பிரபஞ்சம் இருமையால்
தன்னை முழுமை செய்துக்கொண்டு தன்னை சமன்செய்துக்கொள்கிறது. இருமைகள் சமன்செய்துக்கொள்ளும்போது
ஏற்படும் அசைவின்மை ஞானத்தின் ஜோதியாக பிரகாசிக்கிறது எனவே இருமைகளின் சமன் ஆனந்தமாக
மட்டும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அனைத்தும் இருமையின்பிடியில்
வைக்கப்பட்டு இருப்பதாலேயே அவைகள் ஞானத்திலும் வைக்கப்பட்டு உள்ளன. ஞானத்தை அடையும்
வழியில் அவை இன்பம் துன்பம் இரண்டின் கலவையை
அனுபவிக்கின்றன. இரண்டின் கலவையில் எது மிகுந்து இருக்கிறதோ அதன் சுவையை உயிர்கள் அறிகின்றன. எனவே அவை இன்பத்தில்
உள்ள துன்பம் அல்லது துன்பத்தில் உள்ள இன்பம் என்ன என்பதை
புரிந்துக்கொள்ளகி்ன்றன. அதனால் துன்பம் துன்பமும் இல்லை, இன்பம் இன்பமும்
இல்லை என்ற வரண்ட நிலை ஏற்படுகிறது. வரண்டநிலையில் இருந்து உயிர்கள் தன்னை ஈரம் நிறைந்ததாக ஆக்கிக்கொள்ள பரிபூரனானந்தத்தை நாடுகின்றன.
இருமைகளை
தாண்டி
இன்பதுன்பநிலைகளைத்தாண்டி பூரணஞானத்தில் நிற்கும் உயிருக்கு பரிபூரனானந்தம்
வாய்க்கிறது பரிபூரானானந்தம் வாய்க்கும் உயிரின் பார்வை மாறிவிடுகின்றது.
அது பிரபஞ்சத்தை தனித்துப்பார்க்கவில்லை
தனது தாயாகப்பார்க்கிறது அல்லது தான் தாய்மையாகி அதை தன்
குழந்தையாகப்பார்க்கிறது.
பரிபூரனானந்தத்தின்
எல்லையைத்தொடுவது என்பது ஒரு உயிர் அப்படியே அந்த இடத்தில் பறந்துச்சென்று அமர்ந்துவிடும்
நிலையல்ல அதற்காக அந்த உயிர் உடலால் உள்ளத்தால் காலத்தால் பஞ்சபூதத்தால் அலைகழிக்கப்பட்டு
இறுதியில் சென்று அடைகின்றது. பரிபூரனானந்தத்தில் நிற்கும் அந்த கணத்தில் அதற்கு முன்காலம்
பின்காலம் அனைத்தும் சுருங்கி நிகழ்காலம் மட்டும் நீண்டு ஒரு புன்னகையாய் மலர்ந்து
வாசம் வீசுகிறது.
சண்டனுடன் சேர்ந்த
வைசம்பாயணன், ஜைமினி சுமந்து பைலன் கூட்டத்தில் வந்து சேரும் உக்கிரசிரவஸ் தனது தாயிடம்
இருந்து பிரிந்து செல்கிறான்.
கல்விக்காக
ஞானத்திற்காக
உறவுகளை பிரிந்து செல்லவேண்டியது மானிடருக்கு கடமையாக இருப்பதை அறியாத அந்த
வயதில்
அவனுக்கு அது வாய்க்கிறது. பிரபஞ்சத்தின் இருமையின் ஆடலோ, உயிர்களின்
அகம்புறம் விளையாடலோ அறியாத அந்த வயது அந்த கணத்தின்
ஆனந்தமாக அவனுக்குப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கணத்தில்
நின்றுவிளையாடும் உக்ரன்
தனக்கான அந்த கணத்து ஆனந்தத்தை துணுக்கு துணுக்காக பெறுகின்றான். அவன்
ஆனந்தத்தை வெட்டும் காலம் என்னும் கோடாரியால் அவன் தாய் முறிக்கப்பட்டு
விழும்போது வாழ்க்கை என்னும் எருமை அவளை தின்னும்போது அவன் விதியின்நதியில்
கண்ணீரோடு
முருங்கைகுட்டியாய் பயணிக்கிறான். எந்தவிதி அவனை நதியில் பாதையில்
இழுத்துச்சென்றதோ
அதுவே அவனை வாழ்க்கை வயலில் படர்ந்து இருக்கும் அன்னைக்காட்டிற்கு
அழைத்துவருகின்றது.
அன்னை என்பது ஒரு
மரம் என்று நினைக்கும்போது கண்ணீர் மிகுகின்றது.
அன்னை என்பது ஒரு காடு என்று விளங்கும்போது ஆனந்தம் மட்டும் புன்னகையாய் மலர்ந்து உயிரில்
நிலைக்கிறது. அன்னைக்காட்டின் வழியாக உக்ரன் தன்னை பிரபஞ்சத்தின் குழவி என்று உணரும்
தருணம் அற்புதம்.
கல்வி ஞானம் ஆனந்தம்
என்பது எல்லாம் பிரபஞ்சத்தை நம்மிடம் இருந்து பிரிக்கும் தடைகளை உடைப்பதுதான் என்று
இந்த கதை புரியவைக்கிறது.