Sunday, January 8, 2017

அர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)



   
விண்வெளிப்பயணம் போயிருக்கிறீர்களா?  ஒரு பயணம் போயிருக்கிறோம் என்பதற்கான பொருள் அந்த பயணம் போன அனுபவத்தை நாம் பெற்றிருக்கிறோம் என்பதல்லவா.   ஒரு மனிதன் நோயின் காரணமாக ஆழ்ந்த  மயக்கத்தில் இருக்கையில் அவனை உலகம் முழுதும் சுற்றி அழைத்துச்சென்று வந்தபோதிலும்  பின்னர் மயக்கத்திலிருந்து எழும் அவன் தான் உலகைச் சுற்றி வந்தவன் என்று சொல்வானா? அப்படிச் சொல்வதில் பொருள் இருக்குமா?  ஆகவே அடையும் அனுபவம்தான் முக்கியம். 

அப்படி ஒருவர் விண்வெளிக்கு சென்று வருவதை அனுபவமாக அறிந்தாலே அவர் விண்வெளிக்கு சென்று  வந்ததற்கு சமம்தானே.  அப்படிப்பார்த்தால் நான் விண்வெளிக்கு சென்று  வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியும். அது எப்படிப்போவதென்றால்  மொட்டை மாடியில்,  மேல்நோக்கிப்  படுத்துக்கொண்டு நம் மனதை பார்வையுடன் பிணைத்து,  உயரத்தில் செலுத்தவேண்டும். அருகில் உயர்ந்திருக்கும் மரத்தின் உச்சிக்கிளையிலிருந்து திரும்பிப் பார்த்தால் நம் உடல் அங்கே படுத்திருப்பது தெரியும்.  அங்கிருந்து அப்படியே  மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் மேகத்தில் தாவி அமர்கையில் நம்முடைய ஊர் முழுதும் தெரியும்.  நம் வீடு  மிகச் சிறிதென ஆகியிருக்கும்  நம் உடல் ஒரு நுண்ணுயிரி போல கிடக்கும்.  

மேகத்திலிருந்து அப்படியே தாவி நிலவுக்கு சென்றுவிட வேண்டும். அப்போது  நம்முடைய பூமியே ஒரு சிறு வட்டத் தட்டெனத் தெரியும். நம் பூமி என்பதைத் தவிர நமக்கு சொந்தமென எதுவும் அப்பொது நம் கண்ணுக்கு தெரியாது.  அங்கிருந்து மேலும் மேலும் உயரே சென்று ஒரு விண்மீனிலிருந்து நோக்கினால்  அப்போது நம் பூமியையும் காண முடியாது. இப்படியே பால்வீதி என்ற அண்டமெல்லாம் தாண்டிச் சென்றபின் நான் இருந்தேன் என்ற சுவடே இல்லாமல் போயிருப்போம். பேரண்டதில் இருக்கும் நம் பால்வீதியே  ஒரு அணுபோல அங்கு இருக்கையில் நம் சூரியக்குடும்பம் அதிலிருக்கும் பூமியெல்லாம் எவ்வளவு நுண்ணியவை என அறிவோம். 



இப்படி  இருக்கையில் அதில் ஒருசிறு வீட்டில் படுத்திருக்கும் நான்  எவ்வளவு அற்பமானவன்,  என்னுடைய  பிறப்பு,  வாழ்வு,  இறப்பு, பெற்ற அறிவு,  சேர்த்த செல்வம்,  ஆசை வைத்த இன்பங்கள் எல்லாம்  எவ்வளவு அற்பமானவை எனத் தோன்றும்.  இப்பயணத்தை மேலும் தொடர்ந்தால் என் அகம் அழிந்துப்போய்விடுமோ என்ற அச்சம் தோன்றி அடுத்த நொடி விண்வெளிப்பயணத்தை  முடித்துக்கொண்டு வீட்டினுள் சென்று போர்வைக்குள் புகுந்துகொள்வேன். இந்தப் பயணத்தின்  காரணமாக  நான் கொண்டிருக்கும் என் அகங்கார வீக்கம்  சற்றேனும் குறைந்திருப்பதாய் எனக்கு தோன்றும்.   மேற்சொன்ன விண்வெளிப்பயணம் மிக எளிதானது. சற்று கற்பனைத்திறன் இருந்தால் போதுமானது. நாம் நம் புறத்தே நிகழ்த்திக்கொளும் இது  புறவெளிப்பயணம் ஆகும்.

நம் அகமும் ஒரு வெளியாகும். அதன் விரிவு விண்ணின் விரிவுக்கு சிறிதும் குறைந்ததல்ல.  அதற்குள் நாம் செல்வதை நாம்  அகவெளிப்பயணம் என்று சொல்லாம்.  அது மிக மிகக் கடினமானது.   தன் எண்ணங்களை குவித்து கூர்மையாக்கி அதனால் தன்னை துளைத்துச்  தனக்குள் ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும் பயணம் ஆகும்.     நம் உடல் தரும் சுகத்தை மறந்து,  உள்ளம் கொண்டிருக்கும் அமைதியைத் துறந்து,   ஐம்புலன்களை இறக்கைகளாகக் கொண்டு  பறந்து அலையும்  மனதை கட்டி,  ஒருங்கு படுத்தி செல்லவேண்டிய பயணம்.  

  விண்ணூர்தியில்  உந்துசக்தி தரும் விசைப்பொறிகள் பல்வேறு அடுக்குகளாக கட்டப்பட்டிருக்கும்.  ஒன்று பயன்பட்டபின் அடுத்து என விசைகொடுத்து ஊர்தியை மேல் நோக்கி செலுத்தும். புவியின் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து அதைத் தாண்டிச் செல்லவேண்டும்.   அதைப்போன்றே இந்த அகவெளிப்பயணத்தில்  உடலில் இருக்கும் ஆறு சக்கரங்களைத் தூண்டி அதன் விசைகளால் உந்தப்பட்டு அகவெளிக்கு செல்லவேண்டும். காமம் குரோதம் மோகம் மதம் மாச்சர்யம்  போன்ற உடலுடன்  பிணைக்கும் ஈர்ப்புவிசைகளைத் தாண்டி மேல் செல்ல அவை அவை அவசியம்.

   அர்ச்சுனன் அகவெளிப்பயணத்தில் குறிப்பிடப்படும் மரம், மண்புழு, மான், அனல், பறவை கடல் என்பவை இந்த ஆறு சக்கரங்களைக் குறிக்கின்றது என்று நினைக்கிறேன். பின்னர் அவன் ஒவ்வொரு தேராக பயணித்து அதிலிருந்து விடுபட்டு  செல்வது இந்த காம குரோத மோகம் போன்ற குணங்களின் விசைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதைக் காட்டுகிறது எனக் கொள்ளலாம். அவன் தன்னை மீண்டும் இளைஞனாக, சிறுவனாக, குழவியாக அறிந்து. அன்னை உடலுள்  உறைந்த கருக்குழவியென  ஆகி பின்னர் அதையும் தாண்டி சிறு  அணுவென ஹிரண்யகர்ப்பனென ஆக்கி தன்னை பராமாத்மாவில் கரைத்துக்கொள்ளும் இறுதி நிலை நோக்கி அப்பயணம் செல்கிறது.

ஒரு ஆன்மா முப்புரங்களில் குடிகொண்டு வாழ்ந்துவருவது.  உடலென்று அறியும் ஒரு புரம்.
  எரிந்தது முதற்புரம். செந்தசைக்கோட்டை சூழ் பெருநகரம் அணுவெனக் குறுகியது. விதையுள் கருவென ஆகியது.
அந்த அணு பிறப்பு என்ற இருப்பு நிலைக்கும் இறப்பு என்ற இன்மை நிலைக்கும் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது.
இருப்பென்றும் இல்லையென்றும் ஆடும் ஓர் ஊஞ்சல்.

 
மற்றொரு புரம் நாம் வாழும் சூழல்.  பிறவி எடுக்கையில் நாம் செல்லும் இடம்.   ஊழ் பின்னி வைத்திருக்கும் ஒரு வலை.  அந்த வலைக் கண்ணிகளால் நம் வாழ்வு, செல்லும் வழிகள், நம் இறப்பு என எல்லாம்  தீர்மாணிக்கப்பட்டு அமைந்திருக்கின்றன.  
எரிந்தது மறுபுரம். வெள்ளிச் சிலந்தி பின்னிய வலைநகரம். ஒரு கண்ணி பிறிதொன்றை ஆக்கும் நெசவு. அவிழ்ப்பதே இறுக்குவதாக ஆகும் அவிழாச்சுழல்.
பிறவிக்கு முன்னும் பின்னும் நாம் இருப்பது இன்னுமொரு புரம். நாம் அதை  அறிந்திருப்பதில்லை. அது இப்படி  விவரிக்கப்படுகிறது.
எரிந்தது பிறிதொரு புரம். பொன்னிறக் கருவறை. ஆடிகள் தங்களுள் நோக்கி அமைத்த மாநகரம். எதிர்ப்பவரை அள்ளி தன் குடிகளென்றாக்குவது. கோடிக் களம் கொண்ட ஆடல். கோடிக் காய்கள் நின்றிருக்கும் களம்.
 இந்தப் பயணத்தில் இறுதியாக  உடல் என்ற செம்பினால் ஆன புரம், ஊழ் என்ற வெள்ளியினால் ஆனபுரம், பொன்னால் ஆன நாமறியா  மற்றொரு புரம் என ஆன்மாவின் மூன்று  கூடுகளும்   கழன்றகல தனித்து ஆன்மா அகவெளியில் பாய்ந்து செல்லவேண்டும்.
. எரிந்தழிந்தது முப்புரம். செம்பு எரிந்தது. எரிந்தது வெள்ளி. உருகி அழிந்தது பொன். மூவிழி அனலில் தழல் மூண்டழிந்தது முப்புரம். கைப்பிடி நீறென்றாகியது. எஞ்சியது அது. நீறெனும் வெண்மை.


அனைத்தும் எரிந்தழிய வெறும் நீறென எஞ்சும் ஆன்மா அந்தப் பேரண்டத்தில் ஒரு துளியென எஞ்சி இருக்குமா? அல்லது தான் வேறு என்ற பேதம் களைந்து கரைந்து போகுமா?
அந்தப் பெருவெளி தன்னை அம்மையென்றும் அப்பனென்றும்  பிரித்துக்கொண்டு   ஆடும்  பகடையாட்டத்தில்  அர்ச்சுனன் ஒரு முக்கிய பகடைக்காயென இருப்பவன். அவனைக்  களத்திலிருந்து விடுவித்து இப்போதைக்கு வெளியில் அனுப்பப்படவேண்டியதில்லையென அந்த அம்மை அப்பன் நினைத்திருப்பர்.  அதனால் அவன் அகப்பயணம் இறுதி நிலை எட்டுமுன்பே  முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது என எண்ணுகிறேன்.


தண்டபாணிதுரைவேல்