ஒரு குழந்தை பிறந்தபிறகு தன் இருப்பை உணர்ந்தவுடன் அது காணும் பொருட்களை தனதென எடுத்துக்கொள்ள முயல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பொருளை எடுத்துக்கொள்வதற்கான ஆற்றலை உடலளவில் பெறுவதற்கு முன்னரே அதன் உள்ளத்தில் அதைப் பெறுவதற்கான விழைவு தோன்றிவிடுகிறது. தன்னால் பிடித்து தூக்க முடியாத பொம்மையை தனதென கொண்டாடுகிறது. மற்றவர் அதை எடுக்கையில் அல்லது அதனிடம் தர மறுக்கையில் கோபம் கொண்டு வீறீட்டு அழுகிறது. அன்னை மடியில் வேறொருவர் உட்காருவதற்கு அனுமதிக்காமல் அழுகிறது. ஐம்புலன்களின் திறன் கூடும் முன்பே தனதெனக் கொள்ளும் மமகாரம் பெற்று விடுகிறது.
வயதான பின்னர் இன்னும் இந்த மமகாரம் வளர்ந்து வருகிறது. அழகிய விலையுயர்ந்த பொருட்கள் எதைக்கண்டாலும் அதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது தேவையா தேவையில்லையா என்பது ஒரு பொருட்டல்ல, அது எனக்குவேண்டும் அவ்வளவுதான் என பிடிவாதம் செய்கிறோம். எப்போதும் கிடைக்காத பொருட்கள்மீதான ஏக்கம் ஒவ்வொருவருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. இனால் விலையுயர்ந்த நகைகள், அசையா சொத்துக்கள், வாகனங்கள் கருவிகள் என பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். சித்தம் தடுமாறிய நபர்கள்கூட ஒரு மூட்டையில் குப்பைகளை சேகரித்து தனதெனக் கொண்டு சுற்றிவருவதைப் பார்த்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட மமகாரத்தின் விளைவாக நாம் ஒரு பொருளை இன்னொருவருக்காக விட்டுக்கொடுப்பது மிகவும் சிரமமான காரியமாகிறது. இங்கு பொருள் என்பதில் பதவி, புகழ் என்பதும் அடங்கும். ஒரு பொருளுக்காக நம்மிடம் போட்டிபோடுபவர் நமக்கு எதிரியென ஆகிறார். அதன் காரணமாக சகோதரர்களுக்கிடையே, பழகிய நண்பர்களுக்கிடையே, நெருங்கிய உறவுகளுக்கிடையே கூட போட்டியும் பகையும் ஏற்படுகிறது. சிலசமயம் பொருட்களுக்காக இன்னொருவரை அழிக்கும் அளவுக்கு தீவிரமடைகிறது.
அன்பிற்காகவோ நட்பிற்காகவோ உலக நன்மைக்ககவோ ஒரு பொருளை தியாகம் செய்கிறேன் என்று வருவது அரிதினும் அரிதாக இருக்கிறது. அதனால் நமக்கு தேவையான பொருளாக இருந்தாலும் அது இன்னொருவர் விரும்புகிறார் என விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை மிக உயர்ந்த குணமாகிறது. சிலர் வற்புறுத்தலின் காரணமாகவோ அல்லது அந்நேரத்திய எப்படியோ எழுந்த நல்லெண்ணத்தின் காரணமாகவோ ஒரு பொருளை விட்டுக்கொடுத்தாலும் அந்தப் பொருளபற்றிய நினைவு ஏக்கம் அவர்கள் மனதில் இருந்துகொண்டு தொந்தரவு செய்துவருகிறது. பொருளைப்பெற்றுச் சென்றவர்மேல் பொறாமை, கோபம் உள்ளூற இரிந்து வருகிறது. அல்லது விட்டுக்கொடுத்தலுக்கான் பலனாக அப்பொருளின் மதிப்பைவிட பெரிதாக ஒன்றை எதிர்பார்ப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
அணிகை, அன்னதை இருவரும் ஈருடல் ஓருயிர் என ஒன்றாக இருந்தவர்கள். இதுவரை தம் ஒரு பொருளை இருவருக்குமென விரும்பினர். ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் காடு இப்படி மமகாரத்தின் காரணமாக நிறைவடையா ஆத்மாக்கள் நிறைந்தது. சுற்றி அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் மமகாரத்தீ அவர்கள் உள்ளத்திலும் பற்றிக்கொள்கிறது. அந்தத் தீ இணைந்திருந்த அவர்கன் உள்ளத்தை பிரிக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள் “இக்காட்டில் நாங்கள் இரண்டானோம். இனி எப்போதும் ஒன்றென ஆகமுடியாதென்றும் அறிந்தோம்.” இப்போது ஓவ்வொருவரும் தனக்கும் என தனித்து வேண்டும் என நினக்கிறார்கள். பிள்ளப்பேறு என்ற ஒன்றுக்கு இருவரும் போட்டியாளர்களாகிவிடுகிறார்கள். எப்படியாயினும் சரி எனக்கு வேண்டும் என்பதே குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் நிற்கிறார்கள். இவ்வளவு நாள் செய்த கஷ்டமெல்லாம் வீணாகப்போனாலும் பரவாயில்லை என பிடிவாதம் பிடிக்கிறார்கள். அந்தக் கனியை இருவர் பிரித்து உண்ணலாமா, அதனால் கடுந்தவம் செய்து பெற்ற பிள்ள வரத்திற்கு கேடு ஏதாவது வருமா என்பதைப் பொருட்படுத்தாமல் விடுகிறார்கள். ஒன்றிணைந்திருப்பதின் நலமும் பலமும் பிரிந்திருப்பதில் கூடுவதில்லை எனபதை மறந்துவிடச் செய்கிறது பிள்ளைவரத்தை தனக்கு என விழையும் அவர்கள் மமகாரம்.
தண்டபாணி துரைவேல்