வணக்கம் ஒன்றை
இருகைகள் நிகழ்த்துகின்றன, பார்வை ஒன்றை இருவிழிகள் நடத்துகின்றன. பாலொன்றை இருபால்
புணர்ந்து பிறப்பின்றன, கிராதம் ஒன்றை இருபயணங்கள்
விளக்குகின்றன.
குருதியும் நிணமும் கலந்து மண்ணுக்கு வலியோடு வழிந்துவரும் குழவி விலங்கிலிருந்து துகள் அளவும் மேன்மையுடையது
இல்லை. மானிடக்குழந்தை என்ற எந்த புனிதமும் அர்த்தமும் அதற்கு இல்லை. மானிடக்குழந்தை
மானிடமும் இல்லை, விலங்கு குழந்தை விலங்கும் இல்லை. குழந்தை குழந்தை மட்டுமே, அணியாகாத
பொன்போல அது பொன் மட்டும். பாண்டமாகாத மண்போல அது மண் மட்டும். மணியாகாத கல்போல அது கல்
மட்டும். இயற்கை யாரையும் உயர்த்தியும் தாழ்தியும் வைக்கவில்லை. தழிழால் உலகுக்கு பாட்டனாகிய வள்ளுவன் “பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்“ என்பதை இங்கு நோக்கி தெளிகின்றோம்.
அணியான
பொன்வேறு ஒன்றை காட்டுகின்றது. பண்டமாகிய மண் வேறு ஒன்றாக செயல்படுகிறது.
மணியான கல் இருக்கும் இடம் வேறாக உள்ளது. மானிடக்குழந்தையும் தன்னை
உயர்த்திக்கொள்ளும்போது அதன் பிறப்பு அர்த்தப்படுகிறது. தன்னை
அர்த்தப்படுத்திக்கொள்ள துடிக்கும் ஜைமினி வைசம்பாயணன் சுமந்து பைலன்
உக்ரன் இந்த கதையில் அர்ஜுனன் கதையின் வழியாக நடக்கிறார்கள். அர்ஜுனன்
முன்னமே நடந்துக்கொண்டு இருக்கிறான். இது ஒரு பாதையில் இருபயணம்.
விலங்குகள் தனது
புலன்களின் விலங்கால் விலங்கிடப்பட்டு கிடக்கையில் மானிடம் மட்டும் புலன்களின் விலங்குகளைப்பற்றிக்கொண்டு
மேலேற முயற்றி செய்கின்றன, அந்த முயற்றிக்கு புலன்களின் விலங்குகளே விளக்காக பாதையாக
படியாக பற்றி ஏறும் சங்கிலியாக பயன்கொடுக்கின்றன. புலன்களின் விலங்குகளை பயன்படுத்தி
பயணப்படும் ஜீவன்கள் எல்லாம் விலங்குளில் இருந்து விடுப்பட்டு மானிட தேவ தெய்வீக நிலைக்கு
உயர்வடைகின்றன. மானிடன் இதில் முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் அவனுக்கு சொல்லும்
பொருளும் அருளப்பட்டு உள்ளதால்தான்.
சொல்லருளும்
கலைவாணியும்,
கலைவாணி அருளிய சொல்லை பொருளாகப்படைக்கும் பிரமனும் இந்த பிரபஞ்சவெளியை
தங்கள் சித்திரக்கூடமாக
செய்கின்றார்கள். சித்திரக்கூடத்தில் மோனத்தில் துயிலும் குறையில்லா
கோவிந்தன் இந்த
பிரபஞ்சவெளியின் கலைநடனத்தை நிகழ்த்தும் ஆடல்வல்லானின் நடனத்தில் ஆனந்தத்தை
காண்கின்றான்.
இந்த சித்திரக்கூடம் ஒரு ஒழுங்கில் நிலைநிறுத்தப்பட்டு
இயங்கும்வரையில் சொல்லும்பொருளும் கனிந்து பாயும் அருள் என்னும் நிலை பரு
பிரபஞ்சத்தில்
நிலைக்கிறது இந்த பருபிரபஞ்சம் ஆனந்தத்தில் லயிக்கிறது. பொருள் அருளில்
விழும்முன்னே
அதில் ஒரு மருள் ஏறும் என்றால் மாயா பிரபஞ்சம் ஒன்று தோன்றி
புலன்விலங்குகளை முடிவிலி வரை உடையா விலங்காகவே வைக்கிறது. அருள்சுரக்கும்
ஆனந்தம்போல் மாயாபிரபஞ்சத்தில் மருள்சுரக்கும் ஆனந்தம் துளிக்கிறது. ஒன்றை
அறிவானந்தம் என்றால் மற்றது அறியாமை ஆனந்தம். இந்த அறிவின் இருள்திசைகளை
கிராதம் பயணம் நடத்திக்காட்டுகிறது. இது சண்டனுக்கும் ஜைமினிக்கும்
நடக்கும் ஒளியிருள் விளையாட்டாக படைக்கப்பட்டு உள்ளது.
அருளும் மருளும்
காலத்தால் இடத்தால் குணத்தால் வெகுதூரத்தில் ஒன்றை ஒன்று எதிர்க்கும்நிலையில் இருந்தாலும்
ஆனந்தத்தால் இரண்டும் ஒன்றின்வடிவாகவே மற்றொன்றும் இருக்கிறது. இதை தனது அகவிழியால்
காணும் ஒருவன் பருபிரபஞ்சத்தையும் மாயாபிரபஞ்சத்தையும் அசைவின்மை நிலையில் வைக்கும்
மையத்தில் நின்று ஆனந்த பிரபஞ்சத்தைக்காண்கின்றான். அதை மெய்யறிதல் என்கிறான்.
மெய்யறிதல் என்பது
சிலருக்கு தாய் ஊட்டும் முலைப்பால்போல இருக்கும் இடத்திற்கு வந்து ஊட்டப்படுகிறது.
சிலருக்கு செல்லும்பாதையில் இடையில் நிற்கும் முகம்தெரியாதவரால் பாதம்காட்டி பாதத்தின்
வழியாக போதம்காட்டி குருவாகி வந்து வாழ்வை மாற்றி ஆற்றுப்படுத்துகின்றது. சிலருக்கும்
அழுந்தும்சேற்றை மணவறையென என்று எண்ணி இறங்கும் இடத்தில் வந்து கைப்பற்றி கரைக்கு இழுத்து வாதிற்கு
இழுத்து அடிமைக்கொண்டு உணர்த்தப்படுகிறது. இன்னும் சிலருக்கு பாதை எது என்று தெரியாமல்
உழலவைத்து மயங்கவைத்து வலிக்கவைத்து மருந்தாகி புரியவைக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு
இல்லறம் என்னும் உப்பரிகையில் இருந்து அனாதையாய் பால்திரிந்துபோகும் நிலையில் புழுதியில்
தள்ளிவிடப்பட்டு பேயாயை அலையவிடப்பட்டு தெளிவிக்கப்படு கிறது. இன்னும் இன்னும் சொல்லிச்செல்வது வேண்டியது இல்லை.
முற்றாக என்னத்தெரிகிறது என்றால் யாருடைய மெய்மையும் யாருக்கும் மெய்மையாகுவதில்லை.
அவரவர் மெய்மையே அவரவர் மெய்மையாம். அவரவர் மெய்மையை அவரவர் அடைவதில் இருக்கிறது அவரவர்
வாழ்வு.
கிராதத்தில் அர்ஜுனன் அடையும் மெய்மையை
காட்டுவதன் மூலமாக மானிடத்தொகையின் மெய்மை தேடல் பயணத்தை மையத்தில் நின்று நோக்குகின்றார் ஆசிரியர் ஜெயமோகன்..
மானிடத்தொகையின்
மெய்மைதேடல் பயணத்தை மையத்தில் நின்று ஆசிரியர் இந்த நாவலில் நோக்குவதால் ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில் இருவழி பயணத்தில் வாசகனை நடக்க
வைக்கிறார். எழுத்துக்காக நடக்கவைக்கிறார் என்று சொன்னாலும் இந்த பயணம் கால்கொண்ட பயணம்
இல்லை மாறாக மனம்கொண்ட பயணம் அதனால் அது நடக்கிறது என்று மட்டும் நினைக்கவேண்டியது
இல்லை மாறாக அது நடக்கும்போதே பறக்கவும் பறக்கும்போதே ஓடவும் செய்கிறது. ஓடும்போதே
தாண்டவும் செய்கிறது.
கிராதம் அர்ஜுனன்
மெய்தேடல் நூல் என்பதால், ஏன் மெய்தேட வேண்டும் என்ற வினா எழுகின்றது. வாழ்வது மெய்தேடுவதற்கா?
மெய்தேடுவதே வாழ்வதற்கா? என்று கேட்டுக்கொண்டால். வாழ்வது மெய்தேடுவதற்காக அல்ல, மெய்தேடுவதும்
வாழ்வதற்காக அல்ல என்று விடை கூறிவிடமுடியும். காரணம் வாழ்வும் மெய்யும் அளவுகோளில்
இல்லை. கருத்துருவில் இல்லை. காரணவெளியில் இல்லை. பின் எப்படிதான் வாழ்வையும் மெய்மையையும்
அடைவது அல்லது உணர்வது. இயற்கை நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாகவே இரு என்கிறது அதுவே வாழ்க்கை
அதுவே மெய்மை என்கிறது.
உண்டு உறங்கி புணர்ந்த
பெற்று மகிழ்ந்து இருந்தால் போதும் வாழ்வென்றாகி அதுவே மானிடனை நகர்த்தி சென்றுவிடும்
ஆனால் மானிட அகம் நிறைவை நோக்கி நகர முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறது. அந்த முயற்சியின்
படியாக மெய்மைதேடல் இருக்கிறது. அந்த மெய்மை தேடலே ஆனந்தத்தின் ருசியாக அமைகிறது. அந்த
ருசியை இழக்க மானிட அகம் மறப்பது இல்லை அதனால் மெய்தேடல் நடந்துக்கொண்டு இருக்கிறது.
இயற்கை
உயிர்களை வட்டத்திற்குள் அதன் சட்டத்திற்குள் அதன் மூலம் உயிர்களை
கண்ணுக்கு தெரியாத விலங்கிட்டு அடிமையாக வைத்திருக்கிறது. இயற்கையின் இந்த
விலங்கு உயிர்களுக்கு துன்பம். இந்த விலங்கை உடைத்து வெளியேறுவது
கடமையாகிறது வாழ்வாகிறது அது ஒரு மெய்மையாகிறது அதன் மூலம் ஆனந்தம்
கிடைக்கிறது.
உயிர்
ஒன்று தோன்றிவிட்டால்
அடிமையான விலங்கிடப்பட்ட விலங்குப்போன்ற துன்பவாழ்வில் அது நிற்கின்றதா?
அல்லது விலங்கை
உடைத்து ஆனந்த வாழ்விற்கு தன்னை உயர்த்துகின்றதா? என்ற அடிப்படை வினா
எழுகின்றது. இந்த
அடிப்படை வினாவை அர்ஜுனன் தன்வாழ்வில் போட்டுப்பார்க்கின்றான். அர்ஜுனன்
தனக்கான விலங்கை
எல்லையை உடைப்பதையே தனது பயணமாகக்கொள்கின்றான்
என்று கிராதம் காட்டுகின்றது. தனக்கான விலங்கை உடைக்க நினைக்கும்
நால்வருக்கு இந்த கதை சொல்லப்படுவது ஒரு அழகான முன்நகர்வின் பின்நகர்வு.
மணியிடை மணியென ஆன அழகு கலை நாலாக உயர அணிசெய்கிறது.
அர்ஜுனன் கதையை பாடும் கேட்கும் சண்டன் வைசம்பாயணன் ஜைமினி
சுமந்து பைலன் உக்கிரன் ஆகியோர்களும் கிராதத்தில் பயணம் செய்துக்கொண்டே வருகின்றார்கள்.
அர்ஜுனன் மெய்மையைத்தேடி அகப்பயணம் நடத்துவதைக்காட்டும் கிராதம்நாவல், அர்ஜுனன் கதையை
பாடுபவர்கள் கேட்பவர்கள் வழியாக வாழ்க்கையைத்தேடும் உலக்தைத்தேடும் மண்ணை மலையை நதியை
சொல்லைப்பொருளை தேடும் புறப்பயணம் நடத்துவதைக்காட்டுகின்றது கிராதம்.கிராதம் காட்டுவது
பாதை ஒன்று பயணம் இரண்டு. பயணம் இரண்டு மெய்மை ஒன்று. கிராதம் இருகோடுகள் வரையும் ஒற்றை
ஓவியம்.
மானிட
அகம் இருளின் ஒளியாலும், ஒளியின் இருளாலும் நிறைந்து உள்ளது. மானிட
புறம் இருளின் இருளாலும் ஓளியின் ஒளியாலும் நிறைந்த உள்ளது. இந்த
முரண்பாடுகள் மனிதனை
அகமும் புறமுமாக மோதவிட்டு வேடிக்கைப்பார்க்கிறது. அகமும் புறமும் மோதி
மோதி மனிதன்
ஒயாத வலியில் உழல்கின்றான். இந்த ஒயாத வலியே மானிடத்தை வாழ்வதாகவும் காட்டி
மயங்க வைக்கிறது,
அந்த மயக்கத்தை உடைக்க சிலர் எழுகின்றார்கள். அந்த சிலரை உலகம் பக்தன்
என்கிறது. கர்மவீரன்
என்கிறது. ஞானவான் என்கிறது. யோகி என்கிறது. சிலர் இந்த நான்கு பாதையிலும்
செல்லும்
பேராற்றல் உள்ளவர்களா இருக்கிறார்கள். அந்த பேராற்றல் பெற்ற ஒருவன்
அர்ஜுனன் என்று
கிராதம் காட்டுகின்றது அல்லது மகாவியாசர் காட்டும் பெருவீரனை இன்னும்
பெரிதாக்கி பார்க்கவைக்கிறது. அந்த படைப்பில் அது முழுமையும் கொண்டு
நிற்கின்றது.
கிராதத்தின் கதையை
ஒருவரியில் சொல்வது என்றால் அர்ஜுனன் நான்கு திசைக்கும் பயணம் செய்து அஸ்திரங்கள் பெற்றான்
அதற்கும்மேலாக உள்ள திசைகளின் மையமான கைலாயம்
சென்று பாசுபதம்பெற்றான் என்று சொல்லிவிடலாம். இந்த ஒரிவரிக்கதைகுள் நுழையும் ஆசிரியர்
அர்ஜுனன் அகம் புறம் இரண்டையும் தொடும்போது இருளுக்குள் உள்ள ஒளி என்ன? ஒளிக்குள் உள்ள
இருள் என்ன? இருளின் இருளென்ன? ஒளியென்ன என்பதை வாசகனுக்கு உணர்த்துகின்றார். கிராதத்தின்
வாசிப்பதன் பயனே இதுதான்.
கதைப்படி குடிவழி உறவுகள் இடம் பொன்பொருள்நாடிழந்து தன்னை
மனைவியை மானத்தை இழக்கும் பாண்டவர்களில் ஒருவனாகிய வில்வீரன் அர்ஜுனன் யாதவர்களின்
பெரும்தலைவனாகிய அன்புவல்லமை செயல்வல்லமை அரசுவல்லமை மதிவல்லமை ஞானவல்லமை யோகவல்லமை
வேதவல்லமைப்பெற்ற இளையயாதவனாகிய கண்ணனின் நண்பன்.
உதிர
உறவுகள் வழியாக
குரூரத்தை கீழ்மையை வலியை அடையும் அர்ஜுனன் சந்தியையின் கணவன்
சித்திரசேனனைக்காப்பதற்காக
கொடுத்த வாக்கினால் உயிர் நண்பன் வழியாக மானிடமனத்தின் குரூரத்தை கீழ்மையை
வஞ்சினத்தை
வலியை மிகமிக அருகில் அறியும் நிலை ஒன்றை அடைகின்றான். அருகில் அறியும்
நிலை என்பதைவிட
தன்னையே தான் திரும்பிப்பார்கக்கிறான். அங்கு தொடங்குகின்றது அர்ஜுனன்
பார்வையில் படும் மறைந்து கிடக்கம் மானிட அகத்தின் இருளின் ஒளி. ஒளியின்
இருள். மானிட புறத்ரதின் இருளிள் இருள். ஒளியின் ஒளி.
அன்பு காதல் பாசம்
நட்பு கருணை பணிவு வணக்கம் ஆகியவை மானிடனை ஒளிவெளியில் நிறுத்துகின்றன என்றால் அதற்கு
எதிர்திசையாக இருக்கும் காமம் குரோதம் மோகம் லோபம் மதம் மாச்சர்யம் மானிடனை இருள்வெளியில்
நிறுத்துகின்றன. இந்த இரண்டு நிலைகளும் மானிடர் இடத்தில் தோன்றும்போது மானிடர் புறத்தை
நோக்குகின்றார்களா அகத்தை நோக்குகின்றார்களா? புறத்தை நோக்கினாலும் அகத்தை நோக்கினாலும்
பார்வையும் பயனும் ஒரு முகமாகத்தான் இருக்கும்.மையத்தில் நின்று இருபுறமம் நோக்குவார்
நோக்கில் இருமுகமும் தோனறும். இந்த இருமுகத்தின் அசைவின்மையை அறிவது மெய்மை என்பதை
கிராதம் நமக்கு காட்டுகின்றது. இந்த மையத்தை அறியும் தன்மையை பிரக்ஞாதேவியின் இருமுகத்தையும்
முழுது அறிதல் என்று காட்டிச்செல்கிறது.
பிரக்ஞாதேவி
இருபுறமும் முகம் கொண்டவள். அவளின்
ஒருமுகம் இருள்வடிவம் உடையது. மறுமுகம் ஒளிவடிவுடையது. இருள் முகத்தை
விழைபவர்கள் ஒளிமுகத்தையும்
சேர்த்தே பெறமுடியும், ஒளிமுகத்தை விழைபவர்கள் இருள்முகத்தையும் சேர்த்தே
பெறமுடியும்.
இருள் முகத்தை விழைபவர்கள் அசுரர்கள். ஒளிமுகத்தை விழைபவர்கள் தேவர்கள்.
இருள்முகத்தை
விழையும் அசுரர்கள் ஒளிமுகம் வரக்காணயில் திகைக்கிறார்கள்.
ஒளிமுகத்தைவிழையும் தேவர்கள்
இருள்முகம் கண்டு அஞ்சுகிறார்கள். இவர்கள் மத்தியில் இருமுகத்தையும் நோக்கி
புன்னகை செய்யும் முனிவர்கள் பிறக்கிறார்கள். இந்த முனிவனாகும்
அற்புதத்தில் கண்ணன் அகத்தாக்குதலால் இழுக்கப்படுகிறான்.
அவன் நண்பன் புறத்தாக்குதலால் இழுக்கப்படுகின்றான் என்பதை கிராதம்
காட்டுகின்றது.
பிரக்ஞாதேவியை
ஒரு மானிடன் அடைவதற்கு முன்பு அவனுக்குள் உள்ளது என்னன? சொல்லா பொருளா மேதமையா ஆணவமா
அறிதலா களித்தலா விளையாடலா ? அவனுக்கு புறத்தே உள்ளது என்ன? உறவா பொருளா வாழ்க்கையா
வெற்றியா தோல்வியா இன்பமா? கேள்வியை ஒரு கணத்தில் எதிர் எதிர் திசையில் வீசி விடைபிடிக்க
கிராதகம் முயற்சி செய்கிறது. ஏன் இப்படி எதிர் எதிர் திசையில் கிராதம் கேள்வியை வீசி
விடையை பிடிக்கின்றது என்பதற்கு ஆசிரியர் உலகத்தின் இயல்பு என்ன என்பதைக்காட்டும் திருக்குறாகிய
இருவேறு உலகத்து
இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும்
வேறு- என்பதை விதையாக பயன்படுத்தி இந்த கிராதம் நாவலை வனமாக்குகின்றார்.
காமம் குரோதம்
மோகம் மதம் மாச்சர்யம் லோபம் என்னும் அடிப்படை இச்சைகளை கலந்து தாமசம் ராட்ஜசம் சத்வம்
என்னும் அடிப்படை குணத்தில் ஊறவைத்து வாழ்க்கையை சமைக்கும்போது பிரபஞ்சபெருவெளியில்
மெய்மை தொடமுடியாத ஆழத்தின் இருளாய் காணமுடியாத ஒளியின் பிரகாசமாய் அள்ளமுடியாத அளவு
நெளிவாய் ஏறமுடியாத உயரத்தின் கூராய் திசைகளாகிக்கிடக்கிறது.
அர்ஜுனன் இருளை
எப்படித்தாண்டினான் என்பதை தென்திசை தெய்வமாகிய யமனை வென்று அஸ்திரம் பெறுவதன்மூலம்
காட்டுகின்றார் ஆசிரியர். தென்திசை இறைவன் யமன் தருமன் என்பதால் தருமம் தவறாதவனே தென்திசை
இறைவனை வெல்லமுடியும் என்பதைக்காட்டுகின்றார். தருமத்தின் முதல் எழுத்தே சுயநலதியாகம்
என்பதில் இருந்து தொடங்குகின்றது என்பதைக்காட்ட ஒரு குழந்தைக்காக தன் உயிரை பணயம்வைத்து
இறந்தபின்பு செல்லும் யமலோகத்திற்கு உயிரோடு இருக்கும்போதே செல்கிறான் அர்ஜுனன். இதன்
மூலம் தருமத்திற்காக ஒருவன் மரிக்கிறான் என்று குறிப்பு உணர்த்துகின்றார். மரித்தவர்கள்
எழுந்து வந்து தருமத்தின் பாதையில் செல்பவனை வழிமறிப்பார்கள் சுயநல சேற்றில் தள்ளுவார்கள்
என்று காட்டுகின்றார். தருமத்தின் பாதையில் செல்பவனை இருளில் விழுந்தவர்களே அச்சப்படுத்தி
முன்னேறவிடமாட்டார்கள் என்பதை ஆசிரியர் காட்டும் இடத்தில் இருளில் தெரியும் ஒளியை பார்க்கவைக்கிறார்.
அர்ஜுனன் ஒளியை
பொன்னை எப்படித்தாண்டினான் என்பதைக்காட்ட வடதிசை தெய்வமாகிய குபேரனை வென்று அஸ்திரம்
பெற்றதைக்காட்டுகின்றார். குபேரன் பொன்னின் காவலன் என்பதாலேயே அவன் கஞ்சன் என்றும்
எண்ணி எண்ணி விரல்தேய்ந்தவன் என்பதையும் காட்டி, உள்ளம் வளராததாலேயே உடல்வளர்ந்த தோற்கும்போதெல்லாம்
அழும் அன்னைமடிக் குழந்தை என்றும் காட்டுகின்றார். அர்ஜுனன் குபேரபுரியை ஆசை இன்மையாலும்
குபேரனை கஞ்சத்தனம் இன்மையாலும் வென்று வெளியேறுகின்றான். ஆசிரியர் குபேரபுரியையும்
குபேரனையும் படைக்கும் விதத்தில் ஒளியில் உள்ள இருள் என்ன பதை பார்க்கவைக்கிறார்.
ஒன்று
ஒன்றாக இருக்கவேண்டுமா?
ஒன்று மூன்றாக கிளைக்குமா? மூன்றாக கிளைத்ததால் மூன்றும் மூன்றா ஒன்றாகதா?
ஒரு விதை முளைத்தால்
வேராக மரமாக கிளையாக விரிகின்றது. விரிந்த ஒவ்வொன்றும் பெயரளவில் மூன்றாக
தெரிகிறது
ஆனால் அது ஒன்றுதான். இது நெளிந்த மெய்மை. அன்னை பராசக்திக்கு
திரிபுரசுந்தரி என்ற
ஒரு பெயர் உண்டு. இதை காட்டவந்த அபிராமிப்பட்டர் துணையும் தொழும்தெய்வமும்
பெற்றத்தாயும்
என்பார். மூன்றாக சொன்னாலும் அவள் திரிபுரசுந்தரியாகிய ஒருவள்தான் என்பதை
உணர்த்துவார். வருணபுரிக்கு செல்லும் அர்ஜுனனும் மூன்று வருணதேவனை
சந்திக்கிறான். அந்த மூவரும் இடத்தால் மூவராக தெரிகின்றார்கள் ஆனால்
அவர்களின் உள்நிலையால்
ஒருவர் என்பதை ஒரே மந்திரத்தை கூறி வழிபாடுவதன் மூலமாக அவர்கள் மூவரும்
ஒருவர் என்று அர்ஜுனன் காட்டுவான். உலகமாகிய அலைநெளியும் கடலில் மெய்மை
நெளிகின்றது என்பதை அறிந்து நெளியா உண்மையை
அறிந்து வருணனை வென்றான் என்பதை ஆசிரியர் படைக்கின்றார்.
இந்திரபுரிக்கு
சென்று இந்திரனை வென்று வஜ்ராயுதம் வாங்கிவரும் அர்ஜுனன் மெய்மையின் கூர்மையால் இந்திரனை
வென்றான் என்று காட்டவரும் ஆசிரியர். தன்னையும் வென்று தன்னை கூராக்கிக்கொள்கின்றான்
என்பதை காட்டுகின்றார். இந்திரபுரிக்கு செல்வதற்கு முன்பு இந்திரன் என்பவன் யார்? விரித்திரன்
என்பவன் யார்? இந்திரனும் விரித்திரனும் இரட்டையாக இருக்கும் ஒன்று. இரண்டாகபிரிந்து ஒன்றை ஒன்று சமன்செய்கின்றன என்பதை
துணுக்கு துணுக்காய் தேய்த்து மணியொளி செய்கின்றார். விரித்திரனும் இந்திரனும் ஆற்றலின்
உச்சத்தில் ஒன்றுக்கு ஒன்று தந்தையும் தமையனும் ஆகி தங்கள் இரட்டையால் ஒன்றை ஒன்று
விளைவிக்கின்றன என்று காட்டும் இடத்தில் நாவல் மானிட ஆற்றலின் ரஜோகுணத்தை பட்டை தீட்டுகின்றது.
இந்திரன் தேவகுலத்தின்
உச்சமாகவும், விரித்திரன் அசுரகுலத்தின் உச்சமாகவம் படைக்கப்பட்டு அவர்களின் பலத்தையும்
பலவீணத்தையும் கிராதம் நாவல்வழியாக ஆசிரியர் சொல்லிச்செல்லும்போது இவர்கள் இருவம் யாரோ
எங்கோ இல்லை என்பது புரிகின்றது. இவர்கள் இருவரும் ஒவ்வொரு மானிட அகத்திற்குள்ளும்
அகம் பிளவுரும்போது வெளிப்படும் முகம் என்பது தெரிகின்றது. இந்திரன் எந்த கீழ்வழியையும்
கொண்டு வெற்றிப்பெருகின்றான். தோற்கும்போது எந்த கீழ்நிலையையும் அடைந்து மதுவில் மயங்கிக்கிடக்கிறான்.
மயக்க சுகத்தை அனுபவிக்கின்றான் விரித்திரன் தனது எதிரியின் ஆற்றலின்
உச்சத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல் ஆற்றுவதன் மூலமாவே வெற்றி அடைகிறான். எதிரி
இல்லை என்று அறிந்தபோது செயல்ஆற்றாமல் பெரும் மந்தநிலையின் சுகத்தை அனுபவிக்கின்றான்.
மானிட ஆன்மா வெற்றியின்
இன்பத்தின் எல்லையிலோ அல்லது தோல்வியின் மயக்கத்தின் ஆழத்திலோ. ஆற்றலின் உச்சியிலோ
அல்லது மந்தநிலையின் ஆழத்திலோ கிடப்பது அது கரையேறுவதற்கு வழியாக அமையாமல் அதுவே அதற்கு
ஒரு விலங்காக இருக்கிறது என்பதைக்காட்டி அதை உணரும் ஒரு ஆன்மா வஜ்ரம்பெற்றது என்பதைக்காட்டும்விதத்தில்
கதை கூர்மையான மெய்மையை காட்டி உள்ளது,
அர்ஜுனன்
உள்ளத்தில்
ஆணாக இருக்கையில் பெண்ணாகவும், பெண்ணாக இருக்கையில் ஆணாகவும் கண்ணனே
இருக்கிறான் என்பதை
காட்டும் இடத்தில் ஒரு ஜீவன் உடலைத்தாண்டி உள்ளத்தை உணரும் தருனத்தில் தனது
சுயத்தில்
நிலைத்து நிற்கிறது என்பதை காட்டுகிறது நாவல். தன்னை உணர்தல் என்பது
இதுதான். தன்னை உணராமல் செய்ய உறவுகள் கனவுகள் தேவைகள் காலங்கள்
குறிக்கிடுகின்றன. கண்ணனை தன்னுள் இருபாலாகவும் நின்று உணரும் அர்ஜுனன்
சமகால தேவைக்கு வெற்றிக்கு நன்மைக்கு தன் சுயத்தைபலயிடாதவனாகவும் இருக்கு
வழிகாட்டுகின்றான்.
கதையின் வழியாக
சற்று விலகிநின்றுப்பார்க்கையில் அர்ஜுனன் யமபுரிக்கு செல்கையில் உடல்சார்ந்தவனாக இருக்கிறான்.
இந்திரபுரிக்கு சென்று மீள்கையில் உள்ளம் சார்ந்தவனாக இருக்கிறான். உடலும் உள்ளுமும்
பிரிந்த நிலையில் இருந்து எழுந்து பார்வதிக்காக கையிலை மலைக்குச்செல்லும் அர்ஜுனன்
உடல் உள்ளம் இரண்டையும் தாண்டி உயிர் நிலையில் மட்டும் வந்து நின்றுவிடுகின்றான். தனக்காகவோ
தனது விருப்புக்காகவோ எதையும் செய்யாமல் கடமைக்காக செய்கிறான்.
சிவதரிசனம் என்பது
கிரியை சரியை யோகம் ஞானம் என்ற பலவழியாக சென்று மலபரிபாகம் பெற்று சத்தினிபாதத்தில்
அருள்பெற்று சிவத்தை அடைந்து சீவன் சிவனாகிறது.
சத்தினபாதத்தை அடைவதற்கு முன்பு உடல் அனுபவம் உள் அனுவம் அடைந்து
பக்குவும் பெறும் சீவன். உயிர் அனுபவத்தை அடையும் தருனத்தில் அருள் அனுபவம் பெற்று
சிவ அனுபவமும் பெருகின்றது.
நான்குதிசைகளையும்
வென்று நான்கு மெய்மையும் அடைந்தபின்பும் அர்ஜுனன் தற்கொலை செய்துக்கொள்ள விரும்பும்
இடத்தில் கதைவந்து நிற்கும்போது மானிட அகம் அழுந்தி கிழிகிறது. மானிட அகம் அதற்குமேல்
எங்கும் செல்ல முடியாமல் பாதை இன்றி தவித்து தற்கொலைக்கு துடிக்கிறது. மானிடன் முன்பு
மண்ணும் விண்ணும் முட்டிக்கொள்ளும் ஒரு தருணம். மானிடர்வாழ்வில் இதுவரை செல்லமுடியும்
இதற்கும் அப்பால் செல்லமுடியாது அது ஒரு தற்கொலை. அங்கு வந்து கதை முட்டித்தவிக்கையில்
காளியன்னை வந்து அர்ஜுனனை மைந்தனாக ஏற்கும் இடத்தில்கதை இயல்பாக விண்ணில் பயணிக்கிறது.
மானிடம்
உடலாலல் உள்ளத்தால் அகங்காரத்தால் தன்னை மண்மீது கட்டிவைத்து உள்ளது அதை
உடைத்து சிதைக்க ஒரு வழி உள்ளது அது மரணம். அதை உடைத்து சிதைக்காமல்
கரைத்து மாற்றுருக்கொள்ள வைக்க ஒரு வடி உள்ளது அது அன்பு. அன்னையாதல்,
குருவாக அருளுதல். மெய்தேடலில் குருவை தேடுதலே பெரும் பாக்கியம் என்று கதை
தனது பயணத்தில் புன்னகை செய்கிறது.
அன்னையின்
ஆயிரம் திருநாமங்களில் “குரு மண்டல ரூபிணி“ என்ற திருநாமம் ஒன்று. ஆனால்
அன்னை குருவாக இருக்கிறேன் என்ற நினைப்பே இல்லாத குருவாக இருக்கிறாள்.
//அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்? அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான். உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன.//
மண்ணில் நின்று மண்ணில் மடிந்துவிடும் இந்த வாழ்க்கை விண்ணில் பயணிக்கும் இந்த மைய தரிசனத்தை அடைய உலகம் எத்தனை காலங்களை கடந்து
இருக்கும். எத்தனை காலங்களைக்கடந்தாலும் மண்மீது நிற்கும் ஒரு மனிதனுக்கு அந்த விண்ணகப்பாதை
கிடைக்குமா? மானிடத்தின்மீது இறைவன் கொண்ட கருணை அன்னையாக வந்து விண்ணேற்றுகின்றது.
விண்ணேற்றும் அது மண்ணில் நின்றாலும் தெய்வீக அன்னை. அவள் மாதொருபாகம் இடப்பாகம் அமைந்தவளா
என்ற வினா இல்லை. அவள் வாழ வைக்கிறாள். குருவாக நிறைகிறாள் மீண்டும் கற்றுக்கொள்ள வைக்கிறாள்.
மீண்டும் கற்றுக்கொள்ள முற்படுகையில் இறப்பு இறக்கவைக்கப்படுகிறது. மீண்டும் பிறப்பு
வந்து ஆட்டுகொள்கிறது. மீண்டும் மீண்டும் கற்க மீண்டும் மீண்டும் பிறப்பு. இறப்பே நீ
இல்லாமல் போகிறாய் என்று காட்டி அன்னையாகி நிற்கிறது கிராதம் நாவல்.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.