட்டும் அறியா உலகில் நுழைகிறாள் உஷை சந்தியையென. அங்கும் புலன் காணும் நிலவொளி சூழ் இரவில், அறியாதனவற்றால் ஆன நிழலுக்குள்ளிருந்து மெல்ல உருத்திரட்டி எழுந்து வருகிறான் அவன். 

மனிதனறிந்த உலகின் எல்லைகளுக்கு வெளியே காத்திருக்கிறது அவன் சற்றுமறியாத ஊழ் அவனை முற்றாக பொதிந்து சூழ்ந்துகொள்வதற்கு. 

அறியாப் பெருவெளியில் சுழலும் சிறு கடுகென ஊரும் உலகில் வாழ்வதனாலேயே ஒவ்வொரும் அறிந்தவற்றால் எல்லை வரையறுக்கப்பட்டு அறியாதனவற்றின் கருணையால் சூழப்பட்டு வாழ்கிறோம்.  
அறிவுக்கு அப்பாற்பட்ட வெளியிலிருந்து நீளும் கரமொன்றால் அன்றி விடுதலை இல்லை.  

மிக்க அன்புடன்,
சுபா