Wednesday, April 6, 2016

காளி




அன்புள்ள ஜெ,

என் குலதெய்வ காளிக்கு கோயில் கிடையாது.ஒரு அரச மரம் உண்டு. ஆண்டிற்கொருமுறை அந்த மரத்தில் படையல் போட்டு வருவது மட்டுமே வழக்கம். உருவ வழிபாடில் பழகிய எனக்கு ஆரம்பத்தில் மிக ஆச்சரியமாகவும் பின் சற்று ஏமாற்றமாகவும் அதன்பின் வெறும் சாங்கியமாகவும் இருந்தது அது.  அந்த ஊரிலிருக்கும் அனைவரும் தினம் புழங்கும் சாலைதான் என்றாலும் எங்கள் வீட்டு பெண்களுக்கு காளியை தரிசிக்க அனுமதி கிடையாது. ஊர்க்காரர்கள் கூட பல வருடங்களுக்கும் முன்னால் அவ்வளவு ஈடுபாடு காட்டியதில்லை. இப்போது கொள்ளுத்தாத்தா, அவரின் தாயாதிகள் வழி வழியாக குடும்பம் கிளை விட்டபிறகு அவரவர் வசதிபட்ட நாட்களில் சென்றுவர துவங்கிவிட்டார்கள். இப்பொழுது ஒரு கீற்றுக்கொட்டகை ஊர்க்காரர்களே போட்டுக்கொடுத்துள்ளார்கள். பூசாரி கிடையாது. நாங்களே மெளனமாக செய்யும் படையல்தான். சர்க்கரைப்பொங்கல் தயிர்சாதம் மற்றும் முக்கனிகளுடன் திருப்தி கொள்ளும் அக்மார்க் நயம் சைவ பட்சிணி. மாறி மாறி எங்கள் வீட்டில் பிறப்பவள். ஆணானாலும் பெண்ணானாலும் காளி என்பதே நாங்கள் வைக்கும் பெயர். இருந்தாலும் ராமக்ருஷ்ணர் வரலாறில் அல்லது சாம்பவி சோப்ரா குறிப்பிடும் சாக்த வழிபாடு அல்ல. இவள் விஷ்ணுமாயா ( கிருஷ்ணனுக்கு பதிலாக கம்சனிடம் மாறுபவள் ) அல்லது துர்க்கை என்று கதைகள் கேட்டு வளர்ந்திருக்கிறேன். எனக்கு மனதில் அவளை உருவகபடுத்துவதில் ஒரு குழப்பம் இருந்தது. ஒவ்வொரு முறை பூஜை செய்யும்போதும் கை கட்டி நின்றது தவிர வாய் திறந்து சொல்ல ஒரு சொல் இருந்ததில்லை பன்னிரு படைக்களத்தின் முதல் அத்தியாயத்தை படித்தபோது அடைந்த ஒரு சிலிர்ப்பு... இனி அந்த குறை இருக்காது

பூஜை  அறையில் வைத்து கும்பிடுவதற்கென ஒரு காளி படம் உண்டு. அவள் பதினாறு கைகள் கொண்டவள். எருமையின் மீது நிற்கிறாள். எருமை சோம்பலின் குறியீடு அதன் மீது நிற்பவள் சோம்பலை அழிக்கவேண்டும் என குறிப்பதாக சிறுவயதில் வாரப்பத்திரிக்கையில் படித்திருந்தேன். அதுவே நெடுநாட்கள் மனதில் இருந்தது. பிரேக் இன்ஸ்பெக்டர் என வாகன ஓட்டிகளால் பரிவாக அழைக்கப்படும் மகிஷியின் சித்திரத்தை மாற்றி அமைத்தவர் நீங்கள்தான். வெண்கடல் தொட்டு பனைமரமும் எருமையுமான ஜன்னல் அத்தியாயம், இப்போது இந்த மகிஷியின் விஸ்வரூபம்.

பனையும் எருமையுமாய் பாதாளம் வரும் ரம்பன், நீ ஒரு பெண்ணாகுக என்கிறான். அந்த மகிஷிக்கு தன் மகனை பிடிக்கவில்லை. மகனுக்கும்தான். இறுதியில் அம்மா என்கிறபோது அந்த மகிஷியே வருகிறாள். தான் முதலில் ஏங்கி பின் வெறுத்து வந்த அமுதத்தை குடித்து, தன் செவிலி அன்னையின் மீது அமர்ந்து வந்த பேரன்னையினால் ஆட்கொள்ளப்படும் ஆயிரம் ரக்தபீஜன்கள்.  இங்கும் ஒரு வெண்கடல்.

காலகாலமா அவன் வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான் அப்புறம் ஏன் அந்த ஒற்றைக்கால்  தவம் என தாயர் பாதத்தில் கேட்பது போல, காலம் காலமாய் விழியற்ற மல்லனாய் ரம்பனும், மெல்லுடலுடன் வலிமையற்றவனாய்  குரம்பனும் தன் குருதியில் பெருகும் ஆயிரம் மக்களை அந்த கொற்றவைக்கு பலியாக அளித்துக்கொண்டே இருக்கிறார்களோ..


 காளிப்பிரசாத்