Thursday, January 2, 2020

புழுக்களின் பாடல்- சரவணக்குமார்அன்புள்ள ஜெ,

வெண்முரசின் ஒட்டுமொத்தமும் சரளமான கதையோட்டமாகவே அமைந்துள்ளது. வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக அந்தந்த சந்தர்ப்பங்களின் நாடகீயமான தருணங்கள் வழியாக செல்வது அதன் வடிவச்சிறப்பாக இருந்தது. அந்த கதாபாத்திரம் வழியாக மற்ற கதாபாத்திரங்களின் மனம், அந்தக் கதை நடக்கும் சூழல் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டன.

அந்த ஓட்டத்தில் அவ்வப்போது ஊடறுக்கும் துணைக்கதைகளும் கவிதைப்பகுதிகளும் இருந்தன. அந்த குறுக்குச்சரடுகள்தான் வெண்முரசை மேலும் சிக்கலான பிரதியாக ஆக்கின அவ்வாறு வந்த பல கவிதைப்பகுதிகளை என் நண்பர்கள் பலர் வாசிக்கவில்லை. அந்த வேகத்தில் அப்பகுதிகளை வாசிக்கும் மனநிலை அவர்களுக்கு அமையவில்லை. பின்னர் வாசிக்கலாம் என்று நினைத்து எடுத்துவைத்து வாசிக்காமல் விட்டதுமுண்டு.

நான் அந்தக்கவிதைப் பகுதிகளை வாசித்தேன். ஆனால் அந்த வாசிப்பின் முக்கியமான சிக்கலென்னவென்றால் அந்தக்கதைப்பகுதியுடன் இணைத்தே அந்தக்கவிதைப்பகுதிகளையும் வாசித்தேன். ஆகவே அந்தவகையிலேயே அவை எனக்கு அர்த்தம் அளித்தன அத்துடன் அந்தப் பகுதிகள் உரைநடைவடிவில் பத்திபத்தியாக இருந்தன. அந்த வடிவிலிருந்தாலே அவை ஒரே ஒழுக்காக ஆகிவிடுகின்றன.அவற்றை நாம் வார்த்தை வார்த்தையாக நிறுத்தி வாசிப்பதில்லை. அவை கவிதை என்பது நம் மனதில் உறைப்பதுமில்லை.

அப்படி நான் பல கவிதைகளை விட்டுவிட்டேன். அவற்றையெல்லாம் திரும்ப வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வெண்முரசில் உள்ள நேரடியான கவிதைப்பகுதிகள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை நான் வாசித்து மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் அவைதான் அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டும் இருந்தன. அவற்றிலிருந்து ஏதேனும் ஒருவரி என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

 வெண்முரசில் புல்பற்றியும் வேர்கள் பற்றியும் வந்த கவிதைகள் உண்டு. அம்புகள் பற்றியும் பொன்பற்றியும் வந்தபகுதிகளையும் கவிதையாகவே எடுக்கலாம். அவற்றை வெண்முரசின் கதையோட்டத்திலிருந்து விலக்கி தனியான கவிதைகளாகவே வாசிக்கலாம். அவற்றை தேடிக்கண்டடைவது ஒரு நல்ல விஷயம். அவற்றை தேடுவது வழியாக வெண்முரசுக்குள் மீண்டும் செல்லமுடிகிறது. ஒரேசமயம் புதுக்கவிதையாகவும் அதேசமயம் பழையவைபோலவும் இருக்கும் வரிகள் அவை. வெண்முரசில் அவை ஏதோ சூதன் பாடுவதாக வருகின்றன. ஆனால் அவற்றின் அமைப்பும் குறியீட்டுத்தன்மையும் நவீனக்கவிதையாகவும் உள்ளன.


புழுக்களின் பாடல்


நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும்

பல்லாயிரம் கோடிப் புழுக்களே,

இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள்.

வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள்.

மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே

நெளிந்து நெளிந்து வாழ்ந்து

இறந்து பிறந்து இறந்து

நீங்கள் அறிந்ததென்ன?

 

சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு.

அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம்.

ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர்.

கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல்.

எழாத நாகபடம். கொல்லாத விஷம்.

புழுவாகி வந்ததுதான் என்ன?

 

நீந்தி நெளிந்து வளைந்து துடிக்கும்

பல்லாயிரம்கோடிப் புழுக்களே,

இப்புவியின் உயிரானவர்கள் நீங்கள்.

விழியின்மையில், செவியின்மையில்,

சிந்தையின்மையில்,

இன்மையில்

திளைத்துத் திளைத்து நீங்களறியும்

முடிவின்மையும் நெளிந்துகொண்டிருக்கிறது.

 

ஆழத்தில் காத்திருக்கிறீர்கள்.

குடல்மட்டுமேயான பெரும்பசியாக.

பறப்பவையும் நடப்பவையும் நீந்துபவையும் 

னைத்தும் வந்துவிழும் 

உதரத்தின் ஆழ்நெருப்பு.

எரியும் ஈரம். நிலைத்த பயணம்.

பருவடிவக் கிரணம்.

தன்னைத் தான் தழுவி நெளியும்

உங்களால் உண்ணப்படுகின்றன அனைத்தும்.

உங்களையே நீங்கள் உண்கிறீர்கள்.

வளைந்து சுழிக்கும் கோடுகளால்

பசியெனும் ஒற்றைச் சொல்லை

 எழுதி எழுதி அழிக்கிறீர்கள்.

 

வைஸ்வாநரனே,

உன் விராடவடிவுக்குமேல்

குமிழிகளாக வெடித்தழிகின்றன நகரங்கள்,

நாடுகள், ஜனபதங்கள்.

வந்து, நிகழ்ந்து, சென்று,

சொல்லாகின்றன மானுடக்கோடிகள்.

சொல் நெளிந்துகொண்டிருக்கிறது.

தன்னைத் தான் சுழித்து.

சுழி நீட்டி கோடாக்கி.

ஒன்று கோடியாகி கோடி ஒன்றாகி

எஞ்சுவது இருப்பதுவேயாகி.

ஈரத்தில் நெளிகிறது

சொற்புழுவெளியின் பெருங்கனல்.

 

வண்ணக்கடல் நாவலில் ஒரு சூதன் பாடும் வரிகள் இவை. இந்த வரிகளை நான் இன்று ஒரு பெரிய கொந்தளிப்புடன் வாசித்தேன். இந்த கவிதை தமிழில் புழுக்களைப்பற்றி எழுதப்பட்ட ஒரே கவிதை என நினைக்கிறேன். யானை டாக்டரில் புழுக்களைப் பற்றி ஒரு பகுதி வரும். அதன்பின் இந்தப்பகுதி மேலும் கவித்துவமானது

புழு என்ற படிமம் உருமாறிக்கொண்டே இருக்கிறது இக்கவிதையில். முதலில் அது வலியின் நெளிவாகவும், அனைவரும் மிதிக்கும் மண்ணின் ஆழத்திலுள்ள ரகசியமாகவும் உள்ளது. எழாத நாகபடம், கொல்லாத விஷம் என்று முடியும்போது பலமுறை புழு என்பதன் அர்த்தம் மாறிவிடுகிறது.

புழு பற்றிய எல்லாமே சொல்லி கடந்துசெல்லப்படுகின்றன. சுழித்துச் சுழித்து பசியென்ற சொல்லையே எழுதிக்கொண்டிருப்பவை. எழுதுகோலும் எழுத்துமாக ஆகிவிடுபவை. பசி என்ற வைஸ்வாநரனின் வடிவங்கள். தன்னைத்தானே தழுவிக்கொள்பவை.

கடைசிவரியில் புழு சொல்லாகிவிடுகிறது. ஆழத்தில் நெளியும் சொல்லாக. இந்தக்கவிதை வெண்முரசில் இருந்து தனியாக பிரிந்துவிட்டது இப்போது. ஆனால் சொல்பெருவெளியின் ஆழத்து நெளிவு என்னும்போது வெண்முரசாகவும் உள்ளது


எஸ்.சரவணக்குமார்.