Wednesday, April 6, 2016

வாசிப்பின் நிலைகள்அன்புள்ள ஜெமோ


முதற்கனல் முதல் வெண்முரசு நாவல்களை வாசித்து வருகிறேன். மிகத்தாமதமாகத்தான் நான் வாசிக்க ஆரம்பித்தேன். சென்ற மாதம். இப்போது வெய்யோன் வரை வந்துவிட்டேன். மொத்த நாவலையும் வாங்கி வாரம் ஒரு தொகுதி என்று வாசிக்கிறேன். ,மொத்தமாக வாசிப்பது வேறெந்த நினைவும் இல்லாமல் வாசிக்க உதவுகிறது


ஆரம்பத்தில் எனக்குச் சிக்கலாக இருந்தவை இரண்டு விசயங்கள். நாவலின் கட்டமைப்புக்குள் குறுக்குநெடுக்காக வரும் ஏராளமான தனிக்கதைகள். அதேபோல தனித்தனி அத்தியாயங்களில் சம்பந்தமில்லாததுபோல விரிந்துசெல்லும் மன ஓட்டங்கள் மற்றும் உணர்ச்சிகள்


ஆனால் தபதியின் கதையை வாசித்தபோது ஒரு எழுச்சி ஏற்பட்டது. அதற்கும் பாஞ்சாலி கதைக்கும் உள்ள ஒற்றுமை ஒரு மின்னல்போல என்னை அடித்தது. அத்தனை கதைகளும் அப்படி மையக்கதையை விளக்குபவைதான் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன் ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவம் அது


அதன்பின்னர் அத்தனை கதைகளையும் நினைவிலே எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கதைக்கும் இடையே உள்ள சொல்லப்படாத உறவைப்பற்றி உணர ஆரம்பித்தேன். உண்மையில் இந்தக்கதைகளுக்குள் அப்படி ஒரு தொடர்பு இல்லை. நீங்கள் உங்கள் புனைவால் அந்தத் தொடர்பை உருவாக்குகிறீர்கள்


உதாரணமாக, தீர்க்கதமஸின் கதையை சரியான பொருளில் எடுத்துக்கொண்டு அதை கர்ணனின் கதையுடன் பொருத்திப்பார்க்காமல் வெய்யோனை ஒருவர் சரியாகப்புரிந்துகொள்ளவே முடியாது. கதையை வாசித்து போகலாம். உள்ளே அடுக்கப்பட்டிருப்பவற்றை புரிந்துகொள்ளமுடியாது. அதிலும் வெய்யோனில் உள்ளது வெறும் நிகழ்ச்சிகள். கதைப்பரபரப்பு மிகவும் குறைவு


தீர்க்கதமஸ் என்ற பிரஜாபதிக்கும் கௌரவக்குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் இடையே ஒரு மர்மமுடிச்சு உள்ளது என்று ஒருவருக்குப்புரியும் என்றால்தான் அவர் வெண்முரசுக்குள் வருகிறார். நான் ஒரே மூச்சிலே வாசித்தமையால் தான் அப்படி வரமுடிந்தது. எத்தனை பேரால் அது சாத்தியம் என்று தெரியவில்லை


மொத்த வெய்யோனும் தாய்மை, தந்தையுறவு, குழந்தை என்றே செல்லும் கதை. கர்ணன் மனைவி கர்ப்பமாவதில் ஆரம்பிக்கிறது வெய்யோன். கர்ணன் தன் அன்னையையும் தந்தையையும் உணர்வுரீதியாக இழப்பதிலே மேலே செல்கிறது. அந்த இடத்தை அவன் நுட்பமாக கையாளும் விதம் அற்புதமானது.


அதன்பின் கௌரவர்களின் குழந்தைகளின் கொண்டாட்டம். அப்படியே தீர்க்கதமஸின் கதை. ஜயத்ரதனின் தந்தைக்கும் குழந்தைகளுக்குமான உறவு. திருதராஷ்டிரர் குழந்தையை தழுவிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ஜயத்ரதனின் தந்தை தொட்டுப்பார்ப்பதே இல்லை.
அந்தக்கதை அப்படியே நீண்டு நாகர்களின் அழிவை அடைகிறது. ஒரு குழந்தைமட்டும் எஞ்சும் நிலை. அந்தக்குழந்தையை கர்ணன் கையிலெடுக்கையில் நாவலின் உச்சம் நிகழ்கிறது. இப்படி நுணுக்கமாக கைதெரியாது பின்னியிருக்கும் கதையை முதல் வாசிப்பிலேயே தொட்டு எடுக்கும்போது இதோ நானே இதை எழுதிவிட்டேன் என்பதுபோன்ற ஒரு பெரிய பரவசம் வருகிறது. அதுதான் இந்த வாசிப்பிலே நான் அடைந்தது


என் வாசிப்பில் இப்படி அடியில் ஒரு பெரிய பின்னல் சென்றுகொண்டே இருப்பவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கும் நூல்களாகவே இருக்கின்றன. பலநூல்களை இப்போது சொல்லமுடியும் என்றாலும் சாதாரணமாகத் தோன்றி உள்ளே முடிச்சு முடிச்சாக விழுந்துகொண்டே போவது மார்ஷல் புரூஸ்தின் ரிமம்பரிங் திங்ஸ் பாஸ்ட் தான் என்று தோன்றுகிறது. அவ்வளவு பிரம்மாண்டத்தையும் நுணுக்கமாக உள்ளே சேர்த்துப் பின்னியிருப்பார்.
ஆர். பாலமுருகன்